மேற்காசியப் போர்: தமிழ்மக்களின் நிலைப்பாடு ?

1991ஆம் ஆண்டு,”ஓபரேஷன் டிசேர்ட் ஸ்ட்ரோம்”- “பாலைவனப் புயல்” என்ற பெயரில் ஒரு படை நடவடிக்கையை, அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஈராக்குக்கு எதிராக முன்னெடுத்தன.42 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படை நடவடிக்கையின் ராணுவ இலக்கு குவைத் நாட்டுக்குள் புகுந்த ஈராக்கியப் படைகளை அங்கிருந்து அகற்றுவது.

இதுதொடர்பாக அப்பொழுது யாழ். பல்கலைக்கழகத்தில், புவியியல் துறையில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கருத்தரங்கில் ஆய்வுரை நிகழ்த்திய புவியியல் துறையைச் சேர்ந்த புலமையாளர் தனது ஆய்வுரையில் “மத்திய கிழக்கு” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.அப்பொழுது அங்கே பார்வையாளராக வந்திருந்த பௌதீகவியல் துறையைச் சேர்ந்த ஒரு புலமையாளர் உரை நிகழ்த்தியவரிடம் கேட்டார், “ஏன் மத்திய கிழக்கு என்று அழைக்கிறீர்கள்?அது எங்களுக்கு மத்தியகிழக்கு இல்லைத்தானே? அப்படியென்றால் நீங்கள் எங்க நின்று கதைக்கிறீர்கள்? இங்க இருந்தா ? அல்லது ஐரோப்பாவிலிருந்தா ? என்று.

அந்தக் கேள்வி ஆழமானது.மத்தியகிழக்கு என்பது பிரித்தானிய குடியேற்றவாத காலத்தில் குடியேற்றவாத நோக்குநிலையில் இருந்து பிரித்தானிய குடியேற்றவாத அதிகாரி ஒருவரால் 1850ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட ஒரு  வார்த்தை.பிரித்தானியாவின் நோக்குநிலையில் இருந்து கிழக்கை அவர்கள் தூர கிழக்கு(far East) அண்மை கிழக்கு(near east) மத்திய கிழக்கு (Middle East) என்று பிரித்தார்கள்.பின்னர் அந்த வார்த்தை அமெரிக்கரும் கடல்சார் மூலோபாய ஆராய்ச்சியாளருமாகிய அல்பிரட் தாயர் மாகன் என்பவரால் ஆய்வு நோக்கு நிலையில் இருந்து(1902இல்) அதிகமாகப்  பயன்படுத்தப்பட்டது.அதிலிருந்து இந்த வார்த்தை பரவலாக உபயோகிக்கப்படுகிறது.

ஆனால் அது பிரித்தானிய “கொலோனியல் நோக்கு நிலையில்”-குடியேற்றவாத நோக்கு நிலையில் இருந்து பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை என்பதனால் அதை நிராகரித்து இந்தியாவின் முதலாவது பிரதமர் ஆகிய ஜவஹர்லால் நேரு மேற்காசியா என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.ஆசிய நோக்கு நிலையிலிருந்து அது ஆசியாவின் மேற்கே காணப்படுவதனால் அவ்வாறு அவர் அழைத்தார்.

எனவே அதை மத்திய கிழக்கு என்று அழைப்பதா அல்லது மேற்காசியா என்று அழைப்பதா என்பது அரசறிவியல் ஒழுக்கத்தின்படி எந்த மையத்திலிருந்து அந்தப் பிராந்தியத்தை நாங்கள் நோக்குகிறோம் என்பதைக் குறிக்கும். ஆனால் அதற்காக இப்பொழுது மேற்கு ஆசியாவை மத்திய கிழக்கு என்று அழைக்கும் ஆசியர்கள் இப்பொழுதும் “கொலோனியல் நீக்கம்” செய்யப்படவில்லை என்று மிகைப்படுத்திக் கூறத்தேவையில்லை.இப்பொழுது ஈரானை ஆதரிப்பவர்களும் மத்திய கிழக்கு என்கிறார்கள்.அமெரிக்காவை ஆதரிப்பவர்களும் மத்திய கிழக்கு என்கிறார்கள்.இங்கே வார்த்தைகள் அவற்றின் பெறுமதியுணர்ந்து பயன்படுத்தப்படுவது குறைவு.

அமெரிக்க எழுத்தாளர் ஏர்ணஸ்ற் ஹெமிங்வே கூறியதுபோல புனிதமிழந்த வார்த்தைகள். ஹெமிங்வே எழுதிய உலகப் புகழ் பெற்ற நாவலாகிய போரே நீ போ(“A farewell to Arms” (1929) என்ற நாவலின் இறுதிப் பகுதியில் கதாநாயகன் சலிப்போடு பின்வரும் பொருள்படக் கூறுவான்…”போர் நிறுத்தம், சமாதானம், பேச்சுவார்த்தை போன்ற வார்த்தைகளுக்கு இப்பொழுது பொருள் இல்லை. புனிதமும் இல்லை.புனிதம் கெடாமல் இருக்கும் வார்த்தைகள் எவையென்றால், படைப்பிரிவின் பெயர்கள்,படை அணிகளின் பெயர்கள், வீதிகளின் பெயர்கள், நகரங்களின் பெயர்கள் மட்டும்தான்”… என்று.

எனவே கடந்த மூன்று கிழமைகளுக்கு மேலாக நடந்து வரும் போர்க் களத்தை மத்திய கிழக்கு என்று அழைப்பவர்கள் அநேகமானவர்கள் அதன் சரியான பொருள் உணர்ந்து அழைக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.அது நூற்றாண்டு காலமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்,நன்கு பழகிய வார்த்தை என்பதனால் பழக்கதோஷத்தில் அவர்கள் அதை அவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.அதை அவர்களுடைய அரசியல் சாய்வாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?.

ஆனால் நிகழும் போரில் ஈழத்தமிழர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.ஈழத்தமிழர்கள் இதில் எடுக்கக்கூடிய நிலைப்பாடு யுத்தத்தின் போக்கை மாற்றப் போவதில்லை என்பதனால் தமிழர்கள் நிலைப்பாடு ஒன்றை எடுக்கவேண்டிய தேவை என்ன? என்று ஒரு பகுதியினர் கேட்கின்றார்கள். ஆனால், அரசு இல்லாத, நீதிக்காகப் போராடுகின்ற ஒரு மக்கள் கூட்டம் உலகில் நடக்கும் மோதல்கள் தொடர்பில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அந்த நிலைப்பாட்டை அறத்தின் அடிப்படையில் எடுப்பதா? அல்லது ஒர் அரசுபோல சிந்தித்து முடிவெடுப்பதா?

மேற்காசிய யுத்தம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரிவடையுமாக இருந்தால் அது இப்போதுள்ள உலக அரசியலில் துருவ நிலைப் போக்குகளை மாற்றக்கூடும்.எனவே கேந்திர முக்கியத்துவம்மிக்க ஓர் அமைவிடத்தைக் கொண்ட மக்களாகிய ஈழத்தமிழர்கள் இந்தவிடயத்தில் தெளிவாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.

போர் நிகழ்வது ஆசியக் களம்.நேரடியாக மோதுவது இரண்டு ஆசிய நாடுகளும் அமெரிக்காவும்.தவிர ஈரானைச் சுற்றியிருக்கும் நாடுகளில் அமெரிக்காவின் தளங்கள் உண்டு.எனவே போர்க்களம் அங்கேயும் விரிவடைந்திருக்கிறது. இதுவரையிலுமான உயிர்ச் சேதத்தைக் கணக்கிட்டால் அதிகமாகக் கொல்லப்பட்டிருப்பது ஆசியர்கள்தான்.மிகச்சொற்பமான தொகை அமெரிக்கர்கள்தான் இறந்திருக்கிறார்கள்.ஆசியாவுக்கே சேதம் அதிகம். ஆசியாவுக்கே உயிரிழப்புகள் அதிகம்.ஆசியர்கள் ஒருவர் மற்றவரோடு மோதிக் கொண்டிருக்கிறார்கள்.இப்படிப்பட்டதோர் பிராந்திய அரசியல் பின்னணிக்குள் ஆசியர்களாகிய ஈழத் தமிழர்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்?

ஆசிய சகோதரத்துவம் என்ற நிலைப்பாட்டை எடுக்கலாமா? ஈழத் தமிழர்களின் விவகாரத்தில்,இறுதிக்கட்டப் போரில் ஆசிய நாடுகள் ஈழத் தமிழர்களோடு  நிற்கவில்லை. ஈரானும் உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகள் அரசாங்கத்தோடுதான் நின்றன.அங்கே ஆசியர்கள் என்பதற்காக அவர்கள் ஈழத் தமிழர்களோடு தமது சகோதரத்துவத்தை நிரூபிக்கவில்லை.

மேலும் பொறுப்புக்கூறலுக்கான ஐநா நடவடிக்கைகளிலும் ஆசிய நாடுகள் பெருமளவுக்கு ஈழத் தமிழர்களோடு நிற்கவில்லை.அமெரிக்காவின் மேலாண்மையை அனுசரித்துப்போகும் மேற்கத்திய நாடுகள்தான் பெருமளவுக்கு ஐநா தீர்மானங்களைக் கொண்டு வருகின்றன.அப்படிப் பார்த்தால் கடந்த 16 ஆண்டுகால ஐநாமைய அரசியலின் அடிப்படையில் ஈழத் தமிழர்கள் மேற்கு நாடுகளின் பக்கம் நிற்கவேண்டுமா?

ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் இப்பொழுதும் பலஸ்தீனத்தை ஆதரிக்கிறார்கள்.ஆனால் பலஸ்தீன தன்னாட்சி அதிகார அமைப்பானது இலங்கை அரசாங்கத்தோடுதான் நிற்கின்றது.போராடி வென்ற நாடுகளான வியட்நாம்,கியூபா,எரித்திரியா போன்ற நாடுகளும் ஈழத்தமிழர்களோடு இல்லை.அந்த நாடுகள் அறநெறி,நீதிநெறி என்பவற்றின் அடிப்படையிலோ அல்லது நீதிக்கான போராட்டம் என்ற அடிப்படையிலோ ஈழத்தமிழர்களோடு தமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தவில்லை.

அதேசமயம் ஐநாவில் தீர்மானங்களைக் கொண்டுவரும் மேற்கு நாடுகள் தமிழர்கள் மீது கொண்ட காதலால்,அன்பினால் அல்லது அறத்தின் அடிப்படையில் அந்த முடிவை எடுக்கின்றன என்பதல்ல.பிராந்தியத்தில் சீனாவின் விரிவாக்கத்தை தடுப்பதற்கான ஒரு கருவியாக இலங்கை அரசாங்கத்தின் மீது எப்பொழுதும் ஒரு பிடியைப் பேணுவதற்கு அவர்கள் ஈழத் தமிழர் விவகாரத்தைக் கையாண்டு வருகிறார்கள் என்பதுதான் ராஜதந்திர யதார்த்தம்.

இதுதான் அரசுகளின் உலகம். எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டுடன் அல்லது அரசு இல்லாத சிறிய மக்கள் கூட்டத்துடன் வைத்துக்கொள்ளும் உறவு என்பது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார்ந்த நலன்களின் அடிப்படையில்தான் பேணப்படும்.அங்கே அறநெறி,நீதிநெறி,பிராந்திய சகோதரத்துவம் போன்றவை கிடையாது. அவையெல்லாம் “அம்புலிமாமா” கதைகளில் வருபவை.

ஈழப்போரின் போதும் போருக்கு முன்னரும் பின்னரும் இலங்கை இனப் பிரச்சினையில் பெரும்பாலான நாடுகள் இலங்கை அரசாங்கத்தைத்தான் கையாள முயற்சித்தன.அரசாங்கத்தைக் கையாள முடியாத நிலை வரும்பொழுது அரசாங்கத்தைப் பணிய வைப்பதற்காக தமிழ்மக்களை,தமிழ் மக்களின் போராட்டத்தை,தமிழ் மக்களின் அரசியலை ஓர் அழுத்தப் பிரயோக கருவியாக அவை கையாண்டன.இப்பொழுதும் கையாண்டு வருகின்றன. இதுதான் கடந்த சுமார் அரை நூற்றாண்டு கால அனுபவம்.

இப்படிப்பட்டதோர் குரூர உலகில்,அரசு இல்லாத சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத் தமிழர்கள் எப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை எடுக்கலாம்? எனது கட்டுரைகளில் நான் திரும்பத்திரும்பக் கூறும் ஓர் ஆபிரிக்கப் பழமொழி உண்டு. “நீ நீதியாக இருக்கிறாய் என்பதற்காக உலகம் உன்னிடம் நீதியாக நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்காதே.அவ்வாறு எதிர்பார்ப்பது,நீ சிங்கத்தைச் சாப்பிட மாட்டாய் என்பதற்காக சிங்கம் உன்னைச் சாப்பிடாது என்று நம்புவதற்கு நிகரானது.”

இதுதான் உலக அரசியல்.ஈழத் தமிழர்கள் ஒரு தேசமாகத் திரளும்போது ஜோன் லொகே கூறுவது போல “ஒரு சமூகத்தின் பலமானது அந்தச் சமூகத்தின் தார்மீக ஒருமைப்பாட்டில் தங்கியிருக்கிறது” என்ற அடிப்படையில் திரளவும் வேண்டும்.அதேசமயம் அரசுகளின் அரங்கில் ஓர் அரசைப்போலவும் சிந்திக்க வேண்டும்.செயற்பட வேண்டும். “புலிகள் சண்டையிடும்போது மலை உச்சியில் அமர்ந்திருந்து அதைப் பார்க்கவேண்டும்” என்ற சீனப் பழமொழி இங்கே பொருத்தமாக இருக்குமா?

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *