சூரிய ஒளி,காற்று போன்றவற்றை மின்சக்தியாக மாற்றும் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்கள் உலகம் முழுவதும் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த விடயத்தை மக்கள் மத்தியில் பரவலாக்குவது என்பது வரவேற்கத்தக்கது. குறிப்பாக மக்கள் தங்கள் வீட்டின் கூரையில் விழும் ஒளியை அவ்வாறு மின்சக்தியாக மாற்ற வேண்டும் என்று சிந்திப்பது வரவேற்கத்தக்கது. சூழலுக்கு மாசில்லாத நீண்ட கால நோக்கிலான மீளப் புதுப்பிக்கும் எரிசக்தித் திட்டங்களை மக்கள் மயப்படுத்த வேண்டியது அவசியம்.அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
ஆனால் வீட்டின் கூரை என்பது வீட்டின் அழகியல் முழுமையைத் தீர்மானிக்கும் ஒர் அம்சம். கூரை எப்படி இருக்க வேண்டும் என்பது வீட்டின் முகப்புத் தோற்றத்தின் அழகியல் முழுமையைத் தீர்மானிக்கின்றது.எனவே வீட்டின் கூரைக்கென்று ஓர் அழகியல் பெறுமதி உண்டு.வீடு கட்டும் பொழுது அதற்கென்று ஒரு கட்டடப் படக் கலைஞரை அணுகினால் கூரைக்குள்ள அழகியல் முக்கியத்துவத்தை அவர் கூறுவார்.எனவே வீட்டின் கூரை என்பது மழையிலிருந்தும் வெயிலில் இருந்தும் வீட்டைப் பாதுகாப்பது மட்டுமல்ல.அதற்கென்று ஒர் அழகியல் பெறுமதி உண்டு. ஆனால் பெருமளவுக்கு படித்த தமிழர்களே அந்த அழகியல் பெறுமதியைவிட அதில் கிடைக்கக்கூடிய லாபம்தான் முக்கியம் என்று சிந்திக்கின்றார்களா ?
கூரையில் சூரிய மின்கலங்களை பொருத்தினால் அதன்மூலம் கிடைக்கும் லாபமானது ஒரு கட்டத்தில் வீட்டின் மின்சார கட்டணத்தை இல்லாமல் செய்கிறது. அடுத்தடுத்த கட்டங்களில் அது மாதாந்த வருமானமாக மாறுகிறது. அதாவது சூரியனைக் காசாக்கலாம்.அது நல்லது.ஆனால் காசா? சுற்றுச் சூழலுக்கு நட்பான மின் சக்தியா? வீட்டின் அழகில் தோற்றமா? எது முக்கியம்? அல்லது மூன்றுக்கும் இடையில் சமநிலை காண வேண்டுமா?
படித்த யாழ்ப்பாணத்தவர்கள்கூட வீடுகளைக் கட்டும் பொழுது கட்டிடப் படக் கலைஞர்களை அணுகுவது குறைவு. பெரும்பாலும் வீட்டுக்காரரும் வீட்டைக் கட்டும் ஒப்பந்ததாரரும் அந்த ஒப்பந்ததாரரின் கீழ் வேலை செய்யும் மேசனும்தான் பெருமளவுக்கு கட்டிடப்பட கலைஞரின் வேலையைச் செய்கிறார்கள். அதற்குரிய துறைசார் நிபுணத்துவ அறிவைப் பெறுவதற்கு பெரும்பாலான தமிழர்கள் தயாரில்லை. அதற்கு முதல் காரணம் அவர்களுடைய அழகியல் தரிசனம். இரண்டாவது காரணம் துறை சார் நிபுணத்துவத்தை பெறுவதில் இருக்கக்கூடிய செலவு.பெரும்பாலும் கட்டிடப்பட கலைஞர்கள் வீட்டின் மொத்தக் கட்டுமானத் தொகையில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தைச் சம்பளமாகக் கேட்பார்கள். அதைக் கொடுப்பதற்கு ஒரு பகுதி தமிழர்கள் தயாரில்லை. மூன்றாவது காரணம்,எதிலும் தொழில் சார் அதையதை அதற்குரிய தொழில்சார் நிபுணத்துவத்திற்கு ஊடாக அணுக வேண்டும் என்ற அறிவியல் விழிப்பின்மை.
இது வீட்டைக் கட்டும் குடிமக்களில் தொடங்கி கட்சிகளை நிர்வகிக்கும்; சமூகத்தை நிர்வகிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் என்று எல்லாருக்கும் பொருந்தும்.
இப்படிப்பட்டதோர் சமூகப் பின்னணியில், அண்மை தசாப்தங்களில் தமிழ்ப் பகுதிகளில் வீடுகளைக் கட்டும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதற்குரிய துறைசார் நிபுணத்துவத்தைப் பெறுகிறார்கள் என்பது ஆறுதலான விடயங்களில் ஒன்று. குறிப்பாக அவர்கள் வீட்டைக் கட்டும் வேலையை ஒரு ஒப்பந்ததாரரிடம் கொடுக்கிறார்கள்.ஒப்பந்ததாரரும் அதற்கு வேண்டிய கட்டிடப்பட வரைபடத்தை அதற்குரிய நிபுணர் ஒருவரிடமிருந்து பெறுகிறார்.அதற்குரிய கட்டணத்தை வழங்குகிறார்.இப்படிக் கட்டப்பட்ட பல வீடுகள் ஒப்பீட்டளவில் அழகானவைகளாகவும் நவீனமானவர்களாகவும் எழுந்து வருகின்றன.ஆனால் இவ்வாறு நவீனமாக சிந்தித்து கட்டப்படுகின்ற பல வீடுகளின் கூரைகளில்தான் அண்மை ஆண்டுகளாக அதிகரித்த அளவில் சூரிய மின்கலங்கள் பொருத்தப்படுகின்றன.
சூரிய மின்கலங்களைப் பொருத்தும் பெரும்பாலான வீட்டுச் சொந்தக்காரர்கள் லாபக் கணக்கை மட்டுமே பார்க்கிறார்கள். அதன் மூலம் பசுமை மின்சக்திக்கு தங்கள் பங்களிப்பைச் செய்கிறோம் என்றெல்லாம் எத்தனை பேர் சிந்திக்கிறார்கள்? அதற்கும் அப்பால் தாங்கள் ஒவ்வொரு கல்லாக பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அழகாகத் தோன்ற வேண்டும் என்ற அழகியல் தரிசனம் அவர்களிடமுண்டா?
கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்து அழகாக கட்டிய வீடுகளில் வெளித்தோற்றத்தை தலையில் சோலாரை பூட்டுவதன் மூலம் அவர்கள் அழகற்றதாகி விடுகிறார்கள்.இந்த விடயத்தில் வீட்டில் அழகிய தோற்றமா? அல்லது அந்த அழகிய தோற்றத்தைக் கெடுக்கும் லாபமா? என்ற கேள்வி வரும் பொழுது பல படித்த தமிழர்களே லாபத்தைத்தான் தெரிவு செய்கிறார்கள்.
இதில் இரண்டையும் இழக்காமல் இரண்டுக்கும் இடையே சமநிலையைப் பேணக்கூடிய விதத்தில் சில வீட்டுக்காரர்கள் முகப்புத் தோற்றத்தில் தெரியாதபடிக்கு கூரையில் பின்பக்கத்தில் சூரிய மின்கலத்தைப் பொருத்துகிறார்கள்.அல்லது வீட்டின் வெளித் தோற்றத்துக்கு இடைஞ்சலாக இல்லாதபடி சூரிய மின்கலங்கள் பொருத்தப்படுகின்றன.அங்கெல்லாம் எங்கே சூரிய மின்கலங்களை பொருத்துவது என்பதில் திட்டமிட்ட ஒரு இடத்தெரிவு,அழகியல் தெரிவு உண்டு.அந்தத் தெரிவு பெரும்பாலும் வீட்டின் அழகான தோற்றத்தைக் கெடுக்கக் கூடாது என்ற சிந்தனையில் இருந்து வருகிறது.
அதற்கு அந்த வீட்டின் பின்கூரை பெரியதாகவும் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வீட்டின் அழகைக் கெடுக்காமல் சூரிய மின்கலங்களைப் பொருத்த வேண்டும் என்று சிந்திப்பவர்கள் ஒப்பீட்டளவில் குறைவு.மிக அழகாக திட்டமிட்டு செலவழித்து கட்டப்பட்ட வீடுகளின் உச்சியில் அந்த வீட்டின் முகப்பு தோற்றத்திற்கு பொருத்தமே இல்லாத விதத்தில் தட்டையாக இரண்டாவது கூரை போல நிற்கும் சூரிய மின்கலக் கூரை தமிழ் மக்களின் அழகியல் உணர்வைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றது.
தமது கனவு வீட்டின் அழகை காசுக்காக இழக்கத் தயாராக இருக்கும் ஒரு மனோநிலை என்பது அரசியலும் உட்பட பொதுவாழ்வில் எல்லாவற்றிலுமே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.எது கனவோ அதைப் பாதுகாக்க போகின்றோமா?அல்லது எது லாபமோ அதற்காகக் கனவைக் கைவிடப் போகிறோமா?என்பது இங்கு கேள்வி.இது கனவு வீட்டுக்கு மட்டும் பொருந்தாது.கனவு நாட்டுக்கும்,அதன் அரசியலுக்கும், ஒரு சமூகத்தின் கூட்டுக் கனவுக்கும் பொருந்தும்.
தமிழரசியலில் ஏற்கனவே கனவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளி பாரதூரமான விதங்களில் ஆழமாகிக் கொண்டு போகிறது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.கனவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளி தான் செயல் என்று.ஆனால் தமிழ் அரசியலில் செயல் முனைப்புக் குறைந்து கோஷங்களும் வேஷங்களுமே அதிகரித்து வருகின்றன.
தனது கூரையில் விழும் சூரிய ஒளியை எப்படிக் காசாக்கலாம் என்று வாக்காளர்கள் சிந்திக்கிறார்கள்.அதுபோலவே தனது அரசியலை வைத்து எப்படிச் சம்பாதிக்கலாம் என்று அரசியல்வாதி சிந்திக்கிறார். வீட்டுக் கூரையின் அழகு கெட்டால் அந்த வீட்டுக்காரருக்கு மட்டும்தான் நட்டம். ஆனால் அரசியல் பிழைப்பாக மாறினால் முழுச் சமூகத்திற்கும் தேசத்துக்கும் நட்டம்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை வீடு ஒரு குறியீடு. தமிழ்த் தேசிய அரசியலில் பெரிய கட்சியின் சின்னம் அது.அந்த வீடு இப்பொழுது எப்படி இருக்கிறது? சூரிய மின்கலம் பொருத்தப்பட்டு,அதனாலேயே முகப்புத் தோற்றம் கெட்ட வீட்டைப்போல இருக்கிறதா?