“உயிர்கொல்லி போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களை நீங்கள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு வழங்க வேண்டாம்.நேரடியாக எனக்கு வழங்குங்கள் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர், அன்றைய நாளில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு முன்னால் குறிப்பிட்டிருந்தார்.அந்தளவு தூரத்துக்கு இந்த உயிர்கொல்லி போதைப்பொருளுடன் தொடர்புடைய வலைப்பின்னல் இருக்கின்றது. “இப்படித் தெரிவித்திருப்பவர் யார் தெரியுமா?வட மாகாண ஆளுநர் வேதநாயகன்.யாழ்.மாவட்டச் செயலகமும் “மாற்றம்” அறக்கட்டளையும் இணைந்து, அருட்கலாநிதி டேவிட் வின்சன் பற்றிக் அவர்கள் எழுதிய ‘விடியல்’ நூலின் வெளியீட்டு விழா யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் கடந்த வியாழக்கிழமை மாலை (23.10.2025) இடம்பெற்றது.இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் முன்பு யாழ் மாவட்டச் செயலராக இருந்த காலகட்டத்தில் நடந்ததைத்தான் அவ்வாறு கூறியுள்ளார்.அவர் அவ்வாறு கூறுவதைத்தான் கஜேந்திரகுமார் அதே நாளில் நாடாளுமன்றத்தில் வைத்து வேறு வார்த்தைகளில் சொன்னார்.போதைப்பொருள் வலைப்பின்னல் என்பது படைத்தரப்போடும் போலீசோடும் தொடர்புடையது என்று.கஜேந்திரக்குமார் உட்பட தமிழ் அரசியல்வாதிகள் கடந்த 16ஆண்டுகளாகக் கூறிவரும் குற்றச்சாட்டு இது.
இலங்கைத் தீவின் கரையோரங்கள் நீட்டுக்கும் பயணம் செய்யும் எவரும் ஒரு விடயத்தைக் கண்டுபிடிக்கலாம்.வடக்கு கிழக்கில் உள்ள கடற்கரைகள் நீட்டுக்கும் தொடர்ச்சியாகப் படை முகாம்களைக் காணலாம். இவ்வாறு தமிழ்க்கடல் நீட்டுக்கும் படை முகாம்களை வைத்துக்கொண்டு போதைப்பொருள் உள்ளே வருகிறது என்று சொன்னால் அது எப்படி வருகிறது?யாரால் கொண்டு வரப்படுகிறது?யார் அதைத் தடுக்காமல் விடுகிறார்கள்? அல்லது யார் யார் அந்த வலைப் பின்னலுக்குள் வருகிறார்கள்?
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்பவர்கள், தாங்கள் அடையாளங் காட்டிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின் விடுவிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.எனவே தமிழ்ப் பகுதிகளில் போதைப்பொருள் வலைக் கட்டமைப்பானது எங்கேயோ ஒரு மையத்திலிருந்துதான் இயக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.
ராணுவ ரீதியாக வெற்றிக் கொள்ளப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தை அரசியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தோற்கடிப்பதற்கு போதைப் பொருள் தேவை.அந்த மக்களை இலட்சியவாதத்திலிருந்து திசை திருப்புவதற்கு புதைப்பொருள் தேவை. அவர்களை இலட்சியப் பற்றோடு ஒன்று திரள்வதைத் தடுத்து சுயஇன்பத்தில் மூழ்கும் உதிரிகளாக மாற்றுவதற்குப் போதை தேவை. இது அழிப்பின் இன்னொரு வடிவம்.உலகில் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லாப் பிரதேசங்களிலும் கையாளப்பட்டு வரும் ஒரு பொதுவான உத்தி.
2009 க்குப்பின் வன்னிப் பெருநிலத்தில் அரசு சார்பற்ற நிறுவனங்களால் ஒழுங்கு செய்யப்படுகின்ற சந்திப்புகள்,கருத்தரங்குகள்,பயிற்சிப் பட்டறைகளில் உரையாடும் பொழுது அங்கு பொதுவாக பொதுமக்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு இது. வன்னியில் சிறிய பெட்டிக் கடைகள் வரை போதைப்பொருள் வலைப்பின்னல் பரந்து காணப்படுவதாக அங்குள்ள செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
எனவே தமிழ்ப் பகுதிகளில் போதைப் பொருள் பாவனை என்பது தற்செயலானதோ அல்லது இயல்பாகத் தோன்றிய ஒன்றோ அல்ல.அது திட்டமிட்டு ஒரு மையத்திலிருந்து அரசியல் உள்நோக்கங்களோடு ஊக்குவிக்கப்படும் ஒரு சமூகச் சீரழிவு.
ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் அரசியல்வாதிகளும் செயல்பாட்டாளர்களும் அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர அதற்கு எதிரான சுய பாதுகாப்புச் செய்முறைகள் தொடர்பாக எத்தனை பேர் சிந்தித்திருக்கிறார்கள்? தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் தோல்வியுற்ற ஒரு சமூகமாகத் தொடர்ந்து பேண விரும்பும் தரப்புகள் அவ்வாறுதான் செய்யும். அதுதான் அவர்களுடைய ராணுவ அரசியல் நிகழ்ச்சி நிரல்.ஆனால் அதை எதிர்கொள்வதற்குத் தமிழ்த்தரப்பு என்ன செய்கிறது? எதிரிக்கு எதிராக குற்றஞ் சாட்டுவதோடு மட்டும் நின்று விடலாமா? அல்லது தன்னை ஒரு தேசமாகத் திரட்டி, தனக்கு வேண்டிய சுயபாதுகாப்புக் கவசங்களைக் கட்டியெழுப்ப வேண்டாமா?
போதையில் மூழ்கும் ஒரு பகுதி தமிழ் இளையோரை இலட்சியப்பற்றுள்ள ஒரு திரட்சியாக மாற்றவேண்டியது யாருடைய பொறுப்பு? போதைக்கு பதிலாக நம்பிக்கையை,இலட்சியத்தை,நாட்டுப்பற்றைக் கட்டியெழுப்ப வேண்டியது யாருடைய பொறுப்பு?தொழில்நுட்பத்தின் கைதியாக உள்ள ஒரு தலைமுறைதான் அதிகம் போதையில் நாட்டம்கொள்கிறது.அந்தத் தலைமுறையானது எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் இலட்சிய தாகத்தோடும் அண்ணாந்து பார்க்கின்ற ஆளுமைகள் தமிழ் சமூகத்தில் உண்டா? ஒரு தலைமுறையை அவ்வாறு வசப்படுத்தத் தவறியது யாருடைய பொறுப்பு? எனவே போதைப் பொருள் வலைப்பின்னல் எனப்படுவது தமிழ்த் தேசிய அரசியலின் இயலாமையுந்தான்.தோல்வியுந்தான்.
கடந்த 16 ஆண்டுகளிலும் கிராம மட்டங்களில்,அரச அலுவலகங்களில் அரசு சார்பற்ற நிறுவனங்களால் அல்லது அரச அலுவலகங்களால் ஒழுங்கு செய்யப்படுகின்ற கருத்தரங்குகள் சந்திப்புகள் பயிற்சிப் பட்டறைகளின்போது நான் ஒரு கேள்வியைக் கேட்பதுண்டு. “நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை மணித்தியாலம் கைபேசியில் செலவழிக்கிறீர்கள்?” பெரும்பாலானவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணித்தியாலம் தொடக்கம் 6 மணித்தியாலம்வரை கைபேசிகளில் தங்களுடைய கண்களை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். யாழ்குடா நாட்டில் உள்ள விவசாயக் கிராமம் ஒன்றில் நடந்த ஒரு சந்திப்பில் கிட்டத்தட்ட 30க்கும் குறையாத பெண்கள் வந்திருந்தார்கள்.எல்லாருமே குடும்பப் பெண்கள். அவர்களிடம் இதே கேள்வியைக் கேட்டபோது சராசரியாக அனைவருமே ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து அல்லது ஆறு மணித்தியாளங்கள் கைபேசியில் செலவழிப்பதாகக் கூறினார்கள்.
அவர்களிடம் மேலும் சில கேள்விகளைக் கேட்டேன் “உங்களுடைய வளர்ந்த பிள்ளைகளுக்குச் சாப்பாடு கொடுக்கும்போதோ அல்லது அவர்களோடு ஆற அமர இருந்து கதைக்கும் பொழுதோ அவர்களுடைய கண்களைப் பார்த்துக் கதைப்பது உண்டா?” பெரும்பாலானவர்கள் இல்லை என்று சொன்னார்கள். உங்களுடைய பிள்ளைகளின் கைபேசிச் சேமிப்பில் யார் யாருடைய இலக்கங்கள் உண்டு?யார் யாரோடு அவர்கள் ரகசியங்களைப் பரிமாறுகிறார்கள்? யார் யாரோடு வெளியே சுற்றுகிறார்கள்? என்ற விவரங்கள் உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய வளர்ந்த பிள்ளைகளின் உடல் அசைவுகளில்,கண்களில்,குரலில்,பொதுவாக நடத்தைகளில் தோன்றும் மாற்றங்களை நீங்கள் தொடர்ச்சியாக கண்காணிப்பதுண்டா?”மிகச் சிலர்தான் ஓம் என்று பதில் சொன்னார்கள்.
தொகுத்து பேசும் போது நான் அவர்களிடம் கேட்டேன் “கைபேசியோடு சுமாராக 5 மணித்தியாலங்களை செலவழிக்கின்றீர்கள். ஆனால் உங்களுடைய வளர்ந்த பிள்ளைகளோடு அவ்வாறு ஆற அமர ஒய்வாக இருந்து கதைப்பது குறைவு என்று கூறுகிறீர்கள்.உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் இடையிலான இடைவெளிக்குள்தானே வாளும் போதை பொருளும் உள் நுழைகின்றன ? உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் இடையிலான இடைவெளிக்குள்தானே பிறத்தியார் உள் நுழைகிறார்கள்?” அந்தப் பெண்கள் அமைதியாக இருந்தார்கள்.இதுதான் யதார்த்தம்.பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே,பிள்ளைகளுக்கும் ஆசிரியருக்கும் இடையே,பிள்ளைகளுக்கும் சமூகத் தலைவர்களுக்கும் இடையே, பிள்ளைகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் இடையே, பிள்ளைகளுக்கும் அந்த பிள்ளைகளை வழி நடத்த வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களுக்கும் இடையே நெருக்கம் குறையும்போது அந்த இடைவெளிக்குள் போதைப் பொருள் வருகிறது; வாள் வருகிறது.
கிராமம்,கிராமமாக இருக்கும்போது அங்கே கிரீஸ் மனிதன் வர முடியாது. வாள் வர முடியாது. அதற்கு யாழ்ப்பாணத்தில் பல உதாரணங்கள் உண்டு. நடு இரவு வரை விழித்திருந்து தெருக்களில், சந்திகளில் கூடியிருந்து கதைக்கின்ற கரம் அல்லது சீட்டுக்கட்டு விளையாடுகின்ற கிராமங்களில் வாள் வெட்டுக் குழுக்களோ அல்லது கிரீஸ் மனிதர்களோ நுழைய முடியாது. அவ்வாறு நுழைந்த கிரீஸ் மனிதனை நாவந்துறை மக்கள் துரத்திக் கொண்டு போனதை இங்கே ஞாபகப்படுத்தலாம்.அவ்வாறு நுழைந்த வாள் வெட்டுக் குழுவைச் சேர்ந்த நபர்களை கோண்டாவில் பகுதியில் மக்கள் சுற்றி வளைத்துப் பிடித்ததை இங்கு சுட்டிக் காட்டலாம். எனவே கிராமங்கள் கிராமங்களாக இருந்தால் அவற்றுக்குள் கிரீஸ் மனிதர்களோ வாள் வெட்டுக்காரரோ வர முடியாது.
அப்படித்தான் குடும்பங்கள் குடும்பங்களாக இருக்கும்போது வளர்ந்த பிள்ளைகளை வெளியாட்கள் கையாள முடியாது.பெற்றோரால் அல்லது ஆசிரியர்களால் அல்லது பொறுப்பானவர்களால் தொடர்ச்சியாகக் கவனிக்கப்படுகின்ற பிள்ளைகள் போதைப் பொருளை நுகர்வது குறைவு.நுகரத் தொடங்கினாலும் தொடக்கத்திலேயே அதைக் கண்டுபிடித்து விடலாம்.
எனவே தமிழ் மக்களைத் தோற்கடிக்கும் நோக்கத்தோடு போதைப்பொருள் உள்ளே கொண்டுவரப்படுகிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது.கைபேசி செயலிகளின் கைதிகளாக உள்ள பெற்றோரும் மூத்தவர்களும் பிள்ளைகளுக்கும் தங்களுக்கும் இடையே இருக்கக்கூடிய இடைவெளிகளை ஆகக்கூடிய பட்சம் குறைக்க வேண்டும்.உதிரிகளாக இருக்கும் இளையவர்கள்தான் போதைப்பொருள் வலை பின்னலுக்குள் அதிகம் சிக்குகிறார்கள். எனவே இளையோரை ஏதாவது ஒரு இலட்சியத்தை நோக்கி அல்லது நம்பிக்கையை நோக்கித் திரட்ட வேண்டும். அதை அரசியல்வாதிகளும் ஆசிரியர்களும் செயற்பாட்டாளர்களும் சில சமயங்களில் மதத் தலைவர்களும் செய்யலாம்.
தேசியவாத அரசியல் என்பது அதுதான்.அவரவர் அவரவர்க்குரிய சமூகக் கடமையை பொறுப்போடு செய்வது.சமூகத்தின் ஆகச்சிறிய நிறுவனமாகிய குடும்பத்தில் தொடங்கி கிராமங்களை,மாவட்டங்களை,மாகாணங்களை, தேசத்தை, தாயகத்தைக் கட்டியெழுப்புவது.இது ஒருவிதத்தில் கூட்டுச் சிகிச்சை.மருத்துவர்களால் மட்டும் கையாளப்பட முடியாத ஒரு விடயம். அரசியல்வாதிகள்,மருத்துவர்கள்,கல்விச் சமூகம்,கருத்துருவாக்கிகள்,மதத் தலைவர்கள்,படைப்பாளிகள்,ஊடகங்கள் என்று சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புக்களும் கூட்டாகச் சேர்ந்து உழைக்க வேண்டும்.வீடு வீடாக இருந்தால்,ஊர் ஊராக இருந்தால் அங்கே சுய கவசங்கள் இருக்கும். தமிழ் மக்களை யாரும் தோற்கடித்துவிட முடியாது.பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே, ஆசிரியருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே,மதத் தலைவர்களுக்கும் அந்த மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கும் இடையே இடைவெளிகள் வளரும்போது அந்த இடைவெளிக்குள் புறத்தியார் வருவார்கள்.
ஆசிரியர்களும் மதத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் கருத்துருவாக்கிகளும் முன்னுதாரணங்களாக வாழும்போது இளையோர் இலட்சியத்தின்பால் ஈர்க்கப்படுவார்கள்.அண்மையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஒரு கருத்துத் தெரிவித்திருந்தார்,போதைப்பொருள் குற்றவாளிகளைத் தூக்கில் போடவேண்டும் என்று.முகநூலில் அந்தச் செய்திக்கு கீழே ஒருவர் எழுதியிருந்தார்…”அதன் பின் எங்களுக்கு நாடாளுமன்றத்தில் 12 பேர்கள்தான் மிஞ்சுவார்கள்” என்று.அந்தப் பன்னிரண்டு பேர் ஆரெண்டு எழுதியவருத்தான் தெரியும். ஆனால் தலைவர்களும் வழிநடத்தும் பொறுப்பில் இருப்பவர்களும் முன்னுதாரணங்களாக மாறும்போது இளையோர் உதிரிகளாக போதைப்பொருள் வலைக்குள் ஈசல்களைப்போல சிக்க மாட்டார்கள். இலட்சியவாதிகளாக கழுகுகளைப்போல மேலெழுவார்கள்.






