கடந்த வாரம் நான் எழுதிய வெளியாருக்காகக் காத்திருத்தல் என்ற கட்டுரையின் மீது சில நண்பர்கள் கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். அக்கேள்விகளின் சுருக்கம் வருமாறு,
1 வெளியாருக்காகக் காத்திருத்தல் என்பது ஈழத்தமிழர்களின் வேர்நிலை இயல்பா?
2 வெளியாருக்காகக் காத்திருந்து தமிழர்கள் இதுவரை பெற்றது என்ன?
3 ஏன் எந்தவொரு வெளிச்சக்தியும் தமிழர்களைப் பொறுப்பேற்கவோ அல்லது தத்தெடுக்கவோ தயாராகவில்லை.
4 தமிழர்கள் வெளியாருக்காகக் காத்திருப்பதை சிங்கள மக்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள்?
5 தமிழர்கள் நாட்டை வெளியாருக்கு காட்டிக்கொடுக்கின்றார்கள் என்று சிங்கள மக்கள் கருதமாட்டார்களா?
6 அப்படி கருதுமிடத்து நல்லிணத்திற்கான கதவுகள் திறக்கப்பட முடியாதபடி மூடப்படுமல்லவா?
7 உள்நாட்டில் நல்லிணத்திற்கான கதவுகள் மூடப்பட்ட அதேசமயம், வெளியிலிருந்து யாரும் தமிழர்களை தத்தெடுக்கத் தயாரில்லை என்ற ஓர் நிலையில் தமிழர்களின் எதிர்காலம் எப்படி அமையும்?
மேற்படி கேள்விகளுக்கான பதிலாகவே இன்று இக்கட்டுரை அமைகின்றது.
முதலாவது வெளியாருக்காகக் காத்திருத்தல் என்பது தமிழர்களின் அடிப்படை இயல்பா? என்படுவது. இலங்கைத் தீவின் நவீன வரலாற்றைப் பொறுத்த வரை இது ஓரளவிற்கு உண்மைதான். ஒரு மேற்கத்தேய அறிஞரின் கூற்றை இங்கு நினைவு கூரலாம். ‘இலங்கைத் தீவிலுள்ள சிறுபான்மையினர் பெரும்பான்மை உளச்சிக்கலோடு (majority Complex) காணப்படுகின்றார்கள் பெரும்பான்மையினர் சிறுபான்மை உளச்சிக்கலோடு (minority Complex) காணப்படுகின்றார்கள்” என்பதே அது. அதாவது, ஈழத்தமிழர்கள் பெரிய தமிழ்நாட்டின் நீட்சியாக தங்களைக் கருதுவதால் சிறிய இலங்கைத் தீவில் தங்களை பெரும்பான்மையாகக் கருதுகிறார்கள். அதேசமயம் சிங்கள மக்கள் பெரிய தமிழ் நாட்டுடன் தமிழ் மக்களை இணைத்துப் பார்ப்பதால் தங்களை இச்சிறு தீவில் சிறுபான்மையினராக உணர்கிறார்கள். இந்த மைனோறிட்டி கொம்பிளைக்ஸ்தான் இலங்கை இனப்பிரச்சினையின் வேர்நிலைக் காரணிகளில் ஒன்று எனலாம். கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதுபோல, இலங்கைத் தீவில் தமிழர்கள் வெளியாருக்காகக் காத்திருத்தலின் தொடக்கம் இதுவே.
அதேசமயம் தமிழர்கள் தரப்பில் இலட்சியவாதத்தால் சூழப்பட்டு நெகிழ்ச்சியற்றிருந்த நிகழ்ச்சி நிரலும் ஒரு முக்கிய காரணம் தான். ஈழத்தமிழர்கள் யதார்த்தமாகச் சிந்திப்பவர்கள் இல்லை என்றதொரு கருத்து உலகின் சக்தி மிக்க இராஜதந்திரிகளில் கணிசமானவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. அரசாங்கத்தை ஒரு கட்டத்திற்கு மேல் நெருக்க முடியாது என்றே அவர்கள் கருதுகின்றார்கள். அண்மையில் இலங்கைக்கு வந்த அமெரிக்க பிரதிநிதிகளும் தமிழ் அரசியல் வாதிகளுடனான சந்திப்பின்போது இதை சூசகமாக உணர்த்த முற்பட்டிருக்கின்றார்கள். அதாவது அரசாங்கத்தை ஒரு கட்டத்திற்கு மேல் இறுக்கிப்பிடித்தால் பிராந்திய மட்டத்தில் தமக்குப் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதே அது.
எனவே, வெளிச்சக்திகளின் அழுத்தம் எனப்படுவது அவர்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இருக்கும் நிச்சயமாக தமிழர்கள் கற்பனை செய்யும் உச்ச எல்லைகளை அது தொடப்போவதில்லை. அதேசமயம் உள்நாட்டிலும் நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை. இந்நிலையில் தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் எப்படி அமையும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளின் பாரதூரத் தன்மையை விளங்கி வைத்திருக்கின்றதா? கொள்கைத் தீர்மானங்களாலன்றி, டீல்கள் மூலம் நிலைமைகளை கையாள முடியும் என்று அவர்கள் நம்புகின்றார்களா?
இந்த இடத்தில் ஒரு கசப்பான உண்மையை சுட்டிக்காட்ட வேண்டும்;. வெளியாருக்காகக் காத்திருத்தல் என்பது பொதுவான ஓர் ஈழத்தமிழ் மனோநிலை மட்டுமல்ல. அது அநேகமான தமிழ் அரசியல்வாதிகளின் மனோநிலையும்கூடத்தான். போர் முடிவுக்கு வந்தபின்னரான தமிழ் அரசியல் சூழல் எனப்படுவது அவ்வாறுதான் காணப்படுகின்றது. தமிழ் பேரம்பேசும் சக்தியின் கணிசமான பகுதியே அதுவாகத்தான் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு விதிவிலக்கல்ல. யுத்தத்தின் வெற்றிகளால் உள்நாட்டில் யாராலும் அசைக்கப்பட முடியாதபடிக்கு, மிகப் பலமாக காணப்படும் ஓர் அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு தீர்வைப் பெறுவதாக இருந்தாலும் வெளி அழுத்தம் அவசியம் என்றே எல்லா தமிழ் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் கருதுவதாகத் தெரிகின்றது. இது ஒரு விதத்தில் இயலாமையின் பாற்பட்டதே. எனினும், இலங்கைத்தீவின் இன யதார்த்தம் அப்படித்தான் இருக்கின்றது. கொழும்பிலுள்ள தலைமைகள் தரக்கூடிய தீர்வு எதையும்; தமிழ்மக்கள் ஏற்கப்போவதில்லை. தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு எதையும்; கொழும்பில் உள்ள தலைமைகள் தரப்போவதில்லை. எனவே, மூன்றாம் தரப்பு அதாவது ஒரு வெளித் தரப்பு தலையிட்டால் தவிர தீர்வுக்கு வழியே இல்லை.
இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இதுவரையும் எட்டப்பட்ட இரண்டு உடன்படிக்கைகளும் இவ்வாறு வெளிச்சக்திகளின் தலையீட்டின் மூலம் பெறப்பட்டவைதான். இலங்கை – இந்திய உடன்படிக்கைக்குப் பின்னால் இந்தியா நின்றது. ரணில் -பிரபா உடன்படிக்கைக்குப் பின்னால் மேற்குநாடுகள் நின்றன. வெளிசக்திகள் தலையிடக்கூடிய அளவிற்கு ஓர் இன இடைவெளி எனப்படுவது இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. இந்த இன இடைவெளியின் நேரடி விளைவே வெளியாருக்காகக் காத்திருப்பது அல்லது வெளியாரின் உதவி பெற்று எதிர்தரப்பை தோற்கடிப்பது என்ற மனோநிலையாகும். இந்த இனஇடைவெளி நிலவும் வரை நல்லிணக்கத்திற்கு இடமேயில்லை. இறையாண்மைக்கும் சோதனைகள் இருக்கும்.
நந்திக் கடலில் பெற்ற வெற்றிகளோடு நாட்டின் இறையாண்மைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டதாக ஒரு நம்பிக்கை கொழும்பில் பலமான ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது உண்மையல்ல. தமிழ் மக்களின் அரசியலானது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தவரை அது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்றே கொழும்பில் கருதப்பட்டது. விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததோடு அந்த அச்சுறுத்தல் அகற்றப்பட்டுவிட்டதாகவும் நம்பப்படுகின்றது. ஆனால், விடுதலைப்புலிகள் இருந்த வரை தமிழ் மக்களின் அரசியல் வெளி எனப்படுவது வெளிச் சக்திகளுக்கு மூடப்பட்டதாக இருந்தது. அதில் வெளிச்சக்திகள் இலகுவாக உள்நுழையவோ அல்லது அதைக் கையாளவோ முடியாமலிருந்து. ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதோடு, தமிழ் மக்களின் அரசியல் அரங்கானது முற்றுமுழதாகத் திறக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது அதை வெளியார் இலகுவாகக் கையாள முடியும்.
கொழும்பின் மீது அழுத்தத்தை பிரயோகிக்க விளையும் எந்தவொரு வெளிச்சக்தியும் மேற்படி திறக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் பரப்பை எளிதாகக் கையாள முடியும். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் காணப்படும் தடைகள், மேலும் இதை ஊக்குவிக்கும். எனவே, மேற்படி விளக்கத்தின் படி கூறின் நாட்டின் இறையாண்மை பலவீனமான நிலையில் உள்ளது என்பதே சரி. ஜெனிவா மாநாட்டை எதிர்நோக்கியிருக்கும் ஒரு காலச் சூழலில் அமைச்சர் பீரிஸ் இந்தியாவிற்குப் போனமை, அமெரிக்கபிரதானிகள் இலங்கைக்கு வந்தமை மற்றும் மார்ச் மாதத்தை நோக்கி நிகழும் பதட்டம் கலந்த எல்லா காய் நகர்த்தல்களும் இதைத்தான் பிரதிபலிக்கின்றன.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரான இலங்கைத் தீவானது ஒப்பிட்டளவில் அதன் இறையாண்மையை இழந்து கொண்டிருக்கின்றது என்பதே உண்மை நிலை. சக்தி மிக்க நாடுகளுக்கிடையில் இந்த அரசாங்கம் வெற்றிகரமாகச் சுழித்தோடுகிறதுதான். எனினும் ஒரு பேரரசிடமிருந்து தன்னைப் பாதுகாப்பதற்காக இன்னொரு பேரரசிடம் பணிந்துபோகவேண்டியிருக்கின்றது. இங்கேயும்இறையாண்;மை இழக்கப்படும். நாட்டுக்குள் சக இனங்களுடன் நல்லிணக்கத்திற்கு வரத் தவறும் போது வெளியாரிடம் பணியவேண்டி ஏற்படுகின்றது. இறையாண்மை எனப்படுவது உள்நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் மீதே கட்டியெழுப்பப்படுகின்றது. நல்லிணக்கம் எப்பொழுதும் வென்றவர்களிடமிருந்தே வர வேண்டும். இனங்களுக்கிடையில் வென்றவர் – தோற்றவர் என்ற பிளவு கூர்மையுற்றுக் காணப்படும்போது அது வெளிச் சக்திகளுக்கே வாய்ப்பை கொடுக்கின்றது. அதாவது இறையாண்மை சோதனைக்குள்ளாகிறது. சக்தி மிக்க நாடுகள் இலங்கைத் தீவின் ஒருபிரிவினருடைய அரசியலை கையாள முற்படுகின்றன எனப்படுவது இலங்கைத்தீவின் இறையாண்மை சோதிக்கப்படுகின்றது என்றே அர்த்தம். ஆயின், நந்திக் கடலில் இலங்கை பெற்றது வெற்றியா? அல்லது தோல்வியா?