எரித்திரியா ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஒரு நாடு.எதியோப்பியாவிலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு நாடு. 1980களில் ஈழ விடுதலை இயக்கங்கள் மத்தியில் எரித்திரியா ஒரு பிரகாசமான ஆபிரிக்க முன்னுதாரணமாகப் பார்க்கப்பட்டது. டுதலைப் புலிகள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ பத்திரிகையில் எரித்திரியா பற்றி ஆழமான ஒரு கட்டுரை வெளிவந்தது.1990களில் எரித்திரியா ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு மறைமுகமாக உதவி செய்தது என்ற ஊர்ஜிதமற்ற தகவல்கள் வெளிவந்தன.
இவையெல்லாம் பழைய கதைகள்.புதிய கதை என்னவென்றால் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் அறுபதாவது ஜெனிவா கூட்டத்தொடரில், எரித்திரியா தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தோடு உணர்வுத் தோழமையை வெளிப்படுத்தியுள்ளது என்பதுதான்.
எரித்திரியா மட்டுமல்ல விடுதலைக்காகப் போராடிய வியட்நாம், கியூபா,தென் சூடான் போன்ற நாடுகளும் ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்தோடுதான் நிற்கின்றன.
அவை மட்டுமல்ல,எந்த எத்தியோப்பியாவிடமிருந்து விடுதலை பெறுவதற்காக எரித்திரியா போராடியதோ அந்த எத்தியோப்பியாவும் அரசாங்கத்தோடுதான் நிற்கின்றது.
இந்த நாடுகள் மட்டுமல்ல இப்பொழுதும் இன அழிப்புக்கு உள்ளாகும் பலஸ்தீனம் யாரோடு நிற்கின்றது?காசாவில் நடக்கும் இனஅழிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் பலஸ்தீனர்களின் பக்கம்தான்.ஆனால் 2009க்குப் பின் பலஸ்தீன் அதிகார சபை மகிந்த ராஜபக்சவை அங்கே ஒரு விருந்தினராக அழைத்து நாட்டின் உயர் விருதை அவருக்கு வழங்கியது.அதுமட்டுமல்ல அவருடைய பெயரில் ஒரு வீதியையும் திறந்து வைத்தது.
போராடும் நாடுகளும் போராடி வெற்றி பெற்ற நாடுகளும் விடுதலைக்காகப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்பதுதான் அறம். ஆனால் இந்த நாடுகள் ஜெனிவாவில் யாரோடு நிற்கின்றன? ஏன் அப்படி நிற்கின்றன?
ஏனென்றால் அது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவு.அந்த உறவில் அறம்,நீதி,நியாயம் போன்றவை கிடையாது. ஐநா என்பது முதலாவதாக அரசுகளின் அரங்கம்.அங்கு அரசுகளின் நலன்களை முதன்மைப்படுத்திதான் முடிவுகள் எடுக்கப்படும். அரசுகள் எப்பொழுதும் தமது ராணுவ பொருளாதார அரசியல் நலன்களின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கின்றன.நீதிநெறிகள் அறநெறிகளின் அடிப்படையில் அல்ல. நீதிநெறிகளும் அறநெறிக் கதைகளும் எமது பாலர் பாடசாலைப் புத்தகங்களில் தான் உண்டு. ஐநாவில் இல்லை.
கடந்த 16 ஆண்டுகளாக ஜெனிவாவில் அரசுகள்எடுக்கும் முடிவுகளையும் அந்த அரசுகளின் அரங்கில் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிக்கைகளையும் அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும் தொகுத்துப் பார்த்தால் அது தெளிவாக தெரியும்.கடந்த 16 ஆண்டுகளாக ஜெனிவாவில் இந்தியா திரும்பத் திரும்ப 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதைத்தான் ஒரு தீர்வாக முன்வைத்து வருகிறது. இம்முறையும் கடந்த எட்டாம் திகதி இந்தியாவின் ஐநாவுக்கான பிரதிநிதி பேசும்போது இலங்கையின் யாப்பை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்,அதாவது 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்திப் பேசினார்.இந்தியா இதை இப்பொழுதுதான் சொல்கிறது என்பதல்ல. கடந்த 16 ஆண்டுகளாக சொல்லி வருகிறது.
இந்தியா மட்டுமல்ல ஐநாவின் உத்தியோகபூர்வ அறிக்கைகளிலும் 13ஆவது திருத்தம் பற்றிக் கூறப்படுகிறது.கடந்த ஒன்பதாம் திகதி வெளியிடப்பட்ட ஐநாவின் உத்தேச தீர்மான வரைபிலும் அது உண்டு.அதுமட்டுமல்ல கடந்த 16 ஆண்டுகளாக ஐநா மற்றொரு விடயத்தை திரும்பத்திரும்ப கூறிவருகிறது. என்னவென்றால்,பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் இலங்கை அரச படைகள் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் பொறுப்புக்கூற வேண்டும் என்பதுதான்.இதுவும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கையில் உண்டு. உத்தேச தீர்மான வரைபிலும் உண்டு. எனவே கடந்த 16 ஆண்டுகளாக ஐநாவில் மாறாத விடயங்கள் சில உண்டு. அவற்றை மாற்ற ஏன் தமிழ் மக்களால் முடியவில்லை?
ஏனென்றால் தமிழ் மக்கள் ஓர் அரசில்லாத தரப்பு.ஏதாவது ஒரு அரசுக்கூடாகத்தான் தங்களுடைய நிலைப்பாட்டை அங்கே வலியுறுத்தலாம்; போராடலாம்.
நிகழும் ஐநா கூட்டத் தொடரில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வாசித்த அறிக்கை தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டக்கூடியதாக இல்லை.ஆனால் அதற்காக ஐநா மனித உரிமைகள் ஆணையாளரை திட்டிக் கொண்டிருக்க முடியாது.ஏனென்றால் முதலாவதாகவும் கடைசியாகவும் அவர் ஒரு ராஜதந்திரி.அவரை மனித உரிமைகளின் காவல் தெய்வம் அல்ல.அவர் ஒரு தேவதையும் அல்ல.ராஜதந்திரிகள் எப்பொழுதும் ராஜதந்திரமாகத்தான் பேசுவார்கள்;அறிக்கை விடுவார்கள்.எனவே இந்த விடயத்தில் தமிழ் மக்கள் ஐநாவில் தமக்குள்ள வரையறைகளை விளங்கிக் கொள்ள வேண்டும்.
கடந்த 16ஆண்டுகளாக நீதிக்கான தமிழ்மக்களின் போராட்டத்தை நிர்ணயிக்கக்கூடிய விடயங்களில் ஐநாவில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.
அதிலும் முக்கியமாக ஐநாமைய தமிழ் அரசியலில் தமிழ்மக்கள் தொகுத்து பார்க்க வேண்டிய ஒரு முக்கிய விடயம் உண்டு. வரையறுக்கப்பட்ட ஆணையைக் கொண்ட மனித உரிமைகள் பேரவையில்தான் இலங்கைக்கான பொறுப்பு கூறல் கையாளப்பட்டு வருகிறது.மனித உரிமைகள் பேரவையானது தனது தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒரு நாட்டின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கவோ அல்லது தடைகளை விதிக்கவோ முடியாது. மாறாக,குறிப்பிட்ட நாடு ஏற்றுக் கொண்டால், ஐநாவில் அந்த நாட்டின் இணை அனுசரணையோடு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றலாம்.இல்லையென்றால் அந்த நாட்டுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றலாமே தவிர அந்த நாட்டுக்கு எதிராக துலக்கமான விதங்களில் நடவடிக்கைகளை எடுக்க முடியாது.
எனவே இலங்கை இனப்பிரச்சனை மனித உரிமைகள் பேரவைக்குள் பெட்டி கட்டப்பட்டிருக்கிறது என்பதனை தமிழ்மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.அதனை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக உலக சமூகம் விரும்பவில்லை என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.அது ஓர் அரசியல் தீர்மானம்.தமிழ் மக்களின் விவகாரத்தை எந்த அவைக்குள் வைத்திருப்பது என்பது.அதனால்தான் கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்க்கட்சிகள் கூட்டாகக் கடிதம் எழுதிய பின்னரும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் ஐநா மனித உரிமைகள் ஆணையகத்துக்கு உள்ளேயே அமைக்கப்பட்டது.
கடந்த 16 ஆண்டுகால ஐநா மையத் தமிழ் அரசியலில் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்தின் பிரகாரம் நிலை மாறுகால நீதியை நாட்டில் முன்னெடுப்பதற்கு ஐநா முயற்சித்தது.அப்போது இருந்த இலங்கை அரசாங்கமும் அதற்கு இணை அனுசரணை வழங்கியது.ஆனால் 2021ல் நிலைமாறுகால நீதியின் தமிழ்ப் பங்காளியாகிய சுமந்திரனே சொன்னார் அது “தோல்வியடைந்த பரிசோதனை” என்று.
அதன்பின் 2021ஆம் ஆண்டுத் தீர்மானத்தின் பிரகாரம் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் ஐநாவில் இயங்குகிறது. கவனிக்கவும்,அந்த அலுவலகம் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்துக்குள்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.அதாவது அந்த சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான வழிமுறையும்கூட வரையறுக்கப்பட்ட ஆணையை கொண்ட மனித உரிமைகள் ஆணையகத்துக்குள்தான் பெட்டி கட்டப்பட்டிருக்கிறது.ஏனெனில் அது ஓர் அரசியல் தீர்மானம்.எனினும் அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கைக்குள் வருவதற்கு இன்றுவரை இலங்கை விசா வழங்கப்படவில்லை.
அந்த அலுவலகத்தை ஓர் அடைவாகச் சுட்டிக்காட்டும் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் உண்டு.அந்த அலுவலகத்தில் திரட்டப்பட்ட சான்றுகள் சாட்சிகளின் அடிப்படையில்தான் இலங்கை அரச படைகளின் பிரதானிகள் சிலருக்கு எதிராகவும் ராஜபக்சக்களுக்கு எதிராகவும் கனடா,அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தடைகளை விதித்திருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் இந்தத் தடைகள் யாவும் போரை நடத்திய சில தளபதிகளுக்கும் ராஜபக்சங்களுக்கும் எதிராகத்தான்.இலங்கை அரசுக் கட்டமைப்புக்கு எதிராக அல்ல.
மேலும் அந்த அலுவலகத்தில் சேகரிக்கப்படும் சான்றுகள் எவ்வாறு அனைத்துலக நீதிமன்றங்களை நோக்கி நீதி விசாரணைக்குரிய பொருத்தமான ஆவணங்களாக முன்னகர்த்தப்படும் என்பதில் தனக்கு சந்தேகங்கள் உண்டு என்று கஜேந்திரக்குமார் தெரிவித்தார்.இந்த விடயத்தில் தன்னுடைய தனிப்பட்ட சாட்சியமே எவ்வாறு கையாளப்பட்டது என்ற உதாரணத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.ஐநாவுக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை எழுதுவதற்காக ரில்கோ ஹோட்டலில் நடந்த சந்திப்பில் வைத்து அவர் அதைச் சொன்னார்.
எனவே இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். கடந்த 16ஆண்டுகால ஐநாமைய தமிழ் அரசியலானது வரையறுக்கப்பட்ட ஆணையைக் கொண்ட மனித உரிமைகள் பேரவைக்குள் பெட்டி கட்டப்பட்டிருக்கிறது.அது ஓர் அரசியல் தீர்மானம்.
கடந்த 16ஆண்டுகளாக இந்தியா திரும்பத்திரும்ப 13தான் தீர்வு என்று கூறுகிறது.ஐநா திரும்பத்திரும்ப போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புக்களும் பொறுப்புக் கூறவேண்டும் என்று கூறுகிறது.ஆனால் தொடர்ச்சியாக வந்த எந்த ஒரு இலங்கை அரசாங்கமும் திட்டவட்டமான விதங்களில் பொறுப்புக் கூறவில்லை.”16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த மீறல்களுக்காக இலங்கை இன்னமும் தண்டிக்கப்படவில்லை. இன்று காசாவில் நிகழ்த்தப்படும் மீறல்கள், பிரயோகிக்கப்படும் உத்திகளுக்கு இதுவே முன்னுதாரணம்.”என்று, அண்மையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐநா இலங்கை அரசுக் கட்டமைப்பைத் தண்டிக்கவில்லை என்பதைவிடவும் தண்டிக்க விரும்பவில்லை என்பதுதான் சரி.ஏனென்றால் அது ஓர் அரசியல் தீர்மானம்.அந்த அரசியல் தீர்மானத்தை மாற்றுவதென்றால் தமிழ் மக்களும் அதற்குரிய ராஜதந்திர செயல்பாடுகளில் இறங்கவேண்டும்.ஓர் அரசைப் போல சிந்தித்துச் செயல்பட வேண்டும். கடந்த 16 ஆண்டு கால ஐநா மைய அரசியலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அது.