தமிழ் நோக்குநிலையிலிருந்து ஒரு புதிய யாப்பை எதிர் கொள்ளல்

புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்பட்டால் பெரும்பாலும் வரும் ஆண்டில் மாகாண சபைகள் கலைக்கப்படக்கூடும். அதன்பின் புதிய அதிகார கட்டமைப்பிற்கான ஒரு தேர்தல் நடைபெறக் கூடும். அத் தேர்தலில் விக்கினேஸ்வரனுக்கு தமிழரசுக்கட்சி இடம் கொடுக்காது. என்பது ஒரு பரவலான ஊகம். விக்னேஸ்வரனும் அப்படித்தான் நம்புவதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அண்மையில் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு பேட்டியில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான ஒரு பின்னணியில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு விழாவில் விக்னேஸ்வரன் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதில் தன்னை அரசியலுக்கு கொண்டு வந்தது சம்பந்தரே எனத் தொனிப்பட அவர் பேசியிருந்தார். அவருக்குப் பின் பேசிய சம்பந்தர் விக்கினேஸ்வரன் தெரிவித்த சில கருத்துக்களுக்கு பதில் கூறியிருந்தார். குறிப்பாக விக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டு வந்ததன் மூலம் தான் என்ன செய்ய நினைத்தாரோ அதைத்தான் அவர் செய்கிறார் என்ற தொனிப்பட சம்பந்தர் பேசியிருந்தார்.

விக்னேஸ்வரன் சம்பந்தருக்கு மகழ்ச்சியூட்டாத ஒரு போக்கை கடைப்பிடிப்பதாக பரவலாக உணரப்பட்ட போதிலும் அது தொடர்பில் சம்பந்தர் இது வரையிலும் பகிரங்கமாக விக்கினேஸ்வரனுக்கு எதிரான கருத்துக்களை தெரவித்திருக்கவில்லை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அரசியலைப் பொறுத்தவரை விக்கினேஸ்வரன் சம்பந்தரின் தெரிவுதான். ஒரு தலைமையின் தெரிவு அந்தத் தலைமைக்கு எதிராகத் திரும்புகிறது என்றால் அந்தத் தலைமைக்குத் தோல்விதான். எனவே தனது தெரிவு தனக்கு எதிரானது இல்லை என்பதை பகிரங்கமாகக் கூறவேண்டிய ஒரு தேவை சம்பந்தருக்கு உண்டு.
தவிர, வரும் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு பின்னணியில் விக்கினேஸ்வரனுக்கு கோபமூட்டுவதன் மூலம் அவரை உசார் அடைய வைத்து அதனால் அவர் ஒரு மாற்று எதிரணிக்கு தலைமை தாங்கும் ஒரு நிலையே முன்கூட்டியே ஏற்படுத்தி விடக்கூடாது என்ற ஓர் எச்சரிக்கை உணர்வும் காரணமாக இருக்கலாம். வரும் ஆண்டில் தேர்தல்கள் அறிவிக்கப்படும் வரையிலும் விக்னேஸ்வரன் உசாராகாமல் இருப்பது தமிழரசுக் கட்சிக்கு சாதகமானது.

எனவே காலைக்கதிர் வெளியீட்டு விழாவில் சம்பந்தரும், விக்கினேஸ்வரனும் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் இல்லை என்ற முடிவுக்கு வந்து விட முடியாது. அதே சமயம் அவ்வாறு முரண்பாடுகள் இருந்தாலும் கூட அடுத்த முதலமைச்சருக்கான வேட்பாளர் யார் என்ற வாதப்பிரதிவாதம் இப்பொழுது அவசியமல்ல என்றே இக்கட்டுரை கருதுகின்றது. ஒரு புதிய அரசியல் யாப்பு வருமா என்பதிலேயே சில சந்தேகங்கள் உண்டு. அந்த யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்படுமா என்பதிலும் சந்தேகங்கள் உண்டு. இவ்வாறான நிச்சயமற்ற ஒரு சூழலில் மாகாண சபைகள் கலைக்கப்படலாம் என்ற ஊகங்களை வைத்துக் கொண்டு வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுவது என்பது தமிழில் அதிகம் புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழியைத்தான் ஞாபகப்படுத்துகிறது. ஆடறுக்க முன்னம் “அதுக்கு” விலை பேசுவது என்பதே அந்தப் பழமொழி ஆகும். கட்டுரை நாகரீகம் கருதி அப்பழமொழியை பின்வருமாறு எழுதலாம். “ஆடறுக்க முன்னம் அதன் விதைக்கு விலை பேசுவது”.

இப்படிப் பார்த்தால் அடுத்த முதலமைச்சர் யார் என்று விவாதிப்பவர்கள் ஆடறுக்க முன்னம் விதைக்கு விலை பேசும் அரசியலையே செய்கிறார்கள். ஆடு கிடாயா மறியா என்பதே நிச்சயமில்லை. இந்நிலையில் அதன் விதைக்கு எப்படி விலை பேசலாம்? எனவே தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஆடு மறியா கிடாயா என்ற விவாதம்தான். அதாவது வரப்போகும் யாப்பில்; தமிழ் மக்களின் கூட்டு உரிமைகளுக்கு உரிய இடம் கிடைக்குமா இல்லையா என்பதுதான். இதன்படி கூறின் தமிழ் மக்களை ஒரு புதிய யாப்பை எதிர் கொள்வதற்கு தயார்படுத்த வேண்டியதே இப்போதுள்ள தலையாய பணியாகும். அந்த யாப்பில் என்ன இருக்கும் என்பது தொடர்பில் இன்று வரையிலும் அரசல் புரசலான ஊகங்களே பரவலாகக் காணப்படுகின்றன. அதை ஒரு இராணுவ இரகசியம் போலவே தமிழரசுக் கட்சி உட்பட எல்லாத் தரப்புக்களும் பேண விழைகின்றன.

கடந்த செப்ரெம்பர் மாதம் எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களைச் சந்தித்த பொழுது ஒரு தீர்வு வரும் வரையிலும் பொறுத்திருக்குமாறு தமிழரசுக் கட்சியினரால் கேட்கப்பட்டது. யாப்புருவாக்க உப குழுக்கள் சில முன்னேற்றகரமான முடிவுகளை எட்டியிருப்பதாகவும் தீர்வைக் குறித்த எதிர்பார்ப்புக்களைப் பலப்படுத்தும் விதத்தில் நிலமைகள் காணப்படுவதாகவும் அந்த உரையாடலின் போது கூறப்பட்டுள்ளது. அந்த உரையாடலில் பங்கு பற்றிய ஒரு சிவில் சமூகப் பிரதிநிதியிடம் கேட்டேன். “தீர்வு முன்னெடுப்புக்களைக் குறித்து அவர்கள் மெய்யாகவே நம்புகிறார்களா? அல்லது உங்களை நம்பச் செய்வதற்காக அவ்வாறு கதைக்கிறார்களா?” என்று. அதற்கு அவர் சொன்னார் “அவர்கள் மெய்யாகவே நம்புவதாகத்தான் தோன்றுகிறது. ஆகவே ஒரு இரண்டு மாதங்கள்;தான் பொறுத்திருந்து பார்ப்போமே. எல்லாம் தெரிந்து விடும்” என்று சிரித்துக் கொண்டு சொன்னார். அண்மை மாதங்களாக சம்பந்தரும் சுமந்திரனும் ஒரு தீர்வைக் குறித்த எதிர்பார்க்கைகளை கட்டியெழுப்பும் விதத்தில் கருத்துக்களைத் தெரிவித்து வருவதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

அவ்வாறு ஒரு கருத்துருவாக்கத்தை அவர்கள் செய்கின்றார்கள் என்று சொன்னால் அதைப் பிரதானமாக மூன்று விதமாக வியாக்கியானம் செய்யலாம்.
முதலாவது:- ஒரு தீர்வைக் குறித்து அவர்களுக்கு சக்தி மிக்க வெளித்தரப்புக்கள் ஏதோ இரகசியமான உத்தரவாதத்தை வழங்கி இருக்கின்றன.
இரண்டாவது:- அவர்கள் அப்பாவித்தனமாக அவ்வாறு நம்புகிறார்கள்.
மூன்றாவது:- தீர்வு பொருத்தமானதோ இல்லையோ தமிழ் மக்களை அதற்குள் பொருந்த வைக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதில் முதலாவதின் படி சக்திமிக்க வெளித்தரப்புக்கள் அவ்வாறான உத்தரவாதங்கள் எதையாவது வழங்கியிருந்தால் அது விரைவில் தெரிய வந்து விடும்.
இரண்டாவதின்படி அவர்கள் அப்பாவித்தனமாக அரசாங்கத்தை நம்புகிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அது இன்னும் சில மாதங்களில் தெரிய வந்து விடும். நீலன் திருச்செல்வம் கொல்லப்படுவதற்கு முன்பு 1997ம் ஆண்டு நொவம்பர் மாதம் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய போது பின்வரும் தொனிப்பட கருத்துத் தெரிவித்துள்ளார். “சிங்களத் தலைவர்கள் தனிப்பட்ட உரையாடல்களின் போது மிகவும் நம்பிக்கையூட்டும் விதத்தில் இனவாதமின்றிக் கதைக்கிறார்கள். ஆனால் பகிரங்க உரையாடல்களின் போது அதற்கு தலை கீழாகக் கதைக்கிறார்கள்”; என்று. அச்சந்திப்பில் பங்குபற்றிய ஒரு தமிழர் பின்வரும் தொனிப்படச் சொன்னார். “ஒரு சட்ட நிபுணருக்கு இதைக் கண்டு பிடிக்க இவ்வளவு காலம் எடுத்ததா?” என்று. அன்று நீலன் திருச்செல்வம் சொன்னதைப் போல இப்போதுள்ள தமிழ்த் தலைவர்களும் சொல்லும் ஒரு நிலை எதிர்காலத்தில் வருமா? அவர்களை நம்பி வாக்களித்த மக்கள் எதிர்காலத்தில் தீர்வில் திருப்தியில்லை என்றால் என்ன செய்ய வேண்டியிருக்கும்?; தேங்காய்களுக்குப் பதிலாக தங்கள் தலைகளையே உடைத்துக் கொள்ள வேண்டியிருக்குமா?

மூன்றாவது விளக்கம்தான் அதிகம் ஆபத்தானது. தீர்வு பொருத்தாமானதோ இல்லையோ தமிழ் மக்களை அதற்குள் கொண்டு போய் பொருத்தலாம் என்று தமிழரசுக் கட்சியினர் நம்புகிறார்கள் என்பது. கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று சம்பந்தர் இப்பொழுது அடிக்கடி கூறி வருகின்றார். அப்படியென்றால் கிடைக்கின்ற தீர்வை முதலில் ஏற்றுக் கொண்டு பின்னர் அதை படிப்படியாக பெருப்பிக்கலாம் என்று ஒரு விளக்கத்தையும் அவர்கள் கொடுக்கலாம். அத் தீர்வை எதிர்த்தால் அது மகிந்தவை வெற்றிபெறச் செய்துவிடும் என்று கூறி மகிந்தவைத் தோற்கடிப்பதற்காக அதற்கு வாக்களியுங்கள் என்றும் கேட்கப்படலாம். அல்லது தீர்வில் எல்லாம் இருக்கிறது ஆனால் தீர்வின் பெயரில்தான் அது வெளிப்படையாகக் கூறப்படவில்லை. அப்படிக் கூறினால் அது தெற்கில் இனவாதிகளை உருவேற்றி விடும். எனவே ஒரு நல்லிணக்க உத்தியாக அல்லது சமாதானத்திற்கான ஒரு தந்திரமாக இதுதான் தீர்வு என்று வெளிப்படையாக சொல்லப்படவில்லை என்றும் ஒரு விளக்கம் தரப்படலாம். எப்படிப்பட்ட விளக்கத்தை அவர்கள் தந்தாலும் ஒரு பொருத்தமற்ற தீர்வுக்குள் தமிழ் மக்களை கொண்டு போய்ப் பொருத்தலாம் என்று அவர்கள் நம்பினால் அது ஒரு சூதான நம்பிக்கையே.

அரசாங்கம் ஒரு தீர்வு யோசனையை முன்வைத்து அதைக் கூட்டமைப்பும் ஏற்குமாயிருந்தால் அக் கட்சியானது தமிழ் மக்களை வாக்களிக்குமாறு தூண்டும். அதில் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று அந்த அரசியலமைப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பார்களாக இருந்தால் அதன் பின் உருவாக்கப்படும் புதிய அதிகாரக் கட்டமைப்பிற்கான தேர்தலின் போதும்; கூட்டமைப்புக்குச் சாதகமான நிலமைகளே தொடரக்கூடும்.

எனவே வரவிருக்கும் தீர்வு தொடர்பில் தமிழரசுக் கட்சிக்கு வெளியே உள்ள கட்சிகளும் தமிழ் மக்கள் பேரவையும் என்ன முடிவை எடுக்கப்போகின்றன என்பது இலங்கைத் தீவின் அரசியல் வலுச்சமநிலையில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக விக்னேஸ்வரன் அத் தீர்வைக் குறித்து எத்தகைய முடிவை எடுப்பார் என்பதிலும் அடுத்த கட்ட நிலமைகள் தங்கியிருக்கின்றன. தீர்வு பொருத்தமில்லை என்று கண்டு அதை எதிர்க்கும் ஒரு முடிவை எடுத்தால் ஒரு மாற்று எதிரணிக்கு அவர் தலைமை தாங்கும் முடிவையும் எடுக்க வேண்டி இருக்கும். அல்லது தீர்வை ஏற்றுக் கொள்ளும் ஒரு முடிவை அவர் எடுத்தாலும் தமிழரசுக்கட்சி அவரை வேட்பாளராக நிறுத்துமா என்பது கேள்விக்குறிதான்.
இத்தகைய ஒரு பின்னணியில் ஒரு தீர்வு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தமிழ் மக்களின் கருத்துக்களை கட்டமைக்க வேண்டிய ஒரு பொறுப்பு சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புக்களுக்கும் உண்டு. ஒரு தீர்வை முன்வைத்து மிகக் குறுகிய காலத்தில் அது தொடர்பான வாதங்களை நடத்தி முடித்து அவசரஅவசரமாக வாக்கெடுப்பு நடத்தப்படுமாக இருந்தால் தமிழ் மக்கள் தெளிவற்ற ஒரு மனோநிலையோடு வாக்களிக்க வேண்டி வரலாம். ஆனால் அவ்வாறு வாக்களித்தால் அது தமிழ் மக்கள் சில சமயம் தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப் போட்டதாகவும் முடிந்து விடலாம். தாமாக விரும்பி வாக்களித்த ஒரு தீர்வுத் திட்டத்தை தமிழ் மக்கள் போதாது என்று பின்னர் சொன்னால் அதை வெளித்தரப்புக்கள் எப்படிப் பார்க்கும்?

எனவே ஒரு தீர்வை நோக்கி தமிழ் மக்களை தயார் படுத்த வேண்டும். அப்படி ஒரு தேவை இப்பொழுது தான் எழுந்துள்ளது என்பதல்ல. ரணில் மைத்திரி அரசாங்கம் உருவாகிய பொழுதே அந்தத் தேவையும் உருவாகி விட்டது. ஆனால் அதை நோக்கி தமிழ் மக்களை தயார்படுத்தும் வேலைகளை தமிழ் தரப்புக்கள் போதியளவு செய்திருக்கின்றனவா? உதாரணமாக தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்வு யோசனையை முன்வைத்திருக்கிறது. அது தொடர்பில் சில மக்கள் சந்திப்புக்களையும் மேற்கொண்டிருக்கிறது. ஆனால் தான் முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை மக்கள் மயப்படுத்தும் வேலைகளை அந்த அமைப்பு இன்று வரையிலும் போதியளவு செய்திருக்கவில்லை. அந்த அமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளும் அதை முன்னெடுக்கவில்லை. சிவில் சமூகங்களும் அதை முன்னெடுக்கவில்லை.

இது தொடர்பாக இதுவரையிலும் எத்தனை கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன? எத்தனை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன? எத்தனை பெருங் கூட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன? எத்தனை சிறு சந்திப்புக்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன?எத்தனை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன? பேரவை தனது யோசனைகளை இலகு தமிழில் எழுதி எத்தனை ஆயிரம் பிரதிகளை அச்சடித்து தமிழ் மக்கள் மத்தியில் விநியோகித்திருக்கிறது? ஒரு எழுக தமிழிற்குப் பின் ஒருவித சோர்வு நிலை தோன்றியுள்ளதா? சில சமயம் அரசாங்கம் தீர்வு யோசனைகளை முன்வைத்த பின் எல்லாரும் திடீரென்று விழித்தெழுந்து ஆங்காங்கே கூட்டங்களை வைக்கப் போகிறார்களா?

இதனிடையே, ஜே.வி.பியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்; ஒரு தமிழ் அரசியற் செயற்பாட்டாளரோடு உரையாடிக் கொண்டிருந்த போது பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்தாராம். “எமது நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள் உண்டு. இந்த எண்ணிக்கையோடு ஜனாதிபதியையும் சேர்த்துக் கூட்டினால் மொத்தம் 226 பேர் உண்டு. இந்த 226 பேரிலும் ஓர் அரசியல் தீர்வு வரும் என்று நம்புவது ஒரே ஒரு சுமந்திரன் மட்டும்தான்” என்று. இப்படிப் பார்த்தால் ஒரு தீர்வு வரும் என்று நம்பி அதை நோக்கி தமிழ் மக்களை தயார்படுத்துவது கூட சிலவேளை ஆடறுக்க முன்னம் விதைக்கு விலை பேசுவதாக அமைந்து விடுமோ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *