ஜெனீவாக் கூட்டத் தொடரையொட்டி வடக்கில் நடந்தவை


கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சரஸ்வதி மஹாலில் ஒரு கூட்டம் நடந்தது. மாசற்ற அரசியலை நோக்கிய “மார்ச் 12 இயக்கத்தால்” அக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 2015 மார்ச் மாதம் அதாவது ஆட்சி மாற்றத்தின் பின் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மேற்படி மார்ச் 12 இயக்கத்தின் பிரகடனம் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இலங்கையில் தேர்தல் செயற்பாடுகளைக் கண்காணிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்து வரும் பவ்ரல் அமைப்பு மேற்படி மார்ச் 12 இயக்கத்தின் அடித்தளமாகக் காணப்படுகின்றது. இதில் சர்வோதயம், கியூடெக் உட்பட பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்களும் பங்காளிகளாக உள்ளன.

மாசற்ற அரசியலை கீழிருந்து மேல் நோக்கி கட்டியெழுப்பும் நோக்கத்தோடு மார்ச் 12 இயக்கம் உருவாக்கப்பட்டது. இதன் பிரகடனத்தில் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட 17 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள். நடக்கவிருப்பதாக எதிர்ப்பார்க்கப்படும் உள்;ராட்சி மன்றத் தேர்தல்களையொட்டி அரசியல்வாதிகளையும், வேட்பாளர்களையும் மாசற்ற ஓர் அரசியல் கலாசாரத்தை நோக்கி ஊக்குவிக்கும் நோக்கத்தோடு கடந்த ஞாயிற்றுக் கிழமைக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இக் கூட்டத்தில் புத்திஜீவிகள், அரசியல் வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பெண்ணியற் செயற்பாட்டாளர்கள் மற்றும் வடபகுதிக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கும் ஏறக்குறைய ஒரு கிழமைக்கு முன்னதாக யாழ். வை.எம்.சி.ஏ மண்டபத்தில் ஒரு சனிக்கிழமை ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மறுமலர்ச்சி இயக்கத்தின் சார்பாக விக்ரர் ஐவன் மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தி இருந்தார். முன்னாள் ஜே.வி.பி போராளியான அவர் பின்னர் ராவயப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். மறுமலர்ச்சி இயக்கத்திற்காக நாடு முழுவதிலும் பத்து லட்சம் பேரை அணிதிரட்டுவதே அச்சந்திப்பின் நோக்கம் என்று கருதப்படுகின்றது. மறுமலர்ச்சி இயக்கமானது முழு இலங்கைக்குமான ஒரே தேசியத்தை வலியுறுத்துகிறது. இனம், மதம், மொழி என்பவற்றின் பேரால் பல்வேறு தேசியங்கள் உருவாகி அதனால் நாடு சந்தித்த கொடுமையான அனுபவங்களிலிருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் இலங்கைத் தேசியம் ஒன்றை கட்டியெழுப்புவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

“நவீன அர்த்தத்தில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் இனங்களாக கருதப்பட முடியுமே தவிர தேசியங்களாக கருத முடியாது. தேசிய அரசுக்குள் வாழும் அனைத்து இனங்களையும், சாதிகளையும், மதங்களையும் உள்ளடக்கிய சகல மக்களையுமே நவீன அர்த்தத்தில் தேசியம் எனக் கருத முடியும். ஆனால் ஐரோப்பிய நாடுகளைப் போலல்லாது இலங்கையைப் போன்ற காலனித்துவ நாடுகளில் தேசியம் இயல்பாகவே உருவாகும் ஒன்றல்ல. அதனை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது ஒரு சிக்கலான வழிமுறையாகும். ஒரு தேசியத்திற்குரிய மக்கள் மத்தியில்  இனம், சாதி, மதம் காரணமாக ஏற்பட்டுள்ள உயர்வு, தாழ்வு பேதங்களை இல்லாதொழித்து அவர்கள் அனைவரும் சம உரிமைகளுக்கும், சமமான மனித கௌரவத்திற்கும் உரித்தானவர்கள் என்று அங்கீகரிப்பதன் மூலமே தேசியத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்…..” இவ்வாறு மறுமலர்ச்சி இயக்கத்தின் கோட்பாடுகளில் காணப்படுகின்றது.

மார்ச் 12 இயக்கமும், மறுமலர்ச்சி இயக்கமும் ஏறக்குறைய ஒரு வார கால இடைவெளிக்குள் வடக்கிலுள்ள பிரதான நகரங்களில் தமது சந்திப்புக்களையும், கூட்டங்களையும் ஒழுங்குபடுத்தியிருந்தன. இவ்விரண்டு இயக்கங்களுமே முழு இலங்கைக்குமான ஒட்டுமொத்த மாற்றம் ஒன்றை அவாவி நிற்கின்றன. ஜெனீவாக் கூட்டத்தொடரையொட்டி நாட்டின் கவனமானது வெளிநோக்கிக் குவிந்திருந்த ஓர் அரசியற் சூழலின் உள்நாட்டின் குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் ஆங்காங்கே தெட்டம் தெட்டமாக மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் ஒரு பின்னணிக்குள் மேற்சொன்ன இரண்டு இயக்கங்களும் தமது கூட்டங்களை ஒழுங்குபடுத்தியிருந்தன.

மாசற்ற அரசியலும் சரி மறுமலர்ச்சி இயக்கமும் சரி முழு இலங்கைக்குமான ஒரு தேசியத்தை மட்டுமே உரையாட முற்படுகின்றன. குறிப்பாக மாசற்ற இயக்கமானது அரசியல்வாதிகளை நோக்கி எட்டு நியதிகளை முன் வைத்திருக்கிறது. இந்நியதிகளை ஏற்றுக்கொள்ளும் அரசியல்வாதி குற்றம் புரியாதவராகவும், பால் சமத்துவத்தை பேணுபவராகவும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பவராகவும் இருக்க வேண்டும். இவ் அரசியல் கலாசாரத்தை உள்;ராட்சி மன்றங்களிலிருந்து அல்லது அதைவிடச் சிறிய சிவில் அமைப்புக்களிலிருந்து கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று மார்ச் 12 இயக்கம் எதிர்பார்க்கின்றது.

இந்த இடத்தில் அந்த இயக்கத்தை நோக்கியும் மறுமலர்ச்சி இயக்கத்தை நோக்கியும் ஓர் அடிப்படையான கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது. இந்த நாட்டின் அரசியலானது மாசுடையதாக அல்லது குற்றக் கலாச்சாரமாக ஏன் மாறியது? அல்லது இக் குட்டித் தீவின் அரசியலானது எப்படி இராணுவமயப்பட்டது. அல்லது குற்றமயப்பட்டது?

இக் கேள்விகளுக்கான விடையை ஓர் ஒஸ்ரேலிய இராஜதந்திரியின் கூற்றிலிருந்து ஆராய முடியும். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் முன்னாள் ஆணையாளரான லூயிஸ் ஆஃபரின் கீழ் வேலை செய்தவர் அவர். ஒஸ்ரேலியாவின் சிறப்புக் காவல்ப்படையின் பிரதானியாகவும் இருந்தவர். இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பில் ஈடுபாடு காட்டிய ஒருவர். இவர் ஒரு தனிப்பட்ட உரையாடலின் போது சொன்னார். “ஜனநாயக முறைமையைப் பொறுத்தவரை இந்தியாவில் சிஸ்ரம் ஊழல்மயப்பட்டுள்ளது(corruption). ஆனால் இலங்கைத்தீவிலோ ஜனநாயகம் ஊழல் மயப்பட்டு விட்டது” என்று. இலங்கைத் தீவில் ஜனநாயகம் ஏன் ஊழல் மயப்பட்டது?

ஏனென்றால் இனப்பிரச்சினைதான் காரணம். இச்சிறிய தீவை ஏனைய இனங்களோடு பங்கிட மறுத்து ஒரு பெரிய இனமும், பெரிய மதமும் உரிமை கோரியதன் விளைவே இனப்பிரச்சினையாகும். இனப்பிரச்சினை உள்ளவரை இன முரண்பாடுகளும் இருக்கும். இன முரண்பாடுகள் உள்ளவரை வாக்கு வேட்டை அரசியலானது இன அடையாள வாக்குகளை கவரும் நோக்கத்துடனனேயே கட்டமைக்கப்படும். இவ்வாறு இன ரீதியான வாக்குகளை குறிவைக்கும் அரசியல்வாதிகள் இனவாதத்தை மேலும் உருவேற்றி வளர்ப்பார்கள். அது மட்டுமல்ல இனவாதம் பேசும் யாருமே தனது குற்றப்பின்னணியை அந்த இனவாதப் போர்வைக்குள் மறைத்துக் கொள்ளலாம். இது தமிழ்த்தேசியத்திற்கும் பொருந்தும். தனது குற்றப்பின்னணியை மறைக்க முற்படும் ஒருவர் தமிழ்த்தேசியத்;தை முகமூடியாக எடுத்து அணிந்து கொள்ள முடியும். எனவே குற்றவாளிகளாக காணப்படும் அரசியல்வாதிகள் தமது குற்றப் பின்னணிகளை மறைப்பதற்கு இனவாதத்தையும் தேசிய வாதத்தையும் மறைப்புக்களாகப் பயன்படுத்துவர். இப்படிப் பார்த்தால் இன முரண்பாடுகள் உள்ளவரை அரசியலைக் குற்ற நீக்கம் செய்ய முடியாது. ஏனெனில் இனவாதம் எனப்படுவதே ஒரு பெரிய குற்றம் தான்.

இனவாதம்தான் இந்த நாட்டின் அரசியலை இராணுவமயப்படுத்தியது என்று ஒரு மூத்த அரசியல் அறிஞர் சொன்னார். எனவே இலங்கைத்தீவின் அரசியலை இராணுவமயநீக்கம் செய்வதென்றாலோ அல்லது குற்றமநீக்கம் செய்வதென்றாலோ அதற்குரிய முதலாவது முன் நிபந்தனை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதுதான். இனப்பிரச்சினை தீர்க்கப்படாத ஒரு பின்னணிக்கும் நாட்டின் அரசியலை குற்றமயநீக்கம் செய்ய முடியாது.

மார்ச் 12 அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் அக்கூட்டத்தில் ஒரு கருத்தைச் சுட்டிக்காட்டினார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடக்கும் போது கீழிருந்து மேல்நோக்கி அரசியலை மாசு நீக்கம் செய்ய வேண்டும் என்று. ஆனால் உள்ளூராட்சித் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதே இனப்பிரச்சினையின் விளைவாகத்தான். சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த கூட்டுறவு சபைத் தேர்தல்களில் மகிந்த அணி வெற்றி பெற்றது. அப்படியொரு வெற்றி உள்ளூராட்சி சபைகளிலும் கிடைத்தால் அது அரசாங்கத்திற்கு சோதனையாக அமைந்து விடும். அதன்பின் ஏனைய தேர்தல்களை உடனடிக்கு நடாத்த அரசாங்கத்திற்கு துணிச்சல் வராது. மகிந்த எப்படி தேர்தல்களில் வெல்ல முடிகின்றது? எப்படியென்றால் அவர் இனவாதத்தைக் கக்குவதனால்தான். எனவே உள்ளூராட்சித் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவது என்பது முழுக்க முழுக்க இனப்பிரச்சினையின் விளைவுதான்.

இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் மாசற்ற அரசியலுக்கான கோஷம் எனப்படுவது அதிகபட்சம் மேலோட்டமானதாகவே தோன்றும். அதைப் போலவே மறுமலர்ச்சி இயக்கத்தின் ஏக தேசியமும் மேலோட்டமானதுதான். அது மட்டுமல்ல ஆட்சி மாற்றத்தின் பின் நாட்டில் முன் வைக்கப்படும் பல புரட்சிகரமான முற்போக்கான உரையாடல்களும் மேலோட்டமான தோற்ற மாயைகள்தான். நிலைமாறுகால நீதியும் அப்படித்தான்.மூல காரணத்தின் மீது கவனத்தைக் குவிக்காது விளைவுகளை மாற்றுவது பற்றிய உரையாடல்களே இவை. ஏன் அதிகம் போவான்? நல்லாட்சி என்ற சொற் பிரயோகமே ஒரு கவர்ச்சியான பொய்தான். கடந்த இரு ஆண்டுகளாக இப்படியாக எல்லாவற்றையும் மேலோட்டமாக வியாக்கியானம் செய்யும் ஒரு போக்கு அதிகரித்து வருகிறது. யார் இதைச் செய்கிறார்கள் என்றால் ஒன்றில் இடது பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் அல்லது மேற்கத்தேய நிதி உதவிகளோடு இயங்கும் லிபரல் ஜனநாயகவாதிகள் தான். இவர்களுக்குள் புத்திஜீவிகள் உண்டு, செயற்பாட்டாளர்கள் உண்டு, ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், மனிதஉரிமை ஆர்வலர்களும் உண்டு.

இவர்களில் ஒரு பகுதியினர் நாட்டுக்குள் உள்நோக்கித் திரும்பி வடக்கு, கிழக்கை நோக்கி வருகிறார்கள். இன்னொரு பகுதியினர் வெளிநோக்கித் திரும்பி உலக சமூகத்தை நோக்கிப் போகிறார்கள். அரசாங்கத்துக்கு கால அவகாசம் கேட்டு தமிழ்ச் செயற்பாட்டாளர்களிடமும்  கையெழுத்து வாங்கி  ஜெனீவாவிற்கு அனுப்பியதும் லிபரல் ஜனநாயக வாதிகள்தான். இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ இனவாதத்திற்கு வெள்ளயடிக்கப் பார்க்கிறார்கள். உள்நாட்டில் இவர்கள் அடிக்கும் வெள்ளை ஒரு போக மழையுடன் கழுவுண்டு போய்விடும். ஆனால் உலக அரங்குகளில் இவர்கள் அடிக்கும் வெள்ளை தமிழ் மக்களை கடுமையாகப் பாதிக்கும். அது இனப்படுகொலைக்கு வெள்ளையடிப்பது, போர்க்குற்றங்களுக்கு வெள்ளையடிப்பது, போர்க்குற்றவாளிகளை பாவநீக்கம் செய்வது, போர்க்குற்ற விசாரணைகளை நீர்த்துப் போகச் செய்வது என்று பல்வேறு தளங்களிலும் தமிழ் மக்களைப் பாதிக்கக் கூடியது.

குறிப்பாக மறுமலர்ச்சி இயக்கம் கூறும் ஏக தேசியம் எனப்படுவது எப்படிப்பட்டது? ஒரு குடிகாரக் கணவனால் அடித்துக் காயப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு அவருக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமா? அல்லது புருசனோடு அனுசரித்துப் போ என்று புத்திமதி சொல்ல வேண்டுமா? முதலில் அந்தப் பெண்ணுக்கு சட்ட ரீதியான பாதுகாப்புத் தேவை. அந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு அவள் புருசனோடு சமரசம் செய்வது பற்றிச் சிந்திக்கலாம். மாக்சிஸ்ருக்கள் இது தொடர்பில் மிகத் தெளிவாகச் சிந்திக்கிறார்கள். விவாகரத்து உரிமை எனப்படுவது மனைவியின் சட்ட அந்தஸ்தை பலப்படுத்துவதற்கே தவிர குடும்பத்தைப் பிரிப்பதற்கு அல்ல. இதை இன்னும் ஆழமாகச் சொன்னால் விவாகரத்து உரிமை எனப்படுவது ஒரு குடும்பத்திற்கு அடித்தளமாக இருக்கும் கூட்டு உடன்படிக்கைக்குரிய சட்டக் கவசமாகும். இடது பாரம்பரியத்தில் வந்த விக்ரர் ஐவனுக்கு இது நன்றாகவே தெரியும். தமிழ் முஸ்லீம் சமூகங்களின் கூட்டுரிமையை முதலில் பாதுகாக்க வேண்டும்.  தமிழ்த் தேசியத்தையும், முஸ்லீம் தேசியத்தையும் ஏற்றுக் கொள்வதன் மூலம்தான் சிங்கள, தமிழ், முஸ்லீம் தேசியங்கள் இணைந்த ஒரு கூட்டாட்சி என்ற முடிவிற்குப் போகலாம்.

எனவே இனப்பிரச்சினையை அதன் ஆழ வேர்களிலிருந்து அடையாளம் காணத்தவறிய மேலோட்டமான உரையாடல்கள் சிங்கள, பௌத்த மனோ நிலைக்கு சேவகம் செய்வதிலேயே போய் முடியும். சிங்கள பௌத்த மனோ நிலையோ ஜெனீவாவில் தன்னைப் படிப்படியாகப் பலப்படுத்தி வருகிறது. லிபரல் ஜனநாயகவாதிகளால் உருவாக்கப்பட்ட கலந்தாய்வுச் செயலணியின் அறிக்கையை நிராகரிக்கும் ஒரு துணிச்சலை அது எங்கிருந்து பெற்றது? ஜெனீவாத் தீர்மானத்திற்கு முன்னதாக ரணில் விக்கிரமசிங்க என்ன சொல்லியிருக்கிறார் என்பதை உற்றுக் கவனிக்க வேண்டும்.  “கலப்பு நீதிப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பது மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் உட்சேர்க்கப்பட்ட போது சிறிலங்காவின் நீதிச் சேவை மீது அனைத்துலக சமூகம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கமானது நாட்டின் நீதிச்சேவையை சுயாதீனமானதாக ஆக்கியுள்ளது. ஆகவே கலப்பு நீதிமன்றம் என்கின்ற கோரிக்கை தற்போது தேவையற்றதாகும்”

இது எதைக் காட்டுகிறது? 2015ம் ஆண்டு ஜெனீவாத் தீர்மானத்தின் போது அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட பதினெட்டு மாதகால அவகாசத்தை அரசாங்கம் எப்படிக் கையாண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.  2015ல் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டிருந்த அறிக்கையில் இலங்கைத் தீவின் நீதிச்சேவை மீது அவநம்பிக்கை தெரிவித்திருந்தார். கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்திருந்தார். ஆனால் தனக்கு வழங்கப்பட்ட பதினெட்டு மாதகால அவகாசத்தை அரசாங்கம் தனது நீதிச்சேவைக்கு வெள்ளையடிப்பதற்கே பயன்படுத்தி வந்திருக்கிறது என்பதைத்தான் ரணிலின் கூற்று நிரூபித்திருக்கிறது. அப்படியென்றால் இப்பொழுது வழங்கப்பட்டிருக்கும் ஈராண்டு கால அவகாசம் எதற்கெல்லாம் வெள்ளையடிக்கப் பயன்படுத்தப்படும்?

தமிழ் மக்களின் கோரிக்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் பொறிமுறைகள் நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்டு நீண்டகால நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை மிகவும் ஆழமாகச் சிந்தித்து அரசுக்கும்- அரசுக்கும் இடையிலான கட்டமைக்கப்பட்ட உறவுகளுக்கூடாக நேர்த்தியாக முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் மக்களை நோக்கி வரும் லிபரல் ஜனநாயக வாதிகளின் உரையாடல்களைப் போல அவை மேலோட்டமானவை அல்ல.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சரஸ்வதி மஹாலில் நடந்த கூட்டத்தில் பேசி விட்டு வெளியில் வந்து பார்த்தபொழுது வாகனத் தரிப்பிடத்தில் வைத்து விட்டு வந்த எனது புதிய தலைக்கவசத்தைக் காணவில்லை. மாசற்ற அரசியலை உருவாக்க வந்த யாரோ ஒரு மாசற்ற வாக்காளர் அதை திருடிச் சென்றுவிட்டார். பிரதிப்பொலிஸ் மாஅதிபரும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் அவருடைய மெயக்;காவல் அணி சுற்றிவரக் காணப்பட்ட ஒரு சூழலில் திருட்டு நடந்திருக்கிறது. வேறு வழியின்றி மார்ச் 12 இயக்கம் தந்த தொப்பியையும் அணிந்து கொண்டு கிளம்பினேன். வழியில் கலட்டிச் சந்தியில் பொலிசார் மறித்தார்கள். தலைக்கவசம் அணியாத குற்றத்திற்காக ஐநூறு றூபாய் தண்டம் என்று கூறி எதையோ எழுதித் தந்தார்கள். அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அது சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தது.

23.03.2017

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *