போர்க் கால வானொலியில் கேட்ட குரல் 

வானொலி மற்றும் காணொளிப் பாரம்பரியத்தில் ஈழத் தமிழர்கள் மத்தியில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்க முயற்சித்த ஊடகவியலாளர்களில் சத்தியாவும் ஒருவர்.

பொதுவாக தமிழ் ஜனரஞ்சக மேடைகளில் அப்துல் ஹமீட்டின் பாணி ஒரு டெம்ப்ளேட் ஆக மாற்றப்பட்டிருக்கிறது.அவருடைய குரல்,மொழி உச்சரிப்பு, போன்றன பலருக்கு முன்மாதிரியாக கொண்டாடப்படுகிறது.வானொலி காலத்தில் இருந்து காணொளி காலத்துக்கும் அந்தப் பாணி தொடர்ந்து பேணப்பட்டு வருகிறது.

ஜனரஞ்சக வணிக ஊடகக் குரல் அது.தமக்கென்று தனித்துவம் மிக்க குரல் அடையாளத்தையும்  தமக்கேயான தனித்துவமிக்க ஒரு பாணியையும் கொண்டிராத அல்லது அப்படி ஒரு தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று உழைக்காத குரல்வழி ஊடகக் கலைஞர்கள் பெருமளவுக்கு அவ்வாறான பாணிகளைப் பின்பற்றுவதுண்டு.

ஆனால் தங்கள்  தனித்துவமான குரல்,செய்திகூறும் பாணி அல்லது அறிவிக்கும் பணிகளின் மூலம் புதிய படைப்புத்திறன் மிக்க எல்லைகளைத் தொட்ட குரல்வழிக் கலைஞர்களும் அறிவிப்பாளர்களும் செய்தி கூறிகளும் அப்துல் ஹமீதுக்கு முன்னரும் பின்னரும் தமிழில் தோன்றியிருக்கிறார்கள்.

குறிப்பாக அப்துல் ஹமீட்  பிரபல்யமாகிய அதே  இலங்கை வானொலிப் பாரம்பரியத்தில் மயில்வாகனம்,நடேசசர்மா,எஸ்.புண்ணியமூர்தி, விக்னேஸ்வரன்,மதியழகன், கே.எஸ்.ராஜா,சில்வஸ்டர் பாலசுப்ரமணியம், ஜோர்ஜ் சந்திரசேகரன், வீ.பி.தியாகராஜா,சுந்தரலிங்கம்,எஸ்.கே. பரராஜசிங்கம்,நடராஜ ஐயர், சற்சொரூபவதி, நடராஜர்சிவம், ராஜேஸ்வரி  சண்முகம்…..என்று பல்வேறு தினுசான குரல்கள் இருந்தன.தங்கள்  தனித்துவமான குரல் மற்றும் படைப்புத்திறன் மிக்க தனிப் பாணிக்கூடாக  தங்களை நிலைநிறுத்திச் சென்ற பலர் இதிலுண்டு .

இந்தியாவின் ஆகாச வாணியில்  செய்தி வாசித்த சரோஜ் நாராயண சுவாமி, கிருஷ்ணசுவாமி ஜான் சுந்தர்,சங்கரநாராயணன்,பூர்ணம் விஸ்வநாதன்,வெங்கட்ராமன்,பாஸ்கரன்…போன்றவர்களைக் குறிப்பிடலாம். இதை,சரோஜ் நாராயண சுவாமி,கிருஷ்ணசுவாமி ஜான்சுந்தர் ஆகியோர் தங்களுக்கேயான தனித் தினுசான குரல்களை, தனித்து மிளிரும் பாணிகளைக் கொண்டிருந்தார்கள்.

செய்தி வாசிப்பிலும்,பின்னணிக் குரல் தருவதிலும்,அறிவிப்புகளிலும் தனித்துவம் துலங்க வேண்டும் என்று சிந்தித்து படைப்புத்திறனோடு தங்கள் தங்கள் தனித்துவங்களைக் கட்டியெழுப்பிய அறிவிப்பாளர்கள் பிபிசி தமிழ்ச் சேவைக்குள் இருந்தார்கள்.தமிழை தனித்துவமாக உச்சரிப்பது; சுத்தமாக,சரியாக உச்சரிப்பது;இவற்றுடன் தமது குரல்வழி தனித்துவங்கள் ஊடாக ஒரு புதிய படைப்புத்தன்மைமிக்க பாணியைக் கட்டி எழுப்புவது…போன்ற விடயங்களில் தமிழோசை சங்கரும் அவருடைய அணியும்  பல பரிமாணங்களைக் கொண்ட செய்தி கூறிகளை  அறிமுகப்படுத்தியது.

போர்க்காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் கேட்கப்பட்ட வெரிதாஸ் வானொலியின் தமிழ்ச் சேவையும் தனக்கென்று தனித்துவமான சில அறிவிப்பாளர்களை அறிவிப்புப் பாணிகளை கொண்டிருந்தது.

பொதுப் புத்தியைக் கவர்கின்ற,அநேகமாக அடிவயிற்றிலிருந்து எழுகின்ற,நெகிழும் வணிக ஜாலங்கள் மிக்க குரல்களைக் கொண்டாடும்  ஜனரஞ்சக ஒளி,ஒலிபரப்புத் துறைப் பாரம்பரியத்தில் பிபிசி தமிழோசை,ஆகாசவாணி போன்றன தனிச்சிறப்புமிக்க பாணிகளை அறிமுகப்படுத்தின.

இதில் குறிப்பாக பிபிசி தமிழோசையின் விளையாட்டுச் செய்தி வாசிப்பாளராக இருந்த எட்வேர்ட் சாம்ராஜ் தனித்துவமானவர்.அவர் டெல்லியை சேர்ந்தவர் என்று ஒரு ஞாபகம். அவர் செய்திகூறும் விதம் அலாதியானது;விரைவானது; நீட்டி முழங்காதது.விளையாட்டுச் செய்திகளை அவர் கூறும் பொழுது அதில் ஒரு வேகம் இருக்கும். விறுவிறுப்பு இருக்கும். ஏறக்குறைய நேரடி வர்ணனை போல இருக்கும்.அதைவிட முக்கியம் அவர் செய்தி கூறும் வேகத்துக்கும் பாணிக்கும் ஏற்ப அவர் வசனங்களைத் தேர்வு செய்வார். சொற்களைத் தெரிவு செய்வார். சில சமயங்களில் ஒரு சொல்லே ஒரு வசனமாக இருக்கும்.  கவிதை போல, மந்திரம் போல அவருடைய செய்தி வாசிப்பு இருக்கும்.

தென்கச்சி சுவாமிநாதனின் குரலில்  குழையும் சோர்வு அவருடைய தனி அடையாளம்.சொல்ல வந்ததை சொல்லி முடிக்கும் பொழுது ஒருவித சலிப்போடு நிறுத்துவார்.அந்தச் சலித்த முற்றுப் புள்ளி அவருடைய கவர்ச்சி.

ஒலிபரப்பு,ஒளிபரப்பு துறையில் தகவல் புரட்சி ஏற்படுத்திய புதிய மாற்றங்களின் பின்னணியில்,செய்தியை சுடச்சுட வேகமாகப் பரிமாற வேண்டிய,கூற வேண்டிய தேவை உருவாக்கியது.குறிப்பாக பண்பலை வரிசைகளில் வரும் அறிவிப்பாளர்கள் புதிய பாணிகளை கைக்கொள்ள வேண்டிய வணிக நிர்பந்தம் அதிகம்.

விளைவாக,வேகமாகக் கூறப்படும் செய்தியை சுருக்கமானதாக எழுத வேண்டிய தேவை வந்தது.பின்னணியில் துரத்தும் இசையின் வேகத்தோடு செய்திகளைச் சுடச்சுட சொல்லவேண்டிய தேவை இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது.வெற்றி பெற்ற காணொளி ஊடகங்கள் பலவும் தங்களுக்கென்று தனித்துவம் மிக்க வேகமாகச் செய்தி கூறும் பாணியை விருத்தி செய்து வருகின்றன.

எனினும் காணொளிக் கலாச்சாரத்தில் ஈழத்தமிழர் மத்தியில் தமது குரலுக்காகவும் சுத்தமான மொழி உச்சரிப்புக்காகவும் தமது தனித்துவமான பாணிக்காகவும் விரும்பிக் பார்க்கப்படுகின்ற அல்லது கேட்கப்படுகின்ற அறிவிப்பாளர்கள் அல்லது பின்னணிக் குரல் தருபவர்கள் எத்தனை பேர் உண்டு? ஈழத் தமிழர்கள் மத்தியில் இதுதொடர்பாக செழிப்பான ஒரு தொழில்சார் பாரம்பரியம் வளரவில்லை. குறிப்பாக வானொலிக் காலத்தில் இருந்த படைப்புத்திறன் காணொளிக் காலத்துக்கு போதிய அளவுக்கு கடத்தப்படவில்லை.காணொளிக் காலம் அதிகம் வணிகப் பண்பு மிக்கதாகவே மேலெழுகின்றது.

வானொலிப் பண்பாட்டில் இருந்து காணொளிப் பண்பாட்டுக்கு மாறி வந்த  ஒரு சூழலில், போர்க்கால வானொலியிலும் காணொளியிலும் சத்தியா தனது தனித்துவத்தை துருத்திக் கொண்டு வெளிக்காட்டும் விதத்தில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்க முயற்சித்தவர்.

அவரைப்போலவே தவபபாலனின் குரலுக்கும் விஸ்வலிங்கத்தின் குரலுக்கும்  தனித்துவங்கள்  இருந்தன.தவபாலன் மோடிப்படுத்தி,அலங்காரமாகக் கதைக்க மாட்டார்.இயல்பாகக்  கதைப்பார்.சாய் பல்லவியின் முகத்தைப் போல.விஸ்வலிங்கம் என்ற புனை பெயரைக் கொண்ட கேசவன் தனக்கென்று தனிப் பாணியொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்று படைப்புத் திறனோடு  சிந்தித்தவர்.

2003க்குப்பின் அவர் ஊடகத் துறையிலிருந்து ஒதுங்கியிருந்தார். இறுதிக் கட்டப் போரில் அவருடைய குரல் கேட்கவில்லை. வானொலிக் காலத்திலிருந்து காணொளிக் காலத்துக்கு மாறியபொழுது,சத்யா 2009இற்குப் பின்னரான காணொளிக் கலாச்சாரத்தோடு தன்னைப் பொருத்திக்கொள்ள விரும்பவில்லை.

இயல்பாகவே  தன்முனைப்புடையவர்.சிரித்துச் சிரித்து தனக்குச் சரியெனப்பட்டதை நேரே சொல்லக்கூடிய இயல்புடையவர்.தனது குரல்,தனது தனித்துவமான பாணி என்பவற்றுக்குடாக தமிழ் மக்களை வந்தடைந்தார்.குரலை அநேகமாக எழுச்சி நிலையிலேயே வைத்திருப்பார்.சிலசமயம் அது செயற்கையாக இருக்கும்.ஆனாலும் அதிலிருக்கும் செருக்கு ரசிக்கத்தக்கதாக இருக்கும்.நவீன தமிழில், தொழில் தத்துக்கள் அதிகமிருந்த ஓரூடகச் சூழலில், செருக்குடன் செய்தி வாசித்த குரல் அது. 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *