கனடாவில் வசிக்கும் ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒரு முறை சொன்னார் எமது டயஸ்பொறாச் சமூகம் எனப்படுவது “event based ” ஆனது அவ்வப்பொழுது ஏதாவது ஒரு event – நிகழ்வு- வரும்பொழுது அதற்கு எதிர்வினையாற்றும். அந்த நிகழ்வு முடிந்ததும் அதை அப்படியே மறந்துவிடும். தாயகத்திலிருந்து யாராவது வந்தால் அவரைச் சுற்றி நின்று அவர் சொல்வதைக் கேட்டும். உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு உதவிகளையும், வாக்குறுதிகளையும் வழங்கும். ஆனால் அவர் நாடு திரும்பிய பின் நாங்கள் வழமைபோல எமது அன்றாடக் காரியங்களுக்குள் எந்திரமாக மூழ்கி விடுவோம்” என்று.
அவர் கூறியது டயஸ்பொறாச் சமூகங்களுக்கு மட்டுமல்ல தாயக்தில் வாழும் தமிழர்களுக்கும் பொருந்துமோ என்று கேட்கத் தோன்றுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு நாள், மாவீரர் நாள், ஜெனீவாக் கூட்டத்தொடர் போன்றவை தொடர்பிலும் இடைக்கிடை நாட்டில் நிகழும் தமிழர்களைப் பாதிக்கக் கூடிய திருப்பகரமான நிகழ்வுகளின் போதும் திடீரென்று விழித்தெழுந்து ஆரவாரிப்பதும் பின்னர் சிறிது காலத்தில் அதை அப்படியே மறந்து போய் விடுவதுமாகத்தான் முழுச் சமூகத்திலும் வாழ்க்கை முறை மாறிவருகிறதா?
குறிப்பாக தமிழில் சமூக வலைத்தளங்களின் செயற்பாடே அதிகபட்சம் “நிகழ்வு மைய” “விவகார மைய” போக்குத்தான் என்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒரு விடயத்தில் சாதிப்பது என்றால் அதன் இறுதி இலக்கை நோக்கி ஒரு வேட்டை நாயைப்போல கவனம் சிதறாது ஓட வேண்டும். அதே தியானமாக வாழ வேண்டும். ஆனால் சமூக வலைத்தளங்கள் அவ்வாறான தியானத் தொடர்;ச்சியை அறுப்பதோடு அவ்வப்போது கவனத்தைக் கலைத்து அதாவது தியானத்தைக் கலைத்து ஏதோ ஒரு புதிய விவகாரத்தின் மீது கவனத்தைக் குவித்து விடுகின்றன. இவ்வாறு தொடர்ச்சியற்ற தெட்டம் தெட்டமான கவனக் குவிப்பு எனப்படுவது ஆக்கபூர்வமானது அல்ல என்பதே அறிஞர்களின் முடிவு ஆகும்.
இவ்வாறான நிகழ்வு மைய, அல்லது விவகார மையச் சமூகமாகக் தமிழ் மக்கள் காணப்படுவது எதைக் காட்டுகிறது? முதலாவதாக தமிழ் மக்கள் அந்நிகழ்வுக்குரிய காலப்பகுதியிலாவது பிரஞ்ஞையோடு இருக்கிறார்கள் என்பது. அதாவது நெருப்பு இப்பொழுதும் தணலாக கனன்றுகொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
இரண்டாவது தமிழ் மக்களை அவர்களைப் பாதித்த, பாதிக்கும் விவகாரங்களைக் குறித்து தொடர்ச்சியாக விழிப்போடு வைத்திருக்கவல்ல ஓர் அரசியல் வேலைத்திட்டமோ அல்லது அதற்கு வேண்டிய அரசியல் தரிசனமுடைய பலமான அமைப்போ, அதிகார மையமோ தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என்பது. அப்படியொரு அமைப்பு அல்லது மையம் இருந்தால் அது தமிழ் மக்களைத் தீர்மானிக்கும் எல்லா விவகாரங்களையும், நிகழ்வுகளையும் குறித்து ஓர் ஒட்டுமொத்தத் தரிசனத்தைக் கொண்டிருக்கும். அப்படியோர் அரசியல் தரிசனம் இருந்தால்தான் தமிழ் மக்களின் அடுத்தகட்ட அரசியலைக் குறித்த தெளிவான ஒரு வழிவரைபடமும் இருக்கும். அப்படியோர் ஒட்டுமொத்த அரசியல் தரிசனம் இருந்தால்தான் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அதற்கேயான முக்கியத்துவத்துடனும், அனைத்துலகப் பரிமாணத்துடனும், தீர்க்கதரிசனத்தோடும் திட்டமிடலாம்.
முதலாவதாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஏன் முக்கியமானது ?
பெருந்தமிழ்ப்பரப்பின் நவீன வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய இழப்பு அது. ஆனால் உலக சமூகம் குறி;ப்பாக ஐ.நா.போன்ற உலகப் பொது மன்றங்கள் அதை ஓர் இனப்படுகொலை என்று இன்று வரையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அதை முதலில் ஓர் இனப்படுகொலை என்று நிறுவ வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட எல்லாத் தமிழ்த்தரப்புக்கும் உண்டு. அதை ஓர் இனப்படுகொலை என்று தீர்மானம் நிறைவேற்றிய வடமாகாணசபை உண்டு, தமிழக மாநில அரசும் உண்டு. அதற்கொரு கூட்டு உழைப்புத் தேவைப்படுகிறது. அவ்வாறு அது ஓர் இனப்படுகொலை என்று உலக மன்றத்தில் நிறுவப்படும் போது அது அனைத்துலக அரங்கில் தமிழ் மக்களுக்குக் கிடைத்த ஆகப் பெரிய ராஜிய வெற்றியாக அமையும். அதை அடித்தளமாகக் கொண்டு தமிழ் மக்கள் தமது அடுத்த கட்ட அரசியலை இலகுவாக நகர்த்த முடியும். அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியே என்ற தடத்தில் தமது அரசியலை எடுத்துச் செல்ல முடியும்.
எனவே நடந்தது இனப்படுகொலைதான் என்று நிறுவுவதற்கான ஒரு போராட்டத்தின் ஒரு பகுதியாகவே நினைவு கூர்தலும் அமைய வேண்டும். நினைவு கூர்தலை ஏன் ஒரு விளையாட்டுப் போட்டிக்கூடாக செய்யக் கூடாது என்பதற்கான விடையும் இதுதான்.
இவ்வாறு இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவதற்கான ஒரு போராட்டத்தின் ஒரு பகுதியே முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தல் ஆகும். இது முதலாவது.
இரண்டாவது அதை எப்படி ஒழுங்குபடுத்துவது?
மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் தான் அது ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். அதாவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவதற்கான உள்நாட்டு, வெளிநாட்டு நிலமைகளைக் கனியவைக்கும் ஒரு நிகழ்வாக அது திட்டமிடப்பட வேண்டும். தமிழ் மக்கள் தங்களுக்குரிய நீதியைப் பெற்றுக் கொள்வதற்கும் அரசியல் ரீதியாக பாதுகாப்புக் கவசங்களை உருவாக்கிக் கொள்வதற்கும், கடந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கும் முள்ளி வாய்க்காலை நினைவு கூர்ந்தேயாக வேண்டும். இப்படிப் பார்த்தால் நினைவு கூர்தல் எனப்படுவது ஒரு மாவட்டத்திற்குரியது அல்ல, ஒரு மாகாண சபைக்குரியது அல்ல, ஒரு கட்சிக்கோ, இயக்கத்திற்கோ உரியது அல்ல. அது முழுத்தமிழ்ப் பெரும்பரப்புக்கு மட்டும் உரியதும் அல்ல. அதற்குமப்பால் உலகு பூராகவும் இனப்படுகொலையை நினைவு கூரும் அல்லது அதற்கெதிரான நீதியைக் கோரிப் போராடும் எல்லாச் சமூகங்களுக்குமுரியது அது. எனவே அது அனைத்துலகப் பரிமாணம் மிக்கது. உலகு தழுவியது.
இப்படி உலகு தழுவியதாக அதை ஒழுங்குபடுத்த ஓர் அதிகாரம் குறைந்த மாகாண சபையால் மட்டும் முடியுமா?
இது விடயத்தில் வடமாகாண சபையிடம் ஒரு பொருத்தமான தரிசனம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் பொறுப்பேற்று ஒழுங்குபடுத்திய மூன்று நினைவு கூர்தல்களே இதற்குச் சான்றாகும். வடமாகாண சபையால் எல்லாக் கட்சிகளையும், அமைப்புக்களையும் ஒரு குடைக்கீழ் கொண்டு வர முடியவில்லை. குறைந்தபட்சம் மாகாண சபைக்குள் உள்ள ஆளுமைகளையும், வளங்களையும் கூட ஒருங்கிணைக்க முடியவில்லை. அதற்குமப்பால் கிழக்கு மாகாண சபையை ஒருங்கிணைக்க முடியவில்லை. கூட்டமைப்புக்குள் உள்ள வளங்களையும் ஒருங்கிணைக்கத் தெரியவில்லை. எனவே வடமாகாண சபை நினைவு கூர்தலை ஒழுங்குபடுத்துமிடத்து அது ஐக்கியப்பட்ட பெருமெடுப்பிலான ஒரு கூட்டு நிகழ்வாக அமையாது என்பதையே கடந்த மூன்று ஆண்டுகால அனுபவம் நிரூபித்திருக்கிறது.
இம்மாதம் முதல் வாரமே இது தொடர்பில் ஒரு கட்டுரை எழுதவிருந்தேன். “நீங்கள் எழுதி இவர்கள் திருந்தப் போவதில்லை. எனவே மே தினக் கூட்டங்கள் பற்றிய கட்டுரையை எழுதுங்கள்” என்று மன்னார் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் சிவகரன் சொன்னார். அக்கட்டுரையை போன வாரம் எழுதினேன். இம்முறை மாகாணசபை ஓரளவிற்கு அசைந்திருக்கிறது. போனவாரக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்ட சில விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பெரும்பாலான ஏற்பாடுகள் மேலிருந்து கீழ் நோக்கிச் செய்யப்பட்டவையே. கீழிருந்து மேல் நோக்கி மக்களை ஒன்று திரட்டுவதற்கு மிகப் பலவீனமான ஏற்பாடுகளே காணப்பட்டன.
நினைவு கூர்தலுக்கு முதல் நாள் இரவு முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாகாணசபை உறுப்பினர் சொன்னார். “என்ன நடக்கிறது என்று எங்களுக்கே தெரியாது” என்று. அதே இரவு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு மாகாணசபை உறுப்பினர் சொன்னார் “ஒரு வாகனம் தரப்பட்டுள்ளது. ஆனால் அதில் வருவதற்கு இதுவரையிலும் எவரும் பெயரைப் பதிவு செய்யவில்லை” என்று. இவ்வாறான ஏற்பாடுகளின் விளைவாக ஆயிரத்திற்கும் குறைவானவர்களே மாகாணசபை ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டதை நினைவு கூரும் ஒரு நிகழ்வில் குறைந்தது ஆயிரம் பேரைக் கூட கூட்ட முடியவில்லை.
அதே சமயம் தமிழ் மக்கள் பேரவை நினைவு கூர்தலை முன்னெடுத்திருந்தால் எல்லாத் தரப்புக்களையும் ஓரணியில் திரட்டியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் அந் நிகழ்வில்;; தமிழரசுக்கட்சி இணையுமா என்ற கேள்வி உண்டு. கடந்த மாதம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்த கடையடைப்பில் தமிழரசுக்கட்சி கலந்து கொண்டதை இங்கு சுட்டிக்காட்டலாம். கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பேரவை சற்றுப் பிந்தியே செயற்பட்டிருக்கின்றது. பேரவை பல விடயங்களில் தாமதமாகவே முடிவெடுத்து வருகிறது. நிலமீட்புக்கான போராட்டங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்கள் போன்றவற்றில் பேரவை உரிய வேகத்துடனும் பொருத்தமான அரசியல் தரிசனத்திடனும் செயற்படவில்லை. நினைவு கூர்தல் விடயத்திலும் அதுதான் நடந்தது.
எனவே பேரவையும் உட்பட தமிழ் தேசியக்கட்சிகள், அமைப்புக்கள் என்பவற்றோடு இது தொடர்பில் சிந்திக்கும் கருத்துருவாக்கிகள், செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் போன்ற அனைவரும் இணைந்து ஒரு பொதுக்குழுவை உருவாக்குவதே நினைவு கூர்தலை ஒரு குடைக்கீழ் கொண்டு வருவதற்கான ஒரே வழியாகும். அப்பொதுக்குழுவானது பெருந்தமிழ்ப்பரப்பில் தனக்கு ஆதரவான தரப்புக்களை உள்வாங்க வேண்டும். அதோடு உலகு பூராகவும் இனப்படுகொலையை நினைவு கூரும் சமூகங்களுடனும், இனப்படுகொலைக்கு எதிரான நீதியை கோரிப் போராடும் சமூகங்களோடும் தோழமையைப் பேண வேண்டும். அவர்களுடைய அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இப்பொதுக்குழுவே நினைவு கூரலுக்கான பிரதேசத்தையும் வடிவமைக்க வேண்டும்.
கிடைக்கப்பெறும் தகவல்களின்படி நினைவு கூர்தலுக்கான ஒரு பொது நிலமாக சுமார் ஐந்து ஏக்கர் காணியைப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அக்காணி கிடைத்தால் அதில் நினைவுச் சின்னங்கள் நிறுவப்படும். அந்நிலத்துண்டை அப்பகுதிக்குரிய பிரதேச சபை பராமரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
அந்நிலத்துண்டை பிரதேசசபை பராமரிப்பது என்பது ஒரு நிர்வாக நடைமுறையாகும். ஆனால் நினைவு கூர்தலுக்கென்று ஒரு நிலப்பகுதியை ஒதுக்குவதற்கும் அப்பால் இறுதிக்கட்ட போர் அரங்காகிய பொக்கனை, மாத்தளன் வலைஞர் மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களோடு நந்திக்கடலையும் உள்ளடக்கிய ஒரு பிரதேசம் நினைவு கூர்தலுக்கான பிராந்தியமாக பிரகடனப்படுத்த வேண்டும். அங்கு இறுதிக்கட்டப் போரின் எல்லா ஞாபகங்களையும் ஆவணப்படுத்தும் ஏற்பாடுகள் உருவாக்கப் பட வேண்டும். அப்பகுதிகளில் போரின் எச்சங்களாகக் காணப்படும் பொதுக் கட்டடங்களை நினைவுச் சின்னங்களாகப் பேண வேண்டும். எட்டு ஆண்டுகளின் பின்னரும் உக்கிப் போகாமல் மணலில் புதைந்து கிடக்கும் எச்சங்களை சேகரித்து ஒரு பொது இடத்தில் பேண வேண்டும். அப்பகுதிகள் சனச்செறிவு குறைந்தவை. அரச காணிகளை பெறுவது கடினமென்றால் தனியார் காணிகளை விலைக்கு வாங்கலாம். அதற்கு ஒரு பொது நிதியம் வேண்டும்.
ஒரு பொது நினைவுச் சின்னத்தை உருவாக்கும் போது உலகத் தரத்தைப் பேண வேண்டும். ஏற்கெனவே கிறிஸ்தவ மதகுருக்களால் உருவாக்கப்பட்ட சிற்பம் பொருத்தமானதாகத் தெரியவில்லை, நவீனமானதாகவும் தெரியவில்லை. ஒரு பொது நினைவுச் சின்னமானது தமிழ் மக்களின் கூட்டிழப்பை, கூட்டுத்துக்கத்தை, கூட்டுக்காயங்களை பிரதிபலிப்பதோடு தமிழ்த் தேசியத்தின் ஜனநாயகச் செழிப்பையும் தமிழ் அழகியல் உன்னதங்களையும் வெளிப்படுத்தும் ஒரு சின்னமாக அமைய வேண்டும். எனவே நினைவு கூர்தலுக்கான ஒரு பிராந்தியத்தை எப்படி வடிவமைப்பது அதை எப்படி ஓர் உயிருள்ள நூதன சாலையாகப் பேணுவது அதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு ஞாபகங்களை எப்படிக் கடத்துவது? போன்ற எல்லாவற்றையும் மேற்சொன்ன பொதுக்குழுவே தீர்மானிக்க வேண்டும். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு நினைவு கூர்தலை முன்னெடுப்பதென்றால் இதுதான் ஒரே வழி. ஒரு பொதுக் குழுவை, ஒரு பொது நிதியத்தை உருவாக்குவது.
அது ஒரு தேசிய துக்கநாள் என்று பிரகடனப்படுத்தி விட்டு தாயகத்தில் அதை ஒரு தேசியத் துக்கமாக கடைப்பிடித்தது எத்தனை பேர்? அன்றைய நாளில் யாழ்ப்பாணத்தில் எல்லாமே வழமை போல் இயங்கின. முதலமைச்சர் கேட்டுக் கொண்டதைப் போல எல்லா அலுவலகங்களிலும் அஞ்சலி செலுத்தப்படவில்லை. மாகாணசபை அலுவலகங்கள் பலவற்றில் கூட அஞ்சலி செலுத்தப்படவில்லை. ஆனால் அரச உயர் அதிகாரிகள் இம்மாதம் எட்டாந் திகதி பலாலியில் தேசியப் போர் வீரர்கள் நாள் நிகழ்வில் பங்கெடுத்திருப்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். யாழ்ப்பாணத்தில் முத்துத்தம்பி மகாவித்தியாலயம், இந்துக்கல்லூரி, புனித சார்ள்ஸ் மகாவித்தியாலயம் போன்ற சில பாடசாலைகளில்தான் நினைவு கூர்தல் நிகழ்ந்திருக்கிறது. கல்வியமைச்சர் அஞ்சலி நிகழ்வுகளில் பங்கெடுத்தால் மட்டும் போதாது. முழுக்கல்விச் சமூகத்தையும் அந்நிகழ்வுகளில் பங்கெடுக்க வைக்க வேண்டும்.
முள்ளிவாய்க்காலை நோக்கிச் செல்லும் பரந்தன் சாலையில் பரந்தன் நகரம் வழமை போல இயங்கியது. அதைத் தாண்டிச் செல்ல தர்மபுரத்திலும், விசுவமடுவிலும் வாழ்க்கை வழமைபோல் இருந்தது. உடையார் கட்டிலும் நிலமை ஓரளவிற்கு அப்படித்தான் இருந்தது. புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய இரண்டு சிறிய பட்டினங்கள் தான் கடைகளைப் பூட்டி துக்கம் தெரிவித்தன. அப்படியென்றால் இது ஒரு மாவட்டத்திற்குரிய இரண்டு பட்டினங்களுக்குரிய துக்கம் மட்டுமா? ஒரு துக்க தினத்தை கடைப்பிடிப்பது எப்படி? அதிலும் குறிப்பாக அக்கூட்டுத் துக்கத்தை ஒரு கூட்டுக் கோபமாக சக்தி மாற்றம் செய்ய வேண்டிய ஒரு நிலையில் இருக்கும் ஒரு சிறிய மக்கள் கூட்டம் ஒரு கூட்டுத் துக்கத்தை இப்படியா அனு~;டிப்பது? தமிழ்ச் சனத்தொகையில் பெருந்தொகையினர் இதில் சம்பந்தப்படாதவர்கள் போல ஒதுங்கி நின்றமை எதைக் காட்டுகிறது? இனப்படுகொலையை நினைவு கூர்வது என்பது அது இனப்படுகொலைதான் என்பதை நிறுவுவதற்கான போராட்டத்தின் ஒரு பகுதிதான் என்பதை உரிய தரப்புக்கள் உணர்வது எப்பொழுது?