ஆட்சி மாற்றத்தின் பின் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுத்த ஒரு விரிவுரையாளர் அவர்களைப் பார்த்துக் கேட்டாராம் ‘ஜனநாயகம் என்றால் என்ன?’ என்று. அதற்கு ஒரு சிங்கள மாணவி சொன்னாராம் ‘ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை நடாத்துவதற்கு உள்ள சுதந்திரம்தான்’ என்று. ‘முன்னைய ஆட்சிக்காலத்தில் ஊர்வலங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடாத்த முடிந்ததில்லை. அப்படி நடாத்தியவர்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் யாரும் எதற்காகவும் ஊர்வலங்கள் செய்யலாம், ஆர்ப்பாட்டங்கள் செய்யலாம் என்று ஒரு நிலமை தோன்றியிருக்கிறது இதுதான் ஜனநாயகம்’ என்று அந்த மாணவி மேலும் சொல்லியிருக்கிறார்.
மேற்படி விரிவுரையாளரோடு கடந்த ஆண்டு கொழும்பு மாநகரின் மையப் பகுதிகளில் பயணம் செய்து கொண்டிருந்தேன். கொழும்புத் துறைமுகத்திற்கு அருகே உள்ள சந்தியில் துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்கள். அதனால் பாதைகள் தடைபட்டன, பயணங்கள் இறுகி நின்றன. போக்குவரத்துப் பொலீசார் நிலமைகளைக் கையாள்வதற்குப் பெரிதும் சிரமப்பட்டார்கள். பொலிசார் அந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்க முயற்சிக்கவில்லை. மாறாக அந்த ஆர்ப்பாட்டத்தின் விளைவாக வந்த போக்குவரத்து நெரிசலை அகற்றுவதிலேயே கவனம் செலுத்தினார்கள். என்னோடு வந்த மேற்படி விரிவுரையாளர் சிரித்துக் கொண்டு சொன்னார். ‘பார்த்தீர்களா என்னுடைய மாணவி சொன்ன அந்த ஜனநாயகத்தை’ என்று.
ஆட்சி மாற்றத்தின் பின் யாழ்ப்பாணத்தில் நடந்த முதலாவது ஊர்வலத்திலும் இது நடந்தது. இன்று வரையிலுமான எல்லா ஊர்வலங்களிலும் இதைக் காண முடிகின்றது. அதாவது பொலீசார் ஊர்வலங்களை நேரடியாகத் தடுப்பதில்லை. அவர்கள் ஊர்வலத்தால் வரும் போக்குவரத்து நெரிசலை சீராக்குகிறார்கள். கடந்த மாதம் மெரீனா எழுச்சியின் தொடக்கத்திலும் தமிழகப் பொலிசார் மென்மையாக நடந்து கொண்டார்கள். சில பொலீஸ்காரர்கள் போராட்டக்காரர்களாகவும் மாறினார்கள். ஒரு பொலீசார் தாகத்தோடு இருந்த போராட்டக்காரர்களுக்கு தண்ணீர் குடிக்கக் கொடுக்கும் காட்சி இணையப்பரப்பில் வியந்து போற்றப்பட்டது. அப்பொழுது ஒரு முகநூல்வாசி கேட்டார்…. ‘வழமையாக தாகம் என்று கேட்டால் சிறுநீரைப் பருகக் கொடுக்கும் பொலீசா இது’ என்று. ஆனால் ஜல்லிக்கட்டு எழுச்சியின் முடிவில் என்ன நடந்தது?
இந்த இடத்தில் கிராம்ஸியின் (Antonio Gramsci) மேற்கோள் ஒன்றை சுட்டிக் காட்டலாம். ‘மேற்கத்தைய ஜனநாயகம் எனப்படுவது நாடாளுமன்றத்தின் பின் மறைந்திருக்கும் பீரங்கிகள்தான். அதிகாரத்திற்கு ஆபத்து என்று வரும்பொழுது பீரங்கிகளை உயர்த்தியபடி கவச வண்டிகள் முன்னே வரும்’ என்ற தொனிப்பட கிராம்ஸி கூறியிருக்கிறார். மெரீனா எழுச்சிக்கும் இதுதான் நடந்தது. அது ஜல்லிக்கட்டுக்கான ஒரு போராட்டம் என்பதையும் தாண்டி கோப்பறேற் நிறுவனங்களுக்கும் எதிரானது என்ற ஒரு விஸ்வரூபத்தை எடுக்கத் தொடங்கிய பொழுது கோப்பறேற் நிறுவனங்களும் அந்த நிறுவனங்களால் பாதுகாக்கப்படும் அதிகார உயர் குழாமும் விழித்துக் கொண்டு விட்டன. தண்ணீர் பருக்கும் பொலீசுக்குப் பதிலாக சிறுநீர் பருக்கும் நிஜப் பொலீஸ் வெளியே வந்தது.
அண்மை வாரங்களாக தமிழர் தாயகத்தில் நடந்து வரும் எழுச்சிகள், போராட்;டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். ஆனால் சபை முதல்வரும், அமைச்சருமாகிய லக்ஸ்மன் கிரியெல என்ன கூறுகிறார் தெரியுமா? ‘எழுக தமிழ் ஊர்வலம் தொடர்பில் நாம் பெருமை கொள்ள வேண்டும். வேண்டுமானால் நாமும் எழுக தமிழ் ஊர்வலத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஓர் ஊர்வலத்தை நடாத்த முடியும். இது நாட்டின் சுதந்திரம். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். கடந்த 20 வருடங்களாக ஒன்றுமில்லாமல் இருந்து விட்டு சுதந்திரம் கிடைத்தவுடன் சிறிது காலம் இப்படித்தான் நடைபெறும். அவர்கள் மட்டுமா ஊர்வலம் சென்றார்கள்? ஏன் அதனை மட்டும் கேட்கிறீர்கள்? இன்று எல்லாவற்றிற்கும் ஊர்வலம் செல்கிறார்கள். வீரவன்சவை வெளியே விடுமாறு ஊர்வலம் செய்கிறார்கள், நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கினாலும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள், அரசு சில நடவடிக்கைகளை எடுத்தாலும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இன்று எமது நாட்டில் எவ்வளவு சுதந்திரம் உள்ளது’ இவ்வாறு அமைச்சர் கிரியெல்ல கூறியிருக்கிறார். கிழக்கு எழுகதமிழ் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் கூறியுள்ளார்.
அவர் கூறுவது சரியா? ஊர்வலம் நடத்துவதற்கான ஒரு சுதந்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாட்டின் சுதந்திரத்தை அளவிட முடியுமா? எழுகதமிழ் எனப்படுவதே தமிழ் மக்கள் தமது கூட்டுரிமைகளுக்காக தெருவில் இறங்கிய ஓர் எழுச்சிதான். தமிழ் மக்களின் கூட்டுரிமைகள் மறுக்கப்பட்டதன் விளைவே அது. இப்படிப் பார்த்தால் எழுகதமிழ் எனப்படுவது தமிழ் மக்களுக்கு கிடைக்கத் தவறிய ஒரு சுதந்திரத்தின் வெளிப்பாடுதான். ஆனால் அதை கிரியெல்ல எப்படிச் சித்திரிக்கிறார்? எழுக தமிழையும் அது போன்ற ஏனைய எல்லா எதிர்ப்புக்களையும் அரசாங்கம் எப்படிப் பார்க்கிறது என்பதற்கும் அதை எப்படி கையாள்கிறது? கையாளக்கூடும்? என்பதற்கும் ஒரு குறிகாட்டி அது.
கடந்த சில வாரங்களாக தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் எதிர்ப்புக்களையும், ஆர்ப்பாட்டங்களையும் மூன்று வகைப்படுத்தலாம். முதலாவது – அரசியல்வாதிகளாலும், கட்சிகளாலும், அரசியல் செயற்பாட்டாளர்களாலும் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள். உதாரணம் எழுக தமிழ். இரண்டாவது – செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள், தொழிற் சங்கங்களால் முன்னெடுக்கப்படும் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள். உதாரணமாக பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்குப் பின்; நடைபெற்ற போராட்டங்கள். மூன்றாவது- பாதிக்கப்பட்ட மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள். உதாரணமாக கேப்பாப்பிலவு போராட்டம்.
இம்மூன்றிலும் ஒப்பீட்டளவில் எழுகதமிழ் வித்தியாசமானது. அது தன்னெழுச்சி அல்ல. நன்கு நிறுவனமயப்பட்ட ஓர் அமைப்பினால் திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் எழுச்சி அது. அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களுமே அதை முன்னின்று நடாத்தினார்கள். ஏனைய போராட்டங்களோடு ஒப்பிடுகையில் எழுகதமிழ் ஒப்பீட்டளவில் பெரியது. அரசியல் அடர்த்தி அதிகமுடையது.
எழுகதமிழைப் போல பெரியவை இல்லையென்றாலும் செயற்பாட்டு இயக்கங்களால், தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புக்களும் ஒப்பீட்டளவில் முன் கூட்டியே திட்டமிடப்பட்டவைதான். அங்கேயும் ஒருங்கிணைப்பாளர்கள் உண்டு. அவர்களுக்கென்று நம்பிக்கைகளும், இலட்சியங்களும் சித்தாந்த அடித்தளங்களும் உண்டு.
ஆனால் இவற்றிலிருந்து வேறுபட்டவை பாதிக்கப்பட்ட மக்கள் நடாத்தும் போராட்டங்கள். அந்த மக்களுடைய கண்ணீருக்கும், காயங்களுக்கும் பின்னால் அரசியல் உண்டு. அவர்களுடைய கோபத்திற்குள்ளும் அரசியல் உண்டு. ஆனால் சித்தாந்த அடித்தளமோ அல்லது கோட்பாட்டுத் தரிசனமோ போதியளவிற்கு அவர்களிடம் இல்லை. நிறுவனப் பின்பலங்களும் குறைவு. தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதனாலும் தீர்வு கிடைக்கவில்லையே என்ற விரக்தியினாலும் ஆவேசத்தோடு போராட முன் வருகிறார்கள். இவர்களுடைய கோபம் உண்மையானது. ஆனால் அரசாங்கத்தைப் போலவோ,அரசியல்வாதிகளைப் போலவோ, கட்சிகளைப் போலவோ, தந்திரமாகச் சிந்திக்க இவர்களுக்குத் தெரியாது. அரசியலின் நெளிவு சுழிவுகளும் இவர்களுக்குத் தெரியாது. இதுதான் இவர்களுடைய பலமும், பலவீனமும்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் தொடங்கியபோது அதில் அரசியல்வாதிகளின் பின்னணி பெருமளவிற்கு இருக்கவில்லை. சில செயற்பாட்டாளர்கள் பின்னணியில் நின்றார்கள். போராட்டம் தொடங்கிய பின் அரசியல்வாதிகள் ஒத்துழைப்பை நல்கினர். கேப்பாப்புலவிலும், புதுக்குடியிருப்பிலும் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. வவுனியாப் போராட்டத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், ஒரு மாகாணசபை உறுப்பினரும் ஒப்பீட்டளவில் கூடுதலாக உதவி செய்திருக்கிறார்கள். கேப்பாப்புலவில் ஒரு மாகாணசபை உறுப்பினர் போராட்டக்காரர்களோடு அதிகமாகக் காணப்படுகிறார்;. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அடிக்கடி வந்து போகின்றார். புதுக்குடியிருப்பிலும் நிலமை இப்படித்தான். இப் போராட்டங்களில் மக்கள் முன்னே செல்ல அரசியல்வாதிகள் பின்னே செல்கிறார்கள். இவ்வாறான போராட்டங்களில் தங்கள் பெயர்களையும் வரவேட்டில் பதிய வேண்டிய தேவை ஒரு தொகுதி அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. சில சமயங்களில் சில அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கும், இவர்களுக்குமிடையே இடைத்தொடர்பாளர்களாக செயற்படுகிறார்கள். ஆனால் பெருமளவிற்கு அரசியல்வாதிகளால் வழிநடத்தப்படாத எழுச்சிகள் இவை.இப்படிப்பட்ட போராட்டங்களை அரசாங்கம் எப்படிப் பார்க்கிறது?எப்படிக் கையாண்டு வருகிறது?
வவுனியாப் போராட்டத்தை அரசாங்கம் தந்திரமாக முடிவிற்குக் கொண்டு வந்திருக்கிறது. அது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம். அதை அப்படியே விட்டால் யாராவது இறந்து போய் விடுவார்கள். அது அடுத்தடுத்த கட்ட எழுச்சிகளுக்கு காரணமாகி விடும். எனவே உண்ணாவிரதிகள் சாவடைய முன் அந்தப் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு இருந்தது. இது விடயத்தில் சில மத குருக்களும் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர விரும்பியதாக ஒரு செயற்பாட்டாளர் தெரிவித்தார். முடிவில் அரசாங்கம் ஓர் இணை அமைச்சரை அனுப்பியது. அந்த அமைச்சரோடு ஓர் உடன்பாடு எட்டப்பட்டது. அந்த உடன்படிக்கையின்படி அலரி மாளிகையில் சந்திப்பு என்று எழுதப்பட்டிருந்தது. அதன்பின் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பின்படி குறிப்பிட்ட தினத்தில் பகல் பத்து மணிக்கு ஜனாதிபதி உண்ணாவிரதிகளைச் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டதாம்.
அலரிமாளிகை என்றால் அது பிரதமரின் வாசஸ்தலம். எனவே பிரதமரும், ஜனாதிபதியும் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவே தங்களைச் சந்திக்கப் போகிறது என்று உண்ணாவிரதிகள் நம்பினர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இரண்டாம் நிலைப் பிரதானிகளே சந்திப்பில் கலந்து கொண்டனர். அதோடு கூட்டமைப்பு உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள். கூட்டமைப்பு உறுப்பினர்களை அகற்றுமாறு உண்ணாவிரதிகள் கேட்டனர். அரச பிரதிநிதிகள் கூட்டமைப்பு பிரதிநிதிகளை ஆதரித்து கதைத்திருக்கிறார்கள். அரச தரப்புப் பிரதிநிதிகளில் ஒருவரான பொலிஸ்மா அதிபர் ஒரு கட்டத்தில் சொன்னாராம் ‘சம்பந்தர் உங்களுக்காக எவ்வளவு கஸ்ரப்படுகிறார் தெரியுமா? அவர் உங்களோடு வந்திருந்து உண்ணாவிரதமிருக்கப் போவதாகக் கூறினார். நாங்கள்தான் அவரைத் தடுத்து நிறுத்தினோம்…’என்ற தொனிப்பட.ஆனால் உண்ணாவிரதிகள் விட்டுக் கொடுப்பின்றி வாதாடிய காரணத்தினால் சுமார் 15 நிமிடங்களுக்குப்பின் கூட்டமைப்பினர் வெளியேற வேண்டியதாயிற்று.
சந்திப்பில் கலந்து கெண்ட உண்ணாவிரதிகளை காணாமல் ஆக்கப்பட்ட எல்லாருக்குமான பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள அரசாங்கமும் தயாராக இருக்கவில்லை. கூட்டமைப்பும் தயாராக இருக்கவில்லையாம். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கடந்த ஆண்டு ஜெனீவாவில் அரசாங்கம் ஒப்புக் கொண்ட பொறுப்புக்கள் தொடர்பில் கூட உறுதியான முடிவு எதுவும் அக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. போராட்டத் தரப்புக்கு அரச தரப்பு போதியளவு மதிப்புக் கொடுக்கவில்லை என்று ஒரு செயற்பாட்டாளர் தெரிவித்தார்.சந்திப்பு நடந்துகொண்டிருந்த போதே சில அரச தரப்பு பிரதிநிதிகள் இடை நடுவில் எழுந்து சென்று விட்டார்களாம்.சந்திப்பின் முடிவில் அரச பிரதிநிதிகள் உண்ணாவிரதிகள் தரப்பை உணவருந்த அழைத்திருக்கிறார்கள்.ஆனால் உண்ணாவிரதிகள் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நடைமுறைச் சாத்தியமான தீர்வு எதையும் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக கூட்டமைப்பிற்கும், அதன் வாக்காளர்களுக்கும் இடையிலான பரிசுகேடான இடைவெளியை நிரூபிக்கும் ஒரு சந்திப்பாகவே அந்த சந்திப்பு முடிவடைந்தது.
கேப்பாப்புலவு போராட்டத்திற்கு இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் முடிவு கிடைக்கவில்லை. புதுக்குடியிருப்பிலும் அப்படித்தான். கேப்பாப்புலவில் குறிப்பாக பிலக்குடியிருப்பு மக்களுக்கு கிட்டத்தட்ட 21 ஏக்கர் நிலப்பரப்பை விட்டுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகக் காணப்படுவதாக உத்தியோகபூர்வமற்ற ஓரு தகவல் உண்டு. ஆனால் அதை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதை அரசாங்கம் இழுத்தடிக்கின்றது. ஏனெனில் இது போன்ற போராட்டங்களுக்கு உடனடியாகவே தீர்வைக் கொடுத்தால் தமிழ் மக்கள் போராட்டத்தில் ருசி கண்டு விடுவார்கள். புலிகள் இயக்கம் பீரங்கிகளை வைத்து அகற்ற முடியாமல் போன முகாம்களை எல்லாம் பெண்களும், குழந்தைகளும் ஆர்ப்பாட்டம் செய்து அகற்றி விடுவார்கள் என்று அரசாங்கம் அஞ்சக்கூடும். எனவே இது போன்ற போராட்டங்களுக்கு உடனடியாகத் தீர்வை வழங்காமல் போராட்டக்கார்கள் சலித்துக் களைக்கும் வரையிலும் இழுத்தடிக்கவே அரசாங்கம் முற்படும். வவுனியா உண்ணாவிரதத்தைப் போல கேப்பாப்புலவு போராட்டமானது கால எல்லைக்குட்பட்டது அல்ல. இங்கு கால எல்லை என்று கருதப்படுவது எதுவெனில் உண்ணாவிரதிகளில் யாராவது ஒருவர் இறக்கும் வரையிலுமான தருணம்தான். அந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம் உண்ணாவிரதிகளின் உயிர் பிரிவதுதான். என்றபடியால் தான் அரசாங்கம் அங்கே உடனடியாகத் தலையிட்டது. ஆனால் கேப்பாப்புலவில் நிலமை அப்படியல்ல.
இராணுவ முகாம்களின் நிழலில் உயரமான கார்பற் சாலையின் ஓரத்தில் பள்ளமான நிலத்தில் நான்கு தற்காலிக தகரக் கொட்டில்களை அமைத்து அந்தப் பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய உணவை ஒன்றில் அவர்கள் சமைக்கிறார்கள். அல்லது சில நிறுவனங்கள் சமைத்துக் கொடுக்கின்றன. இவ்வாறு சமைத்துக் கொடுத்த ஒரு நபர் அதற்காகவென்று அந்தப் பெண்கள் நன்றி தெரிவிக்கும் வீடியோவை எடுத்து இணையத்தில் ஏற்றியுமிருக்கிறார். ஒவ்வொரு நாளும் வெளிமாவட்டங்களில் இருந்து கேப்பாப்புலவிற்கு செயற்பாட்டாளர்களும் ஆதரவாளர்களும் வந்து போகிறார்கள். சில சமயங்களில் போராட்டக் குடில்களுக்குள் அமர்ந்திருந்து செல்பியும் எடுக்கிறார்கள். ஆனால் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அதாவது பத்தொன்பதாவது நாளாக அந்தப் பெண்கள் குழந்தைகளோடு பனியிலும், வெயிலிலும், மழையிலும் தெருவோரத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கிராம்;ஸி கூறுவது போல அரசாங்கத்திற்கு நோகாத வரையிலும் அவர்கள் அங்கே இருந்து போராடலாம். மாறாக மெரீனா எழுச்சியானது கோப்பறேற் உற்பத்திகளான குடிபானங்களையும், உணவு வகைகளையும் புறக்கணிக்கும் ஓரு வளர்ச்சிக்குப் போன போது தமிழக பொலீஸ் அதன் நிஜ முகத்தைக் காட்டியது போல கேப்பாப்புலவு மக்களும், புதுக்குடியிருப்பு மக்களும் அரசாங்கத்திற்கோ, படைக்கட்டமைப்பிற்கோ நோகக் கூடிய விதத்தில் எதையாவது செய்யத் துணியும் போதே அமைச்சர் கிரியெல்ல கூறும் சுதந்திரத்தின் அளவு எவ்வளவு? என்பது தெரிய வரும்.