ஜெனிவாவும் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கையும்

lanka-from-spaceசேர். ஐவர் ஜென்னிஸ் ஒரு முறை இலங்கை மக்களைப் பற்றி பின்வரும் தொனிப்படக் கூறியிருந்தார். ‘’இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வானது. எழுத்தறிவு உயர்வானது. சமூகச் சூழல் ரம்மியமானது. ஆனால், எப்பொழுதும் இந்தியா பொறுத்து ஒரு பனிப் பாறை உருகி தங்கள் மீது கவீழ்ந்துவிடுமோ என்ற அச்சத்துடன் வாழ்கின்றார்கள்”

அவர் இலங்கையர்கள் என்று குறிப்பாகக் கருதியது சிங்கள மக்களைத்தான். பனிப்பாறை பற்றிய அச்சத்தின் மீது கட்டியெழுப்பட்டதே இலங்கைத் தீவின் நவீன வெளியுறவுக் கொள்கையாகும். அதாவது, வெளி அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தன்னை வெற்றிகரமாக நிலை நிறுத்திக் கொள்ள முற்படும் அல்லது தகவமைத்துக்கொள்ள முற்படும் ஒரு சிறிய அழகிய, கவர்ச்சி மிக்க தீவின் தற்காப்பு உத்திகளின் திரட்சியும், தொடர்ச்சியுமே இலங்கைத் தீவின் நவீன வெளியுறவுக் கொள்கையாகும்.
ஜெனிவாவில் இக்கொள்கையானது மறுபடியும் ஒரு முறை அடுத்த மாதம் சோதனைக்கு உள்ளாகப் போகிறது. இலங்கைத்தீவின் மூத்த சமூகச் செயற்பாட்டாளராகிய சுனிலா அபயசேகர அண்மையில் ஒரு பேட்டியில் கூறியது போல், ஜெனிவாவைப் பற்றிய ஒரு பயப் பிராந்திக்குள் கொழும்பு சிக்குண்டிருக்கிறது. இப்பயப் பிராந்தியை உருவாக்கியதிலும் பெருப்பிப்பதிலும் ஊடகங்களுக்கு கணிசமான பங்குண்டு. வெளியிலிருந்து வரும் இவ் அச்சுறுத்தலை கொழும்பானது எவ்விதம் எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து மூத்த மற்றும் ஓய்வுபெற்ற இராஜதந்திரிகள் கொள்கை வகுப்பாளர்களும் அரசாங்கத்திற்கு கருத்துக்களைக் கூறவும் ஆலோசனை கூறவும் இடித்துரைக்கவும் முற்பட்டிருக்கும் ஒரு காலகட்டம் இது. ஆனால், இலங்கை தீவு பிரிட்ஷ்காரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதன் பின் ஆட்சிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் இவ் அச்சுறுத்தலை ஏதோவொரு விதத்தில் வெற்றிகரமாக எதிர்கொண்டதே இலங்கைத் தீவின் நவீன வரலாறாக உள்ளது.

உதாரணமாக 1971இல் ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியின்போது அப்போது ஆட்சியிலிருந்த சிறிமாவோ அரசாங்கம் சீனாவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. இந்தியாவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. அதைப் போலவே, 4ஆம் கட்ட ஈழப்போரின்போது இப்போதுள்ள அரசாங்கமானது சீனவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. இந்தியாவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. மேற்கு நாடுகளிடமிருந்தும் உதவியைப் பெற்றது. அதாவது, உள்நாட்டில் அச்சுறுத்தல்கள் எழும்போதும் வெளியிலிருந்து அச்சுறுத்தல்கள் வரும்போதும் தங்களுக்கிடையில் பகை நிலையில் காணப்படும் வெளிச் சக்திகளை வெற்றிகரமாக கையாண்ட ஓர் அனுபவம் கொழும்பிற்கு உண்டு.
இதைப் போலவே, 1988இல் இந்தியா ‘‘ஓபரேஷன் பூமாலை” என்ற பெயரில் உணவுப் பொதிகளை வானிலிருந்து போட்டபோது ஏற்பட்ட அச்சுறுத்தலை ஓர் உடன்படிக்கையாக மாற்றிய வெற்றிகரமான அனுபவமும் கொழும்பிற்கு உண்டு. தமிழர்கள் இந்தியப் படை வரும் என்று காத்திருந்த ஓர் காலகட்டத்தில் வரவிருந்த படையை அமைதி காக்கும் படையாக மாற்றியதில் கொழும்பிற்கு கணிசமான பங்குண்டு. மேலும் மத்தியஸ்தராக வந்த இந்தியாவை விளையாட்டு வீரராக மாற்றியதும், தமிழர்களோடு மோதவிட்டதும் கொழும்பிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிகள்தான். எனவே, வெளி அச்சுறுத்தல்களையும் வெளியாரின் பின்பலத்தோடு உள்ளிருந்து எழும் அச்சுறுத்தல்களையும் வெற்றிகரமாக கையாண்ட ஒரு பாரம்பரியம் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கைக்கு உண்டு. இதன் பின்னணியில் வைத்தே இலங்கை அரசாங்கம் ஜெனிவாவை எப்படி எதிர்கொள்ளப்போகிறதென்பதையும் பார்க்க வேண்டும்.

கொழும்பிலுள்ள கே. கொடகே போன்ற ஓய்வு பெற்ற மற்றும் மூத்த கொள்கை வகுப்பாளர்களின் கருத்துப்படி கொழும்பானது தன்னுடைய சொந்த நலன்களை முன்நிறுத்தியே முடிவுகளை எடுக்கவேண்டும் என்ற அபிப்பிராயம் தூக்கலாகக் காணப்படுகிறது. பேரரசுகளிற்கிடையிலான மோதுகளத்தில் சிறிய இலங்கைத்தீவானது தனக்கிருக்கக்கூடிய ‘‘லக்ஸ்மன் ரேகையை”த் தாண்டிச்சென்று ஒதோவொரு பேரரசை ஆதரிப்பதன் மூலம் மற்றொரு பேரரசின் பொறிக்குள் வீழ்ந்துவிடக்கூடாது என்று அவர்கள் கவலைப்படுவது தெரிகிறது.

மூத்த ராஜதந்திரிகளான கொடகே போன்றோர் இந்திய – அமெரிக்க உறவின் நெருக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். முன்னாள் அமெரிக்க இராஜங்கச் செயலாளரான பேர்ண்ஸ் கூறியது போல், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவெனப்படுவது பூகோள பங்காளித்துவமாக வளர்ச்சி பெற்றிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

எனவே, அமெரிக்காவைக் கையாள்வது என்பது இப்பிராந்தியத்தைப் பொறுத்தவரை இந்தியாவை வெற்றிகரமாக் கையாள்வதுதான். அதாவது, பனிப் பாறையைக் கையாள்வதுதான் என்பதை அவர்கள் அரசாங்கத்திற்கு சூசகமாக உணர்த்த முற்படுகிறார்கள்.
அரசாங்கத்திற்கு இப்போதுள்ள அடிப்படைப் பிரச்சினையே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதா அல்லது தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதா என்பதல்ல. மாறாக, சீனாவை கைவிடுதா? இல்லையா என்பதுதான். இதை இன்னும் யதார்த்த பூர்வமாக கூறின் சீனாவை எந்தவிற்கு அரவணைப்பது அல்லது எந்தளவிற்குக் கைவிடுவது என்பதே. சிங்கள வெகுசனங்களின் மத்தியில் சீனாவைக் குறித்து மதிப்பார்ந்த ஒர் மனப்பதிவே உண்டு. மங்கோலிய இன மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் எப்போதும் ஒரு கௌரவமான உறவு இருந்து வந்துள்ளது. இதற்கு பௌத்தமும் ஒரு காரணம். மேலும் சீனாவானது சிங்கள மக்களைப் பொறுத்தவரை என்றைக்குமே ஒரு பனிப்பாறையாக இருந்ததில்லை. தமிழர்களுக்கும் இது பொருந்தும் என்ற கருத்து இந்தியாவின் மீது சலிப்பும், கோபமும் அடைந்திருக்கும் சில மூத்த தமிழ் பிரஜைகள் மத்தியிலும் காணப்படுகிறது.

சீனாவானது இலங்கைதீவை வெளிப்படையான ஆக்கிரமிப்பு நோக்கத்தோடு அணுகத்தேவையில்லாத அளவிற்கு இப்பிராந்தியத்தில் இலங்கைத் தீவிலிருந்து கணிசமான அளவு தொலைவில் அமைந்திருக்கிறது. அதோடு, உலகளாவிய நிதி முலாதானத்தின் விரிவாகத்தைப்பொறுத்த வரை சீனாவானது சிறிய, வறிய மற்றும் நலிந்த ஆசிய, ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளின் மத்தியில் நிகரற்ற ஒரு கொடையாளியாக எழுச்சிபெற்று வருகின்றது. கம்போடிய நாட்டின் உயர் மட்டத்தோடு நெருக்கமான உறவுடைய ஒருவர், தன் நண்பர் ஒருவருடன் உரையாடியபோது இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். உலகின் மிக நெகிழ்ச்சியான ஒரு கொடையாளி நாடாக சீனா உருவாகிவிட்டது.

மேற்கத்தையே நாடுகள் கொடை வழங்கும்போது அதற்குரிய முன்னேற்பாடுகள், கண்காணிப்பு ஏற்பாடுகள் என்று பல படிமுறைகளைக் கடந்து போகவேண்டியிருக்கும். குறிப்பாக, உதவி பொறும் நாடானது ஜனநாயகம், பண்மைத்துவம், நிதி நடவடிக்கைகைளில் வெளிப்படைத் தன்மை போன்ற முன் நிபந்தனைகளுக்கு உடன்படி வேண்டியிருக்கும். ஆனால், சீனா என்ற கொடையாளியைப் பொறுத்த வரை இப்படிப்பட்ட வரையறைகள், படிமுறைகள் ஒப்பிட்டளவில் குறைவு என்று நம்பப்படுகிறது. நேட்டோ விரிவாக்கமானது படைகளை நகர்த்துகிறது. சீனாவிரிவாக்கமானது சந்தையின் எல்லைகளைத்தான் நகர்த்துகிறது. எனவே, சீனாவிடம் கடன் பெறும் எந்தவொருசிறிய நாடும் இலகுவாக அந்த ராஜதந்திர கடப்பாட்டுக்குள் இருந்து வெளியில் வரமுடியாத ஒருநிலையே காணப்படுகிறது.இத்தகையதொரு பின்னணிக்குள் வைத்தே கொழும்பிற்கும், பீஜிங்கிற்கும் இடையிலான உறவை ஆராயவேண்டும்.

இப்போதுள்ள பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கடந்த எட்டு ஆண்டு கால ராஜிய நடவடிக்கைகளை கொகுத்தும், பகுத்தும் நோக்கின் அது அகவயமான முடிவுகளையும் புறவயமான முடிவுகளையும் கலந்து எடுக்கும் ஓர் அரசாங்கமாகவே காணப்படுகிறது. ஆசிய மையச் சிந்தனை அல்லது உள்நாட்டிலுள்ள தீவிர தேசிய வாத சக்திகளுக்குத் தலைமை தாங்குவது என்பவை எல்லாம் சிறிலங்காசுதந்திரக் கட்சியின் ஆட்சிப் பரம்பரியத்தின் ஏற்கனவே, இருந்து வந்த ஒருபோக்குத்தான். இந்த அரசாங்கம் தனது சொந்த வெற்றிகளின் கைதியாகவுள்ளது. இதற்கு முன்பிருந்த அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் இது கட்டியொழுப்பியிருக்கும் வீரப் படிமம் நிகரற்றதும், பிரமாண்டமானதும், மிகத் தூலமானதுமாகும். எனவே, தனது வெற்றிச் சிறையிலிருந்து இறங்கி வருவதில் இந்த அரசாங்கத்திற்கு என்று சில அடிப்படையான நடைமுறை சார் வரையறைகள் உண்டு. அது அகவயமான முடிவுகளை எடுப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆனாலும், சிறிய இலங்கைத்தீவின் வெற்றிகரமான வெளியுறவுத்துறை பாரம்பரியத்திலிருந்து முற்றிலுமாக விலகி, தலைகீழான முடிவுகளைத் தொடர்ச்சியாக எடுக்கலாமா? என்பது சந்தேகமே. அப்படியொரு விலகலான முடிவை எடுக்க முற்பட்டதானால்தான், விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த பின் வந்த ஆண்டுகளில் ஜெனிவாவில் இந்த அரசாங்கம் கண்டங்களைக் கடக்கவேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டு வந்த கண்டத்தை ஓரளவிற்கு வெற்றிகரமாகக் கடக்க முடிந்தது. ஆனால், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டையும் இலகுவாக கடக்க முடியாதிருக்கும். ஏனெனில், இந்த ஆண்டில் வரப்போகும் கண்டமானது, கடந்த ஆண்டை விட கடினமானதாக இருக்கக்கூடிய வாய்ப்புக்களே அதிகம் தென்படுகின்றன. அதைக் கடப்பதென்றால் மேற்கு நாடுகளை அனுசரித்துப்போகும் சில முடிவுகளையாவது எடுக்க வேண்டி வரும்.
மேற்கு நாடுகளைத் திருப்திப்படுத்துவதென்றால் அதற்கு இரண்டு தளங்கள் உண்டு. முதலாவது அடிப்படையானது. அதாவது, சீனாவை ஏதோ ஒரு அளவிற்கு தள்ளிவைப்பது. இரண்டாவது தமிழர்கள் சம்பந்தப்பட்டது. அதாவது இச்சிறு தீவினுள் எந்த கதவினூடாக மேற்கு நாடுகள் நுழைய முற்படுகின்றனவோ அந்த வழியில் ஏதும் சுதாகரிப்புக்களைச் செய்வது. இதன்படி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், அதைக் கண்காணிப்பதற்குமான ஏதோ ஒரு பொறியமைப்பை ஏற்படுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக, அதில், மேற்கின் பங்களிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில், அத்தகைய ஏதாவது ஒரு கண்காணிப்புப் பொறிமுறைக்கூடாகத்தான் மேற்குநாடுகள் இச்சிறு தீவினுள் தமது பிடியை மேலும் இறுக்க முடியும்.

இச்சிறிய அழகிய தீவை சக இனங்களுடன் கௌரவமான, நீதியான வழிகளில் பங்கிடத் தயாரில்லை என்றால் வெளியாரிடம் பணிவதைத்தவிர வேறு வழிகள் இல்லை. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் எனப்படுவது நீதியின் மீதே கட்டியெடுப்பப்படுகின்றது. நீதி இல்லாத இடத்தில் நல்லிணக்கம் இருப்பதில்லை. சமுகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைப் பேண முடியாத நாடு எப்பொழுதும் வெளியாருக்கு திறந்துவிடப்பட்டே இருக்கும். வெளியாருக்குத் திறந்தவிடப்பட்ட ஒரு நாடு என்றைக்குமே சுதந்திரமான ஒரு வெளியுறவுக் கொள்கையை வைத்துக்கொண்டிருக்க முடியாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *