அண்மை மாதங்களாக அரசாங்கம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்று ஒரு புதிய யாப்புருவாக்க முயற்சியைத் தொடங்கலாம் என்று கஜேந்திரக்குமார் எச்சரித்து வருகிறார்.அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் அவ்வாறு உண்டு.ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்ட இடைக்கால வரைபை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்து செல்ல அரசாங்கம் முயற்சிக்கலாம் என்றும் கஜேந்திரகுமார் எச்சரிக்கின்றார். சில மாதங்களுக்கு முன்பு சுவிற்சர்லாந்தில் நடந்த ஒரு சந்திப்பில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக வந்திருந்தவர் அவ்வாறு எகிய ராஜ்ஜிய என்று அழைக்கப்படும் அந்த இடைக்கால வரைபை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவித்ததை கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டுகிறார்.இந்த அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதனால் புதிய யாப்புருவாக்க முயற்சி ஒன்றில் இந்த அரசாங்கம் ஈடுபடத் தேவையான பலம் அதற்கு உண்டு என்றும் அவர் நம்புகிறார்.
எகிய ராஜ்ஜிய என்ற வரைபை அப்போதிருந்த அரசாங்கத்தோடு சேர்ந்து தயாரித்தது தமிழரசுக் கட்சியின் தலைமையிலான கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளும் ஆகும்.ஏனைய கட்சிகளுக்குள் ஜேவிபியும் அடங்கும்.எனவே இந்த விடயத்தில் அந்த இடைக்கால வரைபு கூட்டமைப்பின் குழந்தையுந்தான்.ஜேவிபியின் குழந்தையுந்தான்.அதனால் அந்த வரைபை தமிழரசுக் கட்சியும் ஜேவிபியும் அதாவது அரசாங்கமும் இணைந்து முன்னெடுக்கும் ஆபத்துக்கள் இருப்பதாக கஜேந்திரக்குமார் சந்தேகிக்கிறார்.
பல வாரங்களுக்கு முன்பு அரசாங்கத்துக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் நடந்த ஒரு சந்திப்பின் பின் சுமந்திரன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் என்ன பதிந்தார் என்பதையும் கஜன் சுட்டிக்காட்டுகிறார்.அந்தப் பதிவில் சுமந்திரன் எகிய ராஜ்ஜிய குறித்து ஆர்வமாக இருப்பது தெரிகிறது.
இத்தகையதோர் பின்னணியில்தான் கஜேந்திரகுமார் எகிய ராஜ்ஜியவுக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்கள் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணிக்கும் எதிரானவைதான் என்று தமிழரசுக் கட்சி நம்புகின்றது.தமிழரசுக் கட்சியை தமிழ்மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் உள்நோக்கம் அங்கே உண்டு என்றும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.
இந்த முரண்பாடுகள்,சந்தேகங்கள் என்பவற்றின் விளைவாகவே கடந்த 19ஆம் திகதி சுவிஸ் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஒரு வெளிநாட்டுத் தூதரகத்தின் அனுசரணையோடு தமிழ்க் கட்சிகளை ஒரே மேசையில் இருத்துவதற்கு எடுக்கப்பட்ட ஆகப்பிந்திய முயற்சி அது.அந்த முயற்சி குழப்பப்பட்டமையானது இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகள் ஒன்றாகச் சந்திக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதைக் காட்டுகிறதா ?
இந்த இடத்தில் மூன்று முக்கியமான விடையப் பரப்புகளில் தமிழ் மக்களுக்குத் தெளிவு அவசியம்.முதலாவதாக அரசாங்கம் ஒரு புதிய யாப்பைக் கொண்டு வருமா?
இந்த அரசாங்கம் எதிர்பாராமல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ஓர் அரசாங்கம்.அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைகூட புரட்சிகரமானது அல்ல.கோத்தாபய பெற்ற அதே பெரும்பான்மை.எனவே இந்த வெற்றியை எப்படித் தக்கவைப்பது என்ற சவால் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு.அண்மையில் ரில்வின் சில்வா சீனாவுக்குப் போனபோது அங்கே சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் அவருக்கு வழங்கிய ஆலோசனை தொடர்பாக சிங்கள ஊடகங்களில் வெளிவந்தது.குறைந்தது 15 ஆண்டுகள் ஆட்சி செய்தால்தான் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மாற்றங்களைச் செய்யலாம் என்பதே அந்த ஆலோசனையாகும்.அதன்படி தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது அதன் வாக்கு வங்கியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எப்படி வளர்த்தெடுப்பது என்றுதான் சிந்திக்கும்.அப்படிச் சிந்தித்தால் இனப்பிரச்சினையில் கை வைக்கக்கூடாது.இதோ தீர்க்கப் போகிறோம் என்று ஒரு தோற்றத்தைக்கட்டியெழுப்பலாம். அதன்மூலம் காலத்தைக் கடத்தலாம்.
மேலும்,இந்த அரசாங்கம் பொருளாதார நெருக்கடியின் விளைவு. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை நிமிர்த்த வேண்டிய பொறுப்பு அதற்கு உண்டு. அடுத்த தேர்தல்களில் கிடைக்கப் போகும் வெற்றியை அதுதான் பெருமளவுக்குத் தீர்மானிக்கும்.எனவே இந்த அரசாங்கம் இனப்பிரச்சினையில் கையை வைத்து நிலைமைகளைக் குழப்புமா? ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிலை நீக்குவதற்கே தயங்கும் அரசாங்கம்,யாப்புருவாக்கத்தில் இறங்குமா?
இரண்டாவது விடயம்,எகிய ராஜ்ஜிய பற்றிய வாதப்பிரதிவாதங்கள்.சுமந்திரன் கூறுகிறார்,அது ஒற்றை ஆட்சியைக் குறிக்காது என்று.மேலும் சுமந்திரன் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு இணைந்து இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு புதிய ஆவணத்தைத் தயாரிக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.கஜேந்திரகுமார் கூறுகிறார்,எகிய ராஜ்ஜிய என்பது ஒற்றை ஆட்சிதான் என்று.
எகிய ராஜ்ஜிய தொடர்பாக யார் சொல்வது சரி என்பதை,அரசியலை ஓர் அறிவியலாகப் பயில்பவர்கள் விளங்கிக்கொள்ளலாம்.ஆனால் பொதுமக்கள் அதை எப்படி விளங்கிக் கொள்கிறார்கள்?இந்த விடயத்தில் வெளிப்படையான, தெளிவான,சாதாரண மக்கள் விளங்கக்கூடிய விவாதப் பரப்புகள் அவசியம். அவ்வாறான விவாத அரங்குகளை தமிழ்மக்கள் மத்தியில் உள்ள குடிமக்கள் அமைப்புகளோ அல்லது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,அல்லது தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பு போன்ற அமைப்புக்களோ திறக்க வேண்டும்.அதன்மூலம் எகிய ராஜ்ஜியவைச் சூழ்ந்திருக்கும் மயக்கங்கள் தெளிவாகப்பட வேண்டும்.
மூன்றாவது,இது மிகவும் முக்கியமானது.இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்ட தொடர் நடவடிக்கை.இதில் இறுதியிலும் இறுதியானதுதான் யாப்புருவாக்கம்.அதுவே முதலாவதும் கடைசியும் ஆகாது.இனப் பிரச்சனைக்கான தீர்வை யாப்புருவாக்கமாகக் குறுக்கவும் கூடாது.மாறாக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதல்முயற்சியாக,மோதலில் ஈடுபட்ட தரப்புக்களுக்கு இடையிலான திறந்த உரையாடல் தேவை.அதன்மூலம் ஒரு சமாதான உடன்படிக்கை அல்லது அரசியல் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும்.தேசங்களை அங்கீகரிக்கும் அந்த உடன்படிக்கையில் இருந்துதான் இனப்பிரச்சனைக்கான தீர்வு எது என்பதனை அதன் சட்டச் சட்டத்துக்குள் வைத்துச் சிந்திக்கலாம்.
இதுதொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்ட இனங்களுக்கு இடையே முதலில் ஒரு சமூக உடன்படிக்கை அல்லது அரசியல் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும். உதாரணமாக 1988இல் பிரித்தானியாவுக்கும் அயர்லாந்துக்கும் இடையில் எடுத்தப்பட்ட அமைதி உடன்படிக்கையான பெரிய வெள்ளி உடன்படிக்கை போல ஓர் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவையின் முன்மொழிவின் முகப்புரையில் கூறப்பட்டுள்ளது. அங்கிருந்துதான் இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தேடத் தொடங்க வேண்டும். அதன் இறுதிக் கட்டந்தான் புதிய யாப்பாகும்.யாப்பிலிருந்து அதாவது கடைசிக்கட்டத்தில் இருந்து அதைத் தொடங்க முடியாது.தொடங்கவும் கூடாது.
இங்கே விபத்து எங்கே நடந்தது என்றால்,2015 செப்டம்பர் மாதம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான அதாவது பொறுப்புக் கூறலுக்கான தீர்மானத்தின் விளைவாகத்தான்.பொறுப்புக் கூறலுக்கான ஐநா தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது.எனவே அந்தப் பொறுப்பின் நிமித்தம் நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டு,அதன் கீழ் ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக வழிநடத்தல் குழுவும் உப குழுக்களும் உருவாக்கப்பட்டன.இந்த நடைமுறைகளின் விளைவுதான் எகிய ராஜ்ஜிய என்று அழைக்கப்படுகின்ற இடைக்கால வரைபு ஆகும்.
2018ல் அந்த இடைக்கால வரைபு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு காலச் சூழலில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை ஒரு யாப்புச் சதி முயற்சி மூலம் கவிழ்த்தார்.அதாவது நிலைமாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரி தன் குழந்தையைக் காட்டிக்கொடுத்தார். நிலைமாறுகால நீதி என்பது “ஒரு தோல்வியுற்ற பரிசோதனை” என்று சுமந்திரன் 2021ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்துக் கூறினார் ஐநாவுக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை எழுதுவதற்கான சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு சொன்னார்.தோல்வியுற்ற ஒரு பரிசோதனை எப்படி வெற்றிகரமான ஒரு தீர்வு முன்மொழிவைப் பெற்றெடுத்தது ?
நிலைமாறுகால நீதியின் தோல்விக்குக் காரணமே நிலை மாற்றம் நிகழாமல் அங்கே நிலைமாறுகால நீதியை ஸ்தாபிக்க முற்பட்டமைதான். இலங்கைத் தீவைப் பொருத்தவரையிலும் அது வென்றவர்கள் தோற்றவர்களின் மீது திணித்த ஒரு நீதிதான்.தென்னாபிரிக்காவைத் தவிர பெரும்பாலான நிலை மாறு கால நீதிக் களங்களில் நிலைமை அதுதான். நூரம்பேர்க் தீர்ப்பாயத்தில் தொடங்கி இலங்கை வரையிலும் நிலைமாறுகால நீதிச் செய்முறைகள் பெரும்பாலும் அவ்வாறுதான் காணப்படுகின்றன.வென்றவர்கள் தோற்றவர்களுக்கு வழங்கும் நீதி.எனவே இனப்பிரச்சனைக்கான தீர்வை யாப்புருவாக்கமாகக் குறுக்கக்கூடாது.மாறாக,அதை இனங்களுக்கு இடையிலான உடன்படிக்கையில் இருந்து தொடங்க வேண்டும்.மிகக்குறிப்பாக அதற்கு மூன்றாவது தரப்பின் கண்காணிப்பும் மத்தியஸ்தமும் வேண்டும்.
அவ்வாறு மூன்றாவது தரப்புக்கள் தலையிடுவது என்று சொன்னால் தமிழ் மக்கள் போராட வேண்டும். தமிழ்மக்கள் நொதித்தால்தான் இலங்கைத்தீவின் அரசியல் வலுச்சமநிலை குழம்பும்.இலங்கைத் தீவின் அரசியல் வலுச்சமநிலை குலையும் போதுதான் மூன்றாவது தரப்புகள் அதில் தலையிடும்.இந்திய-இலங்கை உடன்படிக்கை,ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை இரண்டும் அவ்வாறு தமிழ்மக்கள் நொதித்தபடியால் கிடைத்தவைதான்.நிலைமாறு கால நீதிகூட மகிந்தவைத் தோற்கடிப்பதற்கான இந்திய மற்றும் அமெரிக்கத் தேவைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.மஹிந்தவைத் தோற்கடிப்பதற்கான ஆட்சி மாற்றத்தில் தமிழ் முஸ்லிம் மக்களையும் பங்காளிகள் ஆக்கிய வெளியரசுகள் இலங்கைத்தீவில் மறைமுகமாக ஐநாவுக்கடாக ஒரு தலையீட்டைச் செய்தன.
எனவே தமிழ் மக்கள் நொதிக்கவில்லையென்றால் மூன்றாவது தரப்புகள் தலையிடாது.மூன்றாவது தரப்புகளின் கண்காணிப்பு இல்லாமல் நாடாளுமன்றத்திற்கு ஊடாக ஒரு தீர்வைப் பெறமுடியாது.அப்படிப் பெற விளைந்தால் அது அனேகமாக,மைத்திரிபால சிறிசேன கூறியதுபோல “சிங்கள மக்களையும் பயமுறுத்தாத ;தமிழ் மக்களையும் பயமுறுத்தாத எதோ ஒரு “எகிய ராஜ்ய”வாகதான் இருக்கும்.வெளிப்படையான சமஸ்டியாக இருக்காது. நாடாளுமன்றத்துக்கூடாக தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் தீர்வைப் பெற முடியாது என்பதுதான் கடந்த 75ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் ஆகும். போராடியதால்தான்,மூன்றாவது தரப்பின் தலையீடு காரணமாகத்தான் 13ஆவது திருத்தமாவது கிடைத்தது.அதையும் சிங்களபௌத்த அரசு கெட்டித்தனமாக ஒற்றையாட்சிக்குள் பெட்டி கட்டிவிட்டது. எனவே தமிழ்மக்கள் நொதிக்க வேண்டும்.போராட வேண்டும்.போராடவில்லை என்றால் தீர்வு இல்லை.





