சங்குச் சின்னம்  யாருக்குச்  சொந்தம்?

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு வரை அது தேர்தல் திணைக்களத்திடம் இருந்தது. ஜனாதிபதி தேர்தலின் போது அது தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் பொதுச் சின்னமாக இருந்தது. பொதுக் கட்டமைப்பு ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சி அல்ல. எனவே அதற்கு சின்னம் கிடையாது. அதனால் பொது வேட்பாளர் ஆகிய அரியநேத்திரன் பொதுக்கட்டமைப்பின் சார்பாக ஒரு சுயேச்சை வேட்பாளராகத்தான் களமிறங்கினார்.

ஜனாதிபதி தேர்தல் சட்டங்களின்படி ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் உறுப்பினர் களமிறங்கலாம். அல்லது முன்னாள் அல்லது இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுயேச்சையாக களமிறங்கலாம். அந்த அடிப்படையில் தான் அரியநேத்திரன் களம் இறக்கப்பட்டார். ஒரு சுயேட்சை வேட்பாளராகிய அவர் சங்குச் சின்னத்தை விருப்பத் தெரிவாக முன் வைத்தார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பொழுது, கொழும்பில், பொது வேட்பாளருக்கு விக்னேஸ்வரனின் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் உதவினார். பொது வேட்பாளருக்கு உதவியாக இருந்த தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகளும் விக்னேஸ்வரனின் கட்சிப் பிரதிநிதியும் இணைந்து சங்குச் சின்னத்தை விருப்பத் தெரிவாக கேட்டார்கள். ஏனைய சுயேச்சை வேட்பாளர்கள் அச்சின்னத்தைக் கேட்காதபடியால் அது பொது வேட்பாளருக்கு வழங்கப்பட்டது. இப்படித்தான் சங்குச் சின்னம் பொது வேட்பாளருக்குக் கிடைத்தது.

தேர்தல் முடிந்ததும் அது மீண்டும் அரசாங்கத்திடமே சென்று விட்டது.அது அரசாங்கத்திடம் இருந்த ஒரு காலகட்டத்தில்தான் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று அழைக்கப்படும் கூட்டணி சின்னத்தை தேர்தல் திணைக்களத்திடம் கோரிப் பெற்றது.

ஆனால் சங்குச் சின்னத்துக்கு வாக்களித்த இரண்டு லட்சத்து 26 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களும் அந்த சின்னத்தை வெற்றி பெற வைப்பதற்காக தமிழர் தாயகம் எங்கும் இரவு பகலாக உழைத்த தொண்டர்களும் அது தம்முடைய சின்னம் என்று நம்புகிறார்கள்.சட்டப்படி அது அவர்களுடைய சின்னம் இல்லை என்ற போதிலும் மக்கள் ஆணையைப் பொறுத்தவரை அது அவர்களுடைய விருப்பச் சின்னம் ஆகும்.

அது மட்டுமல்ல பொது வேட்பாளரை முன்நிறுத்துவதற்கான தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பொழுது ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்பட்டது. தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் தமிழ் தேசிய கட்சிகள் ஏழுக்கும் இடையிலான அந்த உடன்படிக்கையின் ஐந்தாவது பந்தி பின்வருமாறு கூறுகிறது… “தமிழ் பொது வேட்பாளராக நிறுத்தப்படுபவரும் அவருக்கான தேர்தல் சின்னமும் தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான ஒரு குறியீடாக மட்டுமே கருதப்பட வேண்டும்”.

அதாவது பொது வேட்பாளரின் பொதுச் சின்னம் எனப்படுவது தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான ஒரு குறியீடாகும். இங்கு பொதுநிலைப்பாடு என்று கூறப்படுவது தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் நிலைப்பாடு ஆகும்.

எனினும் சங்குச் சின்னத்தின் வெற்றிக்காக உழைத்தது பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் மட்டும் அல்ல. அவற்றுக்கும் அப்பால் யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சி பிரமுகர்கள் பலர் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சங்குச் சின்னத்துக்காக உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக சரவணபவன் போன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்குக்காக உழைத்திருக்கிறார்கள்.

கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சி சங்கை ஆதரித்தது. மட்டக்களப்பில் தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் சங்குச் சின்னத்துக்கான பிரச்சார மேடைகளில் வெளிப்படையாகத் தோன்றினார்கள். அவர்களோடு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரமுகராகிய அருண் தம்பி முத்துவும் சங்குக்காக உழைத்தார். இவை தவிர தேர்தல் பகிஸ்கரிப்பை ஏற்றுக் கொள்ளாத சைக்கிள் கட்சி ஆதரவாளர்கள் கூட சங்குக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

மேலும் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பொதுச் சபைக்குள் அடங்காத வெவ்வேறு மக்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ சங்குச் சின்னத்தின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள்.முக்கியமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகமதிகம் உழைத்தார்கள்.புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவியின்றி சங்குச் சின்னத்தைக் கட்டியெழுப்பியிருக்கவே இயலாது.எனவே சங்கு பெற்ற வாக்குகள் எனப்படுகின்றவை தமிழ்த்தேசியத் திரட்சிக்கு கிடைத்த வாக்குகள். அவை பொதுக் கட்டமைப்புக்கும் அப்பால் தமிழ் கூட்டு உணர்வோடு உழைத்த அனைவருக்கும் கிடைத்த வாக்குகள்.

எனவே அது தமிழ்க் கூட்டு உணர்வுக்கு கிடைத்த வாக்கு. தமிழ் தேசியத் திரட்சிக்கு கிடைத்த வாக்கு. அதற்கு பொதுக் கட்டமைப்பு மட்டும் உரிமை கோர முடியாது.சங்கு, தமிழ்க் கூட்டுணர்வைப் பிரதிபலித்த ஆகப்பிந்திய சின்னம்.அது இப்பொழுதும் தமிழ் மக்களின் சுவர்களில் மங்காதிருக்கும் சுவரொட்டிகளிலும்,வாக்களித்த மக்களின் மனங்களிலும் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு சின்னம் 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு எனப்படுவது தமிழ் பொது நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் முழுமையான ஒரு கூட்டு அல்ல. அது தமிழ் தேசிய பொதுக்கூட்டமைப்புகள் காணப்பட்ட ஒரு கூட்டு மட்டுமே. தமிழ் மக்கள் பொதுச்சபை தேர்தலில் நேரடியாக பங்கேற்காவிட்டால் தமிழ்த் தேசிய பசுமை இயக்கமும் தமிழ் மக்கள் கூட்டணியும் பொதுக் கட்டமைப்பாக தேர்தலை எதிர்கொள்ளப் போவதில்லை என்று டில்கோ விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற சந்திப்பில் தெளிவாகக் கூறியிருந்தன. இந்நிலையில் தமிழ் மக்கள் பொதுச்சபை, தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் தமிழ் மக்கள் கூட்டணி போன்ற மூன்று தரப்புக்களும் இல்லையென்றால்,அது பொதுக் கட்டமைப்பு அல்ல.ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும் தன்னை பொதுக் கட்டமைப்பு என்று அழைத்துக் கொள்ள முடியாது. எனவே பொதுச் சின்னத்துக்கு உரிமை கோர முடியாது.

ஆனால் அவர்கள் தேர்தல் திணைக்களத்திடம் விண்ணப்பித்து சங்கு சின்னத்தை பெறுவதை சட்டரீதியாக தடுப்பதற்கு அப்புரிந்துணர்வு உடன்படிக்கை உதவாது. ஏனெனில் அது ஒரு சுயேச்சை வேட்பாளரின் சின்னம் என்ற அடிப்படையில் அந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு சட்ட வலு கிடையாது. தார்மீக வலு மட்டுமே உண்டு.எனினும் தமிழ் மக்கள் பொதுச் சபை ஒரு சட்டத்தரணியூடாக தேர்தல் திணைக்களத்திற்குத் தனது ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தது.

ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தார்மீகத்  தளத்தில் நின்ற சிந்தித்தால் அந்த சின்னத்தை பயன்படுத்தக் கூடாது. சட்டப்படி அவர்களை யாரும் தடுக்க முடியாது. ஆனால் தார்மீக தளத்தில் அவர்கள் அதற்கு உரிமை கோர முடியாது.

சட்டப்படி அது இப்பொழுது ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக இருக்கலாம். ஆனால் தமிழ் தேசிய கூட்டுணர்வைப் பொறுத்தவரை அது தமிழ் மக்களின் மனங்களில் ஐம்பதே நாட்களில் பதிக்கப்பட்ட ஒரு சின்னம். எப்படி இந்திய அமைதிகாக்கும் படை நிலை கொண்டிருந்த காலகட்டத்தில், ஈரோஸ் இயக்கத்தின் சுயேச்சை சின்னமாகிய வெளிச்ச வீடு சின்னம் மிகக்குறுகிய காலகட்டத்துக்குள், மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் தமிழ் மக்களின் மனங்களில் பதிக்கப்பட்டதோ அப்படித்தான் சங்கும் மிகக் குறுகிய காலகட்டத்துக்குள் தமிழ் மக்களுடைய மனங்களில் ஆழப் பதிக்கப்பட்டது. எனவே தமிழ் கூட்டுணர்வின் சின்னமாக மாறிய அதனை தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்புக்குள் காணப்படும் கட்சிகளின் கூட்டு ஒன்று பயன்படுத்துவது என்பது தமிழ் கூட்டுணர்வை அவமதிப்பது.தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீட்டை அவமதிப்பது.அக்குறியீட்டுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை அவமதிப்பது.

நன்றி- https://athavannews.com/ (திருத்தப்பட்ட வடிவம்)

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • Rupan , 07/10/2024 @ 7:56 AM

    Nicely written. The worst thing is the said political party who joined and supported the common candidate with conditions under common symbol later changed their own symbol and got common symbol. This is very ugly and low level politics compare with the clean and genuine political leaders in early period.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *