அரசையா ஈழத்தின் மூத்த நாடகவியலாளர்களில் ஒருவர். பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்தவர். அவருக்குள் இருக்கும் படைவீரன் எப்பொழுதும் நிமிர்ந்து நடப்பார். மீசையை மன்னர்களைப் போல முறுக்கி விட்டிருப்பார். தமிழரசுக் கட்சியின் சத்யாக்கிரகப் போராட்டத்தில் முன்னணிச் செயற்பாட்டாளர்களில் அவரும் ஒருவர்.1961இல் நடந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் ஒரு பிரபலமான ஒளிப்படம் உண்டு.அந்த ஒளிப்படத்தில் ஒரு சத்தியாக்கிரகி நிலத்தில் மல்லாக்க விழுந்து கிடக்கிறார்.அவருடைய நெஞ்சுக்கு நேரே ஒரு சிப்பாய் துப்பாக்கியின் கத்தி முனையை நீட்டிக் கொண்டிருக்கிறார்.அந்த ஒளிப்படத்தில் துப்பாக்கியால் குறிபார்க்கப்படும் சத்யாக்கிரகி அரசையாதான்.
1990 ஆம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதுவதற்காக அரசையாவோடு நீண்ட நேரம் உரையாடினேன். உரையாடலின் போக்கில் கேட்டேன் “இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் இந்த ஆயுதப் போராட்டத்தைப் பற்றி ஒரு சத்தியாகிரகியாக உங்களுடைய அபிப்பிராயம் என்ன?” என்று. அவர் சொன்னார் “அன்றைக்கு நாங்கள் சத்யாக்கிரகத்தில் ஈடுபட்ட பொழுது எங்களில் யாரும் சாகத் தயாராக இருக்கவில்லை. சத்யாக்கிரகத்தை சாகாமல் போராடும் ஒரு வழியாகத்தான் நாங்கள் விளங்கி வைத்திருந்தோம்.ஆனால் திலீபன் சத்யாகிரகம் எனப்படுவது சாகும்வரை போராடுவது என்று நிரூபித்திருக்கிறார்.அவரைப்போல 500 பேர் அந்தக் காலம் எங்களோடு இருந்திருந்தால் நாங்கள் அப்பொழுதே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கலாம்”. என்று
திலீபனுக்கு முன்பு மட்டுமல்ல திலீபனுக்கு பின்னரும் அன்னை பூபதியைத் தவிர்த்துப் பார்த்தால், அறவழிப் போராட்டங்களின் அல்லது ஜனநாயக வழிப் போராட்டங்களின் நிலைமை அதுதான். தங்களுடைய அரசியல் இலக்கை முன்வைத்து திலீபனைப் போல பூபதியைப் போல போராட யாரும் இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் கடந்த 16 ஆண்டு கால தமிழ் அரசியலானது தேங்கிப் போய் நிற்கின்றது. திலீபனைப்போல போராடுவது என்பது சாகத் தயாராக இருப்பது என்ற பொருளில் இங்கு கூறப்படவில்லை.தமது அரசியல் இலட்சியத்துக்கு உண்மையாக இருப்பது;அதற்காக விசுவாசமாக.முழு நேரமாக.அர்ப்பணித்து உழைப்பது என்ற பொருளில்தான் இங்கு நான் அதைப் பயன்படுத்துகிறேன்.
திலீபனின் அல்லது தியாகிகளின் நினைவுகளைக் கௌரவிப்பது தியாகிகளின் நினைவுகளை தலைமுறைகள் தோறும் கடத்துவது என்பது எதற்காக? மிலன் மிலன் குண்டெராவை மேற்கோளாக எடுத்துக்கொண்டு மறதிக்கு எதிரான போராட்டம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? இல்லை. தியாகிகளின் நினைவுகளைக் காவுவதும் தியாகிகளைப் போற்றுவதும் தியாகிகளின் நினைவுகளைத் தலைமுறைகள் தோறும் கடத்துவதும் எதற்காக வென்றால், அந்தத் தியாக முன்னுதாரணங்களை வைத்துப் போராட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் அவ்வாறு தியாகம் செய்வதற்கும் போராடுவதற்கு யாரும் தயாராக இல்லாத ஓர் அரசியல் சூழலில் தமிழ்த் தேசிய அரசியலானது கட்சி அரசியலாக, தேர்தல் மைய அரசியலாக மாறிப் போயிருக்கும் ஒரு சூழலில்,தியாகிகளை நினைவு கூர்வது என்பது ஒரு சடங்காக மாறக்கூடிய ஆபத்து எப்பொழுதும் இருக்கும்.
கடந்த 16 ஆண்டு கால தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது பெருமளவுக்கு தேர்தல் மைய அரசியல்தான். தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் இயக்கம் எதுவும் கிடையாது. எனவே முதலில் தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் என்னவாக இருக்கிறது என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்பொழுது இருப்பது கட்சி மய்ய அரசியல்தான். தேர்தல் மைய அரசியல்தான். எனவே கட்சிகளை அவற்றுக்குரிய கட்டமைப்புகளுக்கு ஊடாக பலப்படுத்துவதுதான் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதற்குள்ள சாத்தியமான வழி. கடந்த 16 ஆண்டுகளாக மக்கள் இயக்கத்தைப் பற்றி பலரும் கதைக்கலாம். தமிழ்த் மக்கள் பேரவை,தமிழ் மரபுரிமைப் பேரவை,பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான மக்கள் அமைப்பு,தமிழ்ப் பொது வேட்பாளர்,அணையா விளக்கு போன்ற சில எழச்சிகளுக்கும் அப்பால் தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது பெருமளவுக்கு கட்சி மைய அரசியலாகத்தான் காணப்படுகிறது. ஆனால் அதிலும்கூட ஒழுங்காக இல்லை.
தமிழரசுக் கட்சியே அதற்குப் பெரிய உதாரணம். அதுதான் உள்ளதில் பெரிய கட்சி.தன்னைத் தலைமை தாங்கும் கட்சியாகவும் கூறிக்கொள்கிறது. ஆனால் இப்பொழுதும் நீதிமன்றத்தில்தான் இருக்கின்றது. பதில் தலைவர்,பதில் செயலாளர். ஏனைய கட்சிகளோடு ஒருங்கிணைந்து போவதற்கோ ஒரு பலமான ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கோ அந்தக் கட்சி தயாரில்லை. சிவில் சமூகங்களை அது எரிச்சலோடு பார்க்கின்றது. ஆனால் கடந்த 16 ஆண்டுகளிலும் நிகழ்ந்த மேற்சொன்ன எழுச்சிகள் யாவும் கட்சிகளுக்கு வெளியே இருந்து ஒருங்கிணைக்கப்பட்டவைகள்தான். அவற்றில் கட்சிகளும் இணைந்தன.
இத்தகையதோர் பின்னணியில் உள்ளதில் பெரியதும் தன்னைத் தலைமை தாங்கும் சக்தி என்றும் கூறிக்கொள்ளும் தமிழரசுக் கட்சியின் தோல்விதான் கடந்த 16 ஆண்டு காலத் தேக்கம் எனலாம்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி பெற்ற ஆசனங்களுக்கு நிகராக அரசாங்கம் ஆசனங்களைப் பெற்றது.அது ஐநாவில் எதிரொலிக்கின்றது.
இந்தத் தேக்கத்தை உடைத்துக் கொண்டு புதிய வழியைத் திறப்பது என்றால் ஏனைய கட்சிகள் குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னை ஒரு பெரிய கட்சியாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.தன்னைக் கொள்கை சுத்தமான கட்சி என்றும் விசுவாசமாக தியாகிகளை பின்தொடரும் கட்சி என்றும் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கடந்த 16 ஆண்டுகளாக ஒரு கட்சியாக தன்னையும் பலப்படுத்திக் கொள்ளத் தவறியிருக்கிறது.தமிழ் மக்களையும் ஒரு தேசமாகத் திரட்டத் தவறியிருக்கின்றது.தமிழரசுக் கட்சியைக் குறை கூறிக் கொண்டிருப்பதனால் மட்டும் தமிழரசியலைச் சரிசெய்து விடமுடியாது.தமிழரசுக் கட்சி பெற்றிருக்கும் முதன்மையை, பலத்தை எப்படிப் பெறுவது என்று முன்னணி சிந்தித்துச் செயல்பட வேண்டும். கடந்த 16 ஆண்டு காலத் தோல்விகள் தேக்கங்களில் இருந்து கற்றுக்கொண்டு புதிய வழிகளைக் குறித்துச் சிந்திக்க வேண்டும்.
தியாகிகளைக் கௌரவிப்பது என்பது அல்லது தியாகிகளின் நினைவுக்கு மரியாதை செய்வது என்பது விடுதலைப் புலிகளுக்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு பலமான மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவது மட்டும்தான். ஆனால் அப்படி ஒரு தமிழ் தேசியப் பேரியக்கத்தைக் கட்டியெழுப்ப முன்னணியால் முடியவில்லை.தமிழரசுக் கட்சி அதைச் செய்யும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இத்தகைய தோல்விகரமான பின்னணியில், தேக்கத்தின் பின்னணியில், தியாகிகளை நினைவு கூர்வது என்பது கட்சி அரசியலாக ஒரு சடங்காக மாறும் ஆபத்து எப்பொழுதும் உண்டு.
திலீபனின் நினைவு நாட்களின் பின்னணியில்,கடந்த வாரம் லண்டனில் மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் இயற்கை எய்தினார். அவர் யார் என்றால், திருக்கோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒரு மாணவனின் தகப்பன்.தன் மகனுக்கு நீதி கேட்டு அவர் போகாத இடமில்லை.ரணில் மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் குற்றம் சாட்டப்பட்ட படையினரில் ஒரு பகுதியினர் கைது செய்யப்பட்டார்கள்.ஆனால் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டார்கள். தன் மகனுக்கு நீதி கிடைக்குமா என்று ஏக்கத்தோடு மருத்துவர் மனோகரன் தன் இறுதி மூச்சை விட்டிருக்கிறார.காணாமல்போன தமது பிள்ளைகளைத் தேடிக் கொண்டிருக்கும் நூற்றுக்கு மேற்பட்ட முதிய பெற்றோரும் அவ்வாறு உடைந்த இதயத்தோடு, அவநம்பிக்கையோடு இறந்துவிட்டார்கள்.
ஆனால் தமிழ் மக்கள் அப்பாவித்தனமாக எதிர்பார்ப்போடு பார்க்கும் ஐநா மன்றத்தில் இம்முறை ஜெனிவா தீர்மானம் பெருமளவுக்கு நீர்த்துப் போகக் கூடிய ஆபத்து இருப்பதாக கொழும்பு மைய லிபரல் ஜனநாயகவாதிகளான ஜெகன் பெரேரா போன்றவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தமிழ்க் கட்சிகள் செம்மணி திறந்து வைத்திருக்கும் புதிய சாத்திய வழிகளின் ஊடாக தமிழ் அரசியலை நகர்த்தப்போகின்றன என்று தமிழ்மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, உலக சமூகம் இலங்கையில் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தை செம்மணிக்கூடாகப் பார்க்கவில்லை என்பதுதான் ஐநா யதார்த்தமா?
மருத்துவர் மனோகரன் நீதியைக் குறித்த நம்பிக்கை இழந்தவராக இறந்து போயிருக்கும் ஒரு காலச்சூழலில், ஐநா தீர்மானம் நீர்த்துப் போகக்கூடிய ஏது நிலைகள் அதிகரித்து வருகின்றன.இக்கட்டுரையின் தொடக்கத்தில் அரசையா கூறியதுபோல திலீபனைப் போல உண்மையாகப் போராடத்தக்க சத்யாக்கிரகிகளுக்குத் தட்டுப்பாடு உள்ள அரசியற் சூழலில்,கட்சிகள் தங்களுக்கு இடையே பிடுங்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு துர்பாக்கியமான அரசியற் சூழலில், நீதிக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகள் மேலும் பலவீனமடையும் ஒர் அனைத்துலகச் சூழலில், திலீபனின் முப்பத்தி எட்டாவது நினைவு நாளும் கடந்து போனது.