

இந்த விடயத்தில் கரைச்சி பிரதேச சபையின் முன்னுதாரணம் மிக்க நடவடிக்கையைப் பாராட்ட வேண்டும்.அதுதொடர்பாக பிரதேச சபையின் தவிசாளர் முகநூலில் ஒளிப்படங்களைப் பிரசுரித்துள்ளார்.அங்கே அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.ஏனென்றால் ஒரு கிலோ பார்த்தீனியம் செடியை இருநூறு ரூபாய்க்கு பிரதேச சபை கொள்வனவு செய்கிறது. இது ஒரு பெரிய தொகை என்று குற்றம் சாட்டப்படுகிறது.இதன் விளைவாக பார்த்தீனியம் செடியை உற்பத்தி செய்வதற்கு சிலர் ஊக்குவிக்கப்படலாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.மேலும் செடிகளை பிடுங்கும் ஒருவர் அதை விற்பதற்கான ஒரு மையத்தை நோக்கி வரவேண்டி இருக்கும்.இடைப்பட்ட வழியில் செடிகளில் உள்ள விதைகள் உதிர்ந்து பார்த்தீனியம் மேலும் பரவக்கூடும்.இது இன்னொரு விமர்சனம்.இரண்டு விமர்சனங்களையும் கவனத்தில் எடுக்கும் அதேநேரம் பிரதேச சபையின் இந்த நடவடிக்கையை முதலில் பாராட்ட வேண்டும்.
ஏற்கனவே வட மாகாண சபை அவ்வாறு பார்த்தீனியத்தை ஒழிப்பதற்கு இதே நடைமுறையை அறிமுகப்படுத்தியது.ஆனால் அங்கே ஒரு கிலோ பார்த்தீனியம் செடிக்கு பத்து ரூபாய்தான் வழங்கப்பட்டது. மேலும் பிடுங்கப்பட்ட செடிகளை அவற்றுக்கு அருகே உள்ள ஏதோ ஒரு இடத்தில் குவித்த பின் உரிய முறைப்படி அவற்றை அங்கிருந்து அகற்றி,எரித்தர்கள்.விதைகள் பரவுவதை தடுப்பதென்றால் கிராமங்கள் தோறும் அவ்வாறான சேகரிப்பு மையங்களை உருவாக்கலாம்.
இந்த விடயம் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைந்துள்ள ஒரு செயற்பாட்டு நிறுவனத்தின் அலுவலகத்தில் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் யாழ்ப்பாணத்தில் உள்ள இயற்கை வேளாண் செயற்பாட்டாளர்களும் வட மாகண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும் ஊடகவியலாளர்களும் பங்குபற்றினார்கள். அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தது இளையோர் மத்தியில் இயங்கும் ஒரு செயற்பாட்டு அமைப்பு.
அந்தச் சந்திப்பின்போது நான் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினேன். மேற்சொன்ன அமைப்பு இளையோர் அமைப்பு என்ற அடிப்படையில் அவர்கள் பாடசாலைகள் தோறும் பார்த்தீனியம் தொடர்பான விழிப்புணர்வை முதலில் ஏற்படுத்தலாம்.மாணவர்களுக்கு இதுதான் பார்த்தீனியம் செடி என்பதனை அறிமுகப்படுத்தலாம்.அதன்பின் மாணவர்களை அவர்கள் வாழும் கிராமங்கள் அல்லது வட்டாரங்களில் உள்ள பார்த்தீனியம் வளரும் இடங்களை கண்டுபிடித்து அந்த வட்டாரங்களுக்கு உரிய பார்த்தீனியம் வரைபடம் ஒன்றை உருவாக்குமாறு கேட்கலாம்.அவ்வாறு வட்டாரங்கள் தோறும் உருவாக்கப்பட்ட வரைபடங்களை ஒன்றிணைத்து ஒரு கிராமத்துக்குரிய ஒட்டுமொத்த வரைபடத்தை உருவாக்கலாம்.அதன்பின் குறிப்பிட்ட ஒரு நாளில் அக்கிராமத்தில் இருக்கக்கூடிய எல்லா வளங்களையும் ஒருங்கிணைத்து செடிகளை கையுறை அணிந்து,பிடுங்கி,கிட்ட உள்ள ஓரிடத்தில் குவித்து, பின்னர் அங்கிருந்து அகற்றி,எரிக்கலாம்.நான் இதைச் சொல்லி சில ஆண்டுகளாகி விட்டன.எதுவும் நடக்கவில்லை.
இப்பொழுது உள்ளூராட்சி சபைகள் அதைக் கையில் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஏனென்றால் உள்ளூராட்சி சபைகள் தமது வட்டார உறுப்பினர்களுக்கு ஊடாக அதைச் செய்யலாம்.ஒவ்வொரு வட்டாரத்திலும் பார்த்தீனியம் வரைபடத்தைத் தயாரிக்கலாம். அதன்பின் கிராமத்துக்குரிய வரைபடத்தை தயாரிக்கலாம். அதன்பின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குறிப்பிட்ட நாளில் மாணவர்கள்,அரசியல் செயற்பாட்டாளர்கள்,சூழலியல் செயல்பாட்டாளர்கள்,சம்பந்தப்பட்ட திணைக்களம்,சனசமுக நிலையங்கள், மாதர் அமைப்புகள்,விவசாய அமைப்புகள், மீனவ அமைப்புகள் போன்ற எல்லா அமைப்புகளையும் திரட்டி பார்த்தீனியத்தை அந்த பகுதியில் இருந்து அகற்றி விடலாம். இது ஒரு நடைமுறைச் சாத்தியமான வழி.கைகளால் செடிகளைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று துறைசார் அறிஞர்கள் கூறுகிறார்கள்.பார்த்தீனியம் தோல் நோய்களையும் சுவாச நோய்களையும் ஏற்படுத்தக்கூடியது.எனவே கையுறை அணிந்திருக்க வேண்டும்.
நகரமும் நகரம் சார்ந்த பிரதேசங்களையும் அதிகமாகக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி சபைகள் அதைச் செய்வது இலகுவானது.காடும் காடு சார்ந்த அல்லது வயலும் வயல் சார்ந்த பிரதேசங்களை அதிகமாகக் கொண்ட உள்ளூராட்சி சபைகள் அதைச் செய்வதில் சில சவால்கள் இருக்கலாம். ஆனால் உள்ளூராட்சி சபைகள் இந்த விடயத்தைக் கையில் எடுத்தால் முன்னேற்றம் உண்டு.கரைச்சி பிரதேச சபையின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி,நல்லூர் பிரதேச சபையும் பார்த்தீனியத்தை அகற்றும் நடவடிக்கைகளுக்கென்று ஒரு விசேட குழுவை நியமித்திருக்கிறது.நல்ல விசயம்.
இலங்கைத் தீவின் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் பார்த்தீனியத்தை வளர்ப்பது அல்லது பேணுவது அல்லது அழிக்காமல் விடுவது சட்டப்படி குற்றம்.அதில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் நினைத்தால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம்.சட்டப்படி அழிக்கப்பட வேண்டிய ஒரு விடயத்தை அதற்குரிய திணைக்களங்களே செய்து இருந்திருக்க வேண்டும்.
இப்பொழுது உள்ளூராட்சி சபைகள் அதைக் கையில் எடுத்தால் அதுவும் நல்லதே.ஏனென்றால் எல்லா உள்ளூராட்சி சபைகளும் வட்டார மட்டத்தில் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.வட்டார வலையமைப்பைக் கொண்டிருக்கும்.அந்த வட்டார வலையமைப்புக்கு ஊடாக ஒவ்வொரு வட்டாரத்திலும் பார்த்தீனியம் வரைபடத்தை தயாரிக்கலாம்.வரைபடம் தயார் என்றால் அதை அழிப்பது மிகவும் இலகுவானது. அதை ஒரு பருவ மழைக்குள் செய்து முடித்துவிட முடியாது. மூன்று தசாப்தங்களுக்கு மேலாகப் பெருகிவரும் ஒரு செடி.அதை இல்லாமல் செய்வதும் ஒரு தொடர் நடவடிக்கைதான். உள்ளூராட்சி மன்றங்கள் தமது ஆட்சிக் காலத்துக்குள் அவ்வாறு தமது பிரதேச எல்லைக்குள் அந்தச் செடியை அகற்றிக் காட்டினால் அது அவர்களுடைய சாதனைப் பட்டியலில் சேர்க்கப்படும்.
புதிய உள்ளூராட்சி மன்றங்கள் பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகின்றது.சில உள்ளூராட்சி சபைகள் சுற்றுச்சூழல் விடயங்களில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றங்களைக் காட்டியுள்ளன.குறிப்பாக நல்லூர் பிரதேச சபையானது குப்பை சேகரிப்பு மையங்களை இதுவரை 5 வட்டாரங்களில் உருவாக்கியிருக்கிறது.அங்கெல்லாம் முழு நாளும் ஒருவர் குந்திக் கொண்டிருப்பார்.பருவ மழையை முன்னிட்டு நல்லூர் பிரதேச சபை மட்டுமல்ல யாழ். மாநகர சபையும் உட்பட நீர் தேங்கும் ஆபத்துள்ள, வெள்ளம் பெருகும் ஆபத்துள்ள பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் வெள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. A9 வீதி,அரியாலையில் வெள்ள நீர் வடிந்தோடும் வாய்க்கால் தூர்வாரித் துப்பரவாக்கப்பட்டிருக்கிறது.பருவ மழையை நோக்கிப் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் விழிப்பாகச் செயல்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது
யாழ் நகர மையத்தில் நவீன சந்தையின் உட்புறத்தில் காணப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு அப்பகுதி முன்னரைவிடச் சுத்தமாகக் காணப்படுகிறது.யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் சில பிரதேச சபைகள் குழாய்க் கிணறுகளைக் கிண்டுவதற்குக் கட்டுப்பாடுகளை விதித்து அறிவித்துள்ளன. வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை எல்லைக்குள் ஆழ்துளை கிணறுகளை அமைக்கும் போது பிரதேச சபையின் அனுமதியினையும் பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் தெரிவித்தார்.பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் வீதிகளில் மின் குமிழ்களைப் பொருத்தி அல்லது திருத்தி வீதிகளுக்கு ஒளியூட்டி வருகின்றனன்.
வலி கிழக்கு பிரதேச சபை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பொது மலசல கூடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறது. நிலாவாரையில் அம்மாச்சி உணவகமும் கடைத் தொகுதியும் கட்டப்படுகின்றன. அக்கரைக் கடற்கரை அழகுபடுத்தப்படுகிறது.
நினைவு நாட்களை அனுஷ்டிப்பதில் உள்ளூராட்சி சபைகளுக்குள் காணப்படும் கட்சிகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளலாம்.ஆனால் கழிவு முகாமைத்துவம், வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்களைத் துப்புரவாக்குவது, நிலத்தடி நீரைப் பாதுகாப்பது,குழாய்க் கிணறுகளைக் கட்டுப்படுத்துவது,சட்ட விரோத கட்டுமானங்களை அகற்றுவது,மின் குமிழ்களைப் பொருத்துவது …..போன்ற விடயங்களில் புதிய உள்ளூராட்சி சபைகள் கடந்த ஆறு மதங்களில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய முன்னேற்றங்களைக் காட்டியுள்ளன.இந்த அடிப்படையில் கரைச்சி பிரதேச சபையின் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையைப் பாராட்ட வேண்டும். அதேசமயம் அந்த நடவடிக்கையில் இருக்கக்கூடிய குறைகளையும் சுட்டிக்காட்டலாம்.





