வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி

“1939 இல்  சேர்ச்சிலிற்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே காணப்பட்டது. அவர் எப்படிப்  பிரதமரானார்? நெருக்கடி காரணமாகவே அவர் பிரதமரானார்.நானும் அதனையே செய்திருக்கின்றேன்.வரலாற்றைப் படியுங்கள்”.இது ரணில் விக்ரமசிங்க கூறியது. ஆறாவது தடவையாக பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றபின்  ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு அவர் கூறிய பதில் இது.உண்மை. வரலாற்றைப் படிக்க வேண்டும்தான். வரலாறு மிகவும் முக்கியம் பிரதமரே. ஆனால் அது புலிகேசி நாயகன் வடிவேலு கூறிய அர்த்தத்தில் அல்ல. ரஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய லெனின் கூறிய அர்த்தத்தில்தான். லெனின் கூறுகிறார் “வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி” என்று.

கடந்த 9ஆம் திகதி அது நிரூபிக்கப்பட்டது.13 ஆண்டுகளுக்கு முன் மகிந்த எந்த நாட்டை சிங்கள மக்களுக்கு வென்று கொடுத்து மண்ணைத் தொட்டு வணங்கினாரோ,அதே நாடு அவரை வடக்கு கிழக்கை நோக்கி துரத்திவிட்டிருக்கிறது.அவருடைய சொந்த ஊரிலேயே,அவருடைய சொந்த தேர்தல் தொகுதியிலேயே,அவருக்கும் அவருடைய வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை.அவரைப் போலவே அவருடைய ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை. அப்படியென்றால் அவர்கள் பெற்றுக்கொடுத்த வெற்றி எங்கே?தேசிய பாதுகாப்பு,தேசிய பாதுகாப்பு என்றெல்லாம் சொன்னார்கள்.ஆனால் அவர்களுடைய சொந்த கிராமத்திலேயே அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய் விட்டதே? அவரை இரண்டாவது துட்டகைமுனுவாகக் கொண்டாடிய மக்களே கிழட்டு மைனா என்று கூறி ஓட ஓட விரட்டும் ஒரு நிலை ஏன் தோன்றியது? ஏனென்றால் வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி.

எந்தப் பேர வாவியில் அறுபத்தியாறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் அரசியல்வாதிகளை பண்டாரநாயக்கா ஏவிவிட்ட குண்டர்கள் தூக்கி எறிந்தார்களோ, அதே பேர வாவியில் மகிந்த ராஜபக்ச அனுப்பிய குண்டர்களை போராட்டக்காரர்களும் பொதுமக்களும் தூக்கி எறிந்திருக்கிறார்கள்.66 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்களை,சிங்களக் குண்டர்கள் தூக்கி எறிந்தார்கள். இப்பொழுது சிங்கள குண்டர்களை சிங்கள மக்களே தூக்கி எறிந்திருக்கிறார்கள்.”பூமியிலே சூரியனுக்கு கீழே நூதனமானது  எதுவுமேயில்லை”.ஏனென்றால் வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி.உலகிலேயே போலீசாரின் வாகனங்களை பொதுமக்கள் சோதனை செய்யும் ஒரு காட்சி இலங்கைத்தீவில்தான் கடந்த வாரம் இடம்பெற்றது.கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் வழிகள் தோறும் பொதுமக்கள் ஆங்காங்கே நின்று வாகனங்களைச் சோதித்தார்கள். மஹிந்தவோ அவருடைய ஆட்களோ தப்பிச் சென்றால் பிடிப்பதற்காக அந்தச் சோதனை. அந்தவழியாக வந்த போலீஸ் வாகனங்களும் சோதிக்கப்பட்டன.அதுதான் ஆசியாவின் அதிசயம்.

கடந்த சுமார் 45 நாட்களுக்கு மேலாக தெற்கில் நடந்துவரும் மக்கள் எழுச்சிகளின்போது, இரண்டு தரப்புக்கள் சாட்சிகளாக விலகிநிற்கின்ன்றன. முதலாவது சாட்சி தமிழ் மக்கள்.பெரும்பாலான தமிழ் மக்கள் நடப்பவற்றை விலகி நின்று சாட்சிகளாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் இருந்தும் கொழும்பிலிருந்தும் ஒப்பீட்டளவில் மிகச்சிறு தொகையினர் காலிமுகத்திடலை நோக்கி சென்றார்கள்.ஆனால் பொதுப் போக்கு எனப்படுவது தமிழ்மக்கள் சாட்சியாக நிற்கிறார்கள் என்பதுதான்.

இரண்டாவது சாட்சி,படைத்தரப்பு.நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் தரப்புக்களில் ஒன்று.ஆனால் அது தொடர்ந்தும் சாட்சியாகவே காணப்படுகிறது.படையினரும் போராட்டக்காரர்களும் முட்டிக் கொண்ட சந்தர்ப்பங்கள் மிக அரிது.சில புறநடைகளைத் தவிர பெரும்பாலும் படைத்தரப்பு ஒரு மௌன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கமும் படைத்தரப்பை போராட்டக்காரர்களுடன் மோதவிடத் தயாரில்லை.போராடும் மக்களும் படைத்தரப்புடன் மோதுவதைத்  தவிர்க்கிறார்கள்.குறிப்பாக காலிமுகத்திடலில் குழுமிநிற்கும் புதிய தலைமுறை அதை இயன்றளவுக்கு தவிர்க்கிறது. ராஜபக்ச குடும்பத்தின் மீது அவர்கள் வைப்பது திருட்டு குற்றச்சாட்டுதான். போர்க்குற்றச்சாட்டு அல்ல. அது போர்க் குற்றச்சாட்டாக இருந்தால் அதன் தர்க்கபூர்வ விளைவாக படையினரையும் குற்றவாளியாகக் காணும்.எனவே புதிய தலைமுறையும் அக்குற்றச்சாட்டை தவிர்க்கிறது.போராட்டம் தொடங்கிய புதிதில் இளம் ஊடகவியலாளர்கள் அமைப்பு ஒன்று அவ்வாறு போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் இரண்டு சுலோக அட்டைகளை ஏந்தியிருக்கக் காணப்பட்டது.ஆனால் பொதுப்போக்கு என்னவென்றால் அவர்கள் படைத்தரப்போடு முரண்பட விரும்பவில்லை என்பதுதான்.கோட்டா கோகமாவில் ரணவிரு குடில் ஒன்று உண்டு. அதுவும் படைத்தரப்புடன் மோதலை தவிர்க்க கூடியது.அதாவது கோட்டாவை வீட்டுக்குப் போ என்று கேட்கும் புதியதலைமுறை படைத்தரப்புடன் மோதுவதை தவிர்க்கின்றது.

படைத்தரப்பும் தென்னிலங்கையில் போதிசத்துவர்கள் போல நடந்துகொள்கிறது.அவசரகாலச் சட்டத்தின்கீழ் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதி கொண்ட தனிநபர் மற்றும் பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. அரசியல்வாதிகளின் சொத்துக்களை அழித்து நாசமாக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களை படைத்தரப்பு எதுவும் செய்யவில்லை.அல்லது படைத்தரப்பு அந்த பகுதிகளுக்குள் வருவதை தவிர்த்தது. ஆர்ப்பாட்டக்காரர்களின் கூட்டுக்கோபம் ஓரளவுக்கு அடங்கத்  தொடங்கும்போதே கண்டதும் சுட உத்தரவு வழங்கப்பட்டது. அதாவது மஹிந்த மூட்டிய தீ அவருடைய ஆதரவாளர்களின் சொத்துக்களின் மீது பரவி சேதத்தை விளைவிப்பதை அவருடைய சகோதரர் ஒரு கட்டம் வரையிலும் விட்டுப் பிடித்தார் என்று எடுத்துக் கொள்ளலாமா?ஏனென்றால் “இளவரசர்கள் நண்டுகளை போன்றவர்கள்,தகப்பனைத் தின்னிகள்”என்று சாணக்கியர் கூறியிருக்கிறார்.இங்கேயும் வரலாறு ஒரு கண்டிப்பான கிழவிதான்.

இப்பொழுது ரணில் ஒரு தற்கொலைப் படை மாலுமியாக மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை பொறுப்பெடுத்திருக்கிறார்.அவருடைய வயதைப் பொறுத்தவரை இதுதான் அனேகமாக அவருடைய கடைசி ஆட்டம். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள். அதிலிருந்து தப்பியோட முயல்வார்கள். ராஜபக்சவின் தோல்விக்கு தாமும் பங்காளிகளாக மாற ஏனைய கட்சிகள் தயாராக இல்லை.அதனால்தான் பொருத்தமான இடைக்கால ஏற்பாட்டை ஏற்படுத்த முடியாமல் இருந்தது.இப்போது ரணில் துணிச்சலாக அந்தக் கப்பலை பொறுப்பெடுத்திருக்கிறார்.அவரை தெரிந்தெடுத்ததன் மூலம் கோத்தாபய தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாத்திருக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். தமது சொந்த தேர்தல் தொகுதியில் தங்க முடியாமல் ஓடி ஒளிக்கும் அரசியல்வாதிகளை பாதுகாப்பதற்கு ரணில் தேவைதான்.தமிழ்ப்பகுதிகளில் ஒளித்துக்கொண்டிருக்கும் ராஜபக்சக்களை தலைநகரத்துக்கு மீண்டும் கொண்டுவர ரணில் தேவைதான். ஆனால் இந்த இடத்தில் ரணிலுக்கு பதிலாக ஒரு அணில் இருந்தாலும் அது ஒரு சிங்கள பௌத்த கொயிகம அணிலாக இருந்தால்,அதுவும் ராஜபக்சக்களைப் பாதுகாக்கும்தான்.அதுவும் ராஜபக்சக்களின் மீது திருட்டுக் குற்றச்சாட்டைத்தான் சுமத்தும். போர்குற்றச்சாட்டை அல்ல.

2018இல் யாரைக் கவிழ்த்து மஹிந்த, பின்கதவின் மூலம் உள்ளே நுழைய முற்பட்டாரோ இப்பொழுது அவரிடமே தனது பதவியைக் கொடுத்துவிட்டு தமிழ் பகுதியில் தஞ்சமடைந்திருக்கிறார்.மகிந்த ராஜபக்சவின் நண்பராகிய ஒரு தமிழர் சில நாட்களுக்கு முன் முகநூலில் பின் வருமாறு பதிவிட்டிருந்தார்” அறுபத்தி ஒன்பது லட்சம் வாக்குகளை பெற்றவர் கடற்படை முகாமில் இருக்கிறார். இரண்டு லட்சம் வாக்குகளை பெற்றவர் அலரி மாளிகையில் இருக்கிறார்” என்று.ஏனெனில் வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி.அவள் அப்படித்தான் தீர்ப்பு வழங்குவாள்.

நிலத்தில் வீழ்த்தப்பட்ட டி.ஆர்.ராஜபக்சவின் சிலை

 

ரணில் ஒரு வலிய சீவன். ஒரு கல அங்கியான அமீபாவைப் போல ஒரு பக்கம் நசுக்க இன்னொரு பக்கத்தால் நெளிந்து,சுளித்துக் கொண்டு வருவார். இப்பொழுது வந்துவிட்டார்.அவருக்கு இரட்டை வெற்றி. முதல் வெற்றி,அரசியல் எதிரிகளான ராஜபக்சக்களே அவரை செங்கம்பளம் விரித்து வா என்று அழைத்தது.இரண்டாவது வெற்றி,உட்கட்சி எதிரியான சஜித் பிரேமதாசவைக் கீழேதள்ளியது.ஆனால்,நாட்டின் பொருளாதாரச் சீரழிவுக்கு ரணிலும்  ஒரு காரணம்தான்.

நாட்டுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஒரு இடைக்கால ஏற்பாடு. அது ஒரு ஸ்திரமான ஏற்பாடாக இருந்தால்தான் பொருளாதாரத்தைத் திட்டமிடலாம். ஐ.எம்.எப் போன்றவற்றை அணுகலாம்.எனவே ஒரு இடைக்கால ஏற்பாடாகத்தான் ரணில் உள்ளே வந்திருக்கிறார்.அதன்மூலம் அவர் தன்னை நிரந்தரமாக்க முயற்சிப்பார்.இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறியது போல அவர்,வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.இலங்கைத்தீவைப் போன்று பொருளாதார நெருக்கடிகளை அனுபவித்த அர்ஜென்டினா கிரேக்கம் ஆகிய நாடுகளில் அரசாங்கங்கள் அடிக்கடி மாறின.நிதியமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள். நாடு மறுபடியும் நிமிர்ந்து நிற்க பல மாதங்கள் எடுத்தன. உதாரணமாக,கிரேக்கத்தில் ஐந்துஆண்டுகளுக்குள் எழு தடவைகள் அரசாங்கம் மாறியது.அர்ஜென்டினாவில் ஐந்து தடவைகள் அரசாங்கம் மாறியது. ஐந்து தடவைகள் நிதியமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள்.பசில், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டபொழுது அவருக்கு எழு தலைகள் என்று அவருடைய ஆதரவாளர்கள் படங்கட்டினார்கள்.ஆனால் அவரால் எந்த மந்திர மாயத்தையும் செய்ய முடியவில்லை.முடிவில் சிங்களமக்கள் அவரை காகம் என்று கூறி இகழ்ந்து வீட்டுக்கு அனுப்பினார்கள்.பசிலுக்கு பின்வந்த நிதியமைச்சர்,அலி சப்ரி. அவர் பதவியேற்ற உடனேயே அதனை வேண்டாம் என்று கூறிவிட்டார். எனினும் அவருடைய ராஜினாமாவை கோட்டாபய ஏற்றுக்கொள்ளவில்லை. ரணில் இப்பொழுது பொறுப்பெடுத்திருப்பது ஒரு தோல்வியை.அதை வெற்றியாக மாற்ற வேண்டும். இல்லையென்றால் தோல்வியோடு ஓய்வுபெற வேண்டியிருக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ரணில் தேசியப்பட்டியல்மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.அவருடைய முதலாவது உரையிலேயே அவர் சுட்டிக்காட்டிய விடயம் ஐ.எம்.எஃப்ஐ நோக்கிப் போகவேண்டும் என்பதுதான்.இப்பொழுது அவர்தான் பிரதமர்.அவர் மேற்கின் செல்லப்பிள்ளை.இந்தியாவும் அவரோடு சுதாகரிக்கும்.எனவே மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை பத்திரமாக கரை சேர்ப்பதா அல்லது கப்பலோடு சேர்ந்து மூழ்கி விடுவதா என்பது அவருடைய தலைமைத்துவத்தில்தான் தங்கியிருக்கிறது.அவர் பதவியேற்றபின் அவரை ஆசீர்வதித்த ஒரு பிக்கு அவருடைய முகத்துக்கு நேரே கூறியதுபோல இந்த ஆபத்தான விளையாட்டில் அவர் தோற்பாராக இருந்தால் பேர வாவியில் யானைகள் குளிக்க வேண்டி இருக்கும். அதாவது மஹிந்த அனுப்பிய குண்டர்களை மக்கள் பேர வாவிக்குள் தூக்கி எறிந்ததைப் போல யானைக் கட்சியையும் தூக்கி எறிவார்கள் என்று அந்த பிக்கு எச்சரித்திருந்தார். உண்மைதான் ஏனென்றால் வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *