அண்மையில் பலாலி வீதியில் பல்கலைக்கழகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் ஓர் உயர்தர உணவகம் திறக்கப்பட்டதுஅதன் பெயர் “டெலிஸ்” .அதற்குச் சில கிழமைகளுக்கு முன்பு அதே பலாலி வீதியில் மற்றொரு உயர்தர உணவகம்-காலித் பிரியாணி-திறக்கப்பட்டது.முன்சொன்ன உணவகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் இந்த உணவகம் உண்டு. இந்த இரண்டு உணவகங்களும் திறக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் யாழ்ப்பாணம் நகரத்தின் மையத்தில் முன்பு வெலிங்டன் தியேட்டர் அமைந்திருந்த வளவிற்குள் ‘கீல்ஸ்’ பேரங்காடி திறக்கப்பட்டது.திறக்கப்பட்ட நாளிலிருந்து இரவும்பகலும் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு குவிகிறார்கள்.
ஏற்கனவே யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் ஆஸ்பத்திரி வீதியில்,வேம்படிச் சந்திக்கு அருகாக உள்ள சூழலில் உயர்தர உணவகங்கள் பல திறக்கப்பட்டுள்ளன.பீட்சா கடைகளில் இருந்து பிரியாணி கடைகள்வரை பல்வேறு வகைப்பட்ட உணவகங்கள் மிகக்குறுகிய தூர இடைவெளிக்குள் உண்டு.
இந்த உணவகங்கள் தவிர இவற்றிற்கு முன்னரே திறக்கப்பட்ட உயர்தர விருந்தினர் விடுதிகள் உண்டு.அங்கேயும் இரவில் நூற்றுக்கணக்கானவர்களைக் காணமுடியும்.அவரவர் அவரவர் நுகர்வுக் கொள்ளளவுக்கு ஏற்ப உணவகங்களை நாடிச் செல்கிறார்கள்.
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான தமிழ்ச் சமூகத்தில் நுகர்வுத் தாகம் அதிகரித்து வருவதை;ஒரு நுகர்வு அலை எழுந்திருப்பதை பல ஆண்டுகளுக்கு முன்னரே அவதானிக்கக் கூடியதாக இருந்தது.கடந்த 15 ஆண்டுகளிலும் அந்த நுகர்வுப் பசியும் தாகமும் அதிகரித்துச் செல்கின்றன. போரினால் மூடப்பட்டிருந்த ஒரு சமூகம் வெளியுலகத்துக்குத் திறந்து விடப்படுகையில் நுகர்வுத்தாகமும் பசியும் அதிகமாக இருக்கும்.புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதியுதவிகள் மட்டும் இதற்குக் காரணமல்ல.ஆயுத மோதலுக்கு பின்னர் தமிழ்மக்கள் தமது வாழ்க்கையைப் படிப்படியாகக் கட்டியெழுப்பி வருகிறார்கள் என்பதன் குறிகாட்டிகளில் ஒன்றாக மேற்படி உயர்தர உணவகங்களின் பெருக்கத்தைக் கூறலாம்.
ஒரு மாற்றத்திற்காக வெளியில் போய்ச் சாப்பிட விரும்புகிறவர்கள்;அல்லது வித்தியாசமாகச் சாப்பிட விரும்புகிறவர்கள்;அல்லது கூடியிருந்து சாப்பிடுவதைக் கொண்டாட விரும்புகிறவர்கள் அவ்வாறு உயர்தர விருந்தகங்களை நோக்கிப் போகிறார்கள்.
வசதிபடைத்த மேல்நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமல்லஅன்றாடம் உழைப்பவர்கள் அதிகமுடைய கிராமங்களிலும்கூட இரவு உணவுக்காக பேக்கரிகளில் தங்கியிருக்கும் ஒரு நிலையைக் காணலாம்.உதாரணமாக,சில ஆண்டுகளுக்கு முன்பு உரும்பிராயில் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் ஸ்தாபகருடைய நினைவு தினத்தைக் கொண்டாடுவதற்காக போயிருந்தோம்.பெருமாளவிற்கு அன்றாடம் உழைப்பவர்களைக் கொண்ட ஒரு கிராமம் அது.நாங்கள் அங்கேயிருந்த சுமார் 5 மணித்தியால காலப்பகுதிக்குள் 8 பேக்கரி வாகனங்கள் அப்பகுதிக்குள் வந்துபோயின.அவற்றுள் சில ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வந்தன.அந்த கிராமத்தவர் ஒருவரிடம் கேட்டேன்,”இவ்வளவு அதிக தொகையாக பேக்கரி வாகனங்கள் வருகின்றனவே அந்த அளவுக்கு நுகர்வு உண்டா? என்று. அவர் சொன்னார்,”ஓம் பெருமளவுக்கு உடல் உழைப்பாளிகளாகிய எமது கிராமத்தவர்கள் இரவுகளில் ஆறுதலாக இருக்க விரும்புகிறார்கள்.இரவில் சமைப்பதைவிடவும் இந்த பேக்கரி உணவுகளை வாங்கினால் பெண்கள் ஆறுதலாக இருந்து திரைத்தொடர்களைப் பார்க்கலாம்” என்று சொன்னார்.
சமையல்,பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட ஒரு கடமை என்று கருதும் ஒரு சமூகத்தில் இவ்வாறு விருந்தகங்களுக்குப் போவதன் மூலம் பெண்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.பொதுவாக கிழமைக்கு ஒரு நாளிலாவது அல்லது ஒரு நாளில் ஒரு வேளையாவது சமையாமல் இருப்பதை பெண்கள் பெருமளவுக்கு ஆறுதலாகக் கருதுகிறார்கள்.
எனினும் இவ்வாறு உணவை கூடியிருந்து சாப்பிடுவதை ஒரு கொண்டாட்டமாகக் கருதும் பலரும்,உயர்தர உணவகங்களில் உணவுக்கு ஓர்டர் கொடுத்துவிட்டு,மேசையைச் சுற்றியிருந்த அவரவர் அவரவருடைய கைபேசியை நோண்டிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.ஒன்றாக உட்கார்ந்து உணவைச் சுவைப்பது ஒரு கொண்டாட்டம்.அந்த கொண்டாட்டத்துக்குள்ளும் கைபேசி ?
மேற்சொன்ன உயர்தர உணவகங்களில் ஒரு தொகுதி கோர்ப்பரேட் வலப்பின்னலுக்குள் வருபவை.உதாரணமாக ஆஸ்பத்திரி வீதியில் அமைந்திருக்கும் ஆர்ஆர் பிரியாணி இந்தியாவை மையமாகக் கொண்டது. அதற்கு நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கிளைகள் உண்டு.அடுத்ததாக காலித் பிரியாணியும் சென்னையை மையமாகக் கொண்டது.பெருந்தொற்று நோய்க்காலத்தில் மூவர் இணைந்து உருவாக்கிய உணவகங்களின் சங்கிலி வலையமைப்பு அது.
கோப்பரேட் உணவகங்கள் உலகப் பொதுவான கோப்பரேட் சுவையைப் பரப்புகின்றன. யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரான சனாதனன் கூறுவார் எல்லா பேரங்காடிகளுக்கும் ஒரே மொழிதான் என்று. அங்குள்ள தட்பவெட்பம், அங்கு மென்மையாகத் தவழும் இசை, உணவு வேகும் வாசம் போன்ற எல்லாமும் உலகின் எல்லாப் பேரங்காடிகளுக்கும் ஒரே மாதிரியானவைதான்.அப்படித்தான் கோப்பரேட் உணவகங்களும் உலகப் பொதுச் சுவையை பரப்புகின்றன.
ஆனால் இதனால் உள்ளூர் சாப்பாட்டுக் கடைகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன என்று கூறமுடியாது. ஏனென்றால் உள்ளூர் சாப்பாட்டுக் கடைகளில் வழமையாக உணவு அருந்துபவர்கள் எப்பொழுதும் அங்கே போவார்கள்.ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் உயர்தர உணவகங்களை நோக்கியும் குறிப்பிட்ட சில பேரங்காடிகளை நோக்கியும் போகிறார்கள்.
“உயர்தர உணவகங்களில் பிரியாணி வகை உணவைச் சாப்பிடுவது என்பது ஒரு அந்தஸ்தை,சமூகத் தராதரத்தை காட்டும் விடயம்” என்று கனடாவில் வசிக்கும் கீதா சுகுமாரன் கூறுகிறார்.அவர் உணவுப் பண்பாட்டை தனது கலாநிதிப் பட்ட ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டவர்.பிரியாணி என்பது எல்லாவிதமான பொருட்களும் கலந்து சமைக்கப்படும் ஓர் உணவு.விருந்துகளில் அது அந்தஸ்தைக் குறிப்பது.பிரியாணிக் கடைகளில் சாப்பிடுவதை ஒரு சமூக அந்தஸ்தாக கருதும் ஒரு பிரிவினர் அங்கே போகிறார்கள்.என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால்,அதனால் உள்நாட்டுச் சுவையும் உள்நாட்டு உணவும் கைவிடப்படுகின்றதா?இல்லை.அவ்வாறெல்லாம் ஏங்கத் தேவையில்லை. வீடுகளில் இப்பொழுதும் உள்நாட்டு சமையல்தான்.உள்ளூர் சுவைதான்.ஒரு வித்தியாசத்துக்காக,ஒரு மாற்றத்திற்காக அல்லது தமது அந்தஸ்தைக் காட்டுவதற்காக பிரியாணிக் கடைக்கு போகின்றவர்கள் வாழ்க்கை முழுவதும் பிரியாணிக் கடைகளிலேயே சாப்பிடுவதில்லை.அவ்வாறு தினசரி பிரியாணிக் சாப்பிடுகிறவர்கள் யாழ்ப்பாணத்தில் அந்தக் கடைகளில் இருந்து குறுகிய தொலைவில் காணப்படும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தங்களுடைய கொலஸ்ட்ரோலைக் கரைப்பதற்கான சிகிச்சைகளையும் பெறுகிறார்கள். அதாவது ஒரு கோப்பரேட் கொலஸ்ட்ரோலை விற்கிறார்.ஒரு கோப்பரேட் கொலஸ்ட்ரோலைக் கரைக்கிறார்.ஆக மொத்தம் கோப்பரேட்களின் ஆய்வு கூடமாக மாற்றப்பட்ட உள்ளூர் உடல் ?
கோப்பரேட் சுவை என்பது உலகப் பொதுவானது.உள்ளூர்ச் சுவை என்பது அதிகம் தேசியத் தன்மை மிக்கது.ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாக வனையும் அம்சங்களில் ஒன்று பொதுப் பண்பாடு.பொதுப் பண்பாட்டுக்குள் உணவுப் பண்பாடும் அடங்கும்.எனவே உணவுப் பண்பாடானது ஒரு மக்கள் கூட்டத்தின் தேசியத் தனித்துவங்களில் ஒன்றாகக் கருதத்தக்கது.1966இல் மேதினத்தன்று இடதுசாரிகள் தமிழ்மக்களுக்கு எதிராக எழுப்பிய கோசத்தை இங்கு சுட்டிக்காட்டலாம்.“தோசே மசால வடே அப்பிட்ட எப்பா”.இது தமிழர்களை அவர்களுடைய உணவுக்கூடாக விழித்த ஒரு கோஷம்.தோசையும் மசாலா வடையும் வேண்டாம் என்று பொருள்.அதாவது தோசையும் வடையும் அங்கே தமிழ் மக்களின் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டன.
ஈழத் தமிழர்கள் மத்தியில் வடக்கிலும் கிழக்கிலும் வித்தியாசமான உணவுப் பண்பாடுகள் உண்டு.வடக்கில் யாழ்ப்பாணத்திற்கும் வன்னிக்கும் இடையே வித்தியாசங்கள் உண்டு.யாழ்ப்பாணத்திலேயே வடமாராட்சி,தீவுப் பகுதிக் கிடையே வித்தியாசமான உள்ளூர் உணவுப் பண்பாடுகள் உண்டு.ஒரு தேசிய இனத்தின் உள்ளூர் உணவு பண்பாட்டுக்குள்ளேயே பல வகைகள் உண்டு.அவை எக பரிமாணத்தைக் கொண்டவை அல்ல. இந்தப் பல்வகைமையின் திரட்சிதான் ஈழத் தமிழர்களுடைய பொதுவான உணவு பண்பாடாகும். உலகில் தூய உணவுப் பண்பாடு என்று ஒன்று கிடையாது என்று கீதா சுகுமாரன் கூறுகிறார்.எல்லா உள்ளூர் உணவுப் பண்பாடுகளும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்தவைதான்.
இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே கோப்பரேட் உணவுப் பண்பாட்டையும்,உள்ளூர்,தேசியத் தனித்துவம்மிக்க உணவுப் பண்பாடுகளையும் பார்க்க வேண்டும்.
ஆயுத மோதல்களுக்கு பின்னரான நுகர்வுப் பசி,தாகம் என்பவற்றின் பின்னணியில் ஒரு தேசமாக திரள்வதன் மூலம் மட்டுமே தனது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய தமிழ்ச் சமூகமானது,தனித்துவம் மிக்க தனது சொந்தச் சுவையைக் குறைத்து மதிப்பிட்டு, அதை “லோக்கலானது” என்று இகழ்ந்துவிட்டு, கோப்பரேட் சுவை மீது பசி தாகமுடையதாக மாறிவிடுமா ?
கோப்பரேட் உணவகங்களின் பெருக்கத்தின் மத்தியில் உள்ளூர்த் தனித்துவங்களைப் பாதுகாப்பதை ஒரு வாழ்க்கை முறையாக, பெருமைக்குரிய வாழ்க்கை முறையாகக் கட்டமைப்பது என்பது ஒரு சமூகத்தின் அரசியல் சமூக பண்பாட்டுத் தலைமைத்துவங்களின் வேலை.அது தொடர்பாக அந்த சமூகத்தின் தேசியவாத அரசியலை முன்னெடுக்கும் தரப்புக்கள் மத்தியில் பொருத்தமான விழிப்பும் தூரநோக்கிலான அரசியல் தரிசனங்களும் இருக்க வேண்டும்.துறைசார் அறிஞர்கள் இதுதொடர்பான கற்கைகளை காஸ்ரோ நஷனலிஸம் (Gastro nationalism)என்று அழைக்கிறார்கள்.
ஈழத்தமிழர்கள் புலப்பெயர்ச்சி காரணமாக ஏற்கனவே உலகமயப்பட்டு விட்டார்கள்.தாங்கள் உலகமயப்பட்டு விட்டதாகக் காட்டிக்கொள்வதை ஒரு பகுதியினர் பெருமையாகவும் கருதுகிறார்கள்.
தமிழ்மக்கள் பண்பாட்டுச் செழிப்புமிக்க ஒரு நடுத்தர வர்க்கத்தை கொண்டவர்கள். பண்பாட்டுச் செழிப்புமிக்க ஒரு சமூகம் தன்வசமிழந்து தனது தனித்துவங்களை ‘லோக்கல்’ ஆனவை என்று இகழ்ந்து எதிர்ப்பின்றி உலகப் பொதுப் பண்பாட்டுக்குள் கரைந்துவிடாது.ஆனால் ஒரு சமூகத்தை தோற்கடிக்க விரும்பும் சக்திகள் அந்தச் சமூகத்தின் பண்பாட்டுத் தனித்துவத்தையும் செழிப்பையும் அதைவிட பலமான ஒரு பண்பாட்டிற்குள் கரைத்து விட முயற்சிக்கும்.எனவே அதை எதிர்கொள்வதற்கான சமூக,அரசியல், பொருளாதார,பண்பாட்டு விழிப்பு என்பது கலெக்டிவ் ஆனது.அரசியல் தலைமைகளால் முன்னெடுக்கப்பட வேண்டியது.கோப்பரேட் சுவையைப் பரப்பும் உயர்தர உணவகங்களுக்கு நிகராக உள்ளூர்ச் சுவையை,உள்ளூரில் தனித்துவமான உணவுப் பண்டங்களை உலகத் தரத்துக்கு உற்பத்தி செய்வதற்கு தமிழ் மக்களிடம் வளம் இல்லையா?
உள்ளூர் நண்டுக் கறி,உள்ளூர் றால்கறி,உள்ளூர் பிரட்டல்,உள்ளூர் பொரியல்,உள்ளூர் சுண்டல்,உள்ளூர் கீரை,உள்ளூர் ஒடியல் கூழ்,உள்ளூர் பலகாரம்… என்று தமிழ் மக்களின் தேசிய தனித்துவங்களை வெளிப்படுத்தும் உணவுச் சாலைகளை கட்டியெழுப்ப உள்ளூரிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் உள்ள முதலீட்டாளர்கள் முன் வரவேண்டும்.
சூழலியலாளர்கள் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டுவார்கள்.உள்ளூர் மரங்களில்தான் பறவைகள் கூடுகட்டும்.பூச்சி புழுக்களும் அந்த மரங்களைத்தான் மொய்க்கும்.அவற்றுக்குத் தெரிகிறது உள்ளூர் மரம் எது? “ஹைபிரிட்” மரம் எது? என்று.பண்பாட்டுச் செழிப்பு மிக்க தமிழ் மக்களுக்கும் அது தெரியும்.தமது சுவை எது? கோப்பரேட் சுவை எது என்பது.பண்பாட்டு விழிப்பில்லாமல் தேசிய விழிப்பு இல்லை.
1 Comment