சில ஆண்டுகளுக்கு முன் யாழ்பாணத்தில் உள்ள சர்வோதயம் நிலையத்தில் பெண்களுக்கான ஒரு சந்திப்பு இடம்பெற்றது. மொத்தமாக 50க்கும் குறையாத பெண்கள் வந்திருந்தார்கள். அதில் அநேகமானவர்கள் நடுத்தர வயதைக் கடந்த குடும்பப் பெண்கள். அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன். “நீங்கள் எத்தனை சகோதரர்களோடு பிறந்தீர்கள்?”என்று.அவர்களில் பெரும்பாலானவர்கள் மூன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்களோடு பிறந்திருக்கிறார்கள். நான்கு பெண்கள் மட்டும் இரண்டு அல்லது ஒரு சகோதரம் அல்லது தனிப் பிள்ளை.அவர்களிடம் மீண்டும் கேட்டேன். “உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?” அவர்களில் மூன்று பேர்களுக்கு மட்டும்தான் மூன்றுக்கும் அதிகமான பிள்ளைகள்.ஏனைய அனைவருக்குமே இரண்டு அல்லது ஒரு பிள்ளைதான்.
இது நடந்தது சில ஆண்டுகளுக்கு முன்பு.இப்பொழுது சனத்தொகைக் கணக்கெடுப்பு வந்திருக்கிறது.அதில் தமிழ்மக்களின் குடித்தொகை குறைந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கணக்கெடுப்பு நடக்க முன்னரே ஜனத்தொகை குறைகிறது என்பது பொதுவாக உணரப்பட்ட ஒரு விடயம்.நகரப்புறங்களுக்கு வெளியே உட் கிராமங்களில் ஆளற்ற வீடுகளை அதிகமாகக் காணமுடியும்.இவை இரண்டு விதமானவை.ஒன்று உரிமைகோர யாருமில்லாத அல்லது உரிமைகோர வேண்டியவர்கள் புலம்பெயர்ந்துவிட்ட பாழடைந்த வீடுகள்.மற்றது புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்துக்குத் திரும்பிவந்து புதிதாகக் கட்டிய அல்லது புனரமைத்த பிரம்மாண்டமான வீடுகள்.
நான் இருக்கும் வீதியில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் இடைவெளிக்குள் நாலுக்கும் குறையாத ஆளில்லாத வீடுகள் உண்டு.அந்த வீடுகளில் வசித்தவர்கள் அல்லது வசிக்க வேண்டியவர்கள் எங்கே? தமிழ் மக்கள் மத்தியில் குடித்தொகை குறையக்குறைய ஆளில்லா வீடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது.அதேசமயம் வீடில்லாத அல்லது சொந்தமாகக் காணியில்லாத ஒரு தொகுதி மக்களும் உண்டு.
தமிழ்ச் சமூகத்தில் சனத்தொகை குறைவதற்கு பின்வரும் காரணங்கள் உண்டு.
முதலாவதும் முக்கியமானதுமான காரணம் போர்.போர் லட்சக்கணக்கான மக்களைத் தின்றுவிட்டது அதேசமயம் லட்சக்கணக்கான மக்களைத் தாயகத்தில் இருந்து வேரைப் பிடுங்கி எறிந்து விட்டது.
போர் காரணமாக ஏற்பட்ட தொடர்ச்சியான இடப்பெயர்களும் புலப்பெயர்ச்சியும் மகப்பேற்று விகிதத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதித்திருக்கின்றன. இரண்டாவது காரணம் பெண்கள் வயது பிந்தித் திருமணம் செய்வது.
இதில் போரின் விளைவாக நேரடியாகவே தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டார்கள் அல்லது சந்ததி விருத்தி செய்ய முடியாதவர்களாகச் சிதைக்கப்பட்டார்கள். அதனால் சனத்தொகை குறைந்தது. இன்றுவரையிலும் போரில் கொல்லப்பட்டவர்களின் மொத்தத் தொகை என்ன என்பது தெரியாத ஒரு மக்கள் கூட்டம் நாங்கள்.டிஜிட்டல் யுகம் என்று கூறுகிறோம்.ஆனால் பிரான்சிஸ் ஹரிசன் கூறுவதுபோல,இப்பொழுதும் இறந்தவர்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம். 16 ஆண்டுகள் ஆன பின்னும்.
போர் நேரடியாகவே உயிர்களைத் தின்றது.அதேசமயம் போர்ச் சூழலுக்குள் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் பிள்ளைப்பேறு விகிதத்தைப் பாதித்தன. தன்னுடையதல்லாத வீட்டில், ஒட்டு வீட்டில், சிறிய வீட்டில், சந்தோஷமாக வாழ முடியாத ஒரு தொகுதி குடும்பங்கள் பிள்ளைப் பெறுவதை தவிர்த்தன.தொடர்ச்சியான இடப்பெயர்வுகளை எதிர்நோக்கிய குடும்பங்கள் அதிகம் பிள்ளைகள் பெற்றுக் கொள்வதைத் தவிர்த்தன.இதுவும் மறைமுகமாக மகப்பேற்று விகிதத்தைப் பாதித்தது
அடுத்த முக்கிய காரணம் புலப்பெயர்ச்சி.அது போரின் நேரடி விளைவு.புலப்பெயர்ச்சி நேரடியாக தாயகத்திலிருந்து ஒரு பெரிய சனத் தொகையை அகற்றியிருக்கிறது.இதுவரையிலும் மூன்று புலப்பெயர்ச்சி அலைகள் ஏற்பட்டுள்ளன.முதலாவது, 1983க்கு முந்தியது.இரண்டாவது, 1983 ஜூலையோடு தொடங்கிய போர்க்காலப் புலப்பெயர்ச்சி.இதுதான் பெரியது. மூன்றாவது,கடந்த பொருளாதார நெருக்கடியின்போது ஏற்பட்டு,இப்பொழுது வரை நடந்து கொண்டிருப்பது.இந்த மூன்று புலப்பெயர்ச்சி அலைகளின் போதும் மொத்தம் மூன்றில் ஒரு பகுதி சனத்தொகை,குறிப்பாக வம்சவிருத்தி செய்யும் வயதுடையோர் புலம்பெயர்ந்து வருகிறார்கள்.
இதுவரை மொத்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி புலம்பெயர்ந்து விட்டதாக உத்தியோகப்பற்றற்ற கணக்குகள் தெரிவிக்கின்றன.இதுதொடர்பாக உத்தியோகபூர்வமான புள்ளிவிவரங்கள் இல்லை.ஒரு மையத்திலிருந்து அவ்வாறான புள்ளிவிபரங்களைத் திரட்டவேண்டியது யாருடைய பொறுப்பு? இதை மறுவளமாகக் கேட்டால் தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு?
புலம்பெயர்ந்த நாடுகளிலும் மகப்பேற்று விகிதம் திருப்தியாக இல்லை. குறிப்பாக முதலாம் தலைமுறை புலம்பெயரிகளை பொறுத்தவரை அவர்கள் அதிகமதிகம் ஈருடக வாசிகள்.புலம்பெயர்ந்த நாடுகளில் கிடைக்கக்கூடிய வீடுகளின் அளவு,அறைகளின் அளவு,அங்கே எந்தளவுக்கு செற்றில்ட் ஆகியிருக்கிறார்கள் போன்ற எல்லா அம்சங்களும் மகப்பேற்று விகிதத்தைத் தீர்மானிக்கின்றன.
ஒருபுறம் புலப்பெயர்ச்சி ஜனத்தொகையைத் தாயகத்தில் இருந்து அகற்றியுள்ளது.இன்னொருபுறம் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும் குறிப்பாக முதலாம் தலைமுறைப் புலம்பெயரிகள் மத்தியில் மகப்பேற்று விகிதம் ஒப்பீட்டுளவில் திருப்தியாக இல்லை.
இவைதவிர,தாயகத்தில் மற்றொரு அம்சமும் ஜனத்தொகைப் பெருக்கத்தைப் பாதிக்கின்றது.காலத்தால் பிந்திய திருமணங்கள்.இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.முதலாவது காரணம்,பெண் பிள்ளைகள் படிப்பு,தொழில் காரணமாக திருமணத்தை ஒத்திவைப்பது.இரண்டாவது காரணம் சீதனம். மூன்றாவது காரணம் மேற்சொன்ன இரண்டு காரணங்களின் விளைவாக வயது சென்று கர்ப்பம் தரிக்கும்போது இயற்கையான பிரசவத்தை விரும்பாமல் சிசேரியன் அறுவைச் சிகிச்சைமூலம் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவது.குறிப்பாக படித்த பெண்கள்,வசதியான பெண்கள் இந்தப் பிரிவுக்குள் வருகிறார்கள்.உடற்பயிற்சியின்மை,ஓரிடத்திலேயே தொடர்ச்சியாக இருந்து வேலைசெய்வது,முன்பு உடலை அசைத்துச் செய்த வேலைகளுக்கு இப்பொழுது இயந்திரங்கள் கிடைத்திருப்பது.அதனாலும் உடற்பயிற்சிக்கு நிகரான வீட்டு வேலைகளைச் செய்வது குறைந்து விட்டமை.இவைதவிர அதீத மருத்துவ அக்கறையும் ஒரு காரணம் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
படித்த குடும்பங்களில் பிள்ளை கருத்தரிக்கும் போதே பெற்றோர் ஒரு மருத்துவ நிபுணரிடம் போய் விடுகிறார்கள்.அங்கிருந்து தொடங்கி மருத்துவ நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ் பிள்ளையும் ஆரோக்கியமாக வளர்கிறது;தாயும் ஆரோக்கியமாக இருக்கிறார்.அதேசமயம் அதீத கவனிப்பின் காரணமாக சில பிள்ளைகள் பெரிதாக வளர்கின்றன.அதனால் இயற்கையாக அந்த பிள்ளைகளைப் பிரசவிப்பது வலி மிகுந்தது என்று கருதும் படித்த பெண்கள், வசதியான பெண்கள் சத்திரசிகிச்சையை நாடுகிறார்கள் என்றும் மருத்தவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.தவிர மருத்துவர்களிலும் சிலர் சிசேரியனை ஊக்குவிப்பதாகக் கூறப்படுகின்றது.இவைபோன்ற பல காரணங்களினாலும் சிசேரியனை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு சிஸேரியன் மூலம் பிள்ளையைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் ஆகக்கூடியது மூன்று பிள்ளைகளைத்தான் பெறலாம்.இதுவும் மகப்பேற்று விகிதத்தை வரையறைக்கு உள்ளாக்குகிறது.
இவ்வாறு மேற்கொண்ட பல்வேறு காரணங்களின் விளைவாகவும் மகப்பேற்று வீதம் குறையும்போது இயல்பாகவே அது சனத்தொகையை பாதிக்கும். ஏற்கனவே யுத்தம் கிட்டத்தட்ட 3லட்சம் பேரைத் தின்றுவிட்டது.ஒருபுறம் சனத்தொகை இழப்பு.இன்னொருபுறம் மகப்பேற்று விகிதம் குறைவு. இவற்றின் விளைவாக ஈழத்தமிழர்கள் மத்தியில் கடந்த சில தசாப்தங்களாக சனத்தொகை வளர்ச்சி பெருமளவுக்குக் குறைந்துவருகிறது.
அரசறிவியல் விளக்கத்தின்படி ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனையும் அம்சங்கள் ஐந்து.நிலம்,இனம்,மொழி,பொதுப் பொருளாதாரம்,பொதுப் பண்பாடு ஆகிய ஐந்துமே அவை.இதில் இனம் எனப்படுவது இன்னொரு விதத்தில் சனத்தொகைதான்.ஒருபுறம் நிலப்பறிப்பு வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது.இன்னொருபுறம் சனத்தொகையும் குறைகின்றது.இவ்வாறு நிலமும் சிறுத்து,சனமும் சிறுத்துக்கொண்டே போனால் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசிய இனமாகத் தக்கவைப்பது மேலும் சவால்களுக்கு உள்ளாகலாம்.
அண்மையில் குடித்தொகைக் கணக்கீடு வெளிவந்த பின் எத்தனை அரசியல் கட்சிகள் அதுதொடர்பாக தமது அக்கறையை வெளிப்படுத்தியிருக்கின்றன? ஒரு மக்கள் கூட்டத்தின் சனத்தொகை வளர்ச்சியைப் பேணிப் பாதுகாக்க வேண்டியதும் முகாமை செய்ய வேண்டியதும் அரசியல் தலைமைத்துவத்தின் பொறுப்புகளில் ஒன்று.ஜனத்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும் அரசுடையது; அதுபோலவே சனத்தொகை வளர்ச்சி விகிதத்தை ஒரு குறிப்பிட்ட எல்லையில் பேணவேண்டியதும் அரசுடைய பொறுப்புத்தான். சீனா இந்தியா போன்ற நாடுகள் கடந்த நூற்றாண்டுகளில் அதைச் செய்திருக்கின்றன.அவ்வாறான நாடுகளில் சனத்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் சனத்தொகைப் பெருக்கத்தை வேகப்படுத்துவதற்கும் அரசின் ஊக்குவிப்பு கிடைத்தது.
ஈழத் தமிழர்கள் அரசற்ற ஒரு மக்கள் கூட்டம்.தமது சனத்தொகை தொடர்பாக பொருத்தமான முடிவுகளை எடுப்பதற்கு ஈழத் தமிழர்கள் மத்தியில் யார் உண்டு?போரில் கொல்லப்பட்டவர்களின் மொத்தத் தொகை எவ்வளவு? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொகை எவ்வளவு?புலம்பெயர்ந்து போனவர்களின் தொகை எவ்வளவு?போன்ற விவரங்களை ஒரு மையத்திலிருந்து தொகுப்பதற்கு தமிழ்மக்கள் மத்தியில் யார் உண்டு?அதுபோலவே சனத்தொகை வளர்ச்சி குறைகிறது என்றால் அதுதொடர்பில் ஆராய்வது,நடவடிக்கை எடுப்பது யார்?





