

கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதரகம் வரும் 19ஆம் தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒரு சந்திப்பை ஒழுங்குப்படுத்தியிருந்தது. இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவது இந்த அழைப்பின் நோக்கம் என்று கருதப்படுகிறது.எனினும் அந்தச் சந்திப்பு இடம்பெறாது என்று தெரிய வருகிறது.அதற்கு காரணம், சுமந்திரன் அதை விரும்பவில்லை என்ற பொருள்பட சிங்கள ஊடகமான TTV.Lk தகவல் வெளியிட்டுள்ளது. 19ஆம் தேதி நடக்கவிருந்த சந்திப்பு தொடர்பான செய்திகள் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் சுவிற்சலாந்து தூதரகம் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிகிறது.கட்சிகளுடைய வேண்டுகோளின் அடிப்படையில்தான் தூதரகம் மேற்படி சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது என்றும் தூதரக வடாரங்கள் தெரிவித்தன.
அதேசமயம்,மேற்சொன்ன சந்திப்பு நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது இன்று 15ஆம் திகதி குடிமக்கள் சமூகங்களையும் கட்சிகளையும் ஒரு சந்திப்புக்கு வருமாறு தமிழ்த் தேசியப் பேரவை அழைப்பு விடுத்திருந்தது.”எகிய ராஜ்ய” என்று அழைக்கப்படும் இடைக்கால வரைபை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்ப்பாக முன்வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதினால், அதனை எதிர்த்து தமிழ்த் தரப்பு ஒரே குரலில் சமஷ்டித் தீர்வை அதாவது கூட்டாட்சித் தீர்வை வலியுறுத்த வேண்டும் என்றும், அது தொடர்பான ஒரு பொது நிலைப்பாட்டை எட்டுவதற்காகவே அச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டதாகவும் அந்த அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 15ஆம் திகதி,அதாவது இன்றைய சந்திப்பு இடம்பெறுவதும் சுவிற்சலாந்து தூதரகத்தின் சந்திப்பை தமிழரசுக் கட்சி ஆர்வத்தோடு அணுகாமைக்கு ஒரு காரணம் என்று தெரிகிறது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சுவிற்சலாந்து அண்மை ஆண்டுகளாக அதிகம் ஆர்வம் காட்டிவருகிறது.இலங்கைக்கும் அந்த நாட்டுக்கும் இடையிலான ராஜிய தொடர்புகளின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்வாறான நல்லிணக்க முயற்சிகளில் தாம் ஈடுபடுவதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நாலாம் கட்ட ஈழப் போருக்கு முன்னரான நோர்வேயின் சமாதான முயற்சிகள் தோல்வியடைந்த பின்னணியில்,இப்பொழுது சுவிற்சலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் புதிய முயற்சிகளை ஆரம்பித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் நம்பப்படுகிறது.
சுவிற்சலாந் இதற்கு முன்னரும் இமாலயப் பிரகடனத்தின் பின்னணியில் நின்றது.மகா சங்கத்துக்கும் சில புலம்பெயர்ந்த அமைப்புகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் விளைவாக அந்த பிரகடனம் உருவாக்கப்பட்டது.அது அடுத்தடுத்த கட்டத்துக்கு வளராத ஒரு முயற்சி.
அதன்பின் சுவிற்சலாந்து கடந்த ஆண்டு அரசாங்கமும் உட்பட தமிழ் கட்சிகளை தனது நாட்டுக்கு அழைத்து இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு தொடர்பில் உரையாட வைத்தது.அந்த உரையாடல்களின் அடுத்தடுத்த கட்டமாக கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் தமிழ் கட்சிகளை அழைத்து உரையாடியது. இந்த முயற்சிகளின் ஆகப்பிந்திய நகர்வாக இம்மாதம் 19ஆம் திகதி நடக்கவிருந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
சுவிற்சலாந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு,இமாலயப் பிரகடனம் போன்ற முயற்சிகளில் மட்டும் ஆர்வங் காட்டவில்லை. அதற்குமப்பால்,வடக்கிலிருந்து அகற்றப்பட்ட முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பான உரையாடல்களுக்கும் நிதி அனுசரணை புரிந்து வருகிறது.மேலும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான கற்கை நிலையத்திற்கும் சில செயற்பாடுகளுக்கு நிதி அனுசரனை புரிகிறது.இவ்வாறு கட்சிகள் செயற்பாட்டாளர்கள் உட்பட பல்வேறு தரப்புகளுக்கும் சுவிட்சர்லாந்து நிதி உதவிகளைச் செய்கிறது.
நல்லிணக்கம்,சமாதானம் மனித உரிமைகள்,நிலைமாறு கால நீதி அல்லது பொறுப்பு கூறல் போன்ற வார்த்தைகள் கவர்ச்சியானவை.ஆனால் நவீன அரசியலில் அவை தெளிவான அரசியல்,ராஜதந்திர,பொருளாதார இலக்குகளைக் கொண்டவை.
இவ்வாறான நகர்வுகளின் ஒரு பகுதியாகவே இம்மாதம் 19ஆம் திகதி நடக்கவிருந்த சந்திப்பும் ஒழுங்குசெய்யப்பட்டது.அந்தச் சந்திப்பின் நோக்கம் இனப்பிரச்சினைக்கான பொதுவான ஒரு தீர்வை நோக்கி வருமாறு தமிழ் கட்சிகளை ஊக்குவிப்பது என்று விளங்கிக் கொள்ளப்பட்டது.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க வேண்டும். கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்த் தரப்பு தமக்கு என்ன வேண்டும் என்பதை ஏன் ஒரே குரலில் கூற முடியவில்லை?
தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்பு ஒரு பொது உடன்பாட்டுக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு தூதரக மட்டங்களில் உண்டு.பல ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில்,ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை சிவில் சமூகங்கள் சந்தித்தபோது இது சுட்டிக்காட்டப்பட்டது.அப்பொழுது சிவில் சமூக உறுப்பினர்கள் சிலர் ஒரு முக்கியமான விடயத்தை எடுத்துக்காட்டினர். 2015ல் நிலைமாறு கால நீதி செய்முறைகளின் கீழ் புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன.அங்கிருந்து தொடங்கி கோத்தபாயாவின் நிபுணர் குழு வரையிலுமான சுமார் 6 ஆண்டு ஆண்டு கால பகுதிக்குள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வெவ்வேறு தரப்புகள் தீர்வு முன்மொழிவுகளை மேசையில் வைத்தன.அப்பொழுது இயங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்வு முன்மொழிவை வெளியிட்டது.அது ஒரு சமஷ்டி முன்மொழிவு.அதன் பின் வடமாகாண சபை ஒரு முன்மொழிவை வெளியிட்டது. அதுவும் சமஸ்டி.தவிர வடமாகாண முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரனின் கட்சி ஒரு முன்மொழிவை வெளியிட்டது.அது சமஸ்டியை விட உயர்வான, கொன்பெடரேஷன் என்று அழைக்கப்படுகின்ற ஒரு தீர்வு.இவை தவிர புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்தன. இப்படிப் பார்த்தால் இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அதிகளவு முன்மொழிவுகள் மேசையில் வைக்கப்பட்ட ஒரு காலகட்டமாக அந்த ஆறு ஆண்டுகாலப் பகுதியைக் கூறலாம்.இவ்வாறு முன்வைக்கப்பட்ட எல்லா முன்மொழிவுகளிலும் ஒரு பொதுப் பண்பு இருந்தது.அது என்னவென்றால் அவை அனைத்தும் சமஷ்டிப் பண்பைக் கொண்டிருந்தவை என்பதுதான். இது சிவில் சமூகங்களால் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.
அப்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி ஒருவர் கேட்டார், நீங்கள் குறிப்பிடும் அத்தனை தீர்வு முன்மொழிவுகளையும் தமிழ்த் தரப்பு ஒன்றாக ஒரு மேசையில் அமர்ந்திருந்து ஒரே ஆவணமாகக் கொடுத்ததா? என்று.
இல்லை.கொடுக்கவில்லை.ஏன் அப்படிக் கொடுக்க முடியவில்லை என்றால், மேற்சொன்ன அனைத்து தீர்வு முயற்சிகளிலும் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக பங்கெடுக்கவில்லை.தமிழ் மக்கள் பேரவையில் தமிழரசு கட்சி இருக்கவில்லை.வட மாகாண சபையின் முன்மொழிவிலும் அது தமிழரசுக்கட்சியின் முன்னொளிவாக வைக்கப்படவில்லை. மாகாண சபையின் முன்மொழிவுதான். எனவே மேற்கண்ட அனைத்து தீர்வு முன்மொழிவுகளிலும் தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக பங்கெடுக்கவில்லை.
ஆனால் அப்போதைய யாப்புருவாக்க முயற்சிகளில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்தோடு பங்காளியாகச் செயல்பட்டது.அப்பொழுது தமிழ் மக்கள் பேரவையில் காணப்பட்ட சில கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கொடியின் கீழ் யாப்புருவாக்க முயற்சிகளில் ஈடுபட்டன. அந்த முயற்சிகளின் விளைவாக உருவாக்கப்பட்டதுதான் “எகிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற இடைக்கால வரைபு ஆகும். அந்த வரைபானது மைத்திரிபால சிறிசேனவின் வார்த்தைகளில் சொன்னால்,சிங்கள மக்களையும் பயமுறுத்தாத தமிழ் மக்களையும் பயமுறுத்தாத வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டது.அதைத்தான் இப்பொழுது கஜேந்திரக்குமார் கேள்விக்கு உள்ளாக்குகிறார்.
வெளிப்படைத் தன்மையற்ற அந்த இடைக்கால வரைபானது ஒற்றையாட்சிப் பண்பு மிக்கது என்று கஜன் குற்றச்சாட்டுகிறார்.அதை சுமந்திரன் மறுக்கிறார்.
அந்த இடைக்கால வரைபை உருவாக்கியதில் ஜேவிபி,தமிழரசுக் கட்சி,புளட் ,டெலோ ஆகியவற்றுக்கும் பங்குண்டு.ஆனால் அண்மை மாதங்களாக தமிழரசுக் கட்சியானது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசி வருகிறது.அதன் விளைவாக இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி ஒரு பொது ஆவணத்தைத் தயாரிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
எனினும் தொகுத்துப் பார்த்தால் தெரிவது என்னவென்றால், தமிழ்த் தரப்பு ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வர முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தமிழரசுக் கட்சிதான்.
எனவே இப்பொழுது தமிழ்த் தரப்பு ஏன் ஒருமித்த குரலில் தீர்வை முன்வைக்க முடியவில்லை என்பதற்கு விளக்கம் கிடைக்கிறது.எல்லாருமே சமஸ்டியைத்தான் கேட்கிறார்கள்.ஆனால் அரசாங்கத்தோடு இணைந்து அதாவது சிங்கள மக்களையும் பயமுறுத்தாமல் ஒரு தீர்வைக் கொண்டு வருவது என்றால் அது வெளிப்படையான சமஷ்டியாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு என்று தமிழரசுக் கட்சி கருதுவதாகத் தெரிகிறது.
இதை இன்னும் பிழிந்து சொன்னால்,சிங்களப் பிரதிநிதிகளை பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு ஊடாக கிடைக்கக்கூடிய எந்த ஒரு தீர்வும் வெளிப்படைத்தன்மை மிக்கதாக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதுதான்.இதை அதன் பிரயோக வார்த்தைகளில் சொன்னால், மூன்றாவது தரப்பு ஒன்றின் அழுத்தம் இல்லாமல்,தமிழ்த் தரப்பு போராடாமல். உள்நாட்டுக்குள்ளேயே கண்டுபிடிக்கக்கூடிய எந்த ஒரு தீர்வும் வெளிப்படையான சமஷ்டியாக இருக்க முடியாது.
இந்த இடத்தில்தான் மூன்றாவது தரப்புகளின் பிரசன்னமும் கண்காணிப்பும் அழுத்தமும் தேவைப்படுகிறது.இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு தமிழ்த் தரப்பு போராடவில்லையென்றால், மூன்றாவது தரப்புகள் அழுத்தத்தை பிரயோகிக்கவில்லை என்றால் இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தும் ஒரு தீர்வை கொண்டுவர முடியாது.இந்திய இலங்கை உடன்படிக்கை அதைத்தான் உணர்த்துகின்றது.ஆனால் 13ஆவது திருத்தம் சமஸ்ரியல்ல.
எனவே தமிழ் சிங்கள முஸ்லிம், மலையக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற வெளிப்படைத்தன்மை மிக்க எந்த ஒரு தீர்வும் மூன்றாவது தரப்புகளின் பிரசன்னம்,அழுத்தம்,கண்காணிப்பு இல்லாமல் கிடைக்காது என்பதுதான் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் ஆகும்.இப்பொழுது சுவிற்சலாந்து அப்படி ஒரு மூன்றாவது தரப்பாகச் செயல்படுமா? அதை இந்தியா ஆர்வத்தோடு பார்க்குமா?




