1987ல் இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தாகிய கால கட்டத்தில் கொழும்பில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் ஜெயவர்த்தனாவும், ரஜீவ்காந்தியும் பங்குபற்றினார்கள். அதில் ஓர் ஊடகவியலாளர் இந்தியா பலவந்தமாக வானத்திலிருந்து உணவுப்பொதிகள் போட்டதைப்பற்றி ஜெயவர்த்தனாவிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ஜெயவர்த்தனா பின்வருமாறு பதிலளித்தார். “நான் அதை மன்னிப்பேன் ஆனால் அதை மறக்க மாட்டேன் என்று” இது வழமைபோல ஜே.ஆரின் தந்திரமான ஒரு பதில். ஒன்றை மெய்யாக மன்னித்துவிட்டால் அதை மறந்துவிட வேண்டும். மன்னித்த பின்னும் மறக்கவில்லையென்றால் அங்கே பழிவாங்கும் உணர்ச்சி அல்லது காயத்தின் தழும்பு மிஞ்சியிருக்கிறது என்று அர்த்தம். அதாவது முழு இதயத்தோடு மன்னிக்கவில்லை என்று அர்த்தம். ரஜீவ்காந்தியையும் அருகில் வைத்துக்கொண்டே ஜெ.ஆர் இதைச் சொன்னார்.
அன்றைக்கு இந்திய வான்படை விமானங்கள் இலங்கை வானுக்குள் அத்துமீறி நுழைந்து உணவுப்பொதிகளைப் போட்டதை மறக்க மாட்டேன் என்று ஜே.ஆர் சொன்னார். ஆனால் இன்றைக்கு தமிழ் மக்கள் மீது தாங்கள் போட்ட குண்டுகளை மறக்கவும் வேண்டும், மன்னிக்கவும் வேண்டும் என்று ஜே.ஆரின் மருமகன் கேட்கிறார். இந்த மன்னிப்புக்கு அடிப்படையாக அவர் முன்வைக்கும் தர்க்கம் இரண்டு தரப்புமே குற்றம் புரிந்துள்ளன என்பதுதான். அதாவது ஓர் அரசுடைய தரப்பின் குற்றத்தையும், ஓர் அரசற்ற தரப்பின் குற்றத்தையும் அவர் சமப்படுத்துகிறார். அனைத்துலக சமூகத்திற்கு பொறுப்புக்கூற வேண்டிய ஒரு மரபு ரீதியான அரசாங்கம் செய்யும் இனப்படுகொலையும் அதே அரசாங்கத்தால் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்ட ஓர் ஆயுதப்போராட்டம் இழைத்த குற்றங்களும் ஒன்றா?
ஓர் அரசுடைய தரப்பாக இருப்பதுதான் சிங்கள மக்களுக்குள்ள மிகப்பெரிய பலமாகும். ஓர் அரசற்ற தரப்பாக இருப்பதுதான் தமிழ் மக்களுக்குள்ள அடிப்டைப் பலவீனமாகும். மன்னிக்க வேண்டும் என்று கேட்கும் போது மட்டும் அரசுடைய தரப்பையும், அரசற்ற தரப்பையும் ஒரே தராசால் நிறுக்கிறார்கள். ஆனால் மற்றெந்த விடயத்திலும் அப்படி சமப்படுத்த அவர்கள் தயாரில்லை.
ஓர் அரசற்ற தரப்பாக இருப்பதால்தான் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விசாரிக்கவும், தண்டிக்கவும் அவர்களால் முடிந்தது. கூட்டுப்படைத் தலைமையகத்தின் மீதான தாக்குதல், லயன் எயார் பயணிகள் வானூர்தி மீதான தாக்குதல், கதிர்காமர் படுகொலை, இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல் பேருந்துகளுக்கு குண்டு வைத்தது போன்ற பல குற்றச்சாட்டுக்களின் பெயராலும் பலர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் பலர் தண்டனையை எதிர்நோக்கி அல்லது விசாரணையை எதிர்நோக்கி தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
போர் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டவர்கள் மட்டுமல்ல. அவர்களுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பலர் பிடிபட்டார்கள், வதைபட்டார்கள், தண்டிக்கப்பட்டார்கள், இப்போதும் சிறையிலிருக்கிறார்கள். கொழும்பில் இவ்வாறு ஒரு பூசகரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார்கள். ஐயரம்மா சிறையில் மனநோயாளி ஆகிவிட்டார். இது போலவே மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டவர் குடும்பத்தோடு தொடர்புகள் ஏதுமின்றி கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் சிறையிலிருந்திருக்கிறார். கடந்த ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டபோதே அவர் உயிரோடு இருப்பது அவரது குடும்பத்திற்கு தெரியவந்தது.
இப்படியாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், தண்டிக்கப்பட்டவர்கள், இப்போதும் சிறையிலிருப்பவர்கள் என்று ஓர் கணக்கு இருக்கிறது. அதுமட்டுமல்ல ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபோது சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தவர்கள் புனர்வாழ்வு என்ற பெயரில் தடுத்துவைக்கப்பட்
டார்கள். புனர்வாழ்வின் பின்னரும் நீதிமன்றம் அவர்களில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இவை யாவும் ஓர் அரசுடைய தரப்பினால் தனக்கெதிராகப் போராடிய ஒரு மக்கள் கூட்டத்தின் மீது நடாத்தப்பட்ட விசாரணைகளும், தண்டனைகளுமாகும்.
ஆனால் படைத்தரப்பு இழைத்த குற்றங்களுக்காக இதுவரையிலும் தண்டிக்கப்பட்ட படைத்தரப்பினரின் எண்ணிக்கை என்று பார்த்தால் மிகச்சில விதிவிலக்குகளையே காட்ட முடியும். சில துணிச்சலான நீதிபதிகள் வழங்கிய சில விதிவிலக்கான தீர்ப்புக்களின் அடிப்படையில் ஒரு சிலர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். கிருசாந்தி கொலைவழக்கு, தென்மராட்சியில் இடம்பெற்ற ஒரு படுகொலைச் சம்பவம் போன்றவற்றில் வழங்கப்பட்ட சில தீர்ப்புக்களே உண்டு. ஆனால் இவை விதிவிலக்குகள். பொது போக்குகள் அல்ல. சில ஆண்டுகளுக்கு முன் ரணிலும் மைத்திரியும் 30/1 தீர்மானத்துக்கமைய நல்லிணக்கத்திற்கான கருத்தறியும் தேசியச் செயலணி ஒன்றை உருவாக்கினர். அச்செயலணி ரணிலும் மைத்திரியும் எதிர்பார்க்காத ஒரு பரிந்துரையைச் செய்தது. படைத்தரப்பிற்கும் புனர்வாழ்வு வழங்கவேண்டும் என்று அது கூறியது. எனவே அச்செயலணியின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது.
இவ்வாறான சமனற்ற ஒரு நீதிபரிபாலனச் சூழலுக்குள் இருதரப்புக் குற்றங்களையும் ரணில் சமப்படுத்த முயற்சிக்கிறார். அதை அவர் இறுதிக்கட்டப் போர் நடந்த ஒரு மாவட்டத்தில் வைத்துச் சொல்லியிருக்கிறார். அதிலும் குறிப்பாக ஜெனீவாக் கூட்டத்தொடர் தொடங்கவிருந்த ஒரு பின்னணிக்குள் அதைக் கூறியிருக்கிறார்.
அவர் அவ்வாறு கூறியது ஒரு தர்க்கபூர்வ வளர்ச்சியின் விளைவுதான். 2015ல் ஆட்சி மாற்றத்தின் மூலம் போர்க்குற்றச்சாட்டுக்கு இலக்காகி இருந்த இலங்கை அரசுக்கட்டமைப்பை அரசாங்கத்தை மாற்றியதன் மூலம் அவர்கள் பாதுகாத்தார்கள். இது முதலாவது வெற்றி.
அதன்பின் ஐ.நாப் பேரவையில் நிலைமாறுகால நீதி என்ற பெட்டிக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைத்தார்கள். தமிழ் மக்கள் கேட்டது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை. ஆனால் ஐ.நாவும், ரணிலும் வழங்கியது நிலைமாறுகால நீதியை. இது இரண்டாவது வெற்றி.
அதன் பின் நிலைமாறுகால நீதியின் கீழ் போர்க்குற்ற விசாரணைகளை அனைத்துலக நீக்கம் செய்தார்கள். தமிழ் மக்கள் கேட்டது பன்னாட்டு நீதிப்பொறிமுறையை. ஆனால் ரணில் ஒத்துக்கொண்டது கலப்புப் பொறிமுறையை. அதுவும் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு பொறிமுறை. இது மூன்றாவது வெற்றி.
அடுத்த கட்டமாக கலப்புப் பொறிமுறையும் தேவையில்லை என்று சொன்னார்கள். உள்நாட்டு நீதிக்கட்டமைப்பின் நம்பகத்தன்மை அதிகரித்திருக்கிறது என்று சொன்னார்கள். 2017ம் ஆண்டு ரணில் பின்வருமாறு சொன்னார். “கலப்பு நீதிப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பது மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் உட்சேர்க்கப்பட்ட போது சிறிலங்காவின் நீதிச் சேவை மீது அனைத்துலக சமூகம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கமானது நாட்டின் நீதிச்சேவையை சுயாதீனமானதாக ஆக்கியுள்ளது. ஆகவே கலப்பு நீதிமன்றம் என்கின்ற கோரிக்கை தற்போது தேவையற்றதாகும்”இது நான்காவது வெற்றி.
அடுத்த வெற்றி அண்மையில் கிடைத்தது. கடந்த ஒக்ரோபர் ஆட்சிக் குழப்பத்திலிருந்து உச்சநீதிமன்றமே நாட்டை விடுவித்தது. இதன்மூலம் உள்நாட்டு நீதிபரிபாலனக் கட்டமைப்பின் அந்தஸ்து முன்னெப்பொழுதையும் விட அதிகரித்தது. இது வெளிநாட்டு நீதிபதிகளைக் கேட்கும் தமிழ்மக்களின் கோரிக்கைகளை பலவீனப்படுத்தக்கூடியது. இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்தான் ரணில் கிளிநொச்சியில் வைத்து மறப்போம் மன்னிப்போம் என்றார். அதாவது அவர்கள் ஐந்தாவது கட்ட வெற்றிக்குத் திட்டமிடுகிறார்கள். அதன்படி நீதி விசாரணையே வேண்டாம். பரஸ்பரம் மன்னிப்போம் என்று கூறப்பார்க்கிறார்கள்.
ரணில் மட்டும்தான் இவ்வாறு மறப்போம் மன்னிப்போம் என்று கூறவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்கத்துக்கும் மேற்கு நாடுகளுக்கும் நெருக்கமான அரச சார்பற்ற நிறுவனங்களும் அதை மறைமுகமாக கூறி வருகின்றன. ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் லிபரல் ஜனநாயக வாதிகளும் அதை கூறிவருகிறார்கள். நிலைமாறுகால நீதி பொறிமுறைக்குள் குற்ற விசாரணை என்ற பகுதியை தவிர்க்க வேண்டும் என்று மேற்படி லிபரல் ஜனநாயக வாதிகளும் சிங்கள அரசியல்வாதிகளும் ஏற்கனவே கூறியிருக்கிறாரகள். 2017ல் இலங்கை அரசாங்கத்திற்கு இரு வருடகால அவகாசம் வழங்கும் தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேறிய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ போர்க்குற்ற விசாரணையும் நல்லிணக்கமும் ரயில் தண்டவாளங்கள் போன்றவை. ஒரு போதும் சந்திக்க முடியாது. போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டால் இனங்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டு மீண்டும் போர் மூளக்கூடிய அபாயம் தோன்றும் என்று குறிப்பிட்டார்.
மேற்சொன்ன அரசசார்பற்ற நிறுவனங்கள் நிலைமாறுகால நீதி தொடர்பாகவும் நல்லிணக்கம் தொடர்பாகவும் ஒழுங்குபடுத்தப்படும் கருத்தரங்குகளில் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை மறைமுகமாகப் போதித்து வருகின்றன. இவ்வாறான ஒரு கருத்தரங்கு சில ஆண்டுகளுக்குமுன் நீர்கொழும்பில் இடம்பெற்றது. அதில் பங்குபற்றிய ஒரு சிங்கள வளவாளவர் தென்னாபிரிக்க உதாரணம் ஒன்றை அதில் எடுத்துக்காட்டியிருக்கிறார். தென்னாபிரிக்காவில் ஒரு குற்றவாளியை விசாரித்த நீதிமன்றம் கொல்லப்பட்டவரின் தாயாரிடம் பின்வருமாறு கேட்டிருக்கிறது “உங்களுடைய மகனைக் கொன்ற குற்றவாளியை தண்டிக்க வேண்டுமா? மன்னிக்க வேண்டுமா?” அதற்கு அந்தத் தாய் கூறியிருக்கிறார் “அவரை தண்டித்தால் என்னைப் போலவே இன்னும் ஒரு தாய் வேதனைப்படுவார. மகனை இழந்த துக்கம் எனக்குத் தெரியும். என்னைப் போல இன்னும் ஒரு தாயும் துக்கப்படக் கூடாது. எனவே அவரைக் கொல்ல வேண்டாம் மாறாக என்னுடைய மகன் உயிரோடு இருந்திருந்தால் இப்பொழுது எனக்கு என்னென்ன சேவைகளைச் செய்வானோ அவற்றை இக்குற்றவாளி எனது வீட்டில் வந்து இருந்து எனக்கு செய்ய வேண்டும்” என்று. குற்றவாளியும் அவருடைய குடும்பமும் அதை ஏற்றுக்கொண்டு அதன்படி குற்றவாளி வாரத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் அந்தத்தாய்க்கு சேவை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக மேற்படி வளவாளர் கூறியிருக்கிறார்.இக்கூட்டத்தில் பங்குபற்றிய வவுனியாவைச் சேர்ந்த ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் அவரை நோக்கி பின்வருமாறு கேட்டிருக்கிறார் “அதே தீர்ப்பையே கணவனை இழந்த ஒரு இளம் பெண்ணுக்கும் வழங்க முடியுமா?” என்று.
இக்கேள்விக்கு வளவாளரிடம் பதில் இருக்கவில்லை. அவர் மட்டுமல்ல ஜெகான் பெரேரா போன்ற லிபரல் ஜனநாயக வாதிகள் நிலைமாறுகால நீதி பற்றி வகுப்பு எடுக்கும் பொழுது தண்டனைக்கு பதிலாக மன்னிப்பை அல்லது தண்டனைக்கு பதிலாக நிவாரணத்தை ஆதரித்து கருத்துக்களை தெரிவிப்பதுண்டு. ரணில் விக்கிரமசிங்கவும் அதைத்தான் தெரிவித்திருக்கிறார் .
மேற்சொன்ன தென்னாபிரிக்க உதாரணத்தில் குறைந்தபட்சம் ஒரு விசாரணை நடந்திருக்கிறது. அங்கு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கு விசாரிக்கும் அதிகாரம் இருந்தது. துப்பறியும் அதிகாரமும் இருந்தது. ஆனால் இலங்கைத் தீவில் அப்படி ஒரு விசாரணைக் குழு இன்னமும் உருவாக்கப்படவில்லை. விசாரணைகளின்றி குற்றச் செயல்களை மன்னிக்க வேண்டும் என்று ரணில் கேட்கிறார், ஜெகான் பெரேரா கேட்கிறார் , லிபரல் ஜனநாயகவாதிகள் கேட்கிறார்கள்.
இந்த இடத்தில் கடந்த ஆண்டு தென் ஆபிரிக்காவிற்கு இலங்கையில் இருந்து சென்ற ஒரு கள ஆய்வுக்குழுவைப் பற்றிக் குறிப்பிடவேண்டும்.இக்குழுவில் மூன்று இனத்தவர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தார்கள். தென்னாபிரிக்காவின் சம்பந்தப்பட்ட எல்லா இடங்களுக்கும் இக்குழு சென்றது. சம்பந்தப்பட்ட பெரும்பாலானவர்களை இக்குழு சந்தித்தது. தென்னாபிரிக்காவின் பெரும்பாலான உல்லாசப்பயண வழிகாட்டிகள் மன்னிப்பை வலியுறுத்தி போதித்தார்கள். ஒரு பகுதி கறுப்பின மக்களும் மன்னிப்பை ஆதரிக்கும் ஒரு போக்கைக் காண முடிந்தது. ஒரு முன்பள்ளியில் ஓர் இளம் ஆசிரியை மன்னிப்பை ஆதரித்துப் போதனைகள் செய்தார். இது தொடர்பாக அன்றைய நாள் இரவு மேற்படி குழுவினர் கூடி கதைத்தார்கள். அப்பொழுது குழுவில் அங்கம் வகித்த ஒரு கிறிஸ்தவ மதகுரு பின்வருமாறு கேட்டார் “மன்னிப்பது என்பதும் உரிமைதான். சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு மன்னிக்கும் உரிமையைக் கூட தரவில்லை. அவ்வாறானதொரு நிலையில் வீதியால் போகும் ராணுவ வீரனை பிடித்து இழுத்துக்கொண்டு வந்து இந்தா பிடி மன்னிப்பு என்று நாங்கள் கொடுப்பதா? அவர்கள் எங்களிடம் மன்னிப்பை கேட்கவில்லை, குற்றம் புரிந்ததையும் ஏற்றுக்கொள்ளவில்லை”என்று.
இதுதான் உண்மை தமிழ் மக்களுக்கு மன்னிக்கும் உரிமையும் தரப்படவில்லை. ஏனெனில் உண்மைகளைக் கண்டறியும் உரிமையற்ற ஒரு மக்கள் கூட்டத்திற்கு அவ்வுண்மைகளைக் கண்டறிவதற்கான விசாரணைகள் மறுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்திற்கு மன்னிக்கும் உரிமையும் இருக்க முடியாது. கிழக்கைரோப்பாவில் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொண்ட ஒரு நீதிபதி தெரிவித்திருப்பது போல “உண்மையை வெளிப்படையாகப் பேசுவது என்பதே நீதியைக் கண்டறியும் பொறிமுறையின் ஒரு பகுதிதான்”. எனவே மன்னிப்பதற்கான உரிமை எனப்படுவது உண்மையை வெளிப்படையாக பேசுவதற்கான உரிமையோடு பிரிக்க இயலாதபடி பிணைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த வாரம் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கான ஒரு பிரேரணையை முன் நகர்த்தியதாக தெரிகிறது. ஆனால் இக்கட்டுரை எழுதப்படும்நாள் வரையிலும் அது வெற்றிபெறவில்லை.
2013 இல் மகிந்தவால் உருவாக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகளில் மொழிபெயர்ப்பாளர்களே அதிகாரத் தோரணையோடு நடந்து கொள்வதாகவும் விசாரணைகளின் போது சலிப்படைந்து பாதிக்கப்பட்ட மக்களையும் சோரச் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்படி ஒரு விசாரணையின் போது (வேலனையில்?) விசாரணை அதிகாரி காணாமல் ஆகப்பட்டவரின் தாயை நோக்கி மிஞ்சியிருக்கும் மற்றொரு பிள்ளைக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் பதவி வழங்கலாம் என்று உறுதி கூறுவதைக் காட்டும் ஒரு காணொளி வெளியாகி இருந்தது.
பரணகம காணாமல்போன பிள்ளைக்காக சமுர்த்தி உத்தியோகத்தர் பதவியைக் கொடுத்தார். ஆனால் தென்னாபிரிக்காவில் மன்னிப்புக்கு ஈடாக விடுதலை கொடுக்கப்பட்டது. அங்கே அடக்கப்பட்டிருந்த கறுப்பின மக்கள் அரசியல் அர்த்தத்தில் விடுதலை பெற்றார்கள். அந்த விடுதலையே ஒரு பெரிய நீதிதான். எனவே மண்டேலா நீதி விசாரணைகளை அதிகம் வலியுறுத்தவில்லை. விடுதலைக்கு ஈடாக அவர் மன்னிப்பை வழங்கினார். ஆனால் ஈழத்தமிழர்களின் விடயத்தில் கம்பெரலய கிராம எழுச்சித்திட்டத்தைத் தொடக்கிவிட்டு மன்னிப்பை கேட்கிறாரா ரணில்?