தூர் வார வேண்டிய குளங்கள் ; தூர் வார வேண்டிய தமிழரசியல்

 

 

சில நாட்களுக்கு முன் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரியான  நந்தகுமார் முகநூலில் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். கமநல சேவைகள் திணைக்களத்தின் பொறுப்பில்,யாழ்ப்பாணத்தில், ஏறக்குறைய ஆயிரம் குளங்கள்  உண்டு என்றும், அவை கடந்த இரண்டு வருடங்களாக தூர் வாரப்படவில்லை என்றும் அடுத்த  பருவ மழைக்கு முன் அவற்றை தூர் வார வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதற்கு வேண்டிய நிபுணத்துவ உதவிகளை வழங்குவதற்கு துறைசார் பொறியியலாளர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்த அவர், பிரதேச சபைகளும் உள்ளூர் மற்றும்  வெளிநாடுகளில் உள்ள தன்னார்வலர்களும்  குளங்களைத் தூர் வார்வதற்கு முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

குளங்களைப்  பாதுகாப்பது என்பது தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதியாக இருந்தது என்று பொறியியலாளர் சர்வா சர்வேந்திரன் கூறுகிறார்.குளத்தைச் சுற்றி  மருத,நெல்லி,நாவல்.வேம்பு  போன்ற மரங்களை வளர்த்த தமிழ் மக்கள் குளங்களுக்கு அருகே  கடவுள் சிலைகளை வைத்து, குளத்துக்குப் புனிதத் தன்மையைக் கொடுத்து அதன்மூலம் குளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்கள் என்றும் அவர் கூறுகிறார்.குளத்தை மாசாக்கினால் அது தெய்வக் குற்றம். என்று பயப்படுமளவுக்கு குளத்தையும் கோவிலையும் பிணைத்துப்  பராமரிக்கும் ஒரு பாரம்பரியம் தமிழ் மக்களிடம் இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.அவ்வாறான  குளக்கரைக் கோவில்களில் தீர்த்தத் திருவிழா என்பது பெரும்பாலும் மழைக்காலத்துக்கு முன்பு ஆனி தொடக்கம் புரட்டாதி வரையிலுமான மாதங்களில் வரும்.தீர்த்த திருவிழாவுக்காக குளங்கள் தூர் வாரப்படும். இது வருடாவருடம் குளங்கள் தூர் வாரப்படுவதனை உறுதி செய்யும்.தீர்த்தத் திருவிழா என்பது  குளங்களைத் தூர்வாரும் ஒரு பண்பாட்டு நடவடிக்கை  என்ற பொருள்பட சர்வா கூறுகிறார்.

ஊர்கள் தோறும் குளங்களை பராமரிப்பதற்கான ஒரு வாழ்க்கை முறையைக்  கொண்டிருந்த தமிழர்கள் இப்பொழுது அதே குளங்களை மூடத்  தொடங்கி விட்டார்களா? குளங்களுக்கு அருகே காணப்பட்ட கோவில்கள் பெருத்துக் கொண்டே போகின்றன.கோவில்களைப் புனரமைப்பதற்காக கோடி கோடியாக காசு கொட்டப்படுகிறது.குளத்துக்காகக் கோவில்  என்றிருந்த நிலைமாறி கோவிலுக்காகக் குளம் என்ற நிலை உருவாகிவிட்டது?

கடந்த வாரம் இப்பகுதியில் பாடசாலைகள் மூடப்படுவது பற்றி எழுதி இருந்தேன்.பாடசாலைகள் மூடப்படுவதற்கு முன்னரே அதாவது நவீன யாழ்ப்பாணத்தை செதுக்கிய ஒரு கல்விச் சூழலை கட்டியெழுப்பிய பாடசாலைகள் திறக்கப்பட்ட ஒரு காலகட்டத்திலேயே குளங்கள் மூடப்பட்டன என்பதை அல்லது குளங்களை மூடுவது தொடர்பாக சிந்திக்கப்பட்டது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அண்மையில் வெளியிடப்பட்ட கட்டடப்படக் கலைஞர் மயூரநாதனின்  யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு என்ற நூலில் அதுதொடர்பான தகவல்களைப் பெறமுடியும்.கடந்த மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக குளங்களை மூடுவது தொடர்பான உரையாடல்கள் தொடர்ச்சியாக நடந்து  வருகின்றன.

1697இல் யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தரின் கட்டளைத் தளபதியாக இருந்த ஹென்றிக் ஸ்வார்டெக்க்ரூன் தனது வழிகாட்டல் குறிப்பில், நிலத்தைப் பெறுவதற்காகக்,நகரப் பகுதியில்,ஆதரவற்ற பிள்ளைகள் தங்கியிருந்த இல்லத்துக்குப் பின்புறமிருந்த குளமொன்றை மூடுவது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.மேலும் கோட்டைக்கு அருகே பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய மேட்டுப்பகுதிகளை வெட்டி அந்த மண்ணை அருகே இருந்த குளங்களை மூடுவதற்குப் பயன்படுத்தலாம் என்ற கருத்தையும் முன்மொழிந்திருந்தார். அவருடைய முன்மொழிவுகள் அப்பொழுது ஏற்கப்படாவிட்டாலும் பின்னர் 1833-1867 வரையிலுமான காலப்பகுதிக்குள் அந்தக்குளம் மூடப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அது தாராக் குளம் என்று அழைக்கப்பட்டது.1863இல்  திருக்குடும்பக் கன்னியர் மடத்தை விஸ்தரிப்பதற்காக மஞ்சள் கரைஞ்ச குளம் மூடப்பட்டிருக்கிறது. மேலும் பெயர் தெரியாத பல குளங்கள் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் மூடப்பட்டுள்ளன. 1867ஆம் ஆண்டுக்கு முன்னர் மூடப்பட்ட குளங்கள் பற்றிய தகவல்களை கொலரா ஆணைக் குழுவின் அறிக்கையில் காணமுடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மஞ்சள்   கரைச்ச குளம்,குசவன் குலம் போன்ற குளங்கள் மூடப்பட்டன.கொலரா ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பட்டங்கட்டிக் குளம் மூடப்பட்டது.1877இல் வைத்தியசாலை வீதியை அண்டிருந்த வண்ணான் குளம் மூடப்பட்டது….. மேற்படி தகவல்களை மயூரநாதனின் நூலில் காணலாம்.

அதாவது  காலனித்துவ காலத்தில் இருந்து இன்றுவரையிலும்  யாழ் நகரப் பகுதியில் வெவ்வேறு நோக்கங்களுக்காக  குளங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அதன் விளைவாக மழைக்காலங்களில் வெள்ளம் நகரத்துள்  தேங்கி நிற்கின்றது.

ஒருபுறம் பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன.இன்னொரு புறம் குளங்கள் மூடப்படுகின்றன.இப்படிப்பட்டதோர் பின்னணியில் குளங்களைத் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை  காலப் பொருத்தமானது; மகத்தானது.

புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில் இது தொடர்பான விழிப்பை அதிகப்படுத்த வேண்டும்.எல்லாப் பிரதேச சபைகளிலும் தூர்வார வேண்டிய குளங்களும்,தூர்வார வேண்டிய வெள்ள வாய்க்கால்களும் உண்டு.அண்மையில் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா தலைமையிலான குழுவினர் வழுக்கியாற்றின் தடங்களைப் பின்பற்றி ஒரு நீண்ட நடைப் பயணத்தை முன்னெடுத்தபொழுது அளவெட்டியில் பினாக்கைக் குளக்கரையில் தரித்து நின்று  அப்பகுதி விவசாயிகளோடு உரையாடினார்கள். அதன்போது பினாக்கைக் குளத்தைச் சுற்றியுள்ள வயல்வெளிகளின் ஓரங்கள் குடியிருப்புகளாக மாறி வருவது மட்டுமல்ல குளத்துக்கு நீர் வரும் வாய்க்கால் ஓர்  ஒழுங்கையாக மாற்றப்பட்டு விட்டதையும் கிராமவாசிகள் சுட்டிக் காட்டினார்கள்.இவ்வாறு இப்பொழுது குளங்களுக்கு அருகே உள்ள அல்லது குளங்களை நோக்கி வரும் ஒரு பகுதி சிறிய வீதிகள் ஒரு காலம் குளத்துக்கு நீரைக் கொண்டு வரும் வாய்க்கால்களே என்று கிராமவாசிகள் கூறுகிறார்கள்.

புதிய உள்ளூராட்சி சபைகளுக்கு முன்னுள்ள பொறுப்புகளில் இதுவும் ஒன்று.குளங்களை  நிலத்தடி நீரை ரீச்சார்ஜ் செய்வது.பயிர்பச்சைகளை விளைவிப்பது என்ற நோக்கு நிலைகளுக்கும் அப்பால் குளங்களையும்,குளங்களைச் சுற்றியுள்ள சூழலையும் பொழுதுபோக்கு மையங்களாக மகிழ்ச்சி  மையங்களாக மாற்றலாம்.

மணிவண்ணன் யாழ் நகர முதல்வராக இருந்த காலத்தில் ஆரிய குளத்தை அவ்வாறு சிந்தித்து மாற்றினார்.எனினும்  அப்பகுதி பொழுதுபோக்கிகளைக் கவரும்  ஓரிடமாக இன்னமும் முழுவளர்ச்சி பெறவில்லை. ஆரியகுளம் இப்பொழுதும் பெருமளவுக்கு தனித்துவிடப்பட்டுள்ளது. அதற்கு அந்தக் குளம் அமைந்திருக்கும் அமைவிடம் ஒரு காரணமாக இருக்கலாம்.அந்தக் குளத்தின் ஒரு பகுதி எல்லை பலாலி வீதி.அங்கேயும் எதிர்த்  திசையில் நாக விகாரை. நாக விகாரைக்கு வருகின்ற சிங்கள மக்கள்கூட ஆரிய குளத்தைப் பெரிய அளவில் ரசிப்பதாகத் தெரியவில்லை.குளத்தின் ஏனைய இரண்டு எல்லைகள் மதில்களால் அடைக்கப்பட்டு இருக்கின்றன. குளத்தைச் சுற்றியுள்ள பகுதி இயற்கைக்குத் திறந்து விடப்பட்ட ஒரு பகுதியாக இல்லை. இதுபோன்ற பல காரணங்களினால் ஆரியகுளம் எதிர்பார்த்த அளவுக்கு மகிழ்ச்சி மையமாக வளர்ச்சி அடையவில்லை. பண்ணை கடற்கரையை நோக்கிவரும் அளவுக்கு, அல்லது பழைய பூங்காவில்  ஒருமூலையில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய பூங்காவை நோக்கிவரும் அளவுக்கு,மக்கள் ஆரிய குளத்தை நோக்கி வரவில்லை.இதில் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு அருகே உள்ள குளம் ஒப்பீட்டளவில்  சனப்புழக்கமாக உள்ளது. அதைச் சூழவுள்ள மரங்களும், வெளியும்,இரவில் மங்கலான  தெரு விளக்கின் ஒளியும் அதற்குக் கவர்ச்சியைக் கூட்டுகின்றன.

யாழ்ப்பாணத்தில் குறிப்பாக மக்கள் செறிந்து வாழும் இடங்களில் உள்ள ஒரு பகுதி குளங்களுக்கு சாதி அடையாளம் உண்டு. நீர்வடியும்  பள்ளமான பகுதிகளில் குடியேறும் ஒரு பகுதியினர் சாதி ரீதியாக தாழ்த்தப்பட்டவர்களாகவும் காணப்படுகிறார்கள். ஒரு காலம் யாழ்ப்பாணத்தில் சண்டியர்களை வாடகைக்கு எடுக்கும் பொழுது சில குறிப்பிட்ட குளங்களின் பெயர்களைச் செல்வார்கள். சில குற்றச்  சம்பவங்களோடு குளங்களின் பெயர்களும் இணைக்கப்பட்டு உள்ளூரில் வாய்மொழிக் கதைகள் உண்டு.ஒரு பகுதி குளங்களைச் சுற்றியிருக்கும் இந்த சாதி அடையாளத்தை அகற்றி அவற்றை கவர்ச்சியான மகிழ்ச்சி  மையங்களாக மாற்றும் விதத்தில் சிந்திக்க வேண்டும்.

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரான பா.அகிலன் கூறுவார், குளங்களை நினைவுக் குளங்களாக மாற்றலாம் என்று.அந்தந்த பகுதிகளில் இறந்த தியாகிகள்,சமூகப் பெரியார்கள் போன்றவர்களின் பெயர்களைக்  குளங்களுக்குச் சூட்டலாம்.அல்லது குளங்களைச் சூழ உள்ள பகுதிகளில் இயற்கையை அழகாக்கி பூங்காக்களாகி அப்பகுதியை நினைவுப் பூங்காக்களாக பராமரிக்கலாம்  என்றும் அவர் கூறுகிறார். அவை  மகிழ்ச்சி மையங்களாகவும் இருக்கும்;வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு காவும் இடங்களாகவும் இருக்கும் ;நினைவுகளை அனுஷ்டிக்கும் இடங்களாகவும் இருக்கும்.

புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி சபைகள் உள்ளூர் வளங்களையும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வளங்களையும் பயன்படுத்தி குளங்களை   மையமாகக் கொண்டு பசுமைத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.புலம் பெயர்ந்த தமிழர்கள் நினைத்தால் தங்கள் தங்கள் ஊர்களில்  குளங்களைத் தத்தெடுக்கலாம்.

எல்லா உள்ளூராட்சி சபைகளும் தங்களுக்கென்று சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும்.பருவ காலங்கள் தோறும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குரிய திட்டங்களை வகுக்க வேண்டும். கமநல சேவைகள் திணைக்களம்  மத்திய அரசாங்கத்தின் கீழ் வருகிறது.இதனால்  அத்திணைக்களத்தின் கீழ்வரும் குளங்களைப் பராமரிப்பது தொடர்பில் உள்ளூராட்சி சபைகள் புதிய ஏற்பாடுகளைக் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கலாம்.தமிழ் அரசியலே இப்பொழுது தூர்வார வேண்டிய நிலையில்தான் உள்ளது.ஒற்றுமையாகக் குளங்களைத் தூர் வாருவதில் இருந்தும் அதைத் தொடங்கலாம்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *