திலீபன் வானிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பது எதனை?

திலீபனின் நாட்களில் யுத்த களத்தில் வெற்றிகள் கிட்டும் என்ற ஒரு நம்பிக்கை ஆயுதப் போராட்டம் நிகழ்ந்த காலங்களில் இருந்தது. அவருடைய நினைவு நாள் ஒன்றில் யாழ் கோட்டை வெற்றி கொள்ளப்பட்டதிலிருந்து அந்த நம்பிக்கை  தோன்றியது. திலீபனின் பசிக்கும் தாகத்துக்கும் அவ்வாறு அபரிதமான சக்தி உண்டு என்ற ஒரு நம்பிக்கை.

ஆனால் 2009க்கு பின்னர் திலீபனின் நாட்களில் திலீபன் யாருக்கு சொந்தம்? அல்லது திலீபனை யார் யார் நினைவு கூரலாம்? என்று கேட்டு மோதும் நிலைமை காணப்படுகிறது.

கடந்த 16 ஆண்டுகளிலும் நினைவு கூர்தலை அரசாங்கம் தடுக்கும் போதெல்லாம் தமிழ்க் கட்சிகள் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுபட்டு அவற்றை அனுஷ்டிப்பதுண்டு.சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திலீபனின் ஒளிப்படம் தாங்கிய ஊர்தியை நகர்த்திய பொழுது திருகோணமலையில் அந்த வாகனம் தாக்கப்பட்டது.அந்தச் சம்பவம் தமிழ்த் தேசியக் கட்சிகளை கட்சி கடந்து ஒன்றாக்கியது.ஆனால் அரசாங்கம் நினைவு கூர்தலை தடுக்காது தளர்வாக நடந்து கொள்ளும் போதெல்லாம் குறிப்பாக திலீபனின் நாட்களில் திலீபன் யாருக்கு சொந்தம்? நினைவுத் தூபியில் யார் யார் நினைவு கூரலாம்? என்று கேட்டு மோதல்கள் வெடிக்கின்றன.சில சமயம் இந்த மோதல்கள் ஊடகச் சந்திப்புகள் வரை வருகின்றன.

திலீபன் உண்ணாவிரதம் இருந்தது நல்லூர் வளாகத்துக்குள்.ஆனால் அது ஒரு கோயில் வளாகம் என்பதனால் அங்கே நினைவுத் தூபியை வைக்க அனுமதிக்கப்படாத காரணத்தால் அது நல்லூர் வளாகத்துக்கு வெளியே இப்போது இருக்கும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. அது திலீபன் உயிர் நீத்த இடம் அல்ல.எனவே திலீபனை நினைவு கூர முற்படுபவர்கள் அந்த இடத்துக்குத்தான் வரவேண்டும் என்று இல்லை. அந்தச் சூழலில் பல காணிகள் உண்டு மண்டபங்கள் உண்டு.அதனால் திலீபனை மெய்யாக விசுவாசமாக நினைவுகூர வேண்டும் என்று கருதும் கட்சியோ செயற்பாட்டாளர்களோ இடத்துக்காக அடிபடத் தேவையில்லை. இங்கு இடம் ஒரு பிரச்சினையே அல்ல. திலீபனை எப்படி நினைவு கூரலாம்? அதன்மூலம் அவருடைய நினைவுகளை எப்படி மக்கள் மயப்படுத்தலாம்? அதன் மூலம் அவருடைய தியாகத்தின் ஆன்ம பலத்தை எப்படி நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு உந்து சக்தியாக மாற்றலாம்? என்று சிந்திப்பதுதான் இங்கு முக்கியம்.

திலீபனின் நினைவு நாளில் அவருடைய ஒளிப்படம் ஏந்திய வாகனத்தை வடக்கு கிழக்காக நகர்த்துவது ஒரு நல்ல ஏற்பாடு. நல்லூரில் அவருடைய நினைவுகளை பகிரும் ஒளிப்படக் காட்சியை வைப்பதும் ஒரு நல்ல ஏற்பாடு.குருதிக் கொடையும் நல்லது.இவற்றைவிட புதிதாகவும் யோசிக்கலாம்.இப்பொழுது தமிழ் மக்களுக்குத்  தேவையாக இருப்பது தமிழ் மக்களின் கவனத்தையும் குறிப்பாக ரிக்ரொக்  தலைமுறையின் கவனத்தை, கொழும்பின் கவனத்தை, உலகத்தின் கவனத்தை ஈர்க்கத்தக்க படைப்புத்திறன் மிக்க அறவழிப் போராட்ட வடிவங்கள்தான்.

கடந்த 15ஆம் திகதி திலீபனின் நினைவு நாளுக்கு முன்னதாக கொழும்பில் சிங்களப் படைப்பாளியான சந்தரசி சுதுசிங்க எழுதிய நூல் ஒன்று வெளியிடப்பட்டது. திலீபன் என்று பெயரிடப்பட்ட அந்த நூலில்,இரண்டு அத்தியாயங்கள்  திலீபனை மையமாக வைத்து எழுதப்பட்ட படைப்புகளைக் கொண்டுள்ளன.தமிழ்த் தேசியப் பரப்புக்கு வெளியே வேறு இனங்களும் திலீபனைக் கொண்டாடுவது திலீபனுக்கு மகிமையே.தமிழ் மக்களின் போராட்டத்துக்கு மகிமையே.அமைச்சர் சந்திரசேகரன்  திலீபனின் நினைவுத்  தூபிக்கு அஞ்சலி செலுத்துவது திலீபனுக்கு  மகிமையே. திரைப்படக் கலைஞர் சோமிதரன் முகநூலில் கூறியது போல  “அஞ்சலி செலுத்த வந்தவரும் ஓர் அரசியலைச்  செய்ய வருகிறார்.அவரைத் தடுத்து நிறுத்தியவர்களும் தங்களுக்கான அரசியலைச் செய்கிறார்கள்” என்பதே உண்மை.

திலீபன் ஓர் ஆயுதப் போராளி.ஆனால் அவர் உயிர் நீத்தது ஓர் அறவழிப் போராட்டத்தில்.அவருடைய வழியை விசுவாசமாகப் பின் தொடர்கிறவர்கள்தான் அவரை அஞ்சலிக்கலாம் என்றால்,கடந்த 16 ஆண்டுகளாக அவரைப் போல சாகும்வரை உண்ணாமல் இருக்க எத்தனை பேர் தயாராக இருந்திருக்கிறார்கள்? உணவோ நீரோ இன்றி எத்தனை நாள் இருக்கலாம் என்பது உபவாசம் இருந்தவர்களுக்குத்தான் தெரியும்.அதிலிருந்து தப்பினாலும் அதனால் உடல் உறுப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களில் இருந்து தப்ப முடியாது.

கடந்த 16 ஆண்டுகளாக குறிப்பாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் பெற்றோர் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். எனினும் அப்போராட்டங்கள் இடையில் நிறுத்தப்பட்டன.அது சரி. ஏனென்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள்தான் திரும்பத்திரும்ப தியாகம் செய்ய வேண்டும் என்றில்லை.கட்சிகளும் செயற்பாட்டாளர்களுந்தான் அவர்களுக்காகப் போராட வேண்டும்.

திலீபனைப்போல உயிர் பிரியும் வரை உண்ணாமலும் துளி நீரும் அருந்தாமலும் போராட எத்தனை பேரால் முடியும்? கடந்த 16 ஆண்டுகளாகத்  தாங்கள் செய்ய முடியாத அல்லது தாங்கள் செய்யத் தயாரில்லாத தியாகங்களுக்கு உரிமை கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தாங்கள் செய்யத் தயாராக இல்லாத ஒரு தியாகத்துக்கு உரிமை கோருபவர்களால்தான் உண்மையான தியாகம் கொச்சைப்படுத்தப்படுகிறது.தியாகம் செய்ய வேண்டிய காலங்களில் தப்பிப் பிழைத்தவர்கள் எல்லாம் இப்பொழுது தியாகத்தைப்பற்றி வகுப்பெடுக்கத் தொடங்கி விட்டார்கள்.

இந்தக் கட்டுரை யாரையும் சாகச் சொல்லிக் கேட்கவில்லை. யாரும் சாகவும் வேண்டாம்.செத்தது போதும்.ஆனால் செய்யத் தயாராக இல்லாத தியாகங்களுக்கு உரிமை கோரக்கூடாது.மாறாக அந்தத் தியாகங்களின் மகிமையை,நினைவுகளை எப்படி மக்கள் மயப்படுத்தலாம் என்று சிந்திக்கலாம்.அதிலாவது உண்மையாக இருக்கலாம். தியாகிகளை  அஞ்சலிக்கும்போது விளக்கு கொளுத்துவது மலர்களை வைப்பது போன்றவை வழமையான வழிகள்.வாகன ஊர்தி,ஒளிப்படக் காட்சி,குருதிக் கொடை போன்றன ஒப்பீட்டளவில் வித்தியாசமானவை.ஆனால் இவற்றுக்கும் அப்பால் புதிய படைப்புத்திறன் மிக்க வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

உதாரணமாக தியாகியின் நாட்களில் ஊர் ஊராக அவருடைய நினைவுகளைப்  பரவலாக்கும் விதத்தில் என்ன செய்யலாம் என்று சிந்திக்கலாம். நினைவுகளை தலைமுறைகள் தோறும் கடத்துவதிலும் மக்கள் மயப்படுத்துவதிலும் கலை பண்பாட்டுச் செயற்பாடுகள் பெரிய பங்காற்ற முடியும்.எனவே புதிய கலை வடிவங்களைப் பற்றிச் சிந்திக்கலாம்.தியாகிகளின் நாட்களில் இசை நிகழ்ச்சிகளை ஒழுங்குப்படுத்தி இசை அஞ்சலிகளை இசை வேள்விகளைச் செய்யலாம்.அந்த இசை வேள்விகளுக்குப் பிராந்திய,அனைத்துலகக் கலைஞர்களைக் கொண்டு வரலாம்.இது ஒரு வழி.

இரண்டாவது வழி,தியாகியின் பெயரால் போட்டிகளை ஒழுங்குபடுத்தலாம்.கவிதைப் போட்டி,கட்டுரைப் போட்டி,ஓவியப் போட்டி, நாடகப் போட்டி,விவாதப் போட்டி,விளையாட்டுப் போட்டிகள்…

மூன்றாவது வழி,தியாகிகளின் நாட்களில் அரசியல் கருத்தரங்குகளை வைத்து அந்த தியாகத்துக்கு பின்னால் இருக்கும் அரசியலை ஆழமாக ஆராயலாம்.

நாலாவதுவழி,தியாகிகளின் பெயரால் தொண்டு செய்யலாம்.ஊர் ஊராக சிரமதானங்களைச் செய்யலாம். ஊர்க் குளத்தை,நீரோடும் வாய்க்கால்களைத் தூர் வாரலாம்.ஊரைத் துப்புரவாக்கலாம்.மரம் நடலாம்.இப்படித் தியாகியின் பெயரால் பசுமைத் திட்டங்களை முன்னெடுக்கலாம்.

ஐந்தாவது வழி,தியாகிகளின் பெயரால் இலவச மருத்துவ முகாம்களை ஒழுங்குபடுத்தலாம்.மருத்துவத் துறை ஒரு இண்டஸ்ட்ரியாக மாறி ஏழைகளுக்குத் தூரமாகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில்,இலவச மருத்துவ முகாம்களை தியாகிகளின் பெயரால் ஒழுங்கமைக்கலாம். உதாரணமாக அரச பொது மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சில சத்திர சிகிச்சைகளுக்காகக் காத்திருப்பவர்களின் தொகை ஆயிரக்கணக்கானது என்று கூறப்படுகிறது.அவ்வாறான சத்திர சிகிச்சைகளை இலவசமாக தியாகிகளின் பெயரால் செய்யலாம்.

அதாவது தியாகிகளை நினைவு கூர்வது என்பது தொண்டு செய்வது; தன்னாலியன்ற தியாகத்தைச் செய்வது.இவ்வாறு தியாகிகளை நினைவு கூரும் விடயத்தில் படைப்புத்திறனோடும் தியாக சிந்தையோடும் சிந்தித்தால் புதிய வழிகள் திறக்கும்.அவ்வாறு புதிய கற்பனைகள் தோன்றும்போது நினைவு கூர்தல் ஒரு சடங்காக மாறுவது தடுக்கப்படும்.எங்கே நினைவு கூர்தல் ஒரு சடங்காக மாறுகிறதோ அங்கே நினைவுகூர யாருக்கு உரிமை அதிகம் என்று கேட்டுச் சண்டைகளும் அதிகரிக்கும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *