சொல்லும் செயலும் தமிழரசியலும் ?

 

ஈழவேந்தன் இப்பொழுது கனடாவில் இருக்கிறார். அவர் முன்பு நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த பொழுது கிளிநொச்சியில் ஒரு சர்ச்சை எழுந்தது. ஈழவேந்தன் நாடாளுமன்றத்தில் ஆவேசமாக எதிர் தரப்பைச் சாடுவார். ஆனால் நாடாளுமன்ற கன்ரீனில் யாரை எதிர்த்து பேசினாரோ அவரோடு உட்கார்ந்திருந்து தேநீர் அருந்துவாராம். இது தொடர்பில் கிளிநொச்சிக்கு யாரோ முறைப்பாடு செய்திருக்கிறார்கள். இக்காலகட்டத்தில் ஈழவேந்தன் என்னை சந்தித்த பொழுது நான் அவரிடம் சொன்னேன் “மிதவாத அரசியல் என்றால் அப்படித்தான். ஆயுதப் போராட்டம் எதிரியின் இருப்பை அழிக்க நினைக்கும். ஆனால் மிதவாத அரசியல் அப்படியல்ல. எதிரியின் இருப்பை ஏற்றுக் கொள்ளும். பல்வகைமையின் மீது கட்டியெழுப்பப்படுவதே ஜனநாயக அரசியல். எனவே இதில் அரசியல் எதிரியோடு அமர்ந்து தேனீர் அருந்துவதை சபை நாகரீகமாக ஏற்றுக் கொள்ள முடியும்  ” என்று.

ஆனால் அரசியல் எதிரிகளோடு தேநீர் அருந்துவது வேறு வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களிப்பது வேறு. வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து ஆவேசமாக உரையாற்றி விட்டு அந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்காமல் விடுவது வேறு. ஏனெனில் நாடாளுமன்ற அரசியலில் உரைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. அதைவிட முக்கியத்துவம் வாக்கெடுப்புக்கு உண்டு. வாக்கெடுப்பில் யார் பக்கம் நிற்கிறோம் யாரை ஆதரிக்கிறோம் யாரை எதிர்த்து வாக்களிக்கிறோம் என்பதில் குறிப்பிட்ட கட்சியின் கொள்கை நிலைப்பாடு தெளிவாக வெளிப்படுத்தப்படும்.

இந்த அடிப்படையில் சிந்தித்தால் நடந்து முடிந்த வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விட்டது ஒரு அகமுரண். இது தொடர்பில் கூட்டமைப்பு பின்வருமாறு விளக்கம். கூறுகிறது “ கோட்டாபய அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மிக மோசமானது என்பதை அது சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அன்றே நாம் ஊடகங்களுக்குத் தெரிவித்து விட்டோம்.அதன் பின்னர் சபையில் நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதும், அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின்போதும் அதை எதிர்த்து நாம் உரையாற்றினோம். கோட்டாபய அரசின் மிக மோசமான வரவு – செலவுத் திட்டத்தால் எந்தப் பயனும் தமிழருக்கு இல்லை. அதேவேளை, அது சபையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியே தீரும் என்பதும் எங்களுக்கு ஏற்கனவே தெரியும். இந்தநிலையில், வாக்கெடுப்பில் நாம் பங்கேற்று அதை எதிர்ப்பதால் எதுவும் நடக்கபோவதும் இல்லை. அதனால்தான் வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போதும் நாம் பங்கேற்கவில்லை…” இது  கூட்டமைப்பின் கருத்து.

விக்னேஸ்வரன் அவருடைய கூட்டுக்குள் அவர் இது தொடர்பில் கலந்து பேசி முடிவெடுக்கவில்லை என்றே தெரிகிறது. அவர் புதன் கிழமை வெளியிட்ட அறிக்கையை விடாமலே விட்டிருக்கலாம். அவர் பேசிய பேச்சுக்களின் புனிதத்தை அவரே கெடுத்துக் கொண்டார். அவர் பேசிய பேச்சுக்களை அவரே தோற்கடித்து விட்டார். அப்படித்தான் கூட்டமைப்பினரும்.கூட்டமைப்பினர் கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஏகபோகம் வகித்த காலகட்டத்தில் ஆற்றிய உரைகளோடு ஒப்பிடுகையில் விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் கூர்மையாகவும் ஆழமாகவும் பேசினார்கள்.இதனால் தூண்டப்பட்டு ஸ்ரீதரன் சாணக்கியன் உட்பட ஏனையவர்களும் மாற்று அணியை சேர்ந்தவர்களின் பாணியிலேயே உரத்துப் பேச வேண்டிய தேவை ஏற்பட்டது.

குறிப்பாக சாணக்கியனின் பேச்சு ஆயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது; பாராட்டப்பட்டிருக்கிறது. மும்மொழிப் புலமை மிக்க ஒரு இளம் தலைவர் உருவாக்கிவிட்டார் என்று பலரும் கொண்டாடினார்கள். சாணக்கியனின் மும்மொழிப் புலமை பலரையும் கவர்ந்தது. சிங்கள மக்களுக்கு சிங்களத்தில் கூறிய பதில் பரவலாக பாராட்டப்பட்டது. ஆனால் சாணக்கியனும் சிறீதரனும் எனையவர்களும் ஆற்றிய உரைகளின் புனிதம் அவர்களுடைய கட்சி எடுத்த நிலைப்பாட்டால் கெடுக்கப்பட்டு விட்டது. அவர்களும் அவர்களுடைய உரைகளைத் தோற்கடித்து விட்டார்கள். கடந்த நாடாளுமன்றத்திலும் சிறிதரன் இவ்வாறு ஒரு வரவு செலவுத் திட்டத்தில் வாக்களித்துவிட்டு மனச்சாட்சியை இழந்து வாக்களித்தோம் என்ற தொனிப்பட விளக்கம் கூறியிருந்தார். இப்பொழுதும் அதே விளக்கந்தானா? இது விடயத்தில் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளோடு கலந்து பேசி முடிவெடுக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டும் உண்டு.டெலோ இயக்கம் பாதுகாப்பு அமைச்சு மீதான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்தது.

வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றால் அதன் அர்த்தம் அதை எதிர்க்கவும் விரும்பவில்லை ஆதரிக்கவும் விரும்பவில்லை என்பதே. அதாவது இரண்டுங்கெட்டான். மேலும் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப் பட்டபின் நடந்த உத்தியோகபூர்வ விருந்துபசாரத்தில் சம்பந்தர் மட்டும் கலந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் கூட்டமைப்பு தனது வாக்காளர்களுக்கு வெளிப்படுத்தும் செய்தி என்ன?

அரசாங்கத்தை எதிர்ப்பதால் ஒரு பயனும் இல்லை அவர்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் வரவுசெலவுத் திட்டத்தை எப்படியும் நிறைவேற்றியே தீருவார்கள் என்று கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும்  கூறுகின்றார்கள்.எதிர்ப்பதால் பலனில்லை என்றால் எதிர்த்துப் பேசி மட்டும் என்ன பலன்? அடுத்த நாள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வருவதா? அல்லது வாக்கு வங்கியைப் பாதுகாப்பதா? ஆவேசமாக எதிர்த்து உரை நிகழ்த்தியபின் வாக்கெடுப்பில் எதிர்க்கவில்லை என்பது குழப்பமான  நிலைப்பாடே.

இதுவிடயத்தில் கூட்டமைப்பை விடவும் விக்னேஸ்வரனுக்கே பொறுப்பு அதிகம். தனது அரசியல் அடித்தளத்தை அதிக பட்சம் அறநெறிகளின் மீது கட்டியெழுப்பியிருக்கும் அவர் கூட்டமைப்பின் நேர்மைக் குறைவைச் சுட்டிக்காட்டியே அக்கட்சியிலிருந்து விலகினார். எனவே இந்த விடயத்தில் அவர் தன்னுடைய நிலைப்பாட்டை தன்னுடைய பேச்சுக்கு முரண்பாடு இல்லாத விதத்தில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.இது கஜேந்திரகுமார் அணி அவருக்கு எதிராக வைக்கும்  குற்றச்சாட்டுகளுக்களை நிரூபிப்பதாக அமைந்து விடுமா?

இது விடயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒன்றுதான் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே வேறுபாடு இல்லாத ஒரு முடிவை எடுத்து எதிர்த்து வாக்களித்தது. எனவே அது பேசிய பேச்சுக்கள் இப்பொழுதும் அவற்றின் புனிதத்தை இழக்கவில்லை.அதேசமயம் கூட்டமைப்பு மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் பேச்சுக்கும் செயலுக்கும் இடையில் இருக்கும் முரண்பாடு பின்வரும் அடிப்படைக் கேள்விகளை  எழுப்புகின்றது.

முதலாவது கேள்வி- இவ்வாறு சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் வேறுபாடு உள்ள ஓர் அரசியற் சூழ்நிலையில் கொள்கை அடிப்படையிலான கூட்டுக்களை உடனடிக்குக் கற்பனை செய்ய முடியுமா ?

கேள்வி இரண்டு- கொள்கை அடிப்படையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்பது கடந்த பத்தாண்டுகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. எனவே குறைந்தபட்சம் விவகார மையக் கூட்டுக்களையாவது உருவாக்கலாம் என்று சிந்திக்கும் ஒரு பின்னணியில் அதற்குரிய வாய்ப்புகளும் குறைவா?

ஆம். வரவுசெலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் தமிழ் கட்சிகள் நடந்துகொண்ட விதம் கொள்கை ரீதியாகத் தமிழ் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதில் இருக்கக்கூடிய சவால்களின் பருமனைக் காட்டுகிறது. மட்டுமல்ல விவகாரங்களை மையப்படுத்தி தந்திரோபாயக் கூட்டுக்களை அல்லது சமயோசிதக் கூட்டுக்களை உருவாக்குவதில் இருக்கக்கூடிய வரையறைகளையும் அது உணர்த்துகிறது.

எனினும் இப்பொழுதுதான் விவகார மையக் கூட்டுக்களைக் கட்டியெழுப்புவதர்கான தேவை அதிகரித்திருக்கிறது எனலாம். ஏனெனில் வழுவழுக்கும் கட்சிகளை ஏதாவது ஒரு பொறுப்புக் கூறும் பொறிமுறைக்குள் கட்டிபோட வேண்டிய தேவை முன்னரை விட அதிகரிப்பதை இது உணர்த்துகிறதா?

புதிய யாப்புருவாக்கம்; ஐ.நாவை எதிர் கொள்ளல் உள்ளிட்ட வெளிவிவகார நடவடிக்கைகள் எல்லாவற்றுக்கும் ஒரு பொதுக் கட்டமைப்பும் பொதுப் பொறிமுறையும் அவசியம்.விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் கூறுவது போல அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும் அவ்வாறு ஒரு பொதுப் பொறிமுறை அவசியம்.அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிக்காமல் விடுவதால் அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுவித்துவிடும் என்று நம்புவது அரசியல் அப்பாவித்தனம்.

அரசாங்கம் ஒரு புதிய யாப்பை கொண்டு வரப்போவதாக ஒரு தோற்றத்தைக் காட்டுகிறது. இந்த யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட வேண்டும். ஆனால் அதுவிடயத்தில் தமிழ்த்தரப்பு ஒருமித்த நிலைப்பாட்டோடு இல்லை. எனவே தீர்வு விடயத்திலும் வெளிவிவகாரக் கட்டமைப்பும் உட்பட முக்கிய விவகாரங்கள் பொறுத்தும் விவகார மையக்  கூட்டுக்களை உருவாக்க வேண்டும். அதன் மூலம் தனியோட்டம் ஓடக்கூடிய கட்சிகளை பொறுப்புக்கூற வைக்க வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தீர்வை முன்வைக்கும். ஒவ்வொரு கட்சியும் வருகிற வெளிநாட்டு தூதுவரோடு ஒவ்வொரு விதமாகக் கதைக்கும். வரும் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ஜெனிவாக் கூட்டத்தொடரிலும் தமிழ்த் தரப்பு தனித் தனி நிலைப்பாட்டோடு அங்கு போய் நிற்கும்.இது தமிழ் மக்கள் ஒரு தேசமாக இல்லை என்ற செய்தியை வெளித் தரப்புக்கு கொடுக்கும். அதுமட்டுமல்ல அதிக தொகை பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டமைப்பு தனியோட்டம் ஓடித் தமிழ் மக்களையும் தோற்கடித்து தன்னையும் தோற்கடித்து விடும்.

எனவே வரவுசெலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு என்பது ஒருபுறம் தமிழ் ஐக்கியம் குறித்த சந்தேகங்களை அவநம்பிக்கைகளை அதிகப்படுத்தி யிருந்தாலும்கூட இன்னொருபுறம் குறைந்தபட்சம் விவகார மையக்  கூட்டுக்களையாவது உடனடிக்கு உருவாக்க வேண்டிய கட்டாயத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறது என்பதே சரி.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *