சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.யாழ்ப்பாணத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட 10 பேரை அவர் சந்தித்தார்.சந்திப்பு முடிந்து வெளியே வரும்போது சிவாஜிலிங்கம் அங்கிருந்த ஓர் அரசியல் விமர்சகரிடம் கேட்டார்…”இந்த வாரக் கட்டுரை இதைப் பற்றித் தானா?” என்று. அப்பொழுது அரசியல் விமர்சகர் சொன்னார்,”இல்லை இந்தச் சந்திப்பில் நான் ரிப்போர்ட்டராகக் கலந்து கொள்ளவில்லை.இது மூடிய அறைக்குள் நடந்த ஒரு சந்திப்பு.தமிழ்த் தரப்பு இவ்வாறு மூடிய அறைகளுக்குள் நடக்கும் சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்களை அப்பாவித்தனமாக அல்லது உள்நோக்கத்தோடு வெளியே விடுகிறது என்று ஓர் அபிப்பிராயம் ராஜதந்திர வட்டாரங்கள் மத்தியில் உண்டு” என்று.
இதை இங்கே ஏன் எழுத வேண்டி இருக்கிறது என்றால், கடந்த வாரம் நடந்த இரண்டு விடயங்கள் தொடர்பாகத்தான்.முதலாவது விடயம்,கடந்த திங்கட்கிழமை நடந்த பிரித்தானிய அரசாங்கத்தின் துணைப் பிரதமருக்கும் தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு.இரண்டாவது விடயம், சுவிஸ் தூதராகத்தால் கடந்த 19ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட அதே தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான ஒரு சந்திப்பு பற்றிய விடயம்.
பிரித்தானிய துணைப் பிரதமர் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்தபோது அதில் கஜேந்திரகுமார் தெரிவித்ததாகக் கூறப்படும் ஒரு கருத்துத் தொடர்பாக ஒரு தகவல் ஊடகம் ஒன்றில் வெளிவந்தது. ஆனால் கஜேந்திரகுமார் தான் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்திருந்தார்.இதில் கஜேந்திரகுமார் அவ்வாறு கூறினாரா இல்லையா என்ற விவாதத்தை தனியாக வைத்துக் கொள்ளலாம். இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், மூடிய அறைக்குள் நடந்த ஒரு சந்திப்பு தொடர்பாக செய்திகளைக் கசியவிடுவது பற்றியது.அதைவிட முக்கியமாக,கட்சிகளுக்கு இடையிலான முரண்பாட்டுக்குள் தூதரகங்களை இழுத்து விடுவது.
இப்படித்தான் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அனுசரணையோடு கடந்த 19ஆம் திகதி நடக்கவிருந்த சந்திப்புத் தொடர்பாகவும் தகவல்கள் முன்கூட்டியே ஊடகங்களுக்குக் கசிந்தன.அதுதொடர்பாக சுவிட்சர்லாந்து தூதரகம் சந்தோசமாக இல்லை என்றும் தெரிகிறது.இங்கேயும் ராஜதந்திர சமூகத்துடனான இடையூடாட்டங்கள் ஊடகங்களுக்குக் கசிய விடப்பட்டிருக்கின்றன.இது வேண்டுமென்று செய்யப்பட்ட ஒன்றா என்ற சந்தேகங்களும் உண்டு.எதுவானாலும் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் தூதரங்கள் தொடர்பான செய்திகள் கசிய விடப்படுகின்றன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது
இந்த இரண்டு சம்பவங்களும் தமிழ்க் கட்சித் தலைவர்களில் ஒரு பகுதியினர் ஓர் அரசு போலவும் சிந்திக்கவில்லை;ஒரு தேசமாகவும் சிந்திக்கவில்லை;ஆகக்குறைந்தது ராஜீய உறவுகளில் பேணப்பட வேண்டிய நிதானத்தோடாவது சிந்திக்கவில்லை என்பதைத்தான் காட்டுகின்றன.
மேலும் ஒரு சம்பவம்.இது.வடமாகாண சபை இயங்கிக் கொண்டிருந்த பொழுது நடந்தது.அதில் வயதால் மூத்த தலைவர் ஒருவர் கனேடியத் தூதரகத்துடனான சந்திப்பு ஒன்றின் போது கூறப்பட்ட சில விடயங்களை சந்திப்பு முடிந்த கையோடு ஊடகங்களுக்கு அப்பாவித்தனமாக வெளிப்படையாகக் கூறிவிட்டார்.அதுவும் அப்பொழுது தூதரக வட்டாரங்களில் அதிருப்தியோடு பார்க்கப்பட்டது.
தமிழ்க் கட்சித் தலைவர்களில் ஒருபகுதியினர் ராஜதந்திர சமூகத்தைச் சந்திக்கும்போது ஓர் அரசைப்போல சிந்தித்து, ஓர் அரசைப் போல பக்குவமாக நடந்து கொள்வதில்லை என்பதுதான் கடந்த 16 ஆண்டு கால அனுபவம் ஆகும். ஓர் அரசைப்போல சிந்திக்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் ஒரு தேசமாகக்கூட அவர்கள் சிந்திக்கிறார்கள் இல்லை என்பதைத்தான் அண்மைக்கால நடப்புகள் நமக்குக் காட்டுகின்றன.
நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்த்துக்கீசர் தமிழ் மக்களிடமிருந்த ஒரு ராஜ்ஜியத்தை தோற்கடித்தார்கள்.அங்கிருந்து தொடங்கி தமிழ் மக்கள் ஐந்து நூற்றாண்டுகளாக அரசற்ற தரப்பாகவே இருந்து வருகிறார்கள்.இடையில் ஆயுதப் போராட்டம் 1985 வசந்த காலத்தில் தொடங்கி 2009 மே மாதம் வரையிலும் ஒரு கருநிலை அரசைக் கட்டி எழுப்பியது. அந்த கருநிலை அரசின் ஒரே ராஜதந்திரியாக அன்ரன் பாலசிங்கம் உலகம் முழுவதும் பிரகாசித்தார்.அவர் துறைசார் ராஜதந்திரி அல்ல. முறைசாரா ராஜதந்திரிதான். ஆனாலும் ஈழத் தமிழர்களின் நவீன வரலாற்றில் பாலசிங்கம் உலகம் முழுவதும் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் ராஜதந்திர முகமாக மதிக்கப்பட்டார்.லண்டனில் அவருடைய இறுதி நிகழ்வானது, வெளி நாட்டுப் பிரதிநிதிகள் அதிகம் கலந்துகொண்ட ஒரு தமிழ் நிகழ்வாகக் காணப்பட்டது.
சுமார் நான்கு நூற்றாண்டுகளில் அதிக காலம் அரசு இல்லாத சமூகமாக இருந்த காரணத்தாலோ என்னவோ, தமிழ் மக்கள் மத்தியில் ஓர் அரசைப்போல சிந்திக்கும் மாண்பு அனேகமாக இல்லாமல் போய்விட்டது. ஒரு தேசமாகச் சிந்திக்க முடியாத மக்கள் ஓர் அரசைப்போல சிந்திப்பார்கள்,செயற்படுவார்கள் என்று எதிர்பார்ப்பது கடினமானதுதான். ஆனால் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு வேண்டுமாக இருந்தால் அது தொடர்பில் வெளி உலகத்தை அணுகும்போது ஓர் அரசைப் போல சிந்தித்து செயல்படாவிட்டால் என்ன நடக்கும்?கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்குள் தூதரகங்கள் இழுத்துவிடப்படும். நிறுவன மயப்படாத தனியோட்டங்களே அதிகரிக்கும்
இந்த இடத்தில் மேலும் ஓர் உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்டலாம். சில ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கையில் இடம்பெற்ற மக்கள் எழுச்சிகளினால் ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்து துரத்தப்பட்டார்கள்.அதன் பின்னணியில் ஒரு புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றத்துக்கு ஊடாகத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக கட்சித் தலைவர்களுக்கு இடையில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.இதில் சில கட்சித் தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலைப்பாட்டோடு காணப்பட்டார்கள்.இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதனை அங்கிருந்த கட்சித் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தோடு தொலைபேசியில் தொடர்பு எடுத்திருக்கிறார். தூதரகத்தின் இரண்டாம் நிலை அதிகாரியோடு நடந்த அந்த உரையாடலை அவர் எல்லாரும் கேட்கக்கூடியதாக கைபேசியின் ஒலிபெருக்கியில் விட்டிருக்கிறார்.அதுமட்டுமல்ல, அந்தத் தகவல் பின்னர் ஊடகங்களுக்கும் கசிய விடப்பட்டது.ஒரு வெளிநாட்டுத் தூதரகத்துக்கு அப்படி ஒரு அனுபவம் அதற்கு முன் ஏற்பட்டிருக்குமோ தெரியாது.
ஆனால் அப்படிப்பட்ட அனுபவங்களின் பின் ராஜதந்திரிகள் தமிழ்க் கட்சித் தலைவர்களை நம்பிக் கதைப்பார்களா? மூடிய அறைக்குள் நடக்கும் சந்திப்புகளில் கூறப்பட்ட விடயங்களை சரியாகவோ, பிழையாகவோ அல்லது கட்சி முரண்பாடுகளைப் பிரதிபலிக்கும் விதத்திலோ வெளியே கசியவிடும் அரசியல்வாதிகளை எந்தத் தூதரகமாவது நம்பிக் கதைக்குமா? நமது தமிழ் தலைவர்களில் எத்தனை பேர் அவ்வாறு நம்பி கதைக்கத்தக்க தலைவர்களாகக் காணப்படுகிறார்கள்?
எனது நண்பர் ஒருவர் தென்னராட்சியைச் சேர்ந்தவர்.அவர் ”கழண்ட கத்திகள்” என்ற ஒரு சொற்றொடரைப் பயன்படுத்துவார். அதன் பொருள் கத்தியின் பிடி கழண்டு விட்டது,அல்லது பிடி கத்தியோடு இறுக்கமாக இல்லை என்பதாகும். அவ்வாறு கழண்ட கத்தியால் எதையாவது வெட்டினால்,அது ஒழுங்காக வெட்டாது மட்டுமல்ல,வெட்டுகிறவரின் கையையும் நன்னி விடும் ;காயப்படுத்தி விடும்.
இப்பொழுதுள்ள தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் அவ்வாறு கழண்ட கத்திகள்தானா? ராஜதந்திர சமூகம் அவர்களை நம்பி உறவாடி, ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ளுமா?இந்தக் கழண்ட கத்திகளை வைத்துக்கொண்டு தமிழ் மக்கள் எதைப் பெறப் போகிறார்கள்?





