ஓய்வு பெற்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு லண்டனில் கிடைத்த வரவேற்பும் அங்கு அவர் ஆற்றிய உரைகளும் சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுகின்றன.மாகாண சபைத் தேர்தல்கள் நடக்கலாம் என்ற சந்தேகங் கலந்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் ஒரு சூழலில், இளஞ்செழியனைப் போன்ற ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று விரும்பிய பலரும் இப்பொழுது உற்சாகமாகக் காணப்படுகிறார்கள்.
இளஞ்செழியனுக்கு அப்படி ஒரு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்று தெரியாது.ஆனால் அவருடைய சகோதரர்-அவர் ஏற்கனவே தமிழரசுக் கட்சியின் தீவுப்பகுதிக் கிளையில் பொறுப்பில் இருப்பவர்-தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு ஊடாக தமையனை முதலமைச்சராக்கி விட வேண்டும் என்ற கனவோடு செயல்படுவது யாழ்ப்பாணத்தில் எல்லாருக்கும் தெரிந்த விடயம்.
ஆனால் தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் இளஞ்செழியனுக்கு சாதகமாகச் சிந்திக்கும் வாய்ப்புகள் குறைவு.ஏனென்றால் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் சுமந்திரன் செழியன் உள்ளே வருவதை விரும்பவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதில் ஒரு துறைசார் போட்டி இருக்க முடியும். விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்ட பொழுது மன்னாரைச் சேர்ந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் அப்பொழுது கட்சிக்காரர்களிடம் சொன்னார் “அவரைக் கொண்டு வராதீர்கள்.அவர் ஒரு நீதிபதி.நீங்கள் எல்லாம் வழக்கறிஞர்கள்.அவர் உங்களுடைய சொல்லைக் கேட்க மாட்டார்” என்று. இது இளஞ்செழியனுக்கும் பொருந்துமா?
இளஞ்செழியன் தன்னை உணர்ச்சி வசப்படும் ஒருவாராகவே எப்பொழுதும் வெளிக்காட்டி வந்திருக்கிறார்.அவருடைய மெய்க்காவலர் நல்லூர் சந்தியில் சுட்டுக் கொல்லப்பட்ட போதும்,மேடைகளில் அவர் பேசும்போதும் அவர் உணர்ச்சிவசப்படுகின்ற,தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாத ஒருவராகத்தான் வெளித்தெரிய வந்திருக்கிறார்.இப்படி உணர்ச்சிவசப்படும் ஒருவரை ஒரு பொறுப்பான பதவியில் நிறுத்துவது சரியா என்ற கேள்வி தமிழரசுக் கட்சிக்குள் மட்டுமல்ல அக்கட்சிக்கு வெளியேயும் உண்டு.நீதியானவர்கள் தலைவர்களாக வருவது நல்லது.ஆனால்,எல்லா நீதிபதிகளும் தலைவர்கள் அல்ல.
தமிழரசுக் கட்சி அவரை உள்ளே கொண்டு வர விரும்பவில்லை என்றால் சில சமயம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கி வைத்திருக்கும் அணி அதை விரும்புமா? கஜேந்திரகுமார் இதுதொடர்பில் இளஞ்செழியனோடு கதைத்தாகத் தெரிகிறது.இளஞ்செழியன் விரும்பவில்லை என்றும் கூறப்படுகின்றது.
அதேசமயம்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் தேசியப் பேரவைக்குள் தவறாசா அணி உண்டு.ஜனாதிபதித் தேர்தலில்,பொது வேட்பாளரை நிறுத்தும்போது தவராசா அணியானது தீவுப்பகுதி ஆளை-தவராசாவைக்- கொண்டு வரவேண்டும் என்று கேட்டது.இளஞ்செழியன் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்.அவரை முதலமைச்சராகக் கொண்டுவர வேண்டும் என்ற விருப்பமும் உழைப்பும் தவராசா அணியிடந்தான் அதிகம் உண்டு.இதில் வெளிப்படையான பிரதேசப் பற்று உண்டு.ஆனால் அந்த அணி தமிழரசுக் கட்சியிலிருந்து விலகியபோது இளஞ்செழியனின் சகோதரர் அந்த அணியுடன் இணைந்து வெளியே வரவில்லை என்பதை இங்கு உற்றுக்கவனிக்க வேண்டும்.
லண்டனில் உரை நிகழ்த்தும்போது, இளஞ்செழியன் குமார் பொன்னம்பலத்தைப் போற்றிப் பேசியிருக்கிறார்.அதில் உண்மை உண்டு.அவர் நீதிபதியாக வருவதற்கு முன்பு ரவிராஜும் அவரும் அரச படைகளின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான வழக்குகளில் ஈடுபட்டவர்கள் என்பது உண்மை.அனைத்துலக மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்களோடும் குமார் பொன்னம்பலம் போன்ற செயற்பாட்டாளர்களோடும் இணைந்து காசு வாங்காமல் வழக்காடியவர்களில் இளஞ்செழியனும் ஒருவர்.லண்டனில் குமார் பொன்னம்பலத்தை உயர்த்திப் பேசியதன்மூலம் செழியன் ஏதாவது அரசியல் சமிக்ஞயை வெளிப்படுத்துகிறாரா?
கட்சிகளின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் இளஞ்செழியன் தமிழரசுக் கட்சிக் கூடாக வருகிற வாய்ப்புகள் குறைவு.முன்னணியும் வெளிப்படையான சமிக்ஞய்களைக் காட்டவில்லை.எனினும்,இந்த விடயத்தில் கட்சி நோக்கு நிலைகளுக்குமப்பால் பொதுவான தமிழ்த்தேசிய நோக்குநிலையில் இருந்து சில விடயங்களை ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது.
கட்சிகள் முதலமைச்சர் பதவிக்கு ஏன் கட்சிக்கு வெளியே போய் ஆட்களைத் தேட வேண்டி வருகிறது? ஏனென்றால் கட்சிக்குள் பொருத்தமான ஆட்கள் இல்லை என்று கட்சிகள் நம்புகின்றனவா? கட்சிக்குள் ஏன் பொருத்தமான ஆட்கள் இல்லாமல் போனார்கள்? ஏனென்றால் கட்சிகள்,கட்சிகளுக்கு இருக்க வேண்டிய கட்டுக்கோப்பான கட்டமைப்புகளோடு இல்லை என்பதால்தான். குறிப்பாக உள்ளதில் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சி இப்பொழுதும் நீதிமன்றத்தில் தான் நிற்கின்றது. பதில் தலைவரும் பதில் செயலாளரும்.
கட்சிக்கு வெளியிலிருந்து ஆளுமைகளை பரஸூட்டில் இறக்குவது என்பது சம்பந்தரின் காலத்திலிருந்து தொடங்கியது.சம்பந்தர் கடந்த வடமாகண சபைத் தேர்தலின்போது கட்சிக்குள் இருந்து ஒருவரைக் கொண்டுவர முடியவில்லை. விக்னேஸ்வரனைக் கொண்டு வந்தபோது சம்பந்தர் சொன்னார் “அவர் ஒரு ஹை ப்ரொபைல்” என்று.மாகாண முதலமைச்சர் பதவி என்பது ஒரு சட்ட மன்றத்துக்குப் பொறுப்பான பதவி.அதில் இருப்பவர் தூதரகங்களையும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். அந்த மாகாணத்தின் அரசியல் அதிகார முகம் அவர்.அதற்கு விக்னேஸ்வரனைப் போன்ற ஒரு ஹை ப்ரொபைலைத்தான் கொண்டுவர வேண்டும் என்று சம்பந்தர் நியாயம் சொன்னார்.
ஆனால் விக்னேஸ்வரன் சம்பந்தர் எதிர்பார்த்ததுபோல அவருக்கு விசுவாசமான ஒரு ப்ரொபைல் ஆக இருக்கவில்லை.மாறாக அவர் சம்பந்தருக்கு எதிராகத் திரும்பினார்.அதனால் மாகாண சபைக்குள் அவரைச் சுமந்திரன் சுற்றி வளைத்தார்.எனினும் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர சுமந்திரன் அணி முயற்சித்தபோது,சம்பந்தர் சித்தார்த்தனை அழைத்து பின்வரும் பொருள்படச் சொன்னார் “அங்கு போய் சமரசம் செய்யுங்கள். தமிழரசுக் கட்சியும் தோக்கக் கூடாது;விக்னேஸ்வரனும் தோக்கக் கூடாது” என்று.
எனினும் விக்னேஸ்வரன் ஒரு கட்டத்தில் கட்சியை விட்டு நீங்கி புதிய கட்சியைத் தொடக்கி தன்னால் ஒர் ஆசனத்தையாவது வெல்ல முடியும் என்று நிரூபித்தார்.ஆனால் தமிழ் அரசியலில் தமிழரசுக் கட்சிக்கு நிகரான ஒரு மாற்று ஏற்பாடாக அவரால் மேலுயர முடியவில்லை.சம்பந்தரின் “ஹை ப்ரொபைல்” எதிர்பார்த்த உச்சியை அடையவில்லை.சம்பந்தரும் ஒரு தோல்வியுற்ற தலைவராக,மக்கள் மத்தியில் “லோ புரோபைலாக” இறந்து போனார்.
இந்த விடயத்தில் சம்பந்தரின் ஆவி பேசினால், ஒரு விளக்கத்தைக் கூறக்கூடும். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான ஒரு காலகட்டத்தில், ஆயுதப் போராட்டமானது மிதவாதக் கட்சிகளை அரங்கில் இருந்து அகற்றியிருந்த ஒரு பின்னணிக்குள்,மிதவாதக்கட்சி ஒன்றை மீளக்கட்டி எழுப்புவதில் இருக்கக்கூடிய சவால்களின் அடிப்படையில் வெளியில் இருந்து பிரமுகர்களை உள்ளே கொண்டுவர வேண்டிய ஒரு தேவை தனக்கு இருந்தது என்று சம்பந்தர் தனது செயலை நியாயப்படுத்தியிருக்கக்கூடும்.ஆனால் சம்பந்தருக்குப் பின்னரும் தமிழ் மக்கள் கட்சிக்கு வெளியில் தலைவர்களைத் தேடும் ஒரு போக்கில் மாற்றம் ஏற்படவில்லையா? கடந்த 10 ஆண்டுகளுக்குள்ளே தமிழ் அரசியலில் திருப்பகரமான மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை என்பதனை அது காட்டுகின்றதா?
தமிழரசுக் கட்சி அவ்வாறு தேடவில்லை என்று இப்பொழுது அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் சொல்லலாம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அவ்வாறு சொல்லலாம். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறான ஒர் எதிர்பார்ப்பு உண்டு என்ற உண்மையை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் ஏன் கட்சிகளுக்கு வெளியிலிருந்து பிரபல்யங்களை பரசூட்டில் இறக்க ஆசைப்படுகிறார்கள்?கட்சிகளுக்குள் இருக்கும் ஆளுமைகளை அவர்கள் தகுதியானவர்களாகக் கருதவில்லையா?கட்சிக்குள் கடந்த பல தசாப்தங்களாக மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்தவர்களைத் தலைவர்கள் ஆக்கிப்பார்க்க வேண்டும் என்று ஏன் தமிழ் மக்கள் விரும்பவில்லை?அரசியலில் மிக ஆபத்தான காலகட்டத்தில், அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளை வகித்து,அரசாங்கத்தின் பாதுகாப்பில் வாழ்ந்து,ஓய்வுபெற்ற பின் தமிழ் மக்களின் வாக்குகளால் தலைவர்களாக தெரிவு செய்யப்படுவது என்பது சரியானதா?அப்படியென்றால் தமிழ் மக்களுக்காக தங்களை இழந்து,தங்களை ஒறுத்து,அர்ப்பணித்து,தியாகம் செய்து கட்சிக்குள்ளேயே இருந்து தேய்ந்து போனவர்கள் அனைவரும் பிழைக்கத் தெரியாதவர்களா? அல்லது அதிர்ஷ்டம் இல்லாதவர்களா?
பாதுகாப்பான இறந்த காலத்தை பெற்றவர்கள்தான் நிகழ்காலத்தில் தமிழ் மக்களின் பேச்சாளர்களாகவும் தலைவர்களாகவும் வரமுடியுமா? அவர்களுக்குப் பாதுகாப்பான இறந்த காலம் எப்படிக் கிடைத்தது? அவர்கள் தமது மக்களுக்காக தம்மை இழக்க,அர்ப்பணிக்கத் தயாராக இல்லாதபடியால் தானே? அப்படியென்றால்,இப்பொழுது தமிழ்த்தேசிய அரசியலில் தலைமை தாங்கத் தேவையான தகுதி எது?
ஆயுதப் போராட்டம் தொடங்கியபோது படித்த நடுத்தர வர்க்கத் தமிழர்கள் அதை எடுத்த எடுப்பில் ஏற்றுக்கொள்ளவில்லை. “சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது” என்று ஒருவித சந்தேகத்தோடுதான் அதை அணுகினார்கள். பட்டப் படிப்பு குறைந்த இயக்கத் தலைவர்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.அல்லது அங்கீகரிக்கவில்லை.ஆனால் ஆயுதப் போராட்டம் தனது தியாகங்களின் மூலமும் வீரச்செயல்களின் மூலமும் வெற்றி நடை போடத் தொடங்கியபோது,படித்த,நடுத்தர வர்க்கம் அதற்குப் பணிந்தது.அதாவது தமிழ் மக்கள் பலங்கண்டு பின் சென்றார்கள்.
எனவே படித்த தமிழ் நடுத்தர வர்க்கம் எப்பொழுதும் எதோ ஒருவிதத்தில் பலமானவர்களை,அதாவது,படித்தவர்களை,பெரிய பதவிகளில் இருப்பவர்களை,ஆங்கிலம் பேசுகின்றவர்களை,பிரபல்யமானவர்களைத்தான் எதிர்பார்ப்போடு பார்க்கும்.தமிழரசியலில் இடையில் வந்த ஆயுதப் போராட்டமானது தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரான கடந்த 16 ஆண்டுகால மிதவாத அரசியல் எனப்படுவது,அதன் பழைய தடத்துக்கே திரும்பிச் சென்று கொண்டிருக்கிறதா?
இளஞ்செழியனை தமிழ்க் கட்சிகள் ஒரு முதன்மை வேட்பாளராக ஏற்கலாம் ஏற்காமல் விடலாம்.ஆனால் ஒரு பகுதி தமிழ் மக்கள் மத்தியில் அப்படி ஒர் எதிர்பார்ப்பு காணப்படுகிறது என்று சொன்னால் அதற்கும் தமிழ்க் கட்சிகள்தான் பொறுப்பு.கீழிருந்து மேல் நோக்கி,உள்ளூர் தலைவர்களை,மாவட்ட மட்டத் தலைவர்களை,மாகாண மட்டத் தலைவர்களை,தேசிய மட்டத் தலைவர்களை,மிகக் குறிப்பாக ஜனவசியம் மிக்க தலைவர்களைக் கட்டியெழுப்பத் தமிழ்க் கட்சிகளால் முடியவில்லையா?
கடந்த 16 ஆண்டுகால தமிழ்த் தேசிய அரசியலில், கட்சிகளுக்குள் ஜனக்கவர்ச்சி மிக்க,ஜனவசியம் மிக்க தலைவர்களைப் போதியளவு உருவாக்க முடியவில்லை என்பது ஓர் அடிப்படைத் தோல்வி. இந்த வெற்றிடத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு 7 ஆசனங்கள் கிடைத்தன.அர்ஜுனாவுக்கு ஓர் ஆசனம் கிடைத்தது.
அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை வைக்குமா இல்லையா என்பது நிச்சயமாகத் தெரியாது.ஆனால் அப்படி ஒரு தேர்தல் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் மீண்டும் ஓர் ஓய்வுபெற்ற நீதிபதியைச்சுற்றி உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கட்சிகளுக்கு வெளியே மீட்பர்களைத் தேடுகிறார்களா?அது தமிழ்த்தேசிய அரசியலின் போதாமையை, இயலாமையைக் காட்டும் ஆகப்பிந்திய குறிகாட்டியா ?





