சித்த மருத்துவத்துறை விரிவுரையாளரின் கொலைச் சம்பவம் ஒரு தனிப்பட்ட குற்றச்செயலா? அல்லது பொதுவான சமூகப் பிறழ்வின் குறிகாட்டியா ?
கொல்லப்பட்டவர் ஒரு மருத்துவர்,விரிவுரையாளர் என்பதும்,குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும்,அந்தச் சம்பவம் அதிகம் கவனிப்பைப் பெறக் காரணம்.அவர் ஒரு படித்த தாய். பிள்ளையும் யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பாடசாலையில் படித்திருக்கிறார். ஒரு படித்த தாய்,பதின்ம வயதிலும் அதன் பின்னரும் பிள்ளையை வெற்றிகரமாகக் கையாள முடியாமல் போனது அவருடைய தனிப்பட்ட தோல்வியா? அல்லது நடப்பில் உள்ள கல்வி முறையின் தோல்வியா?
இக்கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவதாக இருந்தால் ஒரு குற்றச் செயல் மட்டும் போதாது.ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் நிகழ்ந்த குற்றச் செயல்களைத் தொகுத்து ஆராய வேண்டும்.பொருத்தமான புள்ளி விபரங்களைத் தொகுத்தும் பகுத்தும் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் அது ஒரு சமூகப் பொதுத் தோறப்பாடா? இல்லையா? என்ற முடிவுக்கு வர வேண்டும்.
யாழ்ப்பாணத்தின் படித்த கல் வீட்டுக்காரர்கள் அதிகமாக சிசிடிவி கமராவை வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பொருத்தி வைத்திருக்கிறார்கள். குற்றச்செயல்களையும் திருடர்களையும் கண்காணிப்பதற்கு கமராவை பொருத்தும் ஒரு சமூகம், தங்கள் வீட்டுக்குள் தங்கள் கண் முன்னே வளரும் பிள்ளைகளை தொடர்ச்சியாகக் கண்காணிக்கின்றதா?பிள்ளைகளை தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் பெற்றோரும் மூத்தவர்களும் பிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றங்களை உடனடியாகக் கண்டு கொள்வார்கள்.பிள்ளைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கத் தவறும் பெற்றோரே பிள்ளைகளைத் தவறவிடுகிறார்கள்.பெரும்பாலான படித்த வசதியானவர்கள் வீடுகளில் கமராவைப் பொருத்தும் ஒரு சமூகத்தில் பிள்ளைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க முடியாமல் போவது ஏன்?பிள்ளைகளைக் கண்காணிப்பதற்கு கமராவைப் பொருத்தும் பெற்றோரும் உண்டு.ஆனால் கமராவால் மட்டும் பிள்ளைகளைக் கண்காணிக்க முடியாது.அன்பினால்தான்,பாசத்தால்தான் ,அறிவினால்தான் பிள்ளைகளைப் பின்தொடரலாம்;கண்காணிக்கலாம்.ஒரு பகுதி படித்த பெற்றோராலேயே ஏன் பிள்ளைகளைக் கண்காணிக்க முடியாமல் போகிறது ?
இக்கட்டுரையாளர் யாழ்ப்பாணத்தில் கிராம மட்டங்களில் நடக்கும் சந்திப்புகளின்போது ஒரு கேள்வி கேட்பார்.உங்களில் எத்தனை பேரிடம் கைபேசிகள் உண்டு? எல்லாருமே உண்டு என்று கூறுவார்கள்.அதில் எத்தனை ஸ்மார்ட் கைபேசிகள்? என்று கேட்டால்,அநேகமானவர்கள் தங்களிடம் இருப்பது அதுதான் என்று கூறுவார்கள்.பின்னர் ஒரு கேள்வி “கைபேசியில் நீங்கள் சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை மணித்தியாலங்கள் செலவழிப்பீர்கள்?” அதற்குக் கிடைக்கும் பதில் பெரும்பாலும் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும்.ஆகக் குறைந்தது ஒரு மணித்தியாலமும் ஆகக்கூடியது 5 மணித்தியாளங்களும் என்று பதில் கிடைக்கும்.அதை வைத்து மீண்டும் ஒரு கேள்வி. “அப்படியென்றால் கடந்த வாரம் முழுவதும் நீங்கள் கைபேசியில் இருந்து கற்றுக்கொண்ட ஒரு விடயத்தைச் சொல்லுங்கள்?அல்லது கைபேசியில் நீங்கள் பார்த்த, கேட்டவற்றுள் உங்களை மிகவும் பாதித்த,உங்களுடைய உணர்வில், சிந்தனையயில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு விடயத்தைச் சொல்லுங்கள் ?என்று கேட்டால்,அநேகமானவர்கள் பொருத்தமான பதிலைச் சொல்ல மாட்டார்கள். அரிதாகத்தான் நல்ல பதில் வரும்.
இது கிராமப்புறச் சந்திப்புகளின் போதும் அவதானிக்கப்பட்டது;நகர்ப்புறச் சந்திப்புகளின் போதும் அவதானிக்கப்பட்டது.படிப்பறிவு மட்டம் குறைந்தவர்கள் மத்தியிலும் அவதானிக்கப்பட்டது;அரசு அலுவலகங்களிலும் அவதானிக்கப்பட்டது.எனவே தொகுத்துப் பார்த்தால் படித்தவர்,படிக்காதவர், வேலை செய்பவர்,வேலை செய்யாதவர்,வசதியானவர்,வசதி குறைந்தவர், என்ற வேறுபாடு இன்றி சமூகத்தில் அதிக தொகையினர் கைபேசிகளின் கைதிகளாகவே காணப்படுகிறார்கள்.
அவ்வாறு கைபேசிகளின் கைதிகளாகக் காணப்படுவோரிடம் மேலும் ஒரு கூர்மையான கேள்வி கேட்கப்படும்.”நீங்கள் சராசரியாக ஒரு மணித்தியாலத்தில் இருந்து ஐந்து மணித்தியாலங்கள் வரை கைபேசியோடு மினக்கெடுக்கிறீர்கள்.ஆனால் உங்களுடைய வளரும் பிள்ளைகளின் கண்களைப் பார்த்து எத்தனை நிமிடங்கள் கதைக்கிறீர்கள்?உங்கள் வளரும் பிள்ளைகளைத் தொட்டு அரவணைத்து எவ்வளவு நேரம் உரையாடுகிறீர்கள்?உங்கள் பிள்ளைகளோடு நீங்கள் எத்தனை மணித்தியாளங்களைச் செலவழிக்கிறீர்கள்? இந்த கேள்விக்கு அவர்கள் கூறும் பதில் பெரும்பாலும் கைபேசியோடு அவர்கள் செலவழிக்கும் நேரத்தைவிட குறைவான நேரந்தான் தங்கள் பிள்ளைகளோடு அவர்கள் செலவழிக்கிறார்கள் என்பதாக இருக்கும்.
கைபேசி மட்டுமல்ல,தொலைக்காட்சியும் ஒரு நேரம் தின்னிதான்.வீட்டில் இருப்பவர்கள்,வயோதிபர்கள்,குடும்பப் பெண்கள் தொலைக்காட்சியோடு கண்ணை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.அங்கிருந்து அவர்கள் கற்றுக் கொள்வது பெரும்பாலும் முற்போக்கானது அல்ல.பெரும்பாலான தொலைக்காட்சி சீரியல்கள் அவர்களுக்கு எதைக் கற்றுக்கொடுக்கின்றன ?தொகுத்துப் பார்த்தால் பெரும்பாலான திரைத் தொடர்களில் பெண்கள்தான் சூழ்ச்சிகள்,சதிகள் நிறைந்த தந்திரசாலிகள்.மேலும்,ஒரு ஆணுக்கு இரண்டு பெண்கள் ஆசைப்படுவார்கள்.அந்த ஆண் ஒரு நாகமாக இருந்தால் இரண்டு பெண் நாகங்கள் ஆசைப்படும்.இப்படிப்பட்ட திரைத் தொடர்களில் இருந்து முற்போக்கான விடையங்களை,பெண் விடுதலையை,சமூக விடுதலையை, கற்றுக்கொள்ள முடியாது.பெண்கள் பெண்களுக்கு எதிராக எப்படிச் சூழ்ச்சிகள் செய்வது என்று வேண்டுமானால் கற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு கைபேசிகளோடும் தொலைக்காட்சிகளோடும் தம் பொழுதைப் போக்கும் பெற்றோரும் முதியோரும் அதே அளவு நேரத்தை பிள்ளைகளோடு செலவழிக்கிறார்களா ? கிராம மட்ட சந்திப்புகளில் உங்கள் வளர்ந்த பிள்ளைக்கு சாப்பாடு கொடுக்கும் போது பிள்ளைகளோடு கதைத்துக் கதைத்து உணவு பரிமாறுவீர்களா? பிள்ளையின் கண்களைப் பார்த்து உரையாடுவீர்களா ?என்று கேட்டால், கணிசமான தாய்மார் கூறுவார்கள்,இல்லை பிள்ளைகளோடு ஒன்றாக இருந்து சாப்பிடும் சந்தர்ப்பங்கள் குறைவு என்று.பிள்ளைக்கு சோலி அதிகம்.பிள்ளையும் கைபேசியில் கண்ணை ஒட்டிக்கொண்டிருக்கும்.
மனிதர்கள் முன்னெப்பொழுதையும் விட பாரதூரமான விதத்தில் பொழுது போக்கிகளாக மாறிவிட்டார்கள்.பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே முதியோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே பொழுதுபோக்குச் சாதனங்கள் பெருகிவிட்டன.கைபேசியின் கைதிகளும் தொலைக்காட்சியின் கைதிகளும் மெய்யான பொருளில் பிள்ளைகளை முழுமையாகக் கண்காணிப்பதில்லை .
போதைப்பொருள் பாவனை தொடர்பான கருத்தரங்குகளில், துறைசார்ந்த மருத்துவர்களும் நிபுணர்களும் கூறுவார்கள்,பிள்ளைகளின் கண்களை உற்றுக் கவனியுங்கள்.அவை அசாதாரணமாகச் சிவந்திருக்கின்றனவா?பிள்ளையின் நடத்தைகளைப் பாருங்கள்.அது எங்கே போகிறது?எப்பொழுது வருகிறது? யாரோடு சேர்க்கிறது?யாரோடும் சேர்வதில்லை? என்பவற்றைக் கவனியுங்கள். அது நித்திரை கொள்கிறதா?இல்லையா?ஒழுங்காகச் சாப்பிடுகிறதா? ஒழுங்காக மலம் கழிக்கிறதா? ஒழுங்காகக் குளிக்கிறதா?ஒழுங்காக ஆடை உடுத்துகிறதா? என்று கவனியுங்கள். பிள்ளைகளின் கண்களில் ,நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள்.பிள்ளைகளின் கைபேசிகளில் யார் யார் இருக்கிறார்கள்? யாரோடு கதைக்கும்போது பிள்ளை தனியே போகிறது? பிள்ளை அதிகம் தனிமையில் இருக்கிறதா?இல்லையா? என்று உற்றுக் கவனியுங்கள்.தனிமையில் இருக்கும்பொழுது பிள்ளை என்ன செய்கிறது? என்று பாருங்கள்.அதாவது ஒரு சிசிடிவி கமராவானது நடக்கும் சம்பவங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதுபோல பெற்றோரும் பிள்ளைகளை இடையறாது கவனிப்பார்களாக இருந்தால் ஒரு பிள்ளையும் பெற்றோரிடம் இருந்து தவறிப்போகாது.பிள்ளைகளைக் கையாள்வது பெற்றோருக்குப் பெரிய சவாலாகவும் இராது.
எனவே கைப்பேசிகளின் காலத்தில்,பொழுதுபோக்குகளின் யுகத்தில்,பெற்றோருடைய குடும்ப முகாமைத்துவத் திறன்களை அதிகப்படுத்த வேண்டியுள்ளது.பிள்ளை வளர்ப்புக்கான அறிவு சார்ந்த திறன்களை வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது.ஒரு குடும்பத்தின் கொள்ளளவை அறிவுபூர்வமாக,விஞ்ஞானபூர்வமாக,அதேசமயம் உணர்வுபூர்வமாகவும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது.
அரசுசார்பற்ற நிறுவனங்கள் கிராம மட்டத்திலும் அலுவலகங்களிலும் நிறுவனங்களிலும் திறன்களைக் கட்டியெழுப்பும் கருத்தரங்குகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்துவதுண்டு.ஆனால் அரசுசார்பற்ற நிறுவனங்களால் அழைத்து வரப்படுகின்ற வளவாளர்களில் அநேகமானவர்கள் யாந்திரீகமானவர்கள்.சமூகத்தை அதன் பண்பாட்டு அம்சங்களின் ஊடாக அணுக முடியாதவர்கள். பெரும்பாலான அரசசார்பற்ற நிறுவனங்களின் கொள்ளளவைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டங்கள் ஒரே மாதிரியானவை. அங்கேயே ஒரு யாந்திரீகப் பண்பு வந்து விடுகிறது. படைப்புத்திறன் இருக்காது. எனவே சமூகத்தின்,குடும்பங்களின்,தனிநபர்களின் கொள்ளளவைக் கட்டியெழுப்பும் விடயத்தை அரசசார்பற்ற நிறுவனங்கள் மட்டும் கையாள முடியாது.
அது ஓர் அரசியல்,பண்பாட்டுச் செயல்திட்டம்.குடும்பங்களின் கொள்ளளவைக் கட்டி எழுப்புவது,பிள்ளை வளர்ப்புத் திறனைக் கட்டியெழுப்புவது,சமூக முகமைத்துவத்தைக் கட்டியெழுப்புவது,முரண்பாடுகள் மோதல்களாக வராமல் தடுப்பதற்குரிய திறன்களைக் கட்டியெழுப்புவது,உள்முரண்பாடுகள் குற்றச்செயல்களாக விகார வளர்ச்சி அடைவதைத் தடுப்பதற்குரிய அறிவு சார் திறன்களைக் கட்டியெழுப்புவது…..போன்ற எல்லாமே அரசியல் செயற் திட்டங்கள்தான்.அது முழுக்கமுழுக்க அரசியல் பண்பாட்டு மறுமலர்ச்சி. அதற்கு ஒரு அரசியல் தரிசனமும் அதன் வழிவந்த பண்பாட்டு தரிசனமும் இருக்க வேண்டும். அதற்கு அரசியல் தலைமைத்துவம் வேண்டும் பண்பாட்டுத் தலைமைத்துவம் வேண்டும்.
ஆனால் கொடுமை என்னவென்றால்,நமது அரசியல்வாதிகள் தங்கள் கட்சிக்குள் வரும் விவகாரங்களையே தீர்க்க முடியாதவர்களாக, தங்களுடைய கட்சிக்காரனுக்கு எதிராகவே வழக்குப் போடுகிறவர்களாக,தங்கள் கட்சியைக் கொண்டுபோய் நீதிமன்றத்தில் நிறுத்துகிறவர்களாகக் காணப்படும் ஒரு சமூகத்தில்,குடும்பங்களுக்குள் வரும் முரண்பாடுகள்,குற்றச்செயல்களாக விகார வளர்ச்சி அடைவதைத் தடுக்கும் விதத்தில் குடும்பத் தலைமைத்துவத்தின் முகாமைத்துவத் திறன்களைக் கட்டியெழுப்புவது யார்?





