யாழ்ப்பாணத்து வெளிகள் யாவும் போர்க்காலத்துப் படை நடவடிக்கைகளோடு தொடர்புடையவை.போர்க்கால வியூகங்களின் ஒரு பகுதியாகக் காணப்பட்டவை.சிலசமயம் வெளிகளே கவசங்கள்.சில சமயம் வெளிகளே பொறிகள். ராங்கிகளையும் விமானங்களையும் வைத்திருந்த அரச தரப்பு வெளிகளை எப்பொழுதும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கும். ஆனாலும் அது இலகுவானதாக இருந்ததில்லை. மறைப்பில்லாத வெளிகளில் சிந்தப்பட்ட குருதியை,படிந்த சாம்பலை,புதைந்த ரவைக் கோதுகளை பருவமழை கழுவிச் சென்றிருக்கலாம். ஆனால் பெரும்பாலான வெளிகள் போர்க்காலத்தின் நினைவுகளால்,காயங்களால், மரணங்களால், புதிர்களால்,மர்மங்களால்,இன்னமும் வெளியில் வராத ரகசியங்களால் நிரப்பப்பட்வை.தேற்றப்படவியலாத் தாய்மாரின் துக்கத்தால்,கண்ணீரால் நிரப்பப்பட்டவை.
அவற்றுள் ஒன்றுதான் செம்மணி வெளியும்.அதன் ஒருபகுதி பருவ காலக் கடலேரி.பயிர் பச்சை வளராத தரவை.இன்னொருபுறம் வயல்வெளி. நடுவே அனாதைபோல செல்லும் கண்டி வீதி.உப்பும் ஊரியும் விளையும் பருவ கால கடலேரியிலிருந்தும் வயல்வெளிகளில் இருந்தும் குடிமனை தொலைவில் உள்ளது. ஒரு குறுகிய இடைவெளிக்குள் இரண்டு சுடுகாடுகளும் ஓர் இடுகாடும் அங்கே உண்டு.
யாழ் நகரத்துக்கும் தென்மராட்சிக்கும் இடையிலான கழுத்துப் பகுதியில் அமைந்திருக்கும் அதன் புவியியல் அமைவிடம்தான் இன்று அது பெற்றிருக்கும் அரசியல் கவனக் குவிப்புக்குக் காரணம். யாழ் நகரப் பகுதியின் ஏறக்குறைய தலைவாசல் பகுதியில் அது அமைந்திருக்கிறது.நகரத்தின் நுழைவாயில் என்பதனால் அதற்கு ஒரு கேந்திர முக்கியத்துவம் உண்டு.எனவே யாழ் நகரப் பகுதியின் கழுத்தை இறுக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் அங்கே சோதனைச் சாவடிகளைப் பேணுவார்கள்.அதன் அமைவிடம் காரணமாக செம்மணி வெளிக்கு ஒரு படைத் துறைக் கேந்திர முக்கியத்துவம் உண்டு.
அது மட்டுமல்ல,அது பெருமளவுக்கு ஆளரவம் குறைந்த ஒரு வெளி.ஊரடங்குச் சட்டத்தின் மூலம் கண்டி வீதியில் போக்குவரத்தை நிறுத்தினால் அங்கே பார்வையாளர்கள்,சாட்சிகள் இருக்க மாட்டார்கள்.இதுதான் அது பின்னர் புதை குழியாக மாற ஒரு காரணம்.
கிருஷாந்திக்கு முன்பு வரை செம்மணி ஒரு புவியியல் பதம்.கிருஷாந்திக்கு பிறகு அது ஓர் அரசியல் பதம்.முள்ளிவாய்க்காலைப் போல.அங்குள்ள வயல்வெளிகளில் விளைந்த ஒரு நெல்லினத்தின் பெயர்தான் செம்மணி என்று ஒரு தகவல் உண்டு.இப்பொழுது பாவனையில் இல்லாத ஒரு நெல் இனம் விளைந்த வெளியில் போர்க்காலத்தில் “சா விளைந்தது “.
செம்மணிக்குள் தமிழர்கள் புதைக்கப்பட்டார்கள் என்ற தகவலை முதலில் வெளியே சொன்னது,அரச படைத் தரப்பைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் சோமரத்னதான்.கிருஷாந்தி குமாரசுவாமியின் வழக்கில் தன் மேலதிகாரிகள் தன்னைப் பலியிட்டு விட்டார்கள் என்ற கோபத்தில் அவர் தான் சார்ந்த படைக் கட்டமைப்பைக் காட்டிக் கொடுத்தார். அங்கிருந்துதான் செம்மணிக்குள் நூற்றுக்கணக்கானவர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற ரகசியம் வெளியே வந்தது.அதை இன்னொரு விதமாகச் சொன்னால் அமைதியுறாத கிருஷாந்தியின் ஆன்மா புதைக்கப்பட்ட உண்மையை வெளியே கொண்டு வந்தது என்றும் சொல்லலாம்.
அது திருமதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலம் .சமாதான தேவதையாக வேடம் பூண்டு அவர் ஆட்சிக்கு வந்தார். அவருடைய ஆட்சி காலத்தில்தான் குடா நாட்டுக்கான சமரில் படைத்தரப்பு முதல் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியை சந்திரிகாவின் மாமனார் ரத்வத்த தங்கத்தட்டில் வைத்து சந்திரிகாவுக்கு பரிசளித்தார். அதாவது வேறொரு நாட்டை வெற்றி கொண்டு அந்த வெற்றிச் செய்தியை பரிசளிப்பதைப் போல. மாமனும் மருமகளும் அதனை வெற்றியாகக் கொண்டாடியிருக்கலாம். ஆனால் அந்த வெற்றிப்பிரகடன நிகழ்வானது ஒரு விதத்தில் உபயோகபூர்வமாக இந்த சிறிய தீவில் இரண்டு நாடுகள் இருக்கின்றது என்பதனை ஒப்புக்கொண்டது.
வெற்றி கொள்ளப்பட்ட யாழ்ப்பாணத்தை சந்திரிக்கா அமைதி நகரம் என்று பெயரிட்டார்.ஆனால் அது அமைதி நகரமாக இருக்கவில்லை. அந்த வெற்றி முழுமையற்றது என்பதனை விடுதலைப்புலிகள் இயக்கம் பின்னர் நிரூபித்தது. தொடர்ச்சியாக படைத்தரப்பின் மீது தாக்குதல்கள் அதிகரித்த பொழுது அவற்றை எதிர்கொள்ள முடியாத சந்திரிகாவின் அரசாங்கம் பொதுமக்களை பழிவாங்க தொடங்கியது.கைது மற்றும் காணாமல் போதல்கள் தொடங்கின.இவ்வாறு காணாமல் போனவர்களைப் புதைத்த இடங்களில் ஒன்றாகவே செம்மணி இப்பொழுது பார்க்கப்படுகிறது.
அதை வெளியே கொண்டு வந்தது கிருஷாந்தியின் வழக்கு.கிருஷாந்தி படித்தது யாழ்ப்பாணத்தின் முன்னணி புரொடஸ்தாந்து மகளிர் கல்லூரியில். அவர் படித்த நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய உறவினர்கள் செல்வாக்கு மிக்க பொறுப்புகளில் இருந்தார்கள். எனவே அவருடைய விவகாரம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டதற்கு அவருடைய குடும்பப் பின்னணி ஒரு காரணம்.அதைவிட சந்திரிக்கா தன்னை சமாதான தேவதையாக நிரூபிப்பதற்கு, குறிப்பாக உள்நாட்டு நீதியின் நம்பகத் தன்மையை வெளியுலகத்துக்கு நிரூபிப்பதற்கு கிரிசாந்தியின் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் இருந்தது.
அவ்வாறு தண்டிக்கப்பட்ட சோமரட்ன,அரசாங்கத்துக்கு எதிராக வழங்கிய வாக்குமூலத்தில் இருந்துதான் செம்மணிக்குள் மனிதப் புதைகுழி இருப்பது தெரியவந்தது.
எனவே செம்மணி முதலில் வெளிவந்ததற்கு காரணம் கிருஷாந்தியின் வழக்கு. அதில் துணிந்து போராடிய அவருடைய உறவினர்கள்; அரசியல்வாதிகள். இப்படிப் பார்த்தால் செம்மணிக்குள் புதைகுழி இருப்பதை முதலில் வெளியே கொண்டு வந்தது அவர்களுடைய உழைப்புத்தான்.இது முதலாவது சந்தர்ப்பம்.
இரண்டாவது சந்தர்ப்பமும் எதிர்பாராமல் கிடைத்த ஒன்றுதான். சித்துப்பாத்தி மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக நிலத்தை அகழ்ந்த பொழுது எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன.29 ஆண்டுகளாக புதைக்கப்பட்டிருந்த உண்மை மீண்டும் வெளிவர தொடங்கியுள்ளது. எனவே தொகுத்துப் பார்த்தால் செம்மணி ஒரு புதைகுழி மட்டுமல்ல. தமிழ் அரசியலில் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் ஓர் அரசியல் வெளியாகவும் காணப்படுகிறது.
தனக்கு மட்டுமல்ல,தன்னோடு சேர்த்து புதைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்குமான நீதியைத் தேடி கிருஷாந்தியின் ஆன்மா அமைதியுறாது அந்த வெளியெங்கும் அலைந்து திரிகிறது.
96 ஆம் ஆண்டு நான் எழுதிய கவிதையில் அவளை “அமைதி நகரின் மணம்பேரி” என்று அழைத்தேன்.மணம்பேரி ஒரு சிங்கள அழகு ராணி.கதிர்காமத்து அழகி. அவருக்கு ஜேவிபியோடு தொடர்பு இருந்தது.ஜேவிபியின் முதலாவது போராட்டத்தின்போது அவர் கைது செய்யப்பட்டு பாலியல் ரீதியாகச் சிதைக்கப்பட்டு குறை உயிரோடு எரிக்கப்பட்டார்.அது இலங்கைத் தீவின் முதலாவது பெண் பிரதமராகிய சிறீமாவோ பண்டாரநாயக்காவின் காலம்.
அழகு ராணி மணம்பேரியின் குருரமான சாவை அடுத்த தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன சிறீமாவோவுக்கு எதிரான பிரச்சாரத்தில் பயன்படுத்தினார்.பிரச்சார மேடைகளில் மணம்பேரியின் ஆவி மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டது.அது சிறீமாவுக்கு எதிராகத் திருப்பப்பட்டது.சிறீமாவோ தோற்கடிக்கப்பட்டார்.சிறீமாவோவின் மகள் சந்திரிகாவின் காலத்தில் கிருஷாந்தி சிதைக்கப்பட்டு கொன்று புதைக்கப்பட்டார்.மணம்பேரியைப் போலவே கிருஷாந்தியும் இலங்கைத்தீவின் அரசியலில் புதிய சாத்திய வழிகளைத் திறந்து விட்டுள்ளார்.
இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் அவற்றின் அரசியல் உள்ளடக்கம் காரணமாகவே சேகரிக்கப்பட்டவை.இங்கு அரசியல் உள்ளடக்கத்துக்குத்தான் முதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கவிதைகளின் அழகியல் பெறுமதிக்கு அல்ல.இதில் பல கவிதைகள் கவிதைகளாக முழுமையுறாதவை.அந்த அடிப்படையில் பார்த்தால் இத்தொகுப்பு ஓர் அரசியல் ஆவணமாகவே முக்கியத்துவம் பெறுகிறது. அதன் அழகியல் பெறுமதியைத் தனியாக ஆராயப்பட வேண்டும்.
கிருஷாந்தி கொல்லப்பட்ட பின் முதலாவது செம்மணித் தொகுப்பு 1998 இல் வெளிவந்தது. இப்பொழுது இரண்டாவது தொகுப்பு 27 ஆண்டுகளின் பின் வெளி வருகின்றது.இங்குள்ள தொடர்ச்சி என்னவென்றால்,29 ஆண்டுகளுக்குப் பின்னரும் அமைதியுறாத கிரிசாந்தியின் ஆன்மா மீண்டும் மீண்டும் செம்மணியை ஒரு பாடு பொருளாக வைத்திருக்கிறது.செம்மணி வெளி மீண்டும் மீண்டும் தமிழ் அரசியலில் புதிய வாய்ப்புகளைத் திறந்து கொண்டேயிருக்கிறது.சிதைத்துக் கொல்லப்பட்ட கிரிசாந்தியின் அமைதியுறாத ஆன்மா அவளைக் கொன்றவர்களை விடாது துரத்திக் கொண்டேயிருக்கிறது.
வாசலில் நிற்கிறாள் கிருஷாந்தி. செம்மணி வெளியெலாமாகி; கைதடி வெளியெலாமாகி.
செம்மணிப் புதைகுழி தொடர்பாக கடைந்த 29ஆண்டுகளில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை.
ஓகஸ்ட் 05 ,2025
யாழ்பாணம்.