என் இனமே என் சனமே உன்னை உனக்கே தெரிகிறதா?

தமிழரசுக் கட்சியின் உள்முரண்பாடு நாடாளுமன்றத்திலும் பிரதிபலித்திருக்கின்றது. நாடாளுமன்றத்தில் சிறீதரன் சுமந்திரனுக்கு எதிராக உரையாற்றியிருக்கிறார்.ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வைத்து முறைப்பாடு செய்வது அநேகமாக இதுதான் முதல் தடவையோ தெரியவில்லை.

விமான நிலையத்தில் சிறீதரன் சிறிது நேரம் மறித்து வைக்கப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும். அதேசமயம் அது தொடர்பாக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களுக்கு சுமந்திரன் பதில் சொல்ல வேண்டும்.அந்தக் கருத்துக்கள் சரியா பிழையா என்பதனை விமான நிலைய நிர்வாகம் வெளிப்படுத்த வேண்டும். இது தொடர்பான விசாரணைகளை நடத்தி உண்மையை வெளியே கொண்டுவர வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.அதேசமயம் இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தலைமைத்துவ முரண்பாடு பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் இங்கே இக்கட்டுரையின் குவிமையம்.

உட்கட்சிப் பூசல் நாடாளுமன்றம்வரை வந்துவிட்டது.ஏற்கனவே அது நீதிமன்றம்வரை சென்றுவிட்டது.இனி அதை ஐநா மனித உரிமைகள் உரிமைகள் சபைக்கும் எடுத்துச் செல்லலாமா?அல்லது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லலாமா? சிறீலங்காவின் இன அழிப்புச் சட்டங்களை நிறைவேற்றிய ஒரு நாடாளுமன்றத்தில் சிறீதரன் தன்னுடைய கட்சிக்காரருக்கு எதிராக முறைப்பாடு செய்கிறார்.

எந்த நாடாளுமன்றத்தில் தமிழ்த் தரப்பு நீதி கேட்டுப் போராடுகின்றதோ,அதே நாடாளுமன்றத்தில் கட்சியின் உள்முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளுமாறு கேட்கப்படுகின்றது.தமிழ்த்தேசிய நோக்குநிலையில் இது ஒரு வீழ்ச்சி.இது முதலாவது சம்பவம்.

அடுத்த சம்பவம்,சில வாரங்களுக்கு முன் இடம்பெற்றது. கிளிநொச்சியில்,கனகபுரம் துயிலுமில்லத்தில் இடம்பெற்றது.புனர்வாழ்வு பெற்ற முன்னாள் இயக்கத்தவர்கள் சிலர் கனகபுரம் துயிலும் இல்லத்தை தாமும் நிர்வகிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.அவர்களுக்குத் தலைமை தாங்குபவர் இரண்டு கண்களையும் இழந்தவர். அத்துயிலுமில்லம் கடந்த 15 ஆண்டுகளாக சிறீதரனுக்கு விசுவாசமானவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.இரண்டு கண்களையும் இழந்த அந்த முன்னாள் இயக்கத்தவரும் உட்பட அவரோடு சம்பந்தப்பட்டவர்களுக்கும் சிறீதரனின் ஆதரவாளர்களுக்கும் இடையே அங்கு பலமான வாக்குவாதம் நடந்தது.முடிவில் பொலீசார் தலையிட்டு இரண்டு பகுதியையும் சமாதானப்படுத்தினார்கள்.

இதில் சம்பந்தப்படும் இரண்டு தரப்புகளுமே போரால் பாதிக்கப்பட்டவர்கள். இதில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புகளிலுமே புனர் வாழ்வு பெற்ற போராளிகள் உண்டு. துயிலுமில்லங்களை ஒரு பொதுவான நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஒரு தரப்பு கேட்கின்றது.இன்னொரு தரப்பு அதை ஏற்கனவே நிர்வாகித்தவர்களே தொடர்ந்தும் நிர்வகிக்க வேண்டும் என்று கூறுகிறது.இதில் யார் சொல்வது சரி என்று விவாதத்தைப் பிறகு வைத்துக் கொள்ளலாம். ஆனால் இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பொலீசார் தலையிட வேண்டிவந்தது.எந்தப் போலீஸ் கட்டமைப்பை இனஅழிப்பை முன்னெடுத்த சீறீலங்கா படைக்கட்டமைப்பின் ஒரு பகுதியாக தமிழ்த் தேசியவாதிகள் வர்ணிக்கின்றார்களோ,அதே போலிஸ் கட்டமைப்பு ஒரு துயிலுமில்ல விவகாரத்தில் தலையிட்டு இருதரப்பையும் சமரசப்படுத்த வேண்டிய நிலை.இது இரண்டாவது சம்பவம்.

துயிலுமில்லங்களின் விவகாரத்தில் மட்டுமல்ல,ஏற்கனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அம்மாக்களின் விடயத்திலும் ஒரு மோதல் ஏற்பட்டபொழுது அவர்கள் பொலீசாரிடம் சென்று முறையீடு செய்தார்கள்.யாரிடம் எதற்காக முறையீடு செய்வது என்பது தொடர்பாக தெளிவான அரசியல் பார்வை இல்லாத ஒரு சூழல்.

மேற்கண்ட இரண்டு சந்தர்ப்பங்களிலும் மோதல் யாருக்கு இடையில் என்று பார்த்தால்,தமிழ்த் தரப்புக்களுக்கிடையில்தான்.யாரிடம் போய் முறையிடுகிறார்கள் என்று பார்த்தால்,யாருக்கு எதிராக நீதியைக் கேட்கின்றார்களோ அவர்களிடம்தான்.தமிழ் அரசியல் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? தமிழ் அரசியல் என்று சொல்வதை விடவும் தமிழ்ச் சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?என்று கேட்பதுதான் அதிகம் பொருத்தமானது.

ஏனென்றால்,கனடாவில் உள்ள ஒரு கோவிலில் இரண்டு அணிகள் மோதிக்கொண்ட காட்சி காணொளியில் வெளிவந்தது.அவர்கள் எவ்வளவு ஆக்ரோஷமாக மோதிக் கொள்கிறார்கள்?அதில் முடிவில் போலீசார் தலையிடுகிறார்கள்.அது கனேடியப் பொலீஸ். ஆனால் அந்த விவகாரம் ஒரு கோவில் சம்பந்தப்பட்ட,கடவுள் சம்பந்தப்பட்ட விவகாரம்.கடவுளின் சன்னிதானத்திலேயே ஒற்றுமையாக முடிவுகளை எடுக்கமுடியாத ஒரு சமூகமாக தமிழ் மக்கள் மாறி வருகிறார்கள்.

கனடாவில் மட்டுமல்ல யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பெரிய ஆலயங்களுக்கு ஏதோ ஒரு வழக்கு இருக்கின்றது.அண்மையில் சிவத் தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு நினைவையிட்டு நடந்த ஒரு வைபவத்தில்,உரை நிகழ்த்திய வட மாகாண சபையின் ஆளுநர் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்…”ஆலயங்கள் இப்பொழுது சமூக சேவைக்கு செலவழிப்பதை விடவும் வழக்குகளுக்கே அதிகமாகச் செலவழிக்கின்றன.”

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலும் கோவில் அறக்கட்டளைகளில் பிணக்குகளும் வழக்குகளும் உண்டு.கொழும்பில் வசிக்கும் ஒரு பேராசிரியர் சட்டம் பயிலும் தனது மகனிடம் சொன்னாராம், நீ கோவில் வழக்குகளை மட்டும் எடுத்தாலே போதும் வாழ்க்கை முழுவதும் உனக்கு உழைப்பு இருக்கும் என்று.அந்தளவுக்கு கோவில்கள் நீதிமன்றத்தில் நிற்கின்றன.

இந்துக் கோவில்கள் மட்டுமல்ல நவீன யாழ்ப்பாணத்தைச் செதுக்கிய திருச்சபைகளில் ஒன்று என்று வர்ணிக்கப்படுகின்ற தென்னிந்தியத் திருச்சபையும் நீதிமன்றத்தில் நிற்கின்றது.

கட்சியும் நீதிமன்றத்தில், கோவில்களும் நீதிமன்றத்தில், திருச்சபைகளும் நீதிமன்றத்தில்,பழைய மாணவர் சங்கங்களும் நீதிமன்றத்தில்,ஏன் தமிழ் மக்கள் தங்களுக்கு இடையிலான பிணக்கைத் தங்களுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்?அல்லது அவ்வாறான பிணக்குகளைத் தீர்த்து வைக்கக்கூடிய மூத்த சமூகத் தலைவர்கள்,மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள்,வழிகாட்டிகள்,முன்னோடிகள் தமிழ்மக்கள் மத்தியில் இல்லையா ?

இருக்கிறார்கள்.ஆனால் எல்லாரையுமே “மீம்ஸ்” ஆக்கிவிடும் ஒரு போக்கு அதிகரித்து வருகிறது.சமூகத்தில் யார் துருத்திக்கொண்டு தெரிகிறார்களோ,யார் சமூகப்பணி செய்கிறார்களோ,யார் அர்ப்பணிப்பும் தியாகமும் மிக்க இறந்த காலத்தைக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களை அடுத்த தலைமுறை மதிப்பது குறைந்து வருகிறது.மூத்த,முன்னோடிகளாய் இருக்கின்ற, அனுபவஸ்தர்களை மதிக்காத ஒரு சமூகம் எப்படி உருப்படும்?

ஊடகங்களுக்குச் செய்திப் பசி.ஆனால் அந்த பசிக்கு தீனியாகக் கிடைத்திருப்பது தேசம்.அந்த பசிக்கு இரையாகிக் கொண்டிருப்பது தேசத் திரட்சி.ஒருபகுதி ஊடகங்கள் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள உள் முரண்பாடுகளையும் அகமுரண்பாடுகளையும் விடுப்பாக்கி,தமது உழைப்பைப் பெருக்கப் பார்க்கின்றன.கேட்டால் “ஜனநாயகம், நடுநிலைமை, ஊடக தர்மம் ” என்றெல்லாம் கூறுகிறார்கள்.எல்லா ஊடகங்களுக்கும் தர்மம் இருக்கிறதோ இல்லையோ அஜெண்டா இருக்கும்.அது ஒரு உழைப்புக்கான அஜெண்டா.சிலசமயம் அந்த அஜெண்டாவுக்குப் பின் கட்சிகள் இருக்கலாம்.கட்சிப் பிரமுகர்கள் இருக்கலாம்.வேறு தரப்புகளும் இருக்கலாம்.அஜெண்டா இல்லாத ஊடகங்கள் கிடையாது.குறைந்தபட்சம் “வியூவர்”களின் தொகையைக் கூட்டவேண்டும் என்ற அஜெண்டாவாவது இருக்கும்.

ஆனால் இந்த எந்த ஒரு அஜெண்டாவும் தேசத்தைத் திரட்டும் அரசியலுக்கு எதிரானது. தேசத்தை திரட்டவேண்டும் என்று உழைக்கும் ஊடகங்கள் அதை நோக்கித்தான் நேர்காணல்களை எடுக்கும்;கருத்துக்களை உருவாக்கும்.யுடியூப்களில் தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் இடையே உள்ள இடைவெளிக்குள் ஊடக தர்மம்,தொழில்சார் திறன்கள் எல்லாமே அழிந்து போகின்றன.நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்க ஆயர் டெஸ்மண்ட் டூடூ  கூறுவதுபோல ஒடுக்கும் தரப்புக்கும் ஒடுக்கப்படும் தரப்புக்கும் இடையில் நடுநிலை காப்பது என்பது ஒடுக்குமுறைக்குச் சேவகம்  செய்வதே.தேசத் திரட்சியைப் பாதுகாப்பதா?அல்லது டொலர்களுக்காகத் தேசத் திரட்சியைக் குலைப்பதா?

இவ்வாறாக,தேசத் திரட்சிக்கு வழிகாட்டாத ஊடகங்களின் தொகை பெருகிக்கொண்டுவரும் ஒரு சமூகம்,மூத்தவர்களை,அனுபவஸ்தர்களை,சமூகப் பெரியார்களை மதியாத ஒரு சமூகம்,தனக்குள் ஏற்படும் பிணக்குகளுக்கெல்லாம் நீதிமன்றத்திற்குப் போகும் ஒரு சமூகம்,தன் கட்சிக்காரருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முறைப்பாடு செய்யும் ஒரு சமூகம்,இனஅழிப்புக்கு எதிராக நீதியைப் பெறுவதற்காக ஒன்றுதிரண்டு போராட முடியுமா?

ஒருபுறம் மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை.மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இன்னொருபுறம்,சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டியவர்கள் கீழ்த்தரமாக விமர்சிக்கப்படுகிறார்கள்.அல்லது வழிகாட்டிகளாக முன்னுதாரணமாக நிற்க வேண்டியவர்கள் நீதிமன்றத்திற்கு வழிகாட்டுகிறார்கள்.இது இப்படியே போனால் தமிழ்ச் சமூகம் ஒரு தேசமாக நிமிர முடியுமா?

ஒரு காலம் முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்கவைத்த ஒரு சமூகம்,பண்பாட்டுச் செழிப்பு மிக்க ஒரு நடுத்தர வர்க்கத்தைக் கொண்ட ஒரு சமூகம், இப்பொழுது ஏன் இப்படித் தூர்ந்து போகின்றது? தன்னுடைய பற்களை தானே கிண்டி மணக்கும் ஒரு சமூகமாக எப்படி மாறியது ?

தாயகமும் புலம்பெயர்ந்த தமிழர்களும் இணைந்து இந்தச் சீரழிவைத் தடுக்க முன்வர வேண்டும்.இந்தச் சீரழிவுக்குக் காரணங்கள்,போரும் புலப்பெயர்ச்சியும் தலைமைத்துவ வெற்றிடமும் வெளிச் சக்திகளுமே.

சமூகத்துக்காகத் தம்மை அர்ப்பணித்து போர் புரிந்தவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள்.அல்லது காணாமல் ஆக்கப்பட்டு விட்டார்கள்.அல்லது புலம் பெயர்ந்து ஓய்வுபெற்று விட்டார்கள்.ஒரு சமூகத்துக்காகத் தம்மை அர்ப்பணித்து உழைப்பவர்கள்தான் அந்த சமூகத்தை ஒரு தேசமாகத் திரட்டலாம்.அப்படிப்பட்டவர்களின் தொகை குறைந்துவிட்டது. எல்லாவற்றையும் தொழிலாக எடுத்துக் கொள்பவர்கள்,எல்லாவற்றிலும் லாபத்தை எதிர்பார்ப்பவர்கள் அதிகரித்து விட்டார்கள்.அதன் விளைவுதான் மேற்கண்ட சீரழிவுகள் அனைத்தும்.

இப்பொழுது தமிழ் மக்களுக்குத் தேவையாக இருப்பது அவர்களை ஒரு சமூகமாக,ஆக்கசக்தி மிக்க ஒரு தேசமாகக் கட்டியெழுப்பும் தலைவர்களும் சமூக உருவாக்கிகளும் கருத்துருவாகிகளும் ஊடகவியலாளர்களும் அறிவுஜீவிகளும் கலைஞர்களும்தான்.தொழில்நுட்பத்தின் கைதியாகிவிட்ட ஒரு இளைய தலைமுறையை இலட்சியவாதிகளாக மாற்றவல்ல தலைவர்களும் முன்னுதாரணங்களும் வேண்டும். கட்சிகளால்,அமைப்புகளால்,ஊடகங்களால், ஆலயங்களால், திருச்சபைகளால், புலனாய்வுத் துறைகளால்,சிதறடிக்கப்பட்டு வரும் ஒரு சமூகத்தைக் கூட்டிக்கட்டவல்ல, முன்னுதாரணம் மிக்க தியாகிகள் முன்வர வேண்டும்.

தமிழ்மக்கள் ஆஞ்சநேயரைப்போல தமது பலம் எதுவென்று தெரியாமல் இருக்கிறார்கள்.அவர்கள் ஒரே மூச்சில் சமுத்திரத்தைக் கடக்கும் பலம் மிக்க ஒரு சமூகம்.அதை அவர்களுக்கு எடுத்துக்கூறவல்ல முன்னுதாரணம்மிக்க ஆளுமைகள் வேண்டும். தன் பலம் எதுவென்று அறியாமல், ஒருவர் மற்றவரை நம்பாமல்,ஏன் தன்னைத்தானே நம்பாமல்,சீரழியும் ஒரு சமூகத்திற்கு வழிகாட்டவல்ல தியாகிகள் முன்வர வேண்டும். தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் உள்ள ஆளுமைகள் இந்த விடயத்தில் அவசரமாக ஒன்று திரள வேண்டும். முன்னுதாரணங்களை உருவாக்க வேண்டும்.

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • O. Cooray , 26/01/2025 @ 10:42 PM

    What has happened in the airport immigration was definitely an embarrassing for entire Tamils.
    It shows the rivalry in the public & ignorance of Tamils
    This event is an example (among thousands) in the public. The real mindset of those leaders. They are not in politics but individual supremacy in front of naive Tamils.
    It is evident that the culprit is exposed in the arena. This cheap political stunt is an undinayable political setback for the already corrupted ITAK.
    During 77 years of politics, ITAK has learnt nothing but disgraced them selves.
    Apart from this disgraceful event, in the ITAK, current leaders MUST get out of the office of the ITAK. And ket young & creative qualified professionals into the new party.
    Old guards have totally misled the public for the last 76 years.
    Tamils need innovative leadership in politics. They never upheld anything innovative policy’s but hanging on the unproductive politics, those will never help them to create any profit in the future. Even though ITAK leadership will never realuse their inability in productive politics.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *