ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் : பெறோர்கள் எழுதும் பரீற்சை ?

கடந்த வாரத்துக்கு முதல் வாரம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளிவந்தன.பெற்றோரும் உறவினர்களும் தங்களுடைய பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகளை முகநூலில் பகிர்ந்து கொண்டாடினார்கள்.இந்த இடத்தில் எனது நண்பர் ஒருவர் கூறிய உரையாடல் ஒன்று எனக்கு நினைவுக்கு வந்தது.அந்த உரையாடல் நடந்த இடம் யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல்யமான  தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் வாசலில்.புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் தங்கள் பிள்ளைகளுடைய வகுப்பு முடியும் வரையிலும் தனியார் கல்வி நிறுவனத்தின் வாசலில் காத்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு இடையிலான உரையாடல் அது.இந்த உரையாடலை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த எனது நண்பரும்  ஒரு கட்டத்தில் அந்த உரையாடலில் ஈடுபட்டார்.அந்த உரையாடல் வருமாறு…

பெற்றோர்-1-“இந்தச் சின்ன வயதில் எங்கட பிள்ளைகள் எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வேண்டி இருக்கு? அஞ்சு மணிக்கு எழுப்ப வேணும்”.

பெற்றோர்-2-“அப்படியே? அஞ்சு மணிக்கு எழும்பி எத்தனை மணி மட்டும் படிக்கிறது?”

பெற்றோர்-1-“அஞ்சு மணியிலிருந்து ஆறு மணி மட்டும் வீட்டில படிப்பு. ஆறிலிருந்து ஏழு மட்டும் ரியூஷன். ரியூசன் முடிஞ்ச கையோட வீட்ட வந்து சாப்பிட்டிட்டு பள்ளிக்கூடத்துக்குப் பறக்க வேணும்”.

பெற்றோர் -2 -”பள்ளிக்கூடத்தால வந்து?”

பெற்றோர்-1- “வந்த வேகத்தில் சாப்பிட வேணும்.பிறகு ஒரு சின்னத் தூக்கம். பிறகு இரண்டிலிருந்து நாலு மணி மட்டும் ரியூஷன். பிறகு நாலரையில இருந்து இந்த டியூஷன்.பிறகு ஏழில இருந்து ஒன்பது மட்டும் வீட்டில தாய் படிப்பிப்பா”.

பெற்றோர் -2- “அப்ப பிள்ளை எப்ப நித்திரைக்குப் போகும்?”

பெற்றோர் -1- “10 மணிக்கு .. நாலரைக்கு எழும்ப வேணுமே ?எங்கட பிள்ளையள் எவ்வளவு வருந்திப் படிக்க வேண்டி இருக்கு?”

இந்த உரையாடல் போய்க்கொண்டிருக்கும்போது வகுப்பு முடிந்து பிள்ளைகள் வெளிவரத் தொடங்கி விட்டன.எனவே முதலாவது பெற்றோர் தனது பிள்ளையை ஏற்றிக்கொண்டு சென்று விட்டார்.இரண்டாவது பெற்றோர் இப்பொழுது எனது நண்பரோடு கதைக்கிறார்….

“பாத்தீங்களே  பிள்ளைய எப்பிடிப் படிப்பிக்கினம் என்று? அவர் சொன்னது உண்மை எண்டு நம்புறீங்களே ?”

எனது நண்பர் – “ஏன் பொய்யே?”

பெற்றோர் -2- “ஓம்.அது பொய்.அவர் சொன்னவர் பிள்ளை அஞ்சு மணிக்கு எழும்புது என்று.அது பொய்.பிள்ள மூன்று மணிக்கு எழும்புது.அது பத்து மணிக்கு நித்திரைக்குப் போறதில்ல. 11 மணிக்குத்தான் போகுது”.

நண்பர்- “உண்மையே? ஏன் அப்பிடிப் பொய் சொன்னவர்?”

பெற்றோர் -2- “ஏனெண்டால் தன்ர பிள்ள அவ்வளவு நேரம் படிக்குது எண்டு சொன்னா நீங்களும் உங்கட பிள்ளைய அப்படிப் படிப்பீங்கள்.போட்டியில உங்கட பிள்ளை முன்னுக்கு வரலாம்.அதுதான் தன்ர பிள்ள படிக்கிற நேரத்தக் குறைச்சுச் சொன்னவர்”…..

இது அந்தத் ரியூட்டரி வாசலில் நடந்த ஓர் உரையாடல்.புலமைப் பரிசில் பரீட்சையின் போட்டி மனோநிலையை அது காட்டுகிறது.பரவலாக விமர்சிக்கப்படுவதுபோல அது பிள்ளைகளின் பரீட்சை அல்ல. நடுத்தர வர்க்கப் பெற்றோரின் பரீட்சைதான்.அதுவும் படித்த நல்ல உத்தியோகம் பார்க்கும் பெற்றோர்.ஆனால் பிள்ளைகளிடம் அவ்வாறான போட்டி மனோநிலை இருக்கும் என்று எடுத்துக்கொள்ள முடியாது.அப்படி ஒரு போட்டி மனோநிலைக்குரிய வயது அதுவல்ல.

எனக்குத் தெரிந்த ஓர் ஆசிரியரின் பிள்ளை பரீட்சை எழுதிய பொழுது கல்வியதிகாரியான அவருடைய நண்பர் ஒருவர் சொன்னார்… “பரீட்சை எழுதப் போகும்போது பிள்ளைக்கு உறிஞ்சிக் குடிக்கும் ஒரு தண்ணீர்ப் போத்தலை வாங்கி கொடுங்கள். பரீட்சைச் சூழலில்.பதட்டத்தில் பிள்ள மூடியைத் திறக்கும்போதோ அல்லது மூடும்போதோ நீரைச் சிந்தி விடக்கூடும்”….. என்று.தண்ணீர்ப் போத்தலின் மூடியை பதட்டத்தில் சரியாக மூட முடியாத ஒரு வயதில் இப்படி ஒரு தேசிய மட்டப் பரீட்சை தேவையா? இந்தக் கேள்வி இந்த நாட்டில் ஏற்கனவே பல மனநிலை மருத்துவர்களாலும் கல்வியியலாளர்களாலும் கேட்கப்பட்டுவிட்டது.ஆனால் மாற்றம் நடக்கவில்லை.

அந்தப் பரீட்சையின் போட்டித் தன்மை காரணமாக அந்தப் பரீட்சைக்குத் தயார்படுத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக வருவாயீட்டும் தொழிற் துறையாக வளர்ந்து விட்டன.அங்கே இலவசக் கல்வி கேள்விக்குள்ளாகிறது.அங்கே வசூலிக்கப்படும் காசு ஏனைய தேசியமட்டப் பரீட்களுக்காகப் படிக்கும் பிள்ளைகளிடம் வசூலிக்கப்படும் காசைவிட அதிகமாகவும் இருப்பதுண்டு.பரீட்சை பெறுபேறுகளின் பின் ஆசிரியர்கள் கௌரவிக்கப்படும் விதத்திலும் பெற்றோரின் மனோநிலை தெரிகிறது.சில ஆசிரியர்களுக்கு தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்படுகிறது.பல ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கையில் ஒரு தகப்பன் ஆசிரியருக்கு ஒரு காரை வாங்கிக் கொடுத்தார்.

ஆனால் இதில் சித்தி பெற்ற பிள்ளை பின்னர் வரக்கூடிய சாதாரண தரம் உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் வெற்றி பெறும் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஒருவர் சொன்னார்….மேல் மாகாணத்தில் அவருக்கு நியமனம் கிடைத்தது.நியமனம் கிடைத்ததும் அவர் முதலில் போனது கொரனவில் உள்ள தக்க்ஷிலா மத்திய கல்லூரிக்கு.அங்கேதான் புலமைப் பரிசில் பரீட்சையில் நாட்டிலேயே முதற் தடவை 200 புள்ளிகளைப் பெற்ற பிள்ளை படித்துக் கொண்டிருந்தது.அந்தப் பிள்ளையின் ஆறாவது ஆண்டு தவணைப் பரீட்சைகளின் பெறுபேறுகளை அவர் தொகுத்துப் பார்த்திருக்கிறார்.அந்தப் பிள்ளை முன்னணியில் நிற்கவில்லை.

அதாவது ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற எல்லா பிள்ளைகளுமே கல்விப் பொது சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளில் பிரகாசிக்கும் என்றில்லை.ஒரு தேசிய பரீட்சையின் முக்கியத்துவத்தை உணர முடியாத வயதில் பிள்ளைகளை பந்தயக் குதிரைகளாக மாற்றுவது பெற்றோர்தான்.இந்த பந்தயக் குதிரை மனோபாவம் பிள்ளைகளின் உளவியலைப் பாதிக்கின்றது.அதேயளவுக்கு அவர்களுடைய உளப்பாங்கையும் தீர்மானிக்கின்றது.உலகின் முன்னேறிய கல்வி முறைமையைக் கொண்டிருக்கும் நாடுகளில், குறிப்பாக யப்பானில் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயதுவரை பரீட்சைகள் இல்லை.அதற்குக் கூறப்படும் விளக்கம் என்னவென்றால், உளப்பாங்கு உருவாகும் ஒரு காலகட்டத்தில் போட்டிப் பரீட்சைகளை வைத்தால் அது  பிள்ளைகளின் உளப்பாங்கில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.சிறு பிராயத்திலேயே உருவாக்கப்படும் போட்டிச் சூழல் பிள்ளைகளை சுயநலமும் பேராசையும் பொறாமையும் கள்ளத்தனமும் கொண்டவர்களாக மாற்றி விடுகிறது.

“பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில் பரீட்சையின் மூலம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகவும் கடினமான சுமையை கொடுக்கிறார்கள். புலமைப்பரிசில் பரீட்சை ஒரு சிறந்த வியாபாரமாகவும் மாறிவிட்டது. உண்மையில், குழந்தைகள் இன்னும் இந்த சுமையை புரிந்து கொள்ளும் அளவு முதிர்ச்சி அடையவில்லை. எனவே, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிள்ளைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் பிள்ளை சித்தி அடைந்தாலும் அல்லது தோல்வியடைந்தாலும், கல்வியின் பெறுமதியை பற்றிய அவர்களின் புரிதல் காலப்போக்கில் தெரிய ஆரம்பிக்கும்.கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவும் சூழலை அவர்களுக்கு உருவாக்குங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள்,பெரியவர்கள் மற்றும் பிறருக்கு மரியாதை கொடுப்பதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்,ஏனெனில் இந்த பண்புகள் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் கல்விக்கு மிக முக்கிய பங்களிக்கும்”என்று கூறுகிறார்,பேராதனைப் பல்கலைக்கழக,பொறியியற் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி. நவரட்ணராஜா.

போட்டிபோட்டுப் படித்து பட்டம் பெற்று, முன்னிலைக்கு வந்த பலர் சில ஆண்டுகளுக்கு முன் நாட்டில் பொருளாதார நெருக்கடி தோன்றிய பொழுது நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார்கள்.இந்த போட்டி மனோநிலை முன்னேறுவதில் மட்டுமல்ல தப்பிச் செல்வதிலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றையும் நன்கு தெரிந்த  ஒருவர் பிரதமராகவும் கல்வி அமைச்சராகவும் உள்ள அரசாங்கத்தால்கூட  புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக பொருத்தமான முடிவை  எடுக்க முடியவில்லை. கடந்த வாரத்துக்கு முதல் வாரம் கொழும்பில் தேசிய கல்வி ஆனைக்குழுவை சந்தித்த பிரதமர் ஹரினி இந்த  விடயதைப் பற்றியும் உரையாடியுள்ளார். புலமை பரிசில் பரீட்சையை இப்போதைக்கு அவர்கள் நீக்கப் போவதில்லை என்று தெரிகிறது. சிலசமயம் அவர்களுடைய ஆட்சிக்காலம்  முடிவதற்கு இடையிலாவது நீக்கப்படுமா என்பதும் சந்தேகம்தான்.சிறு பிள்ளைகளுக்கான ஒரு தேசிய  பரீட்சையை நீக்கும் விடயத்தில்  சமூகத்தின் கூட்டு உளவியலை மீறிப்போகப் பயப்படும் ஒர் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு,யுத்த வெற்றி நாயகர்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தலாமா இல்லையா? போன்ற இதயமான பிரச்சினைகளில் துணிந்து முடிவெடுக்கும், ரிஸ்க் எடுக்கும் என்று எப்படி நம்புவது?

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *