ஒரு சிறுவர் கதையிலிருந்து தொடங்குவோம்.ஓநாய் ஒன்று நீரோடையில் நீர் அருந்த வந்தது. அங்கே ஒர் ஆட்டுக்குட்டி நீர் அருந்தி கொண்டிருந்தது. ஓநாய் ஆட்டுக் குட்டியைப் பார்த்துச் சொன்னது “டேய் நீதான் போன மாதம் என்னை கேவலமான வார்த்தைகளால் திட்டியது. அதற்குத் தண்டனையாக உன்னை இப்பொழுது நான் கொன்று சாப்பிடப் போகிறேன்” என்று. அதற்கு ஆட்டுக்குட்டி சொன்னது “ஐயா நான் போன மாதம் பிறந்திருக்கவே இல்லை” என்று. ஓநாய் சொன்னது “அப்படியென்றால் அது உன்னுடைய அம்மாவாக இருக்கும். உன்னுடைய அம்மாவைத் தண்டிப்பதற்காக இப்பொழுது உன்னைச் சாப்பிடப் போகிறேன்.” என்று கூறி ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.
இந்தக் கதைக்குள் இருக்கும் செய்தி என்னவென்றால், கொல்வது என்று தீர்மானித்தால் அதற்கு ஒரு காரணம் தேவை. அதுதான் இப்பொழுது ஈரானில் நடக்கிறது.முன்பு ஈராக்கில் நடந்தது;லிபியாவில் நடந்தது. ஈரானை அடிக்க வேண்டும்,அதன் எதிர்ப்பை நசுக்க வேண்டும்.ஈரான் கீழ்ப்படிந்தால் மேற்காசியா சுருண்டு விடும். எனவே ஈரானை நசுக்க வேண்டும்.
ஈரான் அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கிறது. எனவே அதைத் தடுக்க வேண்டும் என்பது பிரதான குற்றச்சாட்டு.ஈரான் ஏன் அணுகுண்டை வைத்திருக்கக் கூடாது? அது பாரசீக நாகரிகத்தின் வழித்தோன்றல். பாரசீக நாகரிகமானது இப்போதிருக்கும் பெரும்பாலான ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளை விடவும் மூத்தது.ஒரு மூத்த நாகரீகம் அணுகுண்டை ஏன் வைத்திருக்கக் கூடாது?
இதுதொடர்பாக ஓமானின் அனுசரணையோடு நடந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் பீட்டர் கிர்னஸ் என்பவர் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.ஓமான் நாட்டின் வெளிவிவிகார அமைச்சின் ராஜதந்திர உதவியாளரான அவர் கூறுவதின்படி,ஈரான் அமெரிக்காவோடு உடன்பாட்டுக்குச் சம்மதித்த பின்னர்தான் அமெரிக்கா ஈரானைத் தாக்கியிருக்கிறது.அதாவது ஈரான் அணுகுண்டு உற்பத்தியைக் கைவிடும் விடயத்தில் அமெரிக்காவோடு ஏதோ ஒரு சமரசத்துக்கு வரத் தயாராக இருந்தது. பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டிருந்த ஒரு பின்னணியில்தான் ஈரான் தாக்கப்பட்டிருக்கிறது. ஆயின்,இங்கே பேச்சுவார்த்தைகள் எனப்படுகின்றவை ஈரான் உஷார் நிலையில் இருப்பதைத் தடுக்கும் தந்திர நோக்கத்தைக் கொண்டவையா?
ஈரானின் அதிபர் இரும்பு கரம் கொண்டு நாட்டை ஆண்டார் என்று மேற்கு நாடுகள் கூறுகின்றன. பெண்களுக்கு உரிமை இல்லை. அரச எதிர்ப்பாளர்கள் ஈவிரக்கமின்றி வேட்டையாடப்படுகிறார்கள்,உலகில் அதிகம் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட நாடு…. போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. அவற்றில் உண்மையுண்டு.ஆனால் அது ஈரானியர்களின் பிரச்சினை. அதற்காக ஈரானிய அதிபரை தண்டிப்பதற்கு வெளி நாடுகளுக்கு உரிமையும் இல்லை.
அதேசமயம் போரின் தொடக்க நாளில் சில நிமிடங்களிலேயே கொமெய்னியும் அவருடைய குடும்பமும் அழிக்கப்படும் அளவுக்கு ஈரான் பலவீனமாக இருந்திருக்கிறது. அதன் எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தகர்த்தெறியும் அளவுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் வலிமையாக இருந்திருக்கின்றன. ஈரானின் வலிமையை உடைப்பதில் அதன் உள் எதிரிகளுக்கும் பங்கு இருந்திருக்கிறது. உள்ளே இருப்பவர்கள் வழங்கிய தகவல்களை வைத்துத்தான் கொமெய்னியின் தலை குறி வைக்கப்பட்டிருக்கிறது. தன்னைத் தானே மூடும் சமூகங்கள் தம்மைத் தாமே காட்டிக் கொடுப்பவர்களை உற்பத்தி செய்கின்றன.
எதுவாயினும் கடந்த மூன்று மாத காலப் பகுதிக்குள் அமெரிக்கா தன்னை உலகின் ஏகப் பெரு வல்லரசு என்று நிரூபிக்கும் இரண்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறது.முதலாவது வெனிசுலாவின் அதிபரை அவருடைய நாட்டுக்குள் இறங்கித் தூக்கியது. இரண்டாவது, ஈரானின் அதிபரும் உட்பட தீர்மானிக்கும் அதிகாரமுடைய உயர்மட்டத் தலைவர்களை போர் தொடங்கிய அன்றே தீர்த்துக் கட்டியது.
இறமையுள்ள நாடு ஒன்றின் தலைவரை அந்த நாட்டுக்குள் இறங்கிக் கைது செய்கிறார்கள்.மற்றொரு நாட்டின் தலைவரை குண்டு போட்டுக் கொலை செய்கிறார்கள். வெளிநாடுகளின் வான்பரப்புக்குள் ஆளில்லா விமானங்களை அத்துமீறி அனுப்பி ஆட்களைக் கொல்லுகிறார்கள்;இலக்குகளை அழிக்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள், இறையாண்மை எங்கே இருக்கிறது ?சுதந்திரம் எங்கே இருக்கிறது? நாடுகளின் ஆள்புல எல்லைகளுக்குப் பொருள் என்ன?
10 கோடி மக்களை கொண்ட ஈரானுக்கும் இது பொருந்தும். சிறிய இலங்கைத் தீவுக்கும் இது பொருந்தும்.இலங்கைத் தீவின் 40 கடல் மைல் தொலைவில் வைத்து ஈரானியக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் செல்வாக்கு மண்டலம். அமெரிக்கா எதுவரை தான் வரமுடியும் என்பதனை அங்கே காட்டியிருக்கிறது.சிறிய இலங்கைத் தீவு சுதந்திரம்,இறைமை என்றெல்லாம் வீரம் காட்டவில்லை.
இந்தியா யாருடைய பக்கம்? இந்தியாவின் மௌனம் அதன் ராஜதந்திரமான வார்த்தைகள் எதை உணர்த்துகின்றன? ஈரானுக்கு அவர்கள் ஆதரவில்லை என்பதைத்தான்.பாரசீகத்தைப் போலவே இந்திய பேரரசும் ஒரு பெரிய பண்பாட்டு நிலப்பரப்பு .ஆனால் ஒரு நாட்டின் ஆல்புல எல்லைக்குள் நுழைந்து அந்த நாட்டின் தலைவரைக் கொல்லும் காட்டு விதியை இந்தியா ஆதரிக்கின்றதா? எதிர்கின்றதா?
இப்படிப்பட்டதோர் உலகச் சூழலில் அரசற்ற சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை எவை?
ஒரு பகுதியினர் ஈரான் தாக்கப்படுவதை ரசிக்கிறார்கள். ஏனென்றால் ஈரான் இறுதிக் கட்டப் போரில் அரசாங்கத்தின் பக்கம் நின்றது. ஈரான் மட்டுமல்ல, கியூபா, வியட்நாம், பாலஸ்தீனம் போன்ற நாடுகளும் ஐநாவில் அரசாங்கத்தின் பக்கம்தான் நிற்கின்றன.
கியூபா எப்பொழுதும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் பாதிக்கப்படும் ஒரு நாடு.அங்கே மருத்துவ,பொருளாதாரத் தடை காரணமாக முதியவர்கள் இறந்து கொண்டிருப்பதாக ஒரு சிறுமி எழுதிய கடிதம் சமூகவலைத்தளங்களில் வாசிக்க கிடைத்தது.பொருளாதாரத் தடையால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் ஈழத் தமிழர்கள் கியூபாவின் பக்கம்தான் நிக்க வேண்டும். ஆனால் ஐநாவில் கியூபா ஈழத் தமிழர்களோடு நிற்பதில்லை.
இன்னுமோர் உதாரணம். மேற்காசியாவில் அரசற்ற குர்திஷ் மக்கள் வெவ்வேறு நாடுகளால் பங்கிடப்படுகிறார்கள்.அங்கெல்லாம் அவர்கள் இப்பொழுது அமெரிக்காவின் உதவியோடு அந்தந்த அரபு நாடுகளுக்கு எதிராக போராடுகிறார்கள்.இந்த இடத்தில் அவர்கள் அறநெறியின் அடிப்படையில் அமெரிக்காவுக்கு எதிராக நிற்க வேண்டுமா? அல்லது எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்று ராஜதந்திரமாக முடிவெடுக்க வேண்டுமா? எது சரி ?அறமா? விடுதலையா ?
இந்த இடத்தில் அறமும் விடுதலையும் ஒன்றுடன் ஒன்று பொருந்தவில்லை. அரசற்ற சிறிய மக்கள் கூட்டத்துக்கு இதுதான் விதி. ஏன் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கும் இதுதான் விதி.
போர் என்று வந்தால் அங்கே தர்மம்,நீதி நியாயங்கள் இருக்காது. வெற்றியை உறுதிப்படுத்துவது என்ற ஒரே இலக்கு மட்டும்தான் இருக்கும். அது ஒரு காட்டு விதி. அது நாகரீகமடைந்த மனிதர்களின் விதியல்ல.மனித குல நாகரீகம் என்பது போரைத் தவிர்ப்பது. ஆனால் விலங்குகளின் விதி அதுவல்ல.அங்கே வெல்வதுதான் பிழைக்கும். அதுதான் காட்டு விதி. இங்கே தொடக்கத்தில் கூறப்பட்ட சிறுவர் கதையில் இருப்பது அதுதான்.
ஓநாய்கள் பசியோடு திரியும் காட்டுக்குள்தான் ஆட்டுக் குட்டிகளும் வாழ்கின்றன;ஈழத் தமிழர்களும் வாழ்கிறார்கள். ஓநாய்களிடமிருந்தும், சிங்கங்களிடமிருந்தும்,ட்ராகன்களிடமிருந்தும் ஈழத் தமிழர்கள் தப்பிப்பிழைக்க வேண்டும். தமது போராட்டத்தின் நீதிக்கும்,தமது ராஜதந்திர இலக்கிற்கும் இடையே ஏதோ ஒரு சமநிலையைப் பேண வேண்டும். கிறீஸ்து தன் சீடர்களுக்குப் போதித்ததுபோல”இதயத்தில் புறாக்களைப்போல கபடமற்றவர்களாகவும்.செயலில் பாம்புகளைப்போல எச்சரிக்கையுணர்வோடும்” போராட வேண்டும்.




