நுகர்வுத் தாகத்துக்கு நோ லிமிட்

புத்தாண்டு பிறந்த பின் நடந்த முதலாவது போராட்டம்  தையிட்டியில் நடந்தது. அது நடந்த அதே நாளில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் “நோ லிமிட்” பெருமெடுப்பில் திறக்கப்பட்டது.தையிட்டிக்கு வந்த ஜனத்தையும் நோ லிமிட்டுக்கு வந்த ஜனத்தையும் ஒப்பிட்டு சமூகவலைத்தளங்களில் பரவலாக குறிப்புகள் வெளிவந்தன. போராட்டத்துக்குப் போன மக்களை விடவும் நோ லிமிட்டுக்குப் போன மக்கள்தான் அதிகம். ஆனால் அதுதான் சமூக யதார்த்தம். உலக யதார்த்தம்.

மகாஜனங்கள் எப்பொழுதும் நுகர்வுத் தாகத்தோடு இருப்பார்கள். இப்போதுள்ள சமூக வலைத்தளச் சூழலில்,காணொளி யுகத்தில்,காசு கொடுத்துச் செய்யப்படும் விளம்பரங்கள் மக்களின் பசியை,தாகத்தை,விடுப்புணர்வை மேலும் அதிகப்படுத்தும். அந்த டிஜிட்டல் விளம்பரங்களால் ஆட்கொள்ளப்பட்டு அங்கே என்ன இருக்கிறது என்று பார்க்க மக்கள் வருவார்கள்.

பெரு வணிக நிறுவனங்கள் திட்டமிட்டு சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் நுகர்வு அலையை,நுகர்வுப் பசியை உற்பத்தி செய்யும். அந்த அலைக்குள் அள்ளுபட்டு மக்கள் வருவார்கள்.யாழ்ப்பாணத்தின் உயர்தர உணவு விடுதிகளுக்கு இரவுகளில் சென்றால் தெரியும். அங்கு குடும்பமாக வந்து சாப்பிடுவது புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டும் அல்ல அவர்களைவிட அதிக தொகையில் உள்ளூர் மக்கள் வருவார்கள்.உயர்தர உணவகங்களில் சாப்பிடுவது என்பது ஒரு பொதுப் போக்கு. ஒரு விடுப்பார்வம். ஒரு வித எடுப்பு. சமூகத்தில் அதிகமாக உழைக்கும் அனேகரை அங்கே காண முடியும்.

ஆனால் எல்லா அலைகளைப் போலவே இந்த அலையும் ஒரு நாள் தணிந்து விடும்.ஹீல்ஸ்,நதியாஸ்,நோ லிமிட் போன்றவற்றுக்கு எப்பொழுதும் மக்கள் வெள்ளம் அலைமோதுவதில்லை. பண்டிகை நாட்களைத் தவிர.

அதுபோலவே பேர்க்கர் கிங்,காலித் பிரியாணி போன்ற உயர்தர உணவகங்களில் எல்லா ஆசனங்களும் என்றென்றும் நிரம்பி இருப்பதில்லை.டிஜிட்டல் ப்ரோமோஷன் மூலம் துண்டப்பட்ட,உற்பத்தி செய்யப்பட்ட எந்த ஓர் அலையும் நிரந்தரமானது அல்ல.அலைகள் நிரந்தரமானவை அல்ல.

மனிதர்கள் அரசியல் விலங்குகள் மட்டுமல்ல,இலத்திரனியல் வலைக்குள் சிக்கிய இரண்டு கால் பூச்சிகளுந்தான்.அரசியலுக்கும் அப்பால் அவர்களுக்கென்று தெரிவுகள்,ஈடுபாடுகள்,பசி,தாகம் இருக்கும்.போர்க் காலங்களில் சமூகம் மூடப்பட்டிருக்கும்போது தெரிவுகள் குறையும். நெருக்கடிகள் அதிகமாக இருக்கும்.அப்பொழுது ஒரு மக்கள் கூட்டத்தை அரசியல் பயப்படுத்துவது இலகுவானது.போர், அடக்குமுறை போன்றன ஒரு சமூகத்தை உணர்வுபூர்வமாக நொதிக்க வைக்கும்போது அங்கே மக்களை அரசியலில் உணர்திறன் அதிகமுடையவர்களாக இருப்பதுண்டு.

கடல் அமைதியாக இருக்கும்போது மீன் அதிகம் படாது.கடல் கொந்தளிக்கும் நாட்களில் மீன் அலைக்குத் தப்பி வலைக்குள் விழும். எனவே ஒரு மக்கள் கூட்டத்தைத் திரட்டுவதற்கு,நொதிக்க வைப்பதற்கு ஒரு கூட்டு உளவியல் சூழல் இருக்க வேண்டும்.அது இல்லையென்றால் அல்லது ஏற்கனவே உள்ள காரணங்களை உணர்வுபூர்வமானவைகளாக மாற்ற முடியவில்லை என்றால் அரசியல் விலங்குகள் திட்டமிட்டு உருவாக்கப்படும் வணிக நுகர்வு அலைகளால் அடித்துச் செல்லப்படும்.

தையிட்டி ஓர் உதாரணம்.அங்கே போராட வேண்டிய தேவை இருக்கிறது.போராடும்போது அதைத் தடுப்பதற்கு போலீஸ் வருகிறது. அதாவது போராட்டம் தீவிரம் அடைந்தால் ஒடுக்குமுறை அதிகரிக்கும். ஒடுக்கு முறை அதிகரித்தால் அதற்கு எதிரான போராட்ட உணர்வும் தூண்டப்படும். இது ஒரு சமன்பாடு.தமிழ் மக்கள் மத்தியில் வாழ்ந்த கவிஞர் மு.பொன்னம்பலத்தின் கவிதை ஒன்று உண்டு.”அதிகாரம் புரியாத சமன்பாடு” என்ற அந்தக் கவிதையில்….

“சர்வாதிகாரம் என்பது

விடுதலையை ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு,

தன்னை அறியாமலே அதைப் பிறப்பிக்க

யோனிவாயிலில் காத்திருக்கும் மருத்துவச்சி”

என்றும் ,அது அதிகாரம் புரியாத ஒரு சமன்பாடு என்றும்  மு.பொ கூறுவார்.

பொருளாதார நெருக்கடி சிங்கள மக்களை வீதிக்குக் கொண்டு வந்தது;காலி முகத்திடலில் கிராமம் அமைத்துப் போராட வைத்தது.ராஜபக்ஸக்களுக்கு வாக்களித்த மக்கள் 21 மாதங்களில் அவர்களை விரட்டினார்கள்.பொருளாதார நெருக்கடியின் விளைவுகளைப் பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி அனுர அலையை உற்பத்தி செய்தது,வெற்றியும் பெற்றது.

எனவே அலைகளை உற்பத்தி செய்வதற்கு அதற்குரிய அரசியல்,சமூகப் பொருளாதாரக் காரணிகள்  இருக்க வேண்டும்.கூட்டு உளவியல் இருக்க வேண்டும்.தென்னிலங்கையில் ஏற்பட்ட ராஜபக்சங்களுக்கு எதிரான வெறுப்பு அலையை,தேசிய மக்கள் சக்தி அனுர அலையாக மாற்றியது.கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகள் வாக்களிப்பு அலைகளைக் கூட உற்பத்தி செய்ய முடித்தவைகளாக மெலிந்து வருகின்றன.தமிழ்க் கட்சிகள் அலைகளுக்காகக் காத்திருக்க போகின்றனவா? அல்லது பொருத்தமான தருணங்களில் அலைகளை உற்பத்தி செய்யப் போகின்றனவா? அல்லது அலைகள் ஓய்வதில்லை என்று கூறி பழைய பெருமைகளை இரைமீட்டுக் கொண்டிருக்கப் போகின்றனவா?

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *