நான் வசிக்கும் பகுதியில் கிழமை தோறும் கழிவகற்றும் வண்டி வரும் நாட்களில் சில வீட்டு மதில்களில் குப்பைப் பைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். அல்லது மதிலில் ஒரு கம்பியை கொழுவி அந்த கம்பியில் குப்பைகளைக் கழுவி வைத்திருப்பார்கள். ஏனென்றால்,குப்பை அகற்றும் வண்டி உரிய நேரத்துக்கு வருமா வராதா என்ற சந்தேகம்.அது வரத் தவறினால் நிலத்தில் வைக்கும் குப்பைகளை நாய்கள் குதறிவிடும். கட்டாக்காலி நாய்களை இன்றுவரை கட்டுப்படுத்த முடியவில்லை.இது யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதி.
இன்னொரு பகுதி குரு நகரில். “தாங்கள் தொழில் செய்யும் கடலிலேயே அப்பகுதி மக்கள் கழிவுகளை கொட்டுகிறார்கள்” என்று ஒரு மதகுரு தெரிவித்தார்.அப்பகுதியில் சூழலில் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவர் சொன்னார் குருநகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள கடலில் இருந்து தொடங்கி குறிப்பிடத்தக்களவு தூரம் அவ்வாறு கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளும் உட்பட அனைத்து விதமான கழிவுகளையும் காணக்கூடியதாக இருக்கும் என்று. சில சமயம் செத்த நாயை கொண்டு வந்து போடுகிறார்கள். சில சமயம் பழைய ஆடைகள் கடலில் மிதக்கும். இவற்றோடு வளமை போல பிளாஸ்டிக் கழிவுகளும் காணப்படும் என்று.
மேற்குறிப்பிட்ட மதகுரு சொன்னார், “கரையோரக் குடியிருப்புகளில் வீடுகளுக்கு முன்னாலும் நிலம் இல்லை பின்னாலும் நிலம் இல்லை. எனவே வீட்டுக் கழிவுகளை அவர்கள் எங்கே கொட்டுவது? சாப்பாட்டுக் கழிவுகளை வீட்டுக்குள் வைத்தால் சில நாட்களில் அவை புழுக்கத் தொடங்கி விடும். எனவே இந்த கழிவுகளை அகற்றுவதற்கு ஒரு பொருத்தமான வழிமுறை வேண்டும். ஒவ்வொரு கிழமையும் ஒரு நாள் தான் கழிவு அகற்றும் வண்டி வரும் என்றால் ஏனைய நாட்களில் கழிவுகளை எங்கே கொட்டுவது? ஏனென்றால் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கழிவு வருந்தானே?” என்று.
ஒவ்வொரு நாளும் கழிவை அகற்றுவதற்கு போதிய வாகனங்கள் இல்லை என்று மாநகர சபை நிர்வாகம் கூறுகின்றது. மாநகர சபையில் மட்டுமல்ல இந்த பிரச்சினை உள்ள எல்லா உள்ளூராட்சி சபைகளிலும் அதுதான் நிலைமை. போதிய அளவு வாகனங்கள் இல்லை வளங்களும் இல்லை.


கழிவை முகாமை செய்வதற்கு போதிய அளவுக்கு பொருத்தமான வளங்கள் இல்லை என்பது ஒரு புறமிருக்க, கழிவை முகாமை செய்வது என்பது தனிய உள்ளூராட்சி சபையின் பொறுப்பு மட்டுமல்ல. அது மக்களுடைய பொறுப்பும் தான் என்று அண்மையில் சாவகச்சேரியைச் சேர்ந்த ஒரு செயற்பாட்டாளர் முகநூலில் எழுதியிருந்தார்.
சுத்தமாக இருப்பது ஒர் ஒழுக்கம்.தமது சூழலை சுத்தமாக வைத்திருப்பது என்பது ஒரு பொறுப்பு;ஒரு பண்பாடு. வட்டாரங்கள்தோறும் கழிவை சேகரிக்கும் மையங்களை உருவாக்க வளங்கள் இருக்கின்றதோ இல்லையோ அவ்வாறு உருவாக்கப்படும் மையங்களில் மக்கள் கழிவுகளை எவ்வாறு போடுகிறார்கள் என்றும் பார்க்க வேண்டும். அதற்கென்று வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் தொட்டிகளில் பக்குவமாகக் கழிவைக் கொண்டு போய்ப் போடுவது எத்தனை பேர்? பதிலாக வாகனத்தில் நின்றபடியே தொட்டியை நோக்கி அதை வீசுபவர்கள் எத்தனை பேர்? இதற்கு முன்பு அவ்வாறு கழிவு சேகரிக்கும் மையங்களை உருவாக்கிய பொழுது அந்தப் பகுதியையே குப்பையாக்கிவிட்டார்கள்.யாழ்ப்பாணத்தில் முறையற்ற கழிவகற்றல் உயிர் பல்வகமைக்கு ஆபத்து விளைவிக்கும் என்கிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் கணபதி கஜபதி.
இது ஒரு சமூகப் சமூகப் பொறுப்பு. தன் வீட்டுக்கு குப்பையை மற்றவரின் தலையில் கொட்டுவது.தான் சுத்தமாக இருந்தால் போதும் மற்றவர்கள் எப்படியும் அழுகி நாறட்டும் என்ற சிந்தனை. இந்த சுயநலம் இருக்கும்வரை ஒருவர் மற்றவரை நேசிக்க முடியாது. ஒரு சமூகமாகத்தானும் திரள முடியாது.
இதற்கு சட்டம் இயற்றி கமராவைப் பூட்டி எத்தனை நாட்களுக்கு கண்காணிப்பது? தண்டனைகளின் மூலம் மட்டும் சமூகப் பொறுப்பை, கழிவு முகாமைத்துவப் பண்பாட்டை உருவாக்க முடியுமா?
அண்மையில் பொது இடங்களில் வெற்றிலை துப்பியதற்காக ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன். பெரும்பாலான சந்தைகளில் மூலைகளில் வெற்றிலை துப்பல்களை பார்க்கலாம். அது மட்டுமல்ல வாகனம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே வாகனத்தின் சாரதி அல்லது பேருந்தில் பயணிப்பவர்கள் வெற்றிலையைத் துப்புவார்கள் அது காற்றில் பறந்து வந்து உங்களுடைய முகத்தில் படும்.எச்சில் நெடி அன்றைய நாளையே அருவருப்பானதாக ஆகிவிடும்.
இங்கே இந்த இடத்தில், இலங்கைத் தீவின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு கிடைத்த ஒரு அனுபவத்தைக் குறிப்பிட வேண்டும். பிரேமதாச ஊரில் அதிகம் பிரபல்யமாகாத ஒருவராக இருந்த காலத்தில் தன்னுடைய முதலாவது நேர்முகத் தேர்வுக்காக புதிய ஆடைகளை அணிந்து கொண்டு பேருந்தில் ஏறுவதற்கு மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்திருக்கிறார். அங்கே நகர்ந்து கொண்டிருந்த பேருந்தில் இருந்த ஒருவர் தன் வெற்றிலை எச்சிலை வெளியே துப்பியிருக்கிறார்.அது பிரமதாசாவின் முகத்திலும் தலையிலும் சட்டை முழுவதிலும் பட்டிருக்கிறது. திகைத்துப்போன பிரேமதாச துக்கத்தோடு தாயாரிடம் திரும்பி ஓடி வந்திருக்கிறார். தாயார் மகனைத் தேற்றி நம்பிக்கையூட்டியிருக்கிறார்.நீ முழுகிவிட்டு வா நான் இருப்பவற்றில் நல்ல உடுப்பை அயர்ன் பண்ணித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.தாய் கொடுத்த உற்சாகத்தோடு வேறு ஓர் உடுப்பை அணிந்து கொண்டு நேர்முகத் தேர்வுக்கு போன பிரேமதாச அங்கே நூலக உதவியாளராக தெரிவு செய்யப்படுகிறார்.அங்கிருந்துதான் அவருடைய அரசியல் வாழ்வு தொடங்குகிறது.
பேருந்தில் பயணம் செய்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜன்னலுக்கு வெளியே துப்புகிறார்கள்.மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் துப்பிவிட்டுப் போகிறார்கள். அது காற்றில் பறந்து வந்து பின்னால் வருகிறவரின் முகத்தில் துர் நெடியோடு படியும். எவ்வளவு அருவருப்பு? அது இப்பொழுது தண்டனைக்குரிய குற்றம்.தன் குப்பையை மற்றவர்களின் தலையில் கொட்டுவதும் குற்றம்.
தண்டனைகளால் மட்டும் அவ்வாறான சமூகப்பொறுப்பை பண்பாட்டை உருவாக்க முடியுமா? திருநெல்வேலி சந்தைக்குள் காறித் துப்பும் ஒருவர் தன் வீட்டுக்குள் அதைச் செய்ய மாட்டார். ஏனென்றால் அது அவருடைய சொந்த வீடு. தான் சுத்தமாக இருந்து கொண்டு மற்றவர்கள் வாழும் சூழலை அசுத்தமாக்குவது ஒரு நாகரிகம் அடைந்த மக்கள் கூட்டம் செய்கிற வேலையல்ல.
கழிவை அகற்றுவது என்பதற்கு பதிலாக கழிவை முகாமை செய்வது என்று சிந்திப்பதே பொருத்தமானது என்று சமூகச் செயற்பாட்டாளராகிய செல்வின் கூறினார்.கழிவு முகாமைத்துவத்தை வளர்ச்சியடைந்த நாடுகள் லாபகரமான ஒரு தொழிலாக மாற்றி விட்டன.அங்கெல்லாம் கழிவு விற்கப்படுகிறது; வாங்கப்படுகிறது; மீள சுழற்சிக்கு உள்ளாக்கப்பட்டு மீண்டும் விற்கப்படுகிறது.
எனவே கழிவு முகாமைத்துவத்தை எப்படி வணிகப் பண்புடையதாக மாற்றலாம் என்று சிந்திக்கலாம். அது ஒரு கூட்டுப் பொறுப்பு. ஆனால் அந்த கூட்டுப் பொறுப்பை மக்களுக்கு உணர்த்துவது யார்? உள்ளூர்த் தலைவர்கள் உள்ளூர் முன்னுதாரணங்களாக மாறினால்தான் அவ்வாறு கூட்டுப் பொறுப்பைக் கட்டியெழுப்பலாம். உள்ளூர்த் தலைவர்கள் முதலில் பிரதேச சபைக்குள் தமது கூட்டுப் பொறுப்பை நிரூபிக்க வேண்டும்.குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றத்துக்குள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து முடிவெடுக்க வேண்டிய விடையங்களில் புதிய உள்ளூராட்சி மன்றங்கள் கூட்டுப் பொறுப்பை நிரூபிக்குமாக இருந்தால் மக்களிடமும் கூட்டுப்பொறுப்பை எதிர்பார்க்கலாம். குப்பை விடயத்தில் மட்டுமல்ல எல்லா விடயத்திலும் கூட்டுப் பொறுப்பை எதிர்பார்க்கலாம். தலைவர்கள் எவ்வழியோ மக்களும் அவ்வழி.







