ஐநாவுக்குக் கடிதம் எழுதும் கட்சிகள் ?

 

கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி கூட்டாகக் கடிதம் அனுப்பிய கட்சிகள் இம்முறை ஐநாவுக்கு தனித்தனியாகவும் கூட்டாகவும் கடிதங்களை அனுப்பியுள்ளன. கடந்த ஆண்டு அனுப்பிய கடிதத்தின் விளைவாக என்ன நடந்தது? அக்கூட்டுக் கடிதத்தில் பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்று மூன்று கட்சிகளும் கேட்டிருந்தன. கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் அவ்வாறு பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகும் விடயத்தில் உண்மையாக உழைத்த கட்சி எது? இதுவிடயத்தில் தமிழ்க் கட்சிகள் முதலில் தமது மக்களுக்கு பொறுப்புக்கூறுமா?

உக்ரைன் விவகாரம் மீண்டும் ஒரு தடவை ஐநாவின் கையாலாகாத்தனத்தை நிரூபித்துக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், ஏற்கனவே ஐநாவின் கையாலாகாத்தனத்தால் கைவிடப்பட்ட ஈழத்தமிழர்கள், ஐநாவை நோக்கி சலிப்பின்றி கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இம்முறை கூட்டமைப்பு தனியாக ஒரு கடிதம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனியாக ஒரு கடிதம், ஐந்து கட்சிகளின் கூட்டு தனியாக ஒரு கடிதம், என்று மூன்று முக்கிய கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

இதில் சம்பந்தர் கையெழுத்திட்ட கடிதம் எனைய கட்சிகள் எல்லாவற்றுக்கும் முதலில் அனுப்பப்பட்டுவிட்டது. அக்கடிதம் ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது. ஆனால் கடந்த திங்கட்கிழமை 5 கட்சிகள் இணைந்து ஐநாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கின்றன. அக்கடிதத்தில் ஒரு பொது வாக்கெடுப்புக்கான கோரிக்கையும் காணப்படுகிறது. கூட்டமைப்பு அனுப்பிய கடிதத்தில் அவ்வாறான கோரிக்கைகள் எவையும் கிடையாது.

ஆனால் மேற்கண்ட கடிதத்தை அனுப்பிய ஐந்து கட்சிகளில் இரண்டு இப்பொழுதும் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கின்றன. கடந்த செப்டம்பர் மாத ஐநா கூட்டத்தொடரை முன்னிட்டும் அவை இ்வ்வாறு ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்பின. அக்கடிதத்தை வரையும் முயற்சிகளை தொடக்கத்தில் ஆதரித்த மாவை சேனாதிராஜா கடைசி வேளையில் அதில் கையெழுத்து வைப்பதை தவிர்த்து விட்டார். அதேசமயம் ஏனைய கட்சிகள் தமிழரசுக் கட்சிக்காக காத்துக் கொண்டிராமல் ஒரு கடிதத்தை கூட்டாக அனுப்பி வைத்தன. அது அப்பொழுது ஒரு சர்ச்சையாக எழுந்தது. கூட்டமைப்பு இரண்டாக உடையப் போகிறதா என்ற கேள்விகளையும் எழுப்பியது. எனினும் சம்பந்தர் நிலைமைகளை ஒருவாறு சமாளித்து கூட்டமைப்பை பாதுகாத்தார்.

இப்பொழுது மறுபடியும் அதே பிரச்சினை.முன்பு நடந்தது போலவே இந்த முறையும் மாவை சேனாதிராஜா ஐந்து கட்சிகளின் முயற்சிகளில் ஒத்துழைத்ததாகத் தெரியவருகிறது.ஆனால்.அவர் கடிதத்தில் கையெழுத்திடவில்லை. அதேசமயம் சம்பந்தர் கூட்டமைப்பின் சார்பாக ஒரு கடிதத்தை தயாரித்தபோது அதில் பங்காளி கட்சிகளின் பங்களிப்பை கேட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. முதல் வரைபை வரைந்த பின் அதை பங்காளிக் கட்சித் தலைவர்களிடம் அனுப்பி அவர்களுடைய கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு இறுதிவரைபை தயாரித்து ஐநாவுக்கும் அனுப்புவது என்று சம்பந்தர் சிந்தித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பங்காளிக் கட்சிகளைக் கேட்டால் அவர்கள் வேறுவிதமாக கூறுகிறார்கள். சம்பந்தர் கூட்டமைப்பின் தலைவர் எழுதுவதாக ஒரு கடிதத்தை எழுதி விட்டு அதைத் தமது பார்வைக்கு அனுப்பியதாகவும், அது பங்காளிக் கட்சித் தலைவர்கள் கையொப்பம் வைப்பதற்கான ஒரு கடிதம் அல்லவென்றும் கூறுகிறார்கள்.

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரே கூட்டுக்குள் இருந்து இருவேறு கடிதங்கள் அனுப்பப்படுவது என்பது கூட்டமைப்பு ஒரு இறுக்கமான கூட்டாக இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. இந்தியாவுக்கு கடிதம் எழுதும் விடயத்திலும் முதலில் ஒத்துழைக்காத தமிழரசுக் கட்சி கடைசிக் கட்டத்தில் ஒத்துழைத்தது. ஆனால் ஒன்றாகக் கடிதம் எழுதிவிட்டு தனியாக சம்பந்தரும் சுமந்திரனும் இந்தியத் தூதுவரை கொழும்பில் சந்தித்திருக்கிறார்கள். மேலும்,ஒரு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்போடு இணைந்து தமிழரசுக் கட்சி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறது. இது தவிர பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டத்தை தமிழரசுக் கட்சி தனியாக முன்னெடுக்கின்றது.

அதாவது ஒரே கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி தனியாக ஓடுகிறது. ஏனைய கட்சிகள் கூட்டமைப்பில் இருந்து பிரிந்த கட்சிகளோடு இணைந்து வேறு ஒரு தனியோட்டம் ஓடுகின்றன. அதேசமயம் கூட்டமைப்பு என்ற பெயரிலும் கடிதம் அனுப்பப்படுகிறது. இது எதனைக் காட்டுகிறது? கூட்டமைப்பின் தலைமை இறுக்கமாக இல்லை என்பதைத்தானே? பங்காளிக் கட்சிகள் தனியோட்டம் ஓடும்போது அதனைத் தடுத்து கூட்டமைப்பின் கட்டுக்கோப்பைப் பேண ஏன் சம்பந்தரால் முடியவில்லை?

அவர் உடல் ரீதியாக மற்றவர்களில் தங்கியிருக்கும் ஒருவராக மாறிவிட்டார். கூட்டமைப்பு அவருடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதைத்தான் கடந்த ஓராண்டுக்கு மேலான நிலைமை நமக்கு உணர்த்துகிறது.தலைமை இருக்கத்தக்கதாக ஏனைய முக்கியஸ்தர்கள் கருத்துக் கூறுவதும், தலைமைக்கு எதிராக பகிரங்கமாக கருத்துக் கூறுவதும், பங்காளிக் கட்சிகள் வெளியில் உள்ள கட்சிகளோடு இணைந்து ஒரு கூட்டுக்குப் போவதும், கடிதங்களை அனுப்புவதும் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.

ஆம்.தமிழ் மக்களுடைய அரசியலில் அண்மைக்காலமாக ஏற்படும் குழப்பங்கள் எல்லாவற்றுக்கும் பிரதான காரணம் ஸ்திரமற்ற தலைமைத்துவம்தான். கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தர் கூட்டமைப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாதவராக காணப்படுகிறார். அதேபோல மூத்த கட்சியும் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவும் தனது தலைமைத்துவத்தை நிரூபிக்க முடியாதவராகத் தெரிகிறார். கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற தோல்விக்குப் பின் தன்னை மீளக் கட்டியெழுப்ப முடியாத ஒருவராகவே தொடர்ந்தும் காணப்படுகிறார்.குறிப்பாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து நிகழும் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் மாவை சேனாதிராஜாவின் இயலாமையும் வழுவழுத்த தன்மையும் வெளிப்படக் காணலாம்.கூட்டமைப்புக்கு வெளியே நிகழும் ஐந்து கட்சிகளின் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் மாவை உறுதியான முடிவுகளை எடுக்கவில்லை. ஒன்றில் தமிழரசுக் கட்சியை தனியாகப் பலப்படுத்துவது என்று முடிவெடுக்க வேண்டும். அல்லது ஐந்து கட்சிகளோடு இணைந்து அக்கூட்டைப் பலப்படுத்த வேண்டும். அவர் இரண்டையுமே செய்யவில்லை.

ஆனால் அதற்காக ஐந்து கட்சிகளின் கூட்டோ அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ கூட்டமைப்புக்கு மாற்றாக பலமடைந்து வருவதாக இக்கட்டுரை கருதவில்லை. ஐந்து கட்சிகளின் கூட்டுக்குள் இணைத் தலைவர்கள்தான் உண்டு. எனினும்,அது உருகிப் பிணைந்த ஒரு பலமான கூட்டாகத் தெரியவில்லை.அது கூட்டமைப்புக்கு எதிரான ஓர் ஐக்கியம். எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சி கூட்டமைப்புக்குள் இருந்து பங்காளிக் கட்சிகளை நீக்கக்கூடிய வாய்ப்புக்களை ஊகித்து முன்னெச்சரிக்கையோடு உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு அது.

அதுபோலவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தன்னை ஒரு பிரதான கட்சியாக வளர்த்தெடுக்கும் வழிவரைபடத்தை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. மணிவண்ணனின் வெளியேற்றம் அக்கட்சியை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பது இனிவரும் தேர்தல்களில்தான் தெரியவரும். அக்கட்சி எப்பொழுதும் பிரதான நீரோட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு அரசியலை செய்யும் ஒரு கட்சியாகத்தான் தொடர்ந்தும் காணப்படுகிறது. தமிழ் மக்களின் அரசியலை நிர்ணயிக்கும் ஒரு மிகப் பலமான கட்சியாக வளர வேண்டும் என்ற வழி வரைபடம் அக்கட்சியிடம் இருக்கிறதா? ஏனைய கட்சிகள் காலப்போக்கில் சிதையும்போது தான் படிப்படியாக பலமடையலாம் என்று அக்கட்சி நம்புகின்றதா?

கடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டமைப்புக்கு மாற்றாக ஒரு அணியை பலப்படுத்த முயற்சித்த செயற்பாட்டாளர்களுக்கு அது நன்கு தெரியும். ஒரு மாற்று அணியை அப்பொழுது மிகப் பலமாகக் கட்டியெழுப்பக்கூடிய வாய்ப்புக்கள் கிடைத்தன. அவ்வாறு ஒரு மாற்று அணி மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் விதத்தில் ஒரு பலமான அணியாக கட்டியெழுப்பப்பட்டு இருந்திருந்தால் கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு பெருமளவுக்கு தோற்கடிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. கூட்டமைப்பு இழந்த ஆறு ஆசனங்களில் மூன்றைத்தான் மாற்று அணி பெற்றது. ஏனைய மூன்றும் தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிராத கட்சிகளிடம் சென்றன. இவ்வாறு வாக்குகள் சிதறியதற்கு பிரதான காரணம் மாற்று அணி ஒரு பலமான கூட்டாகத் திரட்சியுறாமைதான்.

எனவே இப்பொழுது படம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. கூட்டமைப்பின் தலைமையும் பலமாக இல்லை, தமிழரசுக் கட்சியின் தலைமையும் பலமாக இல்லை, ஐந்து கட்சிகளின் கூட்டும் உருகிப்பிணைந்த ஐக்கியமாகத் தெரியவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்படி நிலைமைகளை வெற்றிகரமாக கையாண்டு தன்னை ஒரு பெரும் கட்சியாக வளர்த்துக்கொள்ளும் என்று நம்பத்தக்கதாக கடந்த 10 ஆண்டுகளும் அமையவில்லை. தொகுத்துப் பார்த்தால் கடந்த 12 ஆண்டுகளில் தமிழ் கட்சிகள் உடைந்து கொண்டே போகின்றன. இப்பொழுது ஏற்பட்டிருக்கும் ஐந்து கட்சிகளின் கூட்டு இனிமேல்தான் அதன் பலத்தை நிரூபித்துக்காட்ட வேண்டும்.

இது மிகப் பலவீனமான ஒரு நிலைமை. கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பம் தொடர்ந்து நீடித்தால், மிகக்குறிப்பாக சம்பந்தர் முழுமையாகத் தலைமை தாங்க முடியாத ஒரு நிலைமை தோன்றினால், கூட்டமைப்பு சிதையக்கூடிய வாய்ப்புகளே அதிகமாக தெரிகின்றன. தமிழரசுக் கட்சி தனியாகவும் பங்காளிக் கட்சிகள், ஐந்து கட்சிகளின் கூட்டுக்குள்ளும் இணைந்து செயற்படக்கூடிய வாய்ப்புக்களே அதிகரித்து வருகின்றன. அதாவது அரங்கில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் எவையும் தமிழ் மக்களை இப்போதைக்கு ஒரு தேசமாக திரட்டப்போவதில்லை என்று பொருள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *