ஜனாதிபதித் தேர்தல்:தமிழ்மக்கள் அறிவுபூர்வமாக முடிவெடுப்பார்களா?

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் குறிப்பாக.கணித விஞ்ஞானப் பிரிவுகளைச் சேர்ந்த கல்வி நிலையங்களுக்கு என்னென்ன பெயர்கள் என்று பார்த்தால், விஞ்ஞான மண்டபம்; விஞ்ஞான உலகம்; விஞ்ஞான சமுத்திரம்; விஞ்ஞான நீரோட்டம்.விஞ்ஞான மூலை,இணைந்த கணிதத்தில் வெற்றி,மிஸ்டர்  பிஸிக்ஸ்,……இப்படியே நீண்டு கொண்டு போகும்.இப்பெயர்கள் யாவும் கணிதம் விஞ்ஞானம் போன்ற பாடங்கள் தொடர்பான ஒரு சமூகத்தின் அபிப்பிராயங்களைக் காட்டுபவை. இந்நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் படிக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தின் முன்னணி தனியார் பாடசாலைகள் சிலவற்றில் கணித அல்லது விஞ்ஞானப் பட்டதாரி ஒருவர்தான் அதிபராகவும் இருக்கலாம் என்று எழுதப்படாத விதி உண்டு. கணிதம் விஞ்ஞானம் ஆகிய பாடங்களைக் குறித்து தமிழ் சமூகத்தில் உயர்வான மதிப்பீடுகள் உண்டு. இவ்வாறு கணித விஞ்ஞானத்  துறைகளில் அதிகம் நாட்டமுள்ள ஒரு சமூகமானது தன் நடைமுறை வாழ்வில் எல்லாவற்றிலும் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறைகளை கொண்டிருக்க வேண்டும்.வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கணிதமாக அணுக வேண்டும். ஆனால் தனது பாடத் தெரிவுகளில் விஞ்ஞானத்துக்கும் கணிதத்துக்கும் முக்கிய இடத்தைக் கொடுக்கும் ஒரு சமூகம், தனது அரசியல் தெரிவுகளில் எப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து வருகின்றது?

உடுப்பு வாங்கப் போனால் புடவைக் கடையில் எத்தனை மணித்தியாலத்தை எமது பெண்கள் செலவழிக்கிறார்கள்? சந்தையில் நாளாந்தம் காய்கறி வாங்கும் பொழுதும் எவ்வளவு கவனமாகத் தெரிந்தெடுக்கிறோம் ? தக்காளிப் பழத்தை நிறம் பார்த்து; அழுத்திப் பார்த்து ஒவ்வொன்றாக தெரிகிறோம் .கத்தரிக்காயை நிறம் பார்த்து;அழுத்திப் பார்த்து ஒவ்வொன்றாகத் தெரிகிறோம். இவ்வாறு அன்றாட வாழ்வில் தெரிவு என்று வரும் பொழுது கவனமாகவும் நேரமெடுத்தும் பொருட்களை வாங்கும் ஒரு மக்கள் கூட்டம், தனது அரசியலில் அவ்வாறு நிதானமாகவும் கணிதமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் சிந்திக்கின்றதா?

அவ்வாறு விஞ்ஞானபூர்வமாக சிந்தித்திருந்தால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும்? எப்பொழுது எடுத்திருந்திருக்க வேண்டும் ?

தபால் மூல வாக்களிப்புக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்கள்தான் உண்டு. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சி எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தன் முடிவை அறிவிக்கவில்லை. இன்னொரு கட்சி பகிஸ்கரிக்கின்றது. ஏனைய கட்சிகள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துகின்றன. இதில் எது விஞ்ஞானபூர்வமான முடிவு ?

அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியக்கூறுகளைக் கையாள்வது என்பது ஒரு கணித ஒழுக்கம். அப்படிப் பார்த்தால் தமிழ் மக்கள் தம் முன்னால் இருக்கும் எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆழமாகப் பரிசீலித்து முடிவுகளை எடுக்கின்றார்களா?

தமது கட்சிகளும் தலைவர்களும் எடுக்கும் முடிவுகளை குறித்து தமிழ் மக்கள் கேள்வி கேட்கின்றார்களா? நீங்கள் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுத்தீர்கள் என்று தமது தலைவர்களிடம் அவர்கள் கேள்வி கேட்பதுண்டா ?

சந்தையில் காய்கறிகளைத் தெரியும்பொழுது தெரிவு பிழைத்தால் உணவு வயிற்றில் நஞ்சாகிவிடும். பள்ளிக்கூடத்தில் பாடத் தெரிவு பிழைத்தால் கல்வி நரகமாகிவிடும். உடுப்புக் கடையில் தெரிவு பிழைத்தால் குறிப்பிட்ட நபரின் தோற்றக் கவர்ச்சி குறைந்து விடும். ஆனால் அரசியலில் தெரிவு பிழைத்தால் என்ன நடக்கும் ?

2009 க்கு பின் வந்த முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த மூத்த தலைவராகிய சம்பந்தர் தீர்க்கதரிசனம் மிக்க ஒரு முடிவை எடுத்திருக்கலாம். அதில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்திருந்தால் தமிழ் அரசியலின் போக்கே வேறு திசையில் போயிருந்திருக்கும். சம்பந்தரின் பூதவுடல் தந்தை செல்வா கலையரங்கில் கூரை பதிந்த அந்த சிறிய மண்டபத்தில் விசிறிகளின் கீழே தனித்து விடப்பட்ட அவலம் ஏற்பட்டிருக்காது. ஓர் அரசனைப் போல அவருக்கு ராஜ மரியாதை கிடைத்திருந்திருக்கும்.

ஆனால் சம்பந்தர் ஒரு முதிய தலைவராகவும் அனுபவத்தில் பழுத்த தலைவராகவும் அன்று முடிவெடுக்கவில்லை. போருக்குத் தலைமை தாங்கிய ஒரு தளபதிக்கு வாக்களிப்பது என்று முடிவெடுத்தார்..

அந்தத் தளபதி,போருக்கான அரசியல் தீர்மானத்தை எடுத்து போரை வழிநடத்திய ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராகத் திரும்பியிருந்தார்.அது போர் வெற்றிக்கு உரிமை கோருவதில் வந்த போட்டி. அவ்வாறு ராஜபக்ஸக்களுக்கு எதிராகத் திரும்பிய தளபதியை வைத்து ராஜபசக்களை-அவர்கள் தமிழ் மக்களைக் கொன்று குவித்தனர் என்பதற்காக அல்ல,மாறாக-அவர்கள் சீனாவை நோக்கிச் சாய்கிறார்கள் என்பதற்காக,அரங்கில் இருந்து அகற்ற முயற்சித்த நாடுகளின் கொள்கைத் தீர்மானங்களைப் பின்பற்றி தமிழ்த் தரப்பு முடிவெடுத்தது. அதன் விளைவாக சரத் பொன்சேகாவோடு ஒரு உடன்படிக்கையும் செய்து கொள்ளப்பட்டது. விளைவாக அந்தத் தேர்தலில் சரத் பொன்சேகா மட்டும் தோற்கவில்லை, சம்பந்தரும் தோற்கத் தொடங்கினார். சம்பந்தரின் வழியும் தோற்கத் தொடங்கியது.

தமிழ் மக்களை அழிக்கும் போருக்கான அரசியல் தீர்மானத்தை எடுத்து, அதற்காக அனைத்துலக சமூகத்தை தமிழ் மக்களுக்கு எதிராக ஒன்று திரட்டிய ஒரு குடும்பத்துக்கு எதிராக வாக்களிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, தமிழ் மக்கள் அந்த குடும்பத்தின் ஆணையை ஏற்றுப் போரை முன்னெடுத்த ஒரு தளபதிக்கு வாக்களித்தார்கள். போருக்குத் தலைமை தாங்கிய ஒரு தளபதிக்கு வாக்களித்துவிட்டு, அந்தப் போரை ஒரு இன அழிப்பு போராகவும் அங்கே போர் குற்றங்கள் நடந்தன என்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் நடந்தன என்றும் அனைத்துலக சமூகத்தின் முன் போய் நின்று முறையிடுவது ஒரு புத்திசாலியான சமூகம் செய்யக்கூடிய அரசியலா?

சரத் பொன்சேகா இப்பொழுதும் தனது தேர்தல் பிரச்சாரங்களில் தான் மனித குண்டினால் தாக்கப்பட்ட பொழுது பயணித்த காரை ஒரு காட்சிப் பொருளாகக் காவித்திருக்கிறார். ஆனால் அவருடைய பிரச்சாரக் கூட்டங்களுக்கு சிங்கள மக்கள் வருவது குறைந்து விட்டது. அந்தக் காருக்கு இருந்த கவர்ச்சி குறைந்துவிட்டது.

ஆனால் அந்தப் போரை இன அழிப்பு போர் என்று குற்றம் சாட்டும் ஒரு மக்கள் கூட்டம், அப்போரை முன்நின்று நடாத்திய ஒரு தளபதிக்கு, அந்தப் போரில் வெற்றி கொண்டதற்காகவே ஃபீல்ட் மார்ஷல் விருது பெற்ற ஒரு தளபதிக்கு, அந்தப் போர் நடந்து கிட்டத்தட்ட ஓராண்டு கழிந்திருந்த ஒரு காலகட்டத்தில், அந்தப் போரினால் அகதியானவர்கள் அப்பொழுதும் நலன் புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில், அந்த போரினால் காணாமல் போனவர்களை உறவினர்கள் தேடிப் போராட முடியாதிருந்த ஒரு காலச் சூழலில், அந்தப் போரில் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில்,கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்தது.

கணிதத்தை விஞ்ஞானத்தை விரும்பிக்  கற்கும் ஒரு மக்கள் எடுக்கக்கூடிய புத்திசாலித்தனமான முடிவா அது? அல்லது தீர்க்கதரிசனமும் துணிச்சலும் மிக்க முடிவா அது?

நிச்சயமாக இல்லை. அந்த ஜனாதிபதித் தேர்தலை சம்பந்தர் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டுக் காயங்களுக்கு ஊடாகவும் கூட்டு மன வடுக்களுக்கு ஊடாகவும் சிந்தித்து இருந்திருந்தால் முடிவு வேறு விதமாக அமைந்திருந்திருக்கும். அவருடைய இறுதி ஊர்வலத்தில், தந்தை செல்வாவின் ஊர்வலத்தில் திரண்டதுபோல ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்திருப்பார்கள்.

ஆனால் நாடாளுமன்றத்தில் ஒப்பீட்டளவில் அதிக தமிழ் ஆசனங்களுக்குத் தலைமை தாங்கிய ஒரு தலைவர் அரசியலைக் கணிதமாக மதிப்பீடு செய்யத் தவறினார்.முடிவுகளை விஞ்ஞானபூர்வமாக எடுக்கத் தவறினார். குறைந்தபட்சம் முடிவுகளை இதயபூர்வமாக எடுத்திருந்தால்கூட நிலைமை வேறுவிதமாக அமைந்திருக்கும். அன்று எடுக்கப்பட்ட விஞ்ஞானபூர்வமற்ற முடிவுகளின் விளைவுதான் இன்றுள்ள தமிழ் அரசியலாகும்.

இவ்வாறாக கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் தமிழ் அரசியலில் எடுக்கப்பட்ட புத்திபூர்வமற்ற விஞ்ஞானபூர்வமற்ற முடிவுகள் அனைத்தையும் தமிழ் மக்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். காய்தல் உவத்தல் இன்றிப் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.தமது வாழ்வின் அன்றாட தேவைகளுக்காக சுண்டிப் பார்த்து பொருட்களை வாங்கும் ஒரு மக்கள் கூட்டம், அரசியலிலும் அவ்வாறு சுண்டிப் பார்த்து முடிவெடுக்குமா? தமிழ்ப் பொது வேட்ப்பாளருக்கு திரண்டு சென்று வாக்களிக்குமா?

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *