சாகும்வரை சந்தேகிக்கப்பட்டவன் : இசைப்பிரியன் என்று அழைக்கப்பட்ட அச்சுதநாயர் சேகுவாரா 

ஈழம் சே அல்லது இசைப்பிரியன் என்று அழைக்கப்படும் அச்சுதநாயர் சேகுவாரா உயிர் நீத்து இன்றுடன் ஒரு  வருடம்.

அவனுடைய கதை  சூழ்ச்சிக் கோட்பாடுகளால் சூழப்பட்ட ஒரு கதை. இசைப்பிரியன் தடுப்பிலிருந்து வந்தவர்.இந்திய வம்சாவளியான வறிய தாய்க்கு பிறந்த இரண்டு பிள்ளைகளில் ஒருவர்.மூத்த சகோதரர் ஏற்கனவே இயக்கத்தில் இருந்து போர்க் களத்தில் இறந்தவர்.தாயும் சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் காரணமாக, போதிய சிகிச்சை இன்றி, அதற்கு வேண்டிய வளமின்றி இறந்து போனார்.புனர்வாழ்வு பெற்ற பின் இசைப்பிரியன் வவுனியா மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோடு வேலை செய்தார். தவிர வெவ்வேறு ஊடகங்களிலும் வேலை செய்தார்.

எனக்கு ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் 2015க்கு முன்னர் என்று நினைக்கிறேன். வவுனியாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்தில்,குமார் பொன்னம்பலம் நினைவுப் பேருரை ஆற்றுவதற்காகப் போயிருந்தேன். நிகழ்வு முடிந்த பின் இசைப்பிரியன் என்னை சந்தித்தார்.2009க்குப் பின் அவர் என்னை முதன்முதலாக கண்டது அப்பொழுதுதான்.என்னிடம் எனது தொலைபேசி இலக்கம்,மின்னஞ்சல் போன்றவற்றை கேட்டார்.அவருக்கு நான் அவற்றை வழங்கிக் கொண்டிருந்த பொழுது,சிறிது தொலைவில் நின்ற ஒரு சிவில் சமூகச் செயற்பாட்டாளர் என்னை பார்த்து அவருக்கு அதை கொடுக்காதே என்று சைகை காட்டினார். அதேபோல ஒரு கட்சிப் பிரமுகரும் அவர் கேட்பதைக் கொடுக்க வேண்டாம் என்று எனக்குச் சைகை காட்டினார். ஆனால் நான் கொடுத்தேன்.

அவர் போனபின் அந்த இருவரிடமும் கேட்டேன், ஏன் கொடுக்கக் கூடாது ?என்று. அவர்கள் சொன்னார்கள், “அவர் இப்பொழுது பச்சையின் ஆள். புனர் வாழ்வின் பின் அவர்களுடைய ஆளாக வேலை செய்கிறார்” என்று. நான் சொன்னேன் “இருக்கலாம். புனர் வாழ்வு பெற்றவர்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கு புலனாய்வுப்பிரிவு அவர்களோடு தொடர்புகளைப் பேணும்.அதைவிட முக்கியமாக அவர்களுக்கு வேறு ஒரு இலக்கும் உண்டு. என்னவென்றால் புனர் வாழ்வு பெற்றவர்கள் புலனாய்வுத் துறையோடு தொடர்புடையவர்கள் என்று சமூகத்தை நம்ப வைத்தால் சமூகம் அவர்களை நெருங்கி வராது. அவர்களை சந்தேகிக்கும். அவர்களைக் கண்டு பயப்படும்; வெறுக்கும், அவர்களோடு ஒட்டாது. அவர்களைத் தூர விலக்கி வைத்திருக்கும். இவ்வாறு ஒரு காலம் தமக்காக போராடப் போய் கல்வியை, இளமைச் சுகங்களை,கை கால்களை, கண்களை இழந்தவர்களை, அவர்களுடைய சமூகமே சந்தேகிப்பது அல்லது அவமதிப்பது என்பது அரசாங்கத்துக்கு வெற்றி.எனவே தன் சொந்த மக்களாலேயே அவர்கள் அவமதிக்கப்பட வேண்டும், நிராகரிக்கப்பட வேண்டும் என்று அவர்களை தோற்கடித்தவர்கள் எதிர்பார்ப்பார்கள்.அந்த எதிர்பார்ப்பை நீங்கள் நிறைவேற்றப் போகிறீர்களா? நாங்கள் அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. விழிப்பாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களை அரவணைக்க வேண்டும். என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என்று சொன்னேன்.

இறக்கும்வரை இசைப்பிரியன்  சந்தேகிக்கப்பட்டார். அவர் கடைசியாக வேலை செய்த ஒர் ஊடகத்தின் ஆசிரியர் என்னிடம் கேட்டார்,”அவர் யார்?  ஒரு புதிராகவே தெரிகிறார்.அவரைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. நம்பவும் முடியாமல் இருக்கிறது”. என்று. ஆம். இசைப்பிரியன் கடைசி வரை சந்தேகிக்கப்படும் ஒருவராகவே இறந்தார். 

அவர் தயாரித்த ‘நீதிக்கான நீண்ட காத்திருப்பு’ என்ற  காணொளி  தமிழர் தாயகம் எங்கும் திரையிடப்பட்டு வருகிறது.“ஏழுநா” நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அந்த ஆவணப் படம் ஒரு கலைப் படமாக பெற்ற வெற்றி போதாது..எனினும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் கேட்பது.சாகும் வரை சந்தேகிக்கப்பட்ட ஒருவன் தன்னைச் சந்தேகத்தவர்களுக்கு  விட்டுச் சென்ற பதில் அது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *