கிளிநொச்சி கந்தசாமி கோவில் பூசகர் மயில் வாகனத்தில் ஏறி அட்டகாசமாக வந்து சூரியனை வதம் செய்கிறார்.அது யுடியூப்பர்களுக்கு டொலர்களைக் குவிக்கும் கருப்பொருளாக மாறியது. அந்த ஐயர் ஏற்கனவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர் என்று ஓர் அரசியல் செயற்பாட்டாளர் முகநூலில் எழுதுகின்றார்.அந்தப் பதிவிற்கு கீழ் மற்றொருவர் கேட்டிருந்தார், அப்படியென்றால் சூரனுக்குப் பதிலாக ஒரு சிப்பாயை நிறுத்திவிடலாம் என்று.
கிளிநொச்சியில் பூசகர் முருகனாக மாறினார்.வல்வெட்டித் துறையில் சிவன் கோவிலில் சக்கரவாகப் பறவையை தத்ரூபமாக உருவாக்கி,அதைப் பறக்க விட்டு பூசகர் வேல் கொண்டு அதனை வீழ்த்துகிறார்.இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட,காட்சி மயப்படுத்தப்பட்ட சமய நிகழ்வுகள்.அவை யாவும் யுடியூப்பர்களுக்குக் டொலரைக் கொட்டும் கருப்பொருட்கள்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் சூரன் கனரக வாகனம் ஒன்றில் வேகமாக வலம் வருகிறார்.அந்த வீடியோவின் கீழ் முகநூலில் ஒருவர் எழுதினார் “முருகனை நான் கவனித்துக் கொள்வேன்.ஆனால் இந்த வாகன டிரைவரிடம் இருந்து என்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது” என்று சூரன் பயப்படுகிறார் என்று.மற்றோரு பதிவில் “டொனால்ட் ட்ரம் வந்தாலும் நிறுத்தப்படக்கூடிய போராக இது தெரியவில்லை” என்று இருந்தது.
இப்படியாக இம்முறை சூரன் போரானது அதிகம் காட்சி மயப்படுத்தப்பட்டதாகவும் யுடியூப்பர்களுக்கு உழைத்துக் கொடுக்கும் கருப்பொருளாகவும் மாறியிருக்கிறது. தாயகத்திலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் முருக வழிபாடு பல்கிப்பெருகிப் பரவி வருகிறது என்று ஒரு புறம் சைவ சமயிகள் சந்தோஷப்படுகிறார்கள்.இன்னொருபுறம் ஐயரை மயில் வாகனத்தில் ஏற்றிச் சமயத்தைக் கெடுக்கிறார்கள் என்று ஒரு பகுதியினர் புறுபுறுகிறார்கள்.
ஆனால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.தமிழ் மக்களிடம் காசு இருக்கிறது.குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழர் தரும் காசு இருக்கிறது கற்பனை இருக்கிறது.சூரன் போரை எப்படி கவர்ச்சியான ஒரு மோதலாகக் கட்டமைப்பது என்று சிந்தித்து அவரவர் தத்தமது கொள்ளளவுக்கு ஏற்ப சூரன்போரை நிகழ்த்திக் காட்டினார்கள்.இதில் நிஜப் போரில் வெல்லமுடியாது போன சூரர்களை வெல்ல வேண்டும் என்ற கூட்டு ஆழ்மன உளவியலும் ஒரு காரணமா?
இது சூரன் போரை நிகழ்த்திக் காட்டுவதில் மட்டும் நிகழவில்லை.கல்யாண வீடுகள்,சாமத்தியச் சடங்குகள் போன்றவற்றில் தொடங்கி தாயகத்தில் யார் பெரிய கோவிலைக் கட்டுவது? யார் பெரிய வீட்டைக் கட்டுவது? யார் பழைய மாணவர் சங்கத்தில் செல்வாக்குச் செலுத்துவது?யார் கோவில் நிர்வாகத்தில் செல்வாக்குச் செலுத்துவது? போன்ற எல்லா விடையங்களிலும் விரவிக் காணப்படுகிறது.
குறிப்பாக தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் கல்யாண வீடுகள், சாமத்தியச் சடங்குகள் அவ்வாறு சினிமாத் தனமாக வடிவமைக்கப்படுகின்றன.யானை,ஹெலிகாப்டர்,பல்லக்கு போன்றவற்றில் விழா நாயகர் அல்லது நாயகி வந்து இறங்குகிறார். சினிமாப் படங்களில் பாட்டுக் காட்சிகளில் வருவதுபோல புகைச் சூழலுக்குள் ஒரு மாயலோகம் சிருஷ்டிக்கப்படுகிறது.சில கல்யாணக் காட்சிகள் சினிமா ஸ்டுடியோக்களை ஞாபகப்படுத்துகின்றன.
காசுள்ளவர்கள் தமது கற்பனை வளத்துக்கு ஏற்ப கொண்டாட்டங்களை ஒழுங்குபடுத்துகிறார்கள். தமிழ் மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். இன அழிப்புக்கு உள்ளான மக்கள் ஆயுத மோதல்கள் இல்லாத காலத்தில் ஆகக்கூடிய மட்டும் சந்தோசமாக இருக்க வேண்டும். அது ஒரு கூட்டுக் குணமாக்கல்.
காசு உள்ளவர்கள் அவரவர் கொள்ளளவுக்கு ஏற்ப சந்தோஷத்தைக் கொண்டாடலாம்;விழாக்களைக் கொண்டாடலாம்;சூரர்களை உருவாக்கலாம்; முருகப் பெருமான்களையும் உருவாக்கலாம்;யுடியூப்பர்களுக்கு கருப் பொருட்களைக் கொடுக்கலாம்.தாயகத்தில் யானையைக் கொண்டுவந்து கல்யாண வீட்டை நடத்தலாம்;திருவிழாவைச் சிறப்பிக்கலாம்.புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஹெலிகாப்டரைக் கொண்டுவந்து பல்லக்கைக் கொண்டு வந்து படக்காட்சி போல சடங்கை வடிவமைக்கலாம்.
முகநூலில் ஒரு சூரன் போரை பார்த்தேன்.அது ஒரு கார்ட்போர்ட் சூரன். எங்கேயோ ஒரு ஏழைக் கோயில்.ஆனால் அங்கேயும் அந்த ஊரிலிருந்து யாராவது புலம்பெயர்ந்து போனால் நிச்சயமாக அடுத்தடுத்த ஆண்டு சூரனுக்கு வாழ்வு கிடைக்கும்.
புலம்பெயர்ந்துபோன தமிழர்களின் காசு தாயகத்தில் தாராளமாக கோயில்களை நோக்கிப் பாய்கிறது.புங்குடுதீவில் 90கோடிக்கு மேல் செலவழித்து கண்ணகி அம்மன் கோவிலைப் புனரமைத்தது போல,தமிழ்ப் பகுதிகளில் சிறிதும் பெரிதுமாக கோவில்கள் மினுங்கிக் கொண்டு மேலெழுகின்றன.பெருமளவுக்கு புலம்பெயர் தமிழர்களின் காசு தான்.புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுடைய செல்வாக்கை நிலைநிறுத்தும் இடங்களில் அதுவும் ஒன்று.ஊரில் முழிப்பான இடத்தில் காணியை வாங்கி,ஒரு மாளிகையைக் கட்டிவிட்டு,அதற்கு கண்காணிப்புக் கமராவைப் பொருத்தி விட்டு அல்லது ஒரு செக்யூரிட்டி நிறுவனத்திடம் வீட்டைக் கொடுத்துவிட்டு அங்கே ஆறு மாதம் இங்கே ஆறு மாதம் அல்லது திருவிழா காலங்களில் வந்து போவது.
இன்னொரு பகுதியினர் ஊரில் கோவில்களுக்குக் காசை அள்ளி வழங்கி கோவில் தர்மகத்தா சபைக்குள் தமது பிடியை இறுக்கமாக வைத்துக் கொள்கிறார்கள்.அல்லது தாம் படித்த பள்ளிக்கூடத்துக்கு பழைய மாணவர் சங்கத்தின் மூலம் காசை அள்ளி வீசுகிறார்கள்.ஒரு புலம்பெயர் தமிழர் தனது பிறந்த நாளை பள்ளிக்கூடத்துக்குள் ஐஸ்கிரீம் வானைக் கொண்டு வந்து கொண்டாட விரும்பினார்.அதிபர் விடவில்லை.எனவே பள்ளிக்கூட வாசலில் ஐஸ்கிரீம் வானை நிறுத்திக் கொண்டாடினார்.
கொண்டாட வேண்டும். கொண்டாட்டம் வேண்டும். தவறில்லை. காசுள்ளவர்கள் செலவழிக்கட்டும். ஆனால் அந்தக் காசில் சிறு தொகையை வேறு விதமாகவும் செலவழிக்கலாம்.
ஊரில் குளங்களைத் தூர் வாருவதற்கும் சனசமுக நிலையங்களைக் கணினி மையப்படுத்துவதற்கும் விளையாட்டுக் கழகங்களை தொழில்சார் திறனோடு மேம்படுத்துவதற்கும் அந்தக் காசைச் செலவழிக்கலாம்.ஆளில்லா ஊர்களில் கோவில்களைக் கட்டுவதுபோல,அந்த ஊர்களை நோக்கி வெளியூர் காரர்களையும் ஊர்க்காரர்களையும் எப்படிக் கொண்டு வருவது என்று சிந்தித்துத் திட்டமிட்டுச் செலவழித்து ஊரை சனக்கவர்ச்சி உள்ளதாக மாற்றலாம்.
உதாரணமாக கடந்த வாரக் கட்டுரைகளில் எழுதப்பட்ட விடயங்களையே இங்கு நினைவூட்டலாம். முதியோர் தனித்து விடப்படுவது என்பது புலப்பெயர்ச்சியின் நேரடி விளைவுகளில் ஒன்று.எனவே முதியவர்களை பராமரிப்பதற்கான கட்டமைப்புகள்,அதற்குரிய தொழிற்சார் கற்கை நெறிகள் போன்றவற்றை உருவாக்கும் விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாராளமாகத் தானம் செய்யலாம்.
கடந்தவாரக் கட்டுரையில் கூறப்பட்டதுபோல,போதைப்பொருள் பாவனையாளர்களுக்குப் புணர்வாழ்வு வழங்குவதற்கு பொருத்தமான நிறுவனங்கள் இல்லை.”மாற்றம்” அறக்கட்டளை கத்தோலிக்கத் திருச்சபையால் நடத்தப்படுகிறது.ஒரு மதகுருவின் வரையறையற்ற அர்ப்பணிப்பினால் உருவாக்கப்பட்ட நிறுவனம்.அங்கேயும் தொழில்சார் வல்லுநர்கள் குறைவு. ஒரு யுடியூப்பர் அந்த மத குருவைப் பேட்டி கண்டபோது அவர் சொன்னார்,”இரவில் நடுச்சாமத்தில் செல்களில் பூட்டி வைக்கப்பட்டிருப்பவர்கள் எழுந்து நின்று பசிக்கிறது பாதர் என்று கத்துவார்கள். நான் பிஸ்கட்டும் தேநீரும் கொடுப்பேன்” என்று.இதை நான் கிளிநொச்சியில் நடந்த அது சம்பந்தப்பட்ட ஒரு கருத்தரங்கின்போது பேசினேன்.அப்பொழுது அங்கிருந்த மருத்துவர் ஒருவர் சொன்னார்,போதைப் பொருள் பாவனைக்கு உள்ளாகியவருக்கு இனிப்புப் பொருட்களை வழங்கினால் அது போதைப் பொருளின் தாக்கத்தை அதிகப்படுத்தும் என்று.
இப்படித் துறைசார் நிபுணத்துவத்தோடு கட்டியெழுப்பப்பட வேண்டிய பல கட்டமைப்புகள் தமிழ்ப்பகுதியில் இல்லை.அவற்றைக் கட்டியெழுப்பத் தேவையான துறைசார் நிபுணத்துவமும் போதிய செல்வமும் இப்பொழுது தமிழர்களிடம் உண்டு. தாயகத்தைக் கட்டியெழுப்புவது என்பது தமிழ் மக்களை ஒரு தேசமாகத்திரட்டும் அம்சங்களைக் கட்டியெழுப்புவதுதான்.எனவே காசுள்ளவர்கள்,மனமுள்ளவர்கள் அவ்வாறான கட்டமைப்புகளை உருவாக்கலாம்.
கோவில்களுக்குக் கொடுப்பதும் சுரன் போரைத் திரைப்படம் போல கட்டமைப்பதும் அவரவர் விருப்பம்.ஆனால் அதற்குச் சிந்தும் காசில் ஒரு சிறு பகுதியை வைத்துத் தேசத்தைக் கட்டியெழுப்பும் கட்டுமானங்களுக்கும் செலவழிக்கலாம்.
போரின் விளைவாக ஒரு லட்சத்துக்கும் குறையாத விதவைகள் உண்டு. கைவிடப்பட்ட குழந்தைகள் உண்டு. போதைப்பொருள் பாவனையால் சிதைந்த குடும்பங்களிலிருந்து கைவிடப்பட்ட குழந்தைகள் உண்டு. இவர்களையெல்லாம் பராமரிப்பதற்கு நிறுவனங்கள் தேவை.
ஏன் அதிகம் போவான்?கட்டாக்காலி நாய்களைப் பராமரிப்பதற்குக்கூட தமிழ்ப் பகுதிகளில் ஒரு நிறுவனம் இல்லை.ஆறு.திருமுருகனின் சிவபூமி அறக்கட்டளை அப்படி ஒரு நிலையத்தைத் தென்மாராட்சியில் உருவாக்கியது. ஆனால் அதற்குக் கிடைத்த ஆதரவை விடவும் விமர்சனங்களே அதிகம் என்று ஆறு திருமுருகன் கவலைப்பட்டார்.பின்னர் அதை மூடிவிட்டார்.இப்பொழுது தெருக்களில் விபத்துகளுக்குக் கட்டக்காலிகள் ஒரு முக்கிய காரணம்.தவிர தெருவோரங்களிலும் வீடுகளின் வாசல்களிலும் அவை கழிந்து விட்டுப் போகின்றன.காலையில் குளித்து,முழுகி வெளிக்கிட்டால் அருவருக்கும் தெருக்கள்.எனவே கட்டாகாலிகளைப் பராமரிப்பதற்கான நிலையங்கள் அவசியம்.
இப்படி ஒரு பெரிய பட்டியலையே இங்கு முன்வைக்கலாம். எனவே கிராமங்கள் தோறும் வீதிக்கு ஒரு கோயில், சாதிக்கு ஒரு கோயில், குடும்பத்துக்கு ஒரு கோயில் என்று கட்டிக் கொண்டிருப்பதை விட்டு,சூரன்களைச் சோடிப்பதை விட்டு, குளங்களைத் தூர்வாரலாம்;மரம் நடலாம்;சிறு காடுகளை உருவாக்கலாம்; வெள்ளம் வடியும் வாய்க்கால்களைப் பராமரிக்கலாம். வசதியாக உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் தங்கள் கிராமங்களையே தத்தெடுக்கலாம்.





