நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் கட்சி தொடர்பாக அண்மையில் நடிகர் கமலஹாசன் ஒரு கருத்துத் தெரிவித்திருந்தார். கூட்டத்துக்கு வருபவர்கள் எல்லாரும் வாக்குப் போட மாட்டார்கள் என்ற பொருள்பட அக்கருத்து அமைந்திருந்தது. அது விஜய்க்கு மட்டுமல்ல தனக்கும் பொருந்தும் என்று கமலஹாசன் கூறியிருக்கிறார்.சமூகத்தில் வெவ்வேறு துறைகளின்மூலம் தாங்கள் பெற்ற பிரபல்யத்தை,செல்வாக்கை தேர்தலில் முதலீடு செய்வது என்பது தேர்தல்மைய அரசியலில் ஒரு பிரதான போக்கு. ஆனால் அதற்காக ரசிகர்கள் எல்லாருமே வாக்களிப்பார்கள் என்று இல்லை.மாணவர்கள் எல்லாருமே ஆசிரியருக்கு வாக்கு போடுவார்கள் என்று இல்லை. சமூகத்துக்காக தியாகம் செய்தவர்கள் எல்லாரும் தேர்தலில் வெல்வார்கள் என்று இல்லை.
உதாரணமாக, தமிழ்த் தேசிய அரசியலில் ஆசிரியர்கள் வரதராஜன்,ஐங்கரநேசன், அருந்தவபாலன் போன்றவர்களைக் குறிப்பிடலாம். குறிப்பாக வரதராஜன் தேர்தல் கேட்ட பொழுது மற்றொரு ஆசிரியர் என்னிடம் சொன்னார் “அவருடைய மாணவர்கள் வாக்களித்தாலே அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வந்து விடுவார். ஆனால் மாணவர்களாக இருப்பது வேறு வாக்காளர்களாக இருப்பது வேறு. எல்லா மாணவர்களும் ஆசிரியருக்கு வாக்களிப்பார்கள் என்று இல்லை” என்று.
அப்படித்தான் இந்தியாவில் மணிப்பூரில் இரோம் ஷர்மிலா என்ற பெண் செயற்பாட்டாளர் அங்கு அமுலில் இருந்த சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 15 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை மணிப்பூரின் “இரும்புப் பெண்மணி” என்று அழைப்பார்கள். பின்னர் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு 2017ஆம் ஆண்டு மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் எந்த மக்களுக்காக அவர் 15 ஆண்டுகள் உண்ணாமல் போராடினாரோ,அதே மக்கள் அவரைக் குரூரமாக நிராகரித்தார்கள். அவருக்கு 100 வாக்குகள்கூட கிடைக்கவில்லை.கட்டுப்பணமும் இல்லை.
தமிழ் தேசியப் பரப்பில்,ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் பின்னர் தேர்தல் கேட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருகிறார்கள்.எனினும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நீண்ட காலம் ஈடுபட்ட அமைப்பாகிய விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே கடந்த 16 ஆண்டுகளிலும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வெற்றிகளை பெற்றதில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு பெற்றபின் கட்சிகளைத் தொடங்கியவர்களும் வெற்றி பெறவில்ல்லை. ஏனைய கட்சிகளில் இணைந்து போட்டியிட்டவர்களுக்கும் வெற்றிபெறவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்,ஒரு பெண், போரில் காலை இழந்தவர்,வன்னியில் போட்டியிட்டார்.அவரை வெற்றிபெற வைப்பதற்காக அவருடைய நண்பர்கள் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குப் போய் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் அவருக்கு கிடைத்தது இரண்டு ஆயிரத்த்துச் சொச்சம் வாக்குகள்தான்.
தமிழ்த் தேசியப் பரப்பில் ஏனைய கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எல்லாப் போராட்டங்களிலும் பொன் மாஸ்டர் காணப்படுவார். அவர் முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்.அவர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் கேட்டிருக்கிறார்.ஆனால் உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக வரத் தேவையான வாக்குகளைக் கூட மக்கள் அவருக்குக் கொடுக்கவில்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தன்னை கொள்கையில் விட்டுக் கொடுப்பற்ற ஒரு கட்சியாகக் கூறிக் கொள்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் லட்சியத்தை விட்டுக்கொடுப்பின்றி பின்பற்றும் ஒரு கட்சியாகவும் அது தன்னைக் காட்டிக் கொள்கிறது. அப்படியென்றால் ஒவ்வொரு மாவீரர் நாளின் போதும் துயிலுமில்லங்களில் சிந்தப்படும் கண்ணீர் யாவும் அந்தக் கட்சிக்குத்தானே வாக்குகளாகத் திரள வேண்டும்? ஏன் அப்படி நடக்கவில்லை?
முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தவர்களால் ஏன் தேர்தல்களில் பெரு வெற்றி பெற முடியவில்லை? அவர்களுக்கு தேர்தல் மொழியில் பேசத் தெரியவில்லையா? அல்லது அவர்களைச் சமூகம் போர்க்களத்துக்கு மட்டும் உரியவர்களாகப் பார்க்கின்றதா? தேர்தல் களத்துக்கு உரியவர்கள் அல்ல என்று கருதுகின்றதா?
இதே கேள்விகளைச் சிங்கள வாக்காளர்களை நோக்கியும் கேட்கலாம். ஏனென்றால் சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னிலங்கையில் ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் அடித்தளமாக இருந்தவர்கள் என்று கருதப்படுகின்ற அமைப்புக்களில் ஒரு பகுதி ஒன்றாகத் திரண்டு குடைச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டன.ஆனால் அவர்களுக்கு அற்பசொற்ப வாக்குகள்தான் கிடைத்தன. நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 11 ஆயிரம் வாக்குகள் ஜனாதிபதி தேர்தலில் கிட்டத்தட்ட 30,000 வாக்குகள். அதேசமயம் போராட்டங்களின் விளைவுகளை தேர்தல் மொழியில் கவர்ச்சியாக மொழிபெயர்த்த ஜேவிபி மூன்றில் இரண்டு பெரும்பான்மையப் பெற்று இப்பொழுது நாட்டை ஆட்சி செய்கின்றது.
அப்படியென்றால் சிங்கள மக்கள் தங்களுக்காக வீதியில் இறங்கிப் போராடியவர்களை அல்லது அந்தப் போராட்டங்களைப் பின்னிருந்து ஊக்குவித்தவர்களை ஏன் தோற்கடித்தார்கள் ?
போராளிகள் வேறு அரசியல்வாதிகள் வேறு என்று மக்கள் கருதுகின்றார்களா? போராளிகள் அரசியல்வாதிகளாக மாறுவதை சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லையா ? அல்லது போராளிகளுக்கு தங்கள் போராட்டத்தை தேர்தல் மொழியில் மொழிபெயர்க்கத் தெரியவில்லையா? அல்லது உண்மையான அர்ப்பணிப்புக்கும் நேர்மைக்கும் விசுவாசத்திற்கும் தியாகத்துக்கும் தேர்தல் அகராதியில் இடமில்லையா ?
ஆனால் ஜேவிபியும் முன்பு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதையும் குரூரமாக நசுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் அவர்கள் தேர்தல் மொழியை நன்கு கற்றுத் தேர்ந்து விட்டதனால்தான் இம்முறை ஆளுங்கட்சியாக வர முடிந்திருக்கின்றது. ஜேவிபி தன்னை எம்பிபியாக உருமாற்றிக் கொண்டது.அதன் விளைவாகத்தான் இப்பொழுது நாட்டை ஆழ்கின்றது.
ஆயுதப் போராட்ட இயக்கங்களின் தியாகங்கள்,இரோம் சர்மிளா போன்றவர்களின் தியாகம் என்பவற்றோடு நடிகர் விஜயின் செல்வாக்கை ஒப்பிட முடியாது. ஆனால் இங்கு இந்த கட்டுரையின் குவிமையம் என்னவென்றால் தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதற்கான தகமைகள் எவை எவை என்ற கேள்விதான். மிக உயர்வான தகமைகள் என்று கருதப்படும் தியாகம், அர்ப்பணிப்பு,நேர்மை போன்றவற்றைத் தேர்தல் மொழியில் மொழிபெயர்க்கத் தெரியாத போராளிகள் தொடர்ந்து தோற்கடிக்கப்படுகிறார்கள்.அரசியலில் அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்கள் தொடர்ந்து பின் தள்ளப்படுவார்கள். மாறாக அரசியலை ஒரு பிழைப்பாக முன்னெடுப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
தமிழகத்தில் நல்லகண்ணு என்று ஒர் இடதுசாரி இருக்கிறார். நேர்மையானவர், கண்ணியமானவர், ஒரு சன்னியாசியைப் போன்றவர், அர்ப்பணிப்பு மிக்கவர். ஆனால் அவர் தேர்தலில் வென்றதில்லை. இது தேர்தல் ஜனநாயகத்தில் உள்ள அடிப்படைப் பலவீனம்.
வாக்காளர்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர்கள்,தேர்தல் அரசியலின் கள்ளத்தனங்களை விளங்கிக் கொண்டவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இங்கு வெற்றியைத் தீர்மானிப்பது வாக்காளர்களின் அறியாமையா? அல்லது அறிவா? அல்லது விழிப்பற்ற பொதுப் புத்தியா ?அல்லது குறிப்பிட்ட வேட்பாளரின் அதிர்ஷ்டமா? ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய,அரசியல் செயற்பாட்டாளராகிய எம்மா கோல்ட்மன் கூறுவதுபோல, “”வாக்களிப்பு எதையாவது மாற்றுமாக இருந்தால்,அவர்கள் தேர்தலைச் சட்டவிரோதமாக்கி விடுவார்கள்” என்பதுதான் சரியா ?