சம்பந்தர் : “பேசுவம்” 

 

சம்பந்தரின் மரணம் ஈழத்தமிழ்ச் சூழலில் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பது ஈழத்தமிழர்களின் கூட்டு உளவியலின் வெளிப்பாடு என்றே கூறவேண்டும். அவருடைய பூதவுடல் யாழ்.நகரப் பகுதிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நகரம் வழமைபோல இயங்கியது.அதன் ஒலிபெருக்கிகளில் சினிமாப் பாடல்கள் இசைக்கப்பட்டன.நகரம்   ஏன் துக்கிக்கவில்லை?

சமூகவலைத்தளங்களில் ஒருபகுதி அவரை கௌரவமாக அஞ்சலித்தது. இன்னொருபகுதி கேவலமாக நிந்தித்தது.அது தமிழ் அரசியல் பண்பாட்டின் வீழ்ச்சியையும் காட்டியது.நவீன தமிழ் அரசியலில் குறிப்பாக சமூக வலைத்தளங்களின் காலத்தில்;மீம்ஸ்களின் காலத்தில்,அதிகம் கீழ்த்தரமாக நிந்திக்கப்பட்ட ஒரு தலைவராக சம்மந்தரைக் கூறலாம்.அவருடைய இறப்பின் பின் அவரைப்பற்றி வரும் குறிப்புக்கள் பெரும்பாலும் அதைத்தான் காட்டுகின்றன

2009க்கு பின்னரான கொந்தளிப்பான ஒரு மனோநிலையின் விளைவுகளே அவை.இக்கொந்தளிப்பான கூட்டுஉளவியலுக்குத் தலைமைதாங்கி ஈழத்தமிழரசியலை ஒரு புதிய பண்புருமாற்றத்தை நோக்கிச் செலுத்த வேண்டிய தவிர்க்கப்படவியலாத ஒரு பொறுப்பை காலம் அவருடைய கைகளில் கொடுத்தது.ஆனால் அதை அவர் எவ்வாறு கையாண்டார் என்பதை இப்பொழுது அவரை அஞ்சலித்தும் நிந்தித்தும் வரும் குறிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஈழத் தமிழர்களின் நவீனவரலாற்றில் நீண்டகாலங்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் இருவர்.ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர். மற்றவர் சம்பந்தர்.இருவருமே ஒப்பீட்டளவில் நீண்டகாலம் தமிழ்மக்களின் அரசியலை நிர்ணயித்தார்கள்.குறிப்பாக சம்பந்தர் 2009க்குப்பின்னிருந்து கடந்த 15ஆண்டுகளிலும் தமிழ் அரசியலின் தவிர்க்கப்படமுடியாத முதிய தலைவராகக் காணப்பட்டார்.

அவருக்கு பின்வரும் முக்கியத்துவங்கள் உண்டு.முதலாவதாக அவர் ஒரு மூத்த தலைவர்.இரண்டாவதாக அவர் கிழக்கை மையமாகக்கொண்டு எழுச்சிபெற்ற தலைவர்.மூன்றாவதாக,அவர் நீண்டகாலம் தமிழ்மக்களின் அரசியலை தீர்மானித்தவர்களில் ஒருவர்.

அவருடைய நம்பிக்கைகளை பொறுத்தவரை சம்பந்தர் ஆயுதப் போராட்டத்தில் முழுஅளவு ஆதரவாளர் அல்ல.குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்தார்.எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பொழுது அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டார்.தன்னை சுகாகரித்துக்கொண்டார். ஆனால் அதற்காக அவர் ஆயுதப் போராட்ட வழிமுறையை ஏற்றுக்கொண்டார் என்று பொருள் அல்ல.அதனை ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த 15 ஆண்டுகளிலும் அவருடைய வழி எதுவென்று தொகுத்துப் பார்த்தால் தெரியவரும்.

சம்பந்தரின் வழி எது?

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு என்று சிந்தித்தால் அதாவது பிரிவினை அல்லாத வேறு எந்த ஒரு தீர்வைப்பற்றிச்  சிந்தித்தாலும் அதற்கு சிங்களமக்களின் சம்மதம் அவசியம் என்று சம்பந்தர் நம்பினார்.எனவே சிங்களமக்களை எப்படி அரவணைப்பது?அவர்கள் மனதில் இருக்கும் பகையுணர்வை,அச்சங்களை முற்கற்பிதங்களை எப்படி நீக்குவது?என்றும் அவர் சிந்தித்தார்.ஆயுதப் போராட்டம் சிங்களமக்களை பகை நிலைக்குத் தள்ளிவிட்டது என்றும் அவர் நம்பினார்.எனவே சிங்கள மக்களை பகை நிலைக்குத் தள்ளாத ஒர் அரசியல் வழியை அவர் கடைப்பிடித்தார். சிங்கள மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பது என்று அவர் தீர்மானித்தார்.அதை நோக்கியே கட்சியைச் செலுத்தினார்.

அதனால்தான் முதலில் கஜேந்திரகுமார் அணியை வெளியேவிட்டார். அதனால்தான் சுமந்திரனை உள்ளே கொண்டுவந்தார்.அதனால்தான் விக்னேஸ்வரனையும் உள்ளே கொண்டுவந்தார்.

2015ல்நிகழ்ந்த ஆட்சிமாற்றத்தில் சம்பந்தரின் பங்களிப்பு இருந்தது. அந்த ஆட்சி மாற்றத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட ரணில்-மைத்திரி அரசாங்கம் ஐநாவின் 30/1தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.நிலைமாறுகால நீதிக்கான அத்தீர்மானத்தின் பிரகாரம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கட்டமைப்பு சார் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது.அதன்படி நாடாளுமன்றம் ஒரு சாசனப் பேரவையாக மாற்றப்பட்டு,ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.சம்மந்தர் அதில் முழுமையாக ஒத்துழைத்தார்.அதுவரையிலும் இருந்த எல்லா யாப்புகளும் தமிழ்மக்களின் பங்களிப்பின்றி உருவாக்கப்பட்டவை என்பதனால்,தமிழ்மக்களின் பங்களிப்போடு ஒரு புதிய யாப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கனவு கண்டார்.அதை நம்பித்தான் தமிழ்மக்களுக்கு ஒவ்வொரு பெருநாளின் போதும் வாக்குறுதிகளை வழங்கினார்.

அதுமட்டுமல்ல, மன்னாரில் நடந்த “தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்?” என்ற ஒரு கருத்தரங்கில்,ஆயர்களின் முன்னிலையில்,அவர் அந்த நம்பிக்கையை எப்படி வெளிப்படுத்தினார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.அதில் உரையாற்றிய நான் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினேன்.மூன்றாவது தரப்பு ஒன்றின் கண்காணிப்பு இன்றி,மூன்றாவது தரப்பு ஒன்றின் நெருக்குதல் இன்றி சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பானது,இனப்பிரச்சினையைத் தீர்க்க முன்வராது என்று நான் அந்த உரையில் சுட்டிக்காட்டினேன்.ஆனால் சம்பந்தர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.தலையை சாய்த்து மண்டைக் கண்ணால் என்னைப் பார்த்தபடி சொன்னார்… “சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் ஒரு தீர்வைத் தராது என்பது ஒரு வறண்ட வாதம்; ஒரு வறட்டு வாதம்” என்று

யாப்புருவாக்க முயற்சிகள் ஓர் இடைக்கால வரைபுவரை முன்னேறின.அந்த இடைக்கால வரைபை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதித்தபொழுது அதில் டிலான் பெரேரா ஆற்றிய உரையை இங்கு சுட்டிக்காட்டலாம்.அது சம்பந்தரின் அரசியல் வழியை மிகக்கூர்மையாக வெளிப்படுத்தும் ஓர் உரை. “சம்பந்தரின் காலத்திலேயே ஒரு தீர்வைக் காணவேண்டும். அவரைப்போல விட்டுக்கொடுக்கும் ஒரு தமிழ்த் தலைவர் இனி வரமாட்டார்” என்று டிலான் உரையாற்றினார். அதுதான் உண்மை.ரணில் மைத்திரி அரசாங்கத்தோடு இணைந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக சம்பந்தர் அடியொட்ட வளைந்து கொடுத்தார்.விளைவு என்ன?

யாப்புருவாக்க முயற்சிகளை அதன் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேனவே 2018ல் காட்டிக்கொடுத்தார். சம்பந்தரின் கனவு கலைந்தது.அவர் தமிழ் மக்களுக்கு வழங்கிய எல்லா வாக்குறுதிகளும் பொய்த்துப்போயின. சிங்கள மக்களுக்கு நம்பிக்கை வரும் வரையிலும் விட்டுக் கொடுப்பதன் மூலம்,ஒரு தீர்வைப் பெறலாம் என்ற அவருடைய நம்பிக்கை தோற்கடிக்கப்பட்டது. அந்த நம்பிக்கை மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. அதன் விளைவாக கட்சி அதுவரையிலும் வகித்து வந்த ஏகபோகத்தை இழந்தது. அடுத்த தேர்தலில் கட்சியின் வாக்குகள் சிதறின.அதுமட்டுமல்ல, கட்சியே இப்பொழுது சிதறிவிட்டது.

அவருடைய தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் சிதறவில்லை.தமிழரசுக் கட்சியே இரண்டாக உடைந்துவிட்டது.எனவே இப்பொழுது தொகுத்துப்பார்க்கலாம்.கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தர் கடந்த 15 ஆண்டுகளிலும் எதைச் சாதித்தார் என்று பட்டியலிடலாம்…

முதலாவதாக,சிங்கள மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முற்பட்டு அதில் தோல்விகண்டார்.அதாவது வரலாறு அவருக்கு வழங்கிய பெறுமதியான ஆண்டுகளை அவர் பொருத்தமான விதத்தில் பயன்படுத்தவில்லை.ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான தமிழரசியலில் பண்புரு மாற்றத்துக்கு தலைமை தாங்க அவரால் முடியவில்லை.இரண்டாவதாக,சிங்கள மக்களுக்கு அதிகம் விட்டுக் கொடுத்ததன்மூலம் அவர் எதையுமே பெற முடியவில்லை. மாறாக, தான் தலைமை தாங்கிய கூட்டின் சிதைவுக்கும் அதனால் காரணமாக அமைந்தார்.

ஈழத் தமிழர்களின் நவீன அரசியல் வரலாற்றில் அதிக ஆசனங்களை கொண்டிருந்த ஒரு காலத்தில் அந்தக் கூட்டுக்கு அவர் தலைமை தாங்கினார். ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் கூட்டு உடைந்துடைந்து சிறுத்துக்கொண்டு வந்து இப்பொழுது தமிழரசுக்கட்சியாக சிறுத்து விட்டது. இப்பொழுது தமிழரசுக் கட்சியும் இரண்டாக உடைந்துவிட்டது.தமிழ்த் தேசிய பிரதிநிதித்துவம் 22 ஆசனங்களில் இருந்து 13ஆசனங்கள் வரையிலும் உடைந்துபோனமை மகா தோல்வி.

அதுபோலவே தன்னுடைய சொந்தத் தொகுதியிலும் அவர் தொடர்ச்சியாகப் பெற்றுவந்த வாக்குகளை பட்டியலிட்டுப்பார்த்தால் அதில் படிப்படியாக வீழ்ச்சியைக் காணலாம்.இப்பொழுதிருக்கும் நிலையில் திருக்கோணமலையில் தமிழரசுக் கட்சிக்குப் போட்டியாக மற்றொரு தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சி களமிறங்கினால் இம்முறை சம்பந்தர் பெற்ற ஆசனம் அடுத்த முறை கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.சிலசமயம் சம்பந்தரின் அனுதாப வாக்குகள் கிடைக்கக்கூடும்.

இவ்வாறு,தான் தலைமை தாங்கிய கூட்டுக்குள்ளும் ஒரு தலைவராக தோல்வியடைந்து,தனது சொந்த தேர்தல் தொகுதியில்,தனது தாய்ப்பட்டினத்தில்,தன்னுடைய ஆதரவுத் தளத்தை படிப்படியாகத் தேய விட்டதில் தோல்வியுற்று,தான் அங்கம் வகிக்கும் மூத்த கட்சிக்குள்ளும் ஒரு தலைவராக அவர் தோல்வியடைந்து விட்டார்.

ஒரு தலைவர் தன் வாரிசுகளாகக் களமிறக்கும் அரசியல்வாதிகள் அந்த தலைவரின் பெயரை வரலாற்றில் ஸ்தாபிப்பவர்களாக அமையவேண்டும். ஆனால் சம்பந்தர் கொண்டு வந்த சுமந்திரனோ அல்லது விக்னேஸ்வரனோ அவ்வாறு இருக்கவில்லை. விக்னேஸ்வரன் சம்பந்தரின் வழி தவறு என்று கூறி அவரிடமிருந்து விலகிச் சென்றார். சுமந்திரன் சம்பந்தரின் பட்டத்து இளவரசர் போல காணப்பட்டார்.ஆனால் கட்சிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த பொழுது அவர் சம்பந்தரை பொதுவெளியில் அவமதித்தார்.தன்னுடைய வாரிசினாலேயே அவமதிக்கப்படும் ஒரு தலைவராக சம்மந்தர் அவருடைய இறுதிக் காலத்தில் காணப்பட்டார்.

அவருடைய தாய்க் கட்சி நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டபொழுது அதைத் தடுக்கும் சக்தியற்றவராக அவர் இருந்தார்.சாதாரணமாக ஒரு குடும்பத்தில் பிணக்கு என்று வரும்பொழுது மூத்தவர்கள் அதைத் தீர்த்து வைப்பார்கள். கட்சிக்குள்ளும் அப்படித்தான்.எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முது தலைவர்கள் பிணக்குகளைத் தீர்த்துவைப்பார்கள்.ஆனால் மிக மூத்த தலைவராக அவருடைய சொல்லை  அவருடைய வாரிசே கேட்கவில்லை. விளைவாக கட்சி நீதிமன்றத்தில் நிற்கிறது. அது மட்டுமல்ல அவருடைய சொந்த தேர்தல் தொகுதியில் தன்னை மதியாமல் நியமனங்கள் செய்யப்படுகின்றன என்ற பொருள்பட அவர் ஒரு முறைப்பாட்டைச்  செய்யுமளவுக்கு பலவீனமாக காணப்பட்டார்.  சம்பந்தரின் சுமார் இரண்டு தசாப்த கால தலைமைத்துவத்தை மதிப்பிட இது ஒன்றே போதும்.அவர் தன்னுடைய  தாய்க் கட்சியைச்  சிதைய விட்ட ஒரு தலைவர். அவரால் எப்படித் தேசத்தைத் திரட்டியிருக்க முடியும்?

எனவே சம்பந்தரின் கடந்த சுமார் இரண்டு தசாப்த கால தலைமைத்துவத்தை தொகுத்துப் பார்த்தால் கிடைக்கும் விடை என்ன? திருகோணமலையைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ மதகுரு,அவர் ஒரு முக்கியமான சமூக அரசியல் செயற்பாட்டாளர்,சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கேட்டார், “சம்பந்தர் இறந்தால் அவருடைய கல்லறையில் என்ன வார்தையைப் பொறிக்க வேண்டும்?” என்று. “என்ன வார்த்தை” என்று நான் கேட்டேன். அவர் சொன்னார் “பேசுவம்” என்று போடலாம்.

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *