வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள்

 

களுத்துறையில் ஒரு சுற்றுலாப் பயணி-அவர் ஒரு வெள்ளைக்காரர்- ஒரு தேநீர்க்  கடையில் வடை சாப்பிடுகிறார்.அவரை கடைக்குள் உபசரித்து வடையோடு இரண்டு விதமான சம்பல்களையும் கொடுத்த அந்த கடையைச் சேர்ந்த ஒருவர்,அவரிடம் ஒரு வடைக்கும் ஒரு பால் தேனீருக்கும் மொத்தம் 800 ரூபாய் வாங்குகிறார்.சுற்றுலாப் பயணிக்கு அந்தத் தொகை அதிகம் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.அவர் அந்த வழியால் வரும் ஆட்களை மறித்து வடையின் விலை என்னவென்று கேட்கிறார்.அந்த வழியால் வந்த இரண்டு சிங்களப் பெண்கள் ஓரளவுக்கு ஆங்கிலம் கதைக்கிறார்கள்,அவர்களில் ஒருவர் அந்த வடையின் விலை 120 ரூபாய் என்று கூறுகிறார். வெள்ளைக்காரர் உண்மையை கண்டுபிடித்து விட்டார் என்பதை அறிந்த கடைக்காரர் சிறு தொகையை திரும்ப கொடுக்கிறார். இந்த விடயம் “டிக்டொக்” காணொளியில் பரவலாகப் பகிரப்பட்டது. அதன் விளைவாக கடைக்காரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

ஏற்கனவே இது போன்ற மற்றொரு சம்பவத்தில் ஒரு சுற்றுலாப்  பயணியை ஒரு கொத்துரொட்டி கடைக்காரர் அவமதிக்கின்றார். சம்பவம் நடந்தது கொழும்பு புதுக்கடையில். அங்கேயும் ஒரு இடியப்ப கொத்து என்ன விலை என்று கேட்டபோது கடைக்காரர் 1900 ரூபாய் என்று கூறுகிறார். சுற்றுலாப் பயணி அதை நம்பாமல் கேள்வி கேட்டபோது கடைக்காரர் சுற்றுலாப் பயணியை நோக்கி வாயை பொத்து என்ற சமிக்கையை காட்டுகிறார். அது சமூக வலைத் தளங்களில் பரவலாக வெளிவந்தது. விளைவாக கடைக்காரர் மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்தார்கள்.

இந்த இரண்டு விடயங்களையும் முன்வைத்து, சமூக வலைத்தளங்களில் பகிடியாக ஒரு விடயம் பகிரப்படுகிறது. இனி சாப்பாட்டுக் கடைக்கு போகும் போது வீடியோவையும் ஓன் பண்ணிவிட்டு சென்றால் சாப்பாட்டுக் கடைக்காரர்கள் மரியாதையாக நடந்து கொள்வார்கள்;நியாயமான விலையைகக் கூறுவார்கள் என்பதே அந்தப் பகிடியாகும்.

ஆனால் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பது போல அரசாங்கம் உள்ளூர் மக்களை சாப்பாட்டுக் கடைக்காரர்களின் விடயத்தில் பாதுகாக்கும் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இது தொடர்பாக முகநூலில் ஒரு மருத்துவர் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். நட்சத்திர அந்தஸ்துள்ள சுற்றுலா விடுதிகளில் உணவின் விலை உச்சமாகத்தான் உள்ளது. சாதாரண இளநீரில் இருந்து தொடங்கி மேற்கத்திய முறையிலான உணவுகள்வரை எல்லாவற்றுக்கும் பெரிய விலை தான். ஏன் அப்படியென்று  சுற்றுலாப் பயணிகள் கேட்பதில்லை. ஏனென்றால் நட்சத்திர விடுதிகளில் அதுதான் விலை. அதையே தெருவோரக் கடைக்காரர் செய்தால் அது வழக்காகி விடுகிறது என்ற தொனிபட மேற்படி மருத்துவர் ஒரு குறிப்பை போட்டிருந்தார்.

இது விடயத்தில் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும்.முதலாவது வெள்ளைத் தோலைக் கண்டால் அல்லது சுற்றுலாப் பயணிகளைக் கண்டால் உள்ளூர் வியாபாரிகள் விலையை உயர்த்திக் கூறும் ஒரு நிலைமை எப்பொழுதும் உண்டு. இது இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவும் உட்பட ஆசிய ஆபிரிக்க நாடுகள் பெரும்பாலானவற்றில் காணப்படும் ஒரு பொதுத் தோற்றப்பாடு. ஒரு வெளிநாட்டுப் பயணிக்கு ஒரு பொருளை டொலர் மதிப்பில் விற்க முற்படுவது.இதுதான் புதுக்கடை மற்றும் களுத்துறைச் சம்பவங்களின் பின்னணி. இது முதலாவது .

இரண்டாவது விடயம்,சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்ல உள்ளூர் பணக்காரர்களும் சுற்றுலா விடுதிகளில் உணவு அருந்தும் பொழுது அந்த விலைப்பட்டியலைக் குறித்துக் கேள்வி கேட்பதில்லை. சில கிழமைகளுக்கு முன் யாழ்ப்பாணம், திருநெல்வேலிச் சந்தைக்கு அருகாக அமைந்திருக்கும் ஒரு மரக்கறி உணவகத்தில் விற்கப்படும் உணவுகளின் விலைப்பட்டியல் சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளிவந்தது. நட்சத்திர அந்தஸ்துள்ள உணவு விடுதிகள் சாதாரண உணவுகளுக்கும் குடிபானங்களுக்கும் பல மடங்கு விலையைப் போடுகின்றன. பணக்காரர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதைக் கேள்வி கேட்காமல் நுகர்கிறார்கள். அதையே தெருவோரக்கடை என்று வந்தால் அல்லது தெருவோரத்தில் பொருளை விக்கும் ஏழை என்று வந்தால் ஆயிரம் நியாயங்கள் கேட்டு விலையை எப்படிக் குறைக்கலாம் என்று முயற்சிக்கிறார்கள் .

இது சமூக வலைத்தளங்களின் காலம். மனிதர்கள் நடமாடும் கமராக்களாக மாறிவிட்டார்கள். எனவே இது போன்ற செயல்கள் நடக்கும் பொழுது அது உடனுக்குடன் படமாக்கப்படுகின்றது. எடுத்த கையோடு சுடச்சுட சமூக வலைத்தளங்களில் செய்தியாக்கப்படுகின்றது. குற்றங்களைத் தடுப்பதற்கும் அநியாயங்களைத் தடுப்பதற்கும் அது உதவுகின்றது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் தங்களை உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றுகிறார்கள் அல்லது சுரண்டப் பார்க்கிறார்கள் என்ற உணர்வு அதிகரித்து வருகிறது. சமூக வலைத்தளங்களின் ஆதிக்கமும் அதற்கு காரணம். இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விழிப்புக் காரணமாக மேற்சொன்ன இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அரசாங்கம் இந்த விடயத்தில் உஷாராகக் காணப்படுகின்றது. சுற்றுலா பயணிகளைக் கவர வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு ஏனென்றால் சுற்றுலாப் பயணிகள்தான் இப்பொழுது நாட்டுக்குள் டொலர்களைக் கொண்டு வரும், பொன்முட்டை இடும் வாத்துக்களாகும்.இந்த மாதத்தில் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் மொத்தம் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் வந்திருக்கிறார்கள்.

நாட்டின் பெரும்பாலான நட்சத்திர அந்தஸ்த்துள்ள விடுதிகள் மட்டுமல்ல சாதாரண விடுதிகளும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகின்றன. நாட்டின் உயர்தர மதுச்சாலைகள்,தேநீர்க் கடைகள்,சிற்றுண்டிச் சாலைகள் போன்றவற்றிலும் கடற்கரைகளிலும் உல்லாசப் பயணத் தலங்களிலும் பெருமளவுக்கு சுற்றுலாப் பயணிகளைக் காண முடிகின்றது.

சுற்றுலாப் பயணிகள் அதிக தொகையாக இலங்கைக்குள் வருவதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் உண்டு.இது ஒரு அழகிய நாடு.அது முதலாவது முக்கியமான காரணம். இரண்டாவது காரணம், நாட்டின் நாணயப் பெறுமதி வெகுவாகக் குறைந்துவிட்டது.இதனால் ஒரு வெளிநாட்டவர் தன்னுடைய நாணயத்தை இங்கே செலவழிக்கும் பொழுது குறைந்த செலவில் அதிக அளவு நன்மைகளைப் பெற முடியும். இக்காரனத்தால் இந்தியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக தொகையாக வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவுக்கும் மாலை தீவுகளுக்கும் இடையிலான உறவுகளில் நெருக்கடிகள் தோன்றிய பின் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையை நோக்கி ஊக்குவிக்கப்படுகின்றார்கள். இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வெள்ளைக்காரர்களைப் போல காசை அள்ளி வீசமாட்டார்கள் என்ற ஒரு அபிப்பிராயம் சுற்றுலா விடுதி உரிமையாளர்களிடமும் உள்ளூர் வணிகர்களிடமும் உண்டு. அமெரிக்க ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளை விடவும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் சந்தை நிலவரங்கள் தொடர்பாக அதிகம் விழிப்புடன் இருப்பதும் அதற்கு ஒரு காரணம்.

இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் நாட்டின் தெற்குப் பகுதியை நோக்கியே போவதாக ஓர் அவதானிப்பு உண்டு. வடக்கு கிழக்கை நோக்கி வருபவர்களின் தொகை ஒப்பிட்டுளவில் குறைவு என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள விருந்தகங்கள், சுற்றுலாத் தங்கங்களின் விருந்தோம்பும் பண்பைக் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.சுற்றுலாப் பயணிகளை கவரத்தக்க விருந்தோம்பல் பண்பாடும் அதற்குரிய விருந்தோம்பல் வலை அமைப்பும் தமிழ்ப் பகுதிகளில் குறைவு என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது.அவ்வாறு சுற்றுலாப் பயணிகளைக் கவரத்தக்க ஒரு சுற்றுலாப் பாரம்பரியத்தை அல்லது ஒரு சுற்றுலாப் பண்பாட்டைக் கட்டியெழுப்பத் தேவையான உயர் கற்கை நெறிகள் இப்பொழுது தமிழ்ப் பகுதிகளில் உண்டு.எனினும் ஆயுத மோதல்களுக்குப் பின்னரான கடந்த 15 ஆண்டுகளிலும் கவர்ச்சிமிகு செழிப்பான விருந்தோம்பல் பாரம்பரியம் ஒன்றைத் தமிழ் மக்கள் மத்தியில் கட்டியெழுப்ப முடியவில்லை என்று ஒரு விமர்சனம் உண்டு.உள்ளூர் சாப்பாட்டுக் கடைகளிலேயே உபசரிப்பு செழிப்பாயில்லை என்ற குற்றச் சாட்டு உண்டு.

இன்னும் சில மாதங்களில் நல்லூர் திருவிழா வருகிறது. அதையொட்டி புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகரித்த தொகையில் யாழ்ப்பாணத்தை நோக்கி வருவார்கள்.இனிவரும் மாதங்களில் நாட்டுக்கு அதிகம் வருவாயை ஈட்டித் தரப்போகும் தரப்புகளில் ஒன்றாக புலம்பெயர்ந்த தமிழர்கள் காணப்படுவார்கள்.முன்பு புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது சொந்தக்காரர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்குவதுண்டு. ஆனால் இப்பொழுது இந்தப் போக்கு மாறி வருகின்றது.புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினர் சுற்றுலா விடுதிகளில் தங்குவதற்கு விரும்புகின்றார்கள். உறவினர்களின் வீடுகளில் தங்குவதை விடவும் சுற்றுலா விடுதிகளில் தங்குவதை அவர்கள் விரும்பக் காரணம் என்ன?

மிகவும் துயரமான ஒரு காரணம் உண்டு. உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கும் பொழுது உறவினர்களும் நண்பர்களும் இவர்களிடம் எதையாவது எதிர்பார்க்கின்றார்கள்.அவர்கள் எதிர்பார்ப்பதை இவர்கள் கொடுக்க முடியாத போது அல்லது இவர்கள் கொடுப்பது அவர்கள் எதிர்பார்த்ததை ஈடு செய்யாத போது அங்கே அதிருப்தி உண்டாகிறது. அதனால் மனக் கஷ்டங்கள் ஏற்படுகின்றன.விடுமுறைக் காலத்தை தாய்நாட்டில் சந்தோஷமாகக் கழிப்பதற்கு என்று வரும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் மேற்சொன்ன காரணத்தால் தமது விடுமுறை நாட்கள் மன அழுத்தம் மிக்கவைகளாக மாறின என்று குறைபடுகிறார்கள்.

மேலும் அங்கிருந்து வரும் முதலாம் தலைமுறை புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை.பெரும்பாலானவர்களுடைய பெற்றோர் இப்பொழுது உயிரோடு இல்லை.எனவே பெற்றோரோடு தங்க வேண்டிய நிர்ப்பந்தமும் அவர்களுக்குக் குறைவு. மேலும் பிள்ளைகள் வளர்ந்து விட்டன. தங்கப் போகும் வீடுகளிலும் பிள்ளைகள் வளர்ந்து விட்டன. ஒரு குறுகிய காலத்துக்குள் எல்லாரையும் உள்வாங்கும் அளவுக்கு உள்ளூர் வீடுகளின் அறைகள் போதாமல் இருக்கலாம். மேலும்,வெளிநாட்டில் வளர்ந்த பிள்ளைகள் “ஏசி” அறைகளைக் கேட்கிறார்கள். அதுவும் புலம்பெயர்ந்த தமிழர்கள் சுற்றுலா விடுதிகளில் தங்குவதற்கு ஒரு காரணம். இது போன்ற காரணங்களால் சுற்றுலா விடுதிகளுக்கு வருமானத்தை ஈட்டும் ஒரு தரப்பினராக புலம் பெயர்ந்த தமிழர்களும் மாறி வருகிறார்கள்.

எதுவாயினும் நாட்டுக்குள் வெளிநாட்டுக் காசு வருகிறது. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இயங்கும் ஓர் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அது ஒரு வரப் பிரசாதம். அது நாட்டின் டொலர் கையிருப்பைக் கூட்டுகின்றது. அது போலவே வெளிநாட்டுக்குச் சென்ற தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் அனுப்பும் காசும் நாட்டின் டொலர் கையிருப்பை அதிகப்படுத்துகிறது.அண்மைக் காலங்களில் 10பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளி நாடுகளில் தொழில் புரிவோர் அனுப்பியிருப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இவை தவிர அரசாங்கம் வரிகளை உயர்த்தியிருக்கின்றது.மின்சாரக் கட்டணம் தொலைதொடர்புக் கட்டணம் போன்ற உள்ளூர்ச் சேவைக் கட்டணங்களை அதிகப்படுத்தியுள்ளது. இவற்றால் அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கின்றது. இவை போன்ற பல காரணங்களினாலும் நாட்டின் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் நிமிர்த்தப்படுகிறது என்று ஓர் உணர்வு ஆங்கிலம் தெரிந்த படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் ஏற்பட்டு வருகின்றது.

சில மாதங்களுக்கு முன்பு பச்சை மிளகாய் ஒரு கிலோ 2000 ரூபாய்க்கு மேல் போனது.ஆனால் இப்பொழுது உள்ளூர் சந்தைகளில் 100 ரூபாய்க்கு சற்று அதிகமாகப் போகின்றது. அப்படித்தான் தக்காளிப் பழம் பெரியது ஒரு கிலோ 800 ரூபாய்க்கு மேல் போனது. இப்பொழுது 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை போகின்றது.மரக்கறி விலை குறைகிறது. கடல் உணவுகளின் விலையும் குறைக்கின்றது.அரசாங்கம் சாதாரண சிங்கள மக்களைக் கவரும் நோக்கத்தோடு நெத்தலிக் கருவாடு, சீனி,பருப்பு போன்றவற்றின் விலைகளை அவ்வப்போது குறைத்து வருகின்றது.ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் பொழுது மேலும் பல சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

ஜனாதிபதித் தேர்தலை நோக்கி நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க கடுமையாக உழைக்கின்றார். அவர் மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியாக வருவதை மேற்கு நாடுகள் விரும்புகின்றன.பன்னாட்டு நாணய நிதியம் போன்ற உலகப் பெரு நிறுவனங்களும் விரும்புகின்றன. எனவே ஜனாதிபதித் தேர்தலை நோக்கி அவர் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு மேற்படி தரப்புகள் அவருக்கு உதவும்.

எனினும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் என்று கூறப்படுகின்றவை சாதாரண சிங்கள மக்களைச் சென்றடைந்தனவா என்ற கேள்விக்கு விடை முக்கியம். ஏனெனில் ஜனாதிபதியைத் தீர்மானிப்பதற்குரிய பிரதான வாக்காளர்கள் சிங்களக் கிராமங்களில்தான் இருக்கிறார்கள். சிங்கள பௌத்த அரசியலின் வாக்கு வங்கியின் இதயம் கிராமங்களில்தான் உண்டு. கிராமப்புற வாக்காளர்கள் அரசாங்கத்தைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதுதான் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கப் போகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *