தமிழ் அரசியலில் குறிப்பாக ஊடகப்பரப்பில் சிவராமுக்கு மூன்று முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவது அவர் கிழக்கில் தோன்றி உலகப் பரப்பெல்லாம் தெரியவந்த ஒரு முறைசாரா அறிவுஜீவி என்பது. இரண்டாவது அவர் தமிழ் மக்களின் அபிலாசைகளை கொழும்பில் இருந்தபடி ஆங்கிலத்தில் பேசியவர், எழுதியவர் என்பது. மூன்றாவது அவருக்கு கிடைத்த அங்கீகாரம் எனப்படுவது தமிழ் ஆயுதப் போராட்ட அரசியலில் ஏற்பட்டு வந்த பண்புரு மாற்றத்தை-transformation-பிரதிபலிப்பது என்பது.இவை ஒவ்வொன்றையும் விரிவாகப் பார்க்கலாம்.
முதலாவது சிவராம் ஒரு கிழக்கு மைய அறிவுஜீவி என்பது. சுவாமி விபுலானந்தரைப் போலவே சிவராமம் தன்னை உலக அளவில் ஸ்தாபித்தவர். விபுலானந்தர் கலை,விஞ்ஞானம்,மொழி, அழகியல்,ஆன்மீகம் என்பவைகளின் மிக அபூர்வமான சேர்க்கைகளில் ஒன்று. அவரிடம் இருந்த பல்துறை ஒழுக்கம்தான் அவரை முத்தமிழ் வித்தகர் என்று அழைக்கக் காரணம். விபுலானந்தர் ஒரு முறைசார் அறிவுஜீவி. சிவராமம் ஒரு முறைசார் அறிவுஜீவி அல்ல.எனினும் விபுலானந்தரைப் போல கிழக்கில் தோன்றி உலகப் பரப்பொங்கும் விகசித்தார்.
இரண்டாவது அவர் கொழும்பில் இருந்தபடி வடக்கு-கிழக்கு அரசியலை ஆங்கிலத்தில் வெளிப்படுத்தினார். அவர் கொல்லப்பட அதுவும் ஒரு காரணம். குமார் பொன்னம்பலத்தை போல ரவிராஜ்ஜைப் போல சிவராமும் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஆங்கிலத்தில் வெளிப்படுத்தினார். எனவே அவர் அரங்கில் இருந்து அகற்றப்பட்டார். கொழும்பில் இருந்தபடி தமிழ் மக்களை ஆங்கிலத்தில் பிரதிபலிப்பதில் இருக்கக்கூடிய வரையறைகளை உணர்த்துவது சிவராமை கொன்றவர்களின் நீண்ட கால நோக்கங்களில் ஒன்று.சிவராம் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை இன்றுவரை தமிழ் மக்கள் முழுமையாக நிரப்பவில்லை.
மூன்றாவது சிவராமுக்கு கிடைத்த அங்கீகாரம் எனப்படுவது தமிழ் அரசியலில் நிகழ்ந்த பண்புருமாற்றத்தை பிரதிபலிக்கின்றது என்பது.
நோர்வேயின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஒருநாள் சிவராம் கிளிநொச்சியில், கண்டி வீதியில் ஒரு லேடிஸ் சைக்கிளில் மெதுவாக வந்து கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் மறித்துப் பலதையும் கதைத்தார். உரையாடலின் போக்கில் ஓரிடத்தில் அவர் ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டினார்.இந்திய இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்ட பின் கிழக்கில் நடந்த ஒரு தாக்குதல் அது.அதில் புளொட் இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான வாசுதேவா கொல்லப்பட்டார்.தாக்குதல் முடிந்தபின் தாக்குதலை நடத்தியவர்கள் கொல்லப்பட்டவர்களை அடையாளம் காண முற்பட்ட பொழுது அவர்களில் ஒருவர் “சிவராம் தப்பிவிட்டார்” என்று சொன்னதாக அத்தாக்குதலில் காயங்களோடு தப்பிய ஒருவர் பின்னாளில் சிவராமுக்குச் சொல்லியிருக்கிறார்.இதை எனக்குச் சுட்டிக்காட்டிய சிவராம் “எண்பதுகளின் பிற்பகுதியில் என்னை கொல்லத் திரிந்தவர்கள் இப்பொழுது என்னை ஏற்றுக்கொள்கிறார்கள்” என்று கூறிச் சிரித்தார்.
அவருடைய இறுதி நிகழ்வில் உரை நிகழ்த்திய சரிநிகர் ஆசிரியர் சிவகுமாரும் அதே தொனிப்பட கருத்துக்களை தெரிவித்திருந்தார்.80களின் இறுதியில் அத்தாக்குதலில் கொல்லப்பட்டு இருந்திருந்தால் சிவராம் ஒரு துரோகியாக முத்திரை குத்தப்பட்டிருப்பார். ஆனால் 2000 ஆவது ஆண்டின் பின் அவர் கொழும்பில் கொல்லப்படுகையில் அவருக்கு மாமனிதர் விருது வழங்கப்பட்டது.என்பது அந்த உரையின் சாரம்.
இது சிவராமுக்கு மட்டுமல்ல,கவிஞர் சேரன்,சரிநிகர் சிவகுமார், ஊடகவியலாளர் நடராசா.குருபரன்,ஜோதிலிங்கம் போன்ற பலருக்கும் பொருந்தும்.
ஜோதிலிங்கம், இப்பொழுது தமிழ்த் தேசிய அரசியலில் அரசியல் விமர்சகராக இருப்பவர்.முன்பு ஈபிஆர்எல்.எஃப் இயக்கத்தில் இருந்தவர்.1986க்குப் பின் ஈபி.ஆர்.எல்.எப் இயக்கத்தை புலிகள் இயக்கம் தடை செய்த பொழுது ஜோதிலிங்கமும் அவரைப் போன்றவர்களும் வடக்கு கிழக்கில் இருந்து நீங்கி கொழும்பைத் தஞ்சமடைய வேண்டி வந்தது. இது தொடர்பாக ஜோதிலிங்கத்தின் மூத்த சகோதரர் சிவமகாலிங்கம் ஒரு முறை என்னுடன் கதைத்தார். ஜோதிலிங்கத்தின் நூல் ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்ட மேடையில் நானும் அவரும் அருகருகே இருந்தோம். அப்பொழுது அவர் என்னிடம் பின்வருமாறு சொன்னார்…”எண்பதுகளின் இறுதியில் இவனை-ஜோதிலிங்கத்தை- யாழ்ப்பாணத்தில் வைத்து பாதுகாப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டோம் ? எத்தனை இடர்களைத் தாண்டி இவன் கொழும்புக்கு போனான்? ஆனால் கொழும்பில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டதும்,இவன் தன்னை யார் வடக்கில் இருந்து துரத்தினார்களோ அவர்களின் அரசியலை நியாயப்படுத்த தொடங்கி விட்டான்.இவனை எவ்வளவோ ஆபத்துக்களைக் கடந்து கொழும்புக்குக் கொண்டு போன எனக்குப் பைத்தியமா? அல்லது இவனுக்கு பைத்தியமா?” அவருக்கு நான் சொன்னேன் “இரண்டு பேருக்கும் பைத்தியம் இல்லை.ஓராயுதப் போராட்டத்தில் நிகழும் பண்புருமாற்றம் இது ” என்று.எந்த இயக்கம் அவரை வடக்குக் கிழக்கில் இருந்து துரத்தியதோ, அதே இயக்கம் அவரை ஓர் அரசியல் விமர்சகராக ஏற்றுக் கொண்டமைதான் அந்தப் பண்புருமாற்றம்.
இது ஆயுதப் போராட்ட மரபில் வராத சிவசிதம்பரத்துக்கும் பொருந்தும்.1980களின் இறுதிப் பகுதியில் கொழும்பில் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும் கொல்லப்படுகையில் சிவசிதம்பரம் காயத்துடன் தப்பினார். அவர் பின்னர் நோர்வேயின் அனுசரணயுடனான சமாதான முயற்சிகளின் போது உயிர் நீத்தார்.அப்பொழுது கிளிநொச்சியில் அவருக்கு மரியாதையும் மாமனிதர் விருதும் வழங்கப்பட்டது.
ஜோதிலிங்கம்,சிவராம்,சிவக்குமார்,குருபரன் போன்ற பலருக்கும் 80களின் இறுதிப்பகுதியில் வடக்குக்கிழக்கு பாதுகாப்பானதாக இருக்கவில்லை. அப்பொழுது கொழும்புதான் அவர்களுக்கு ஒப்பிட்டளவில் பாதுகாப்பாக இருந்தது.ஆனால் தங்களைத் தமது வாழ்விடங்களில் இருந்து துரத்தக் காரணமாக இருந்த அரசியலைக் குறித்து அவர்கள் எப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்கள்?தங்களுக்கு ஏற்பட்ட காயங்கள்,உயிராபத்துக்கள்,அவமதிப்புகள்,இழிநிலை போன்ற எல்லாவற்றிற்காகவும் அவர்கள் தமிழ்மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தவில்லை.தமது சொந்த மக்களைக் காட்டிக் கொடுக்கவில்லை.தமது சொந்த மக்களுக்கு எதிராகத் திரும்பவும் இல்லை.மாறாகத் தமது மக்களின் நியாயமான கோரிக்கைகளின் பக்கமே எப்பொழுதும் நின்றார்கள்.
கொழும்பிலிருந்து வெளியிடப்பட்ட “சரிநிகர்” பத்திரிகைக்கு இந்த விடயத்தில் ஒரு முக்கிய வகிபாகம் உண்டு.இவ்வாறு இயக்க மோதல்கள் காரணமாக கொழும்பை நோக்கிச் சென்ற ஒரு தொகுதியினர் சிங்கள பௌத்தத்தின் குகைக்குள் நின்றபடியே தமிழ் மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து எதிரொலித்தார்கள் என்பதுதான் அவர்களுடைய மகத்துவம். தமிழ்த் தேசிய அரசியலில் குறிப்பாக ஆயுதப் போராட்டத்தில் ஏற்பட்ட பண்புருமாற்றம் அவர்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கியது.தடை செய்தவர்களே அவர்களை அங்கீகரிக்குமளவுக்கு அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.
அது மட்டுமல்ல,1990களின் இறுதிக்கூறில் கருக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அப்படிப்பட்டதுதான். அது தமிழ் ஆயுதப் போராட்ட அரசியலில் ஏற்பட்ட பண்புருமாற்றத்தின் ஒரு கட்ட உச்சம் எனலாம்.
இப்பொழுது ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான கடந்த 13 ஆண்டுகளையும் தொகுத்துப் பார்த்தால்,தமிழ் அரசியலில் பண்புருமாற்றத்தை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துச் செல்ல வேண்டிய ஒரு தேவையை உணரலாம். அவ்வாறான ஒரு பண்புருமாற்றத்தை நோக்கி எழுதக்கூடிய முதிர்ச்சியும், அனுபவமும், வாழ்க்கையும் கொண்டவர்கள் தமிழ்ப் பரப்பில் மிகச் சிலரே உண்டு. சிவராம் அவர்களின் ஒருவராக இருந்தார்.
ஒரு ஆயுதப் போராட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு போகும் பொழுது பண்புருமாற்றம் அவசியம். ஓர் ஆயுதப் போராட்ட களத்தில் எல்லாருடைய கைகளிலும் ரத்தம் இருக்கும். எல்லாருக்கும் குற்றங்களில் கூட்டுப் பொறுப்பு இருக்கும். இதில் என்னுடைய ரத்தம் சுத்தம் உன்னுடைய ரத்தம் அசுத்தம் என்று சிந்திக்க முடியாது. தமிழ் மக்கள் இறந்த காலத்தைக் கிண்டி கொண்டிருப்பார்களாக இருந்தால், காயங்களும் எலும்புகளும் அழுகிய பிணங்களும்தான் திரும்பத் திரும்ப வெளியே வரும். எல்லா வண்ணாத்துப் பூச்சிகளும் ஒரு காலகட்டத்தில் மசுக்குட்டிகளாக இருந்தவைதான். எல்லாப் புனிதர்களுக்கும் ஒரு இறந்த காலம் இருக்கும். இதை தமிழ் அரசியல் ஏற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு பின்னரான மிதவாத அரசியலில் ஒரு புதிய காலத்தை நோக்கிய பண்புரு மாற்றத்துக்கு தலைமை தாங்கவல்ல கருத்துருவாக்கிகளும் தலைவர்களும் அவசியம்.
சிவராமுக்கு அஞ்சலி செலுத்துவது என்பதை, ஆயுத மோதல்களுக்குப் பின்னரான கடந்த 13ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் சொன்னால்,பண்புருமாற்றத்துக்கு தயாராக இருப்பதுதான்.ஒரு பண்புரு மாற்றத்தை நோக்கி தமிழ் மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் செய்வதுதான்.
யாழ்ப்பாணம்,2022 மார்கழி