வரலாறு எதை மறக்க முயற்சிக்கின்றதோ,அதை இசை ஞாபகப்படுத்துகின்றது.கொள்கைகள் எதை மரத்துப் போகச் செய்கின்றனவோ,அதை இசை உணர்கின்றது. மக்கள் எதைச் சொல்லப் பயப்படுகிறார்களோ அதை இசை உரத்துச் சொல்கிறது.
சில மாதங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த வேடனின் Rap – ரப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரவின.இப்பொழுது வாகீசனின் பாடல். வேடன் யாழ்ப்பாணத்து தாய்க்கும் மலையாளத்து தகப்பனுக்கும் பிறந்தவர். வாகீசன் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர்.இருவருமே குறுகியகால இடைவெளிக்குள் தமிழ் சமூகவலைத் தளங்களில் லட்சக்கணக்கானவர்களைக் கவர்ந்திருக்கிறார்கள்.
வேடன் 2020ல் இருந்து பாடுகிறார். அவர் வாகீசனிடம் இருந்து வேறுபடும் இடங்களில் ஒன்று, அவர் அதிகம் ஒடுக்கப்படும் சமூகங்களின், மக்களின் குரலாக ஒலிப்பதுதான். அவருடைய முதலாவது முயற்சி “குரலவற்றவர்களின் குரல்” என்ற தலைப்பின் கீழ்தான் வெளிவந்தது. அவர் ஈழத் தமிழர்களின் அரசியலில் தொடங்கி சிரியா,பாலஸ்தீனம் என்று உலகளாவிய அரசியலைப் பேசும் பாடல்களைப் பாடியுள்ளார்.அவருடைய முக்கியத்துவமே அவ்வாறான போராடும் மக்களின் குரலாக ஒலிப்பதுதான்.கரிய தேகம்;சீவப்படாத தலைமுடி; கழுத்தில் பெரிய உலோக மாலை; சில மேடைகளில் மேல் சட்டை இல்லாமலேயே காணப்படுகிறார். தனது உடல் மொழி, பாடல் வரிகள்,உச்சரிப்பு போன்ற எல்லாவற்றிலும் அவர் தன்னை ஒரு கட்டுடைப்பாளனாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளிக்காட்டுகிறார்.
எனினும் அவர் மீது பாலியல் வகைப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்டு. அவரால் பாதிக்கப்பட்டதாக கூறி பெண்கள் சிலர் நீதிமன்றங்களை நாடியிருந்தார்கள். அவை தமது புகழை மங்கச் செய்வதற்காக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என்று வேடன் தரப்பு கூறுகிறது.
வாகீசன் வேடனை விடவும் வயது குறைந்தவர்.எங்கே வேடனிடமிருந்து வித்தியாசப்படுகிறார் என்றால்,அவர் நேரடியாக புரட்சிகரமான விடயங்களைப் பாடுவதில்லை.ஜனரஞ்சகமான விடயங்களைத்தான் பாடுகிறார்.ஆனால் அதிகம் பிரபல்யமடைந்த அவருடைய முருகன் பாடல் “காக்கும் வடிவேல்” முருக பக்திப் பாடல் மட்டுமல்ல அங்கே அரசியல் உண்டு.அந்தப் பாடலுக்கு மதப்பரிமாணம் மட்டுமல்ல.அரசியல் பரிமாணமும் உண்டு.அங்கே முருகன் மீட்பின் கடவுளாக, போராடும் மக்களின் தலைவனாக, போராடி தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை கட்டமைத்த தலைவனாகக் காட்டப்படுகிறார். அதில் மறைமுகமாக அரசியல் உண்டு.வேடனைப்போல வாகீசன் வெளிப்படையாக,நேரடியாக அரசியலைப் பாட முடியாத அரசியல் சூழலுக்குள் வாழ்பவர்.
வாகீசனின் முருகன் பாடலில் பாரம்பரிய இசைக் கூறுகளும் உண்டு. அது ஒரு ஹைபிரிட் பாடல்.ரப் பாடலாகவும் இருக்கிறது.அதேசமயம் சாஸ்திரிய சங்கீதத்தின் கூறுகளும் உண்டு.அதன் கலப்பு வடிவம்தான் அதற்குள்ள கவர்ச்சி.வாகீசனைத் தூக்கிய பாடல் அது.அந்தப் பாடலில் உள்ள ஹைபிரிட்தனம்தான் அந்தப் பாடலைப் பரவலாக்கியது. இப்பொழுதும் அந்தப் பாடலுக்கு ஆடும் பெரும்பாலான தென்னிந்திய நடனக் கலைஞர்கள் அப்பாடலில் உள்ள மரபு இசை வகைப்பட்ட பகுதிக்குத்தான் ஆடுகிறார்கள்.ரப் இசைக்கு அல்ல.
ஒரு சமையல் நிகழ்ச்சியின் ஊடாக அதிகம் பிரபல்யமான அவருடைய தனித்துவம் எதுவென்றால்,அசல் யாழ்ப்பாணத்து தமிழில் அவர் கதைப்பது. அதில் ஒருவித அப்பாவித்தனமான ஆர்வம் இருக்கும். அதேசமயம் வேரை விட்டுக் கொடுக்காத தனித்துவமும் இருக்கும்.தமிழ்நாட்டில் வசிக்கும் அல்லது தமிழ்நாட்டுக்கு அடிக்கடி சென்றுவரும் ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் தமிழகத்தில் உரையாடும்போது அல்லது தமிழகத்தவரோடு உரையாடும்போது ஒரு தமிழ்நாட்டுக்காரரை போலவே பெரும்பாலும் உரையாடுவார்கள். முதலாவதாக தங்களுடைய தமிழ் அவர்களுக்கு விளங்க வேண்டும் என்ற கரிசனை.இரண்டாவதாக தன்னுடைய ஈழத்தமிழ் அடையாளம் காரணமாக வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கும் தற்காப்பு உத்தி போன்ற பல காரணங்களினாலும் அவ்வாறு தமிழ்நாட்டு தமிழைக் கதைப்பதுண்டு.”டூரிஸ்ட் பாமிலி” திரைப் படத்தில் வருவதுபோல.
ஆனால் வாகீசன் ஒரு ஜனரஞ்சக மேடையில் யாழ்ப்பாணத்துத் தமிழை பேசுகிறார். அந்தத் தமிழில் எழுதப்பட்ட வரிகளை இசைக்கிறார்.அவருக்கு கிடைக்கும் பிரபல்யத்துக்கு அவருடைய தமிழும் ஒரு காரணம்.அதைவிட முக்கிய காரணம் அவரைத் தூக்கிய பாடல் ஒரு முருக பக்திப் பாடலாக இருப்பது. அதில் அரசியல் வாடையும் இருப்பது. அந்தப் பாடலுக்குள்ள மதப் பரிமாணமும் அது திடீரென்று பெற்ற எழுச்சிக்கும் பிரபல்யத்துக்கும் ஒரு காரணம்.அதற்கு இந்தியாவின் இப்போதுள்ள அரசியல் சூழல் மிகவும் அனுகூலமானது.
கடவுளர்கள் ஏற்கனவே ரப் இசைக்குள் வந்துவிட்டார்கள்.கிறிஸ்தவ ரப் பாடல்கள் ஏற்கனவே வந்து விட்டன.சிவன்,ஹனுமான் போன்ற கடவுளர்க்கும் ரப் பாடல்கள் உண்டு.தமிழ் பக்தி இலக்கிய மரபில்,அருணகிரிநாதரின் திருப்புகழில் ரப் சாயல் உண்டு.முருக பக்தி மரபில் ஏற்கனவே சுசீலா ராமன் என்ற பெண் இசையமைப்பாளர் தமிழ் முருக பக்திப் பாடல்களை ஆடலுக்கு ஏற்ப மீள உருவாக்கிப் பாடியிருக்கிறார்.
சுசீலா ராமன் இந்திய வேரிலிருந்து வந்த பிரத்தானிய இசையமைப்பாளர்.பல்வேறு இசைப் பாரம்பரியங்களையும் கலந்து பரிசோதனை செய்தவர்.ஏற்கனவே உள்ள முருக பக்தி பாடல்களை துள்ளிசையாக ரீமேக் செய்தவர்.அவரும் தன் பாடலுக்கு ஒத்திசைவான கோலத்தோடு மேடையில் தோன்றுவார்.அடங்காத சுருள் முடி.எப்பொழுதும் ஆடத் தயாரான நெகிழும் உடல்.சுசீலா மேடையில் பரவசமாகி தன்னை மறந்து துள்ளிக்குதித்துப் பாடுவார்.அவருடைய பாடல்கள் இப்பொழுது நமது உள்ளூர் கோவில்களில் ஒலிக்க விடப்படுகின்றன.கோவில் மேடைகளிலும் ஏனைய இசை மேடைகளிலும் நமது உள்ளூர் பாடகர்கள் அவற்றைப் பாடக் கேட்கலாம். புதிய தொழில்நுட்பமும் அந்தத் தொழில்நுட்பத்தின் கைதியாக உள்ள புதிய தலைமுறையும் ரசனைகளிலும் பாடல்களிலும் பக்தியை வெளிப்படுத்தும் விதத்திலும் மாற்றத்தை விரும்புகின்றது.
இது ரசனை மாற்றத்தை, புதிய தொழில்நுட்ப வருகைகளால் ஏற்பட்டிருக்கும் லயமாற்றத்தை காட்டுவது. ஒரு தலைமுறை பக்திப் பாடல்களையும் ரப் இசையில் கேட்க விரும்புகிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் ஈழத்து உச்சரிப்பில் ரப் பாடலைக் கேட்கும் ரசிகர்களின் தொகை அதிகரிக்கின்றது.சமூக வலைத் தளங்களில் அலையும் ஒரு தலைமுறையின் இசை,அரசியல்,அறிவியல் தொடர்பான பார்வைகள் மாறிக்கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே “சரிகமப” நிகழ்ச்சியில் ஈழத்துப் பாடகர்கள் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள்.அதில் வணிக உள்நோக்கங்கள் இருக்கலாம்.ஆனாலும் பாக்கு நீரிணையின் இரண்டு பக்கமும் உள்ள இரண்டு தமிழ்ச் சமூகங்களுக்கும் இடையிலான பிணைப்பு கடந்த 16 ஆண்டுகளாக அதிகம் சோதனைக்கு உள்ளாகியிருக்கும் ஓர் அரசியல்,பண்பாட்டுப் பின்புலத்தில், ஈழத்துப் பாடகர்கள் தமிழக மேடைகளை நோக்கிச் செல்வது பிணைப்புகளைப் பலப்படுத்தும். சரிகமப மேடை என்பது அதிகபட்சம் ஜனரஞ்சக வணிக சினிமாவின் நீட்சியும் அகற்சியுந்தான். அங்கே மரபுகளை உடைத்துக் கொண்டு வெளியே வருவது குறைவு.ஆனால் ரப் இசை எப்பொழுதும் மரபுகளை உடைப்பதற்கான அதிகரித்த வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது.
அதன் தொடக்கமே புரட்சிகரமானது.மேற்கில் அது எதிர்ப்பின் வடிவமாகத்தான் எழுச்சி பெற்றது.பாதிக்கப்பட்டவர்கள்,ஒடுக்கப்பட்டவர்கள்,நசுக்கப்பட்டவர்கள் தங்கள் குரலை வெளிக்காட்டும் இசை வடிவமாக அது மேலெழுந்தது. அங்கே இசை அல்லது தாள லயத்துடன் உச்சரிக்கப்படும் வரிகள் எதிர்ப்பின் கருவிகளாக மேல் எழுகின்றன.
ஈழத் தமிழ் வேரில் பிறந்த வேடனும் வாகீசனும் இந்திய உபகண்டப் பரப்பை நோக்கி, பெருந் தமிழ்ப் பரப்பை நோக்கிப் பாடுகிறார்கள்.சரிகமப மேடையில் ஈழத்துப் பாடகர்கள் பாடுகிறார்கள்.”டூரிஸ்ட் பமிலி” திரைப்படம் ஈழத் தமிழர்களை நோக்கிக் கேட்கிறது “உங்களை யார் அகதி என்று சொன்னது?” என்று.இவை யாவும் கடந்த 16ஆண்டுகளாக மெலிந்து போயிருக்கும் தமிழக-ஈழத் தமிழ்ப் பிணைப்புக்களை மீளக்கட்டி எழுப்புவதற்கான நம்பிக்கைகளைப் புதுப்பிக்கின்றன;பலப்படுத்துகின்றன.






