யாழ்ப்பாணம் கார்கில் சதுக்கத்தில்,ரீகல் தியட்டரில் “நீளிரா” பார்த்தோம். அங்கு வந்திருந்த நடுத்தர வயதைக் கடந்த ஓர் ஆசிரியரிடம் கேட்டேன் ” எப்படி இருக்கிறது? ”நெஞ்சிடியாக இருந்தது.பழைய நினைவுகளை இரை மீட்டியது” என்று சொன்னார்.அவருடைய 21வயது மகளிடம் கேட்டேன். “இரண்டு பகுதிக்கும் பிரச்சினை இல்லாமல் முடித்து விட்டார்கள்” என்று சொன்னார். “உங்களுடைய மனதில் தங்கி நிற்கும் பாத்திரங்கள் எவை?” என்று கேட்டேன், முதலாவதாக தாய்.இரண்டாவதாக கப்டன். மூன்றாவதாக அந்த தாத்தா” என்று சொன்னார்.
எங்களோடு படம் பார்த்த மூத்த ஓய்வு பெற்ற நூலகர் ஒருவரிடம் கேட்டேன் “எனக்கு தலையிடியாக இருந்தது.என்னுடைய தகப்பனார் அந்தக் காலத்தில்தான் கொல்லப்பட்டவர்.அந்த நினைவுகள் எல்லாம் உயிர்த்தெழுந்து விட்டன. தலை இடிக்கிறது” என்று சொன்னார்.
நீளிராவை பார்த்த ஒரு தலைமுறை தனது காயங்களின் ஊடாக அதை வாசிக்கின்றது.ஆனால் ஐபிகேஎஃப் காலத்தில் பிறந்திராத,அதற்குப் பின்னரும் 2009இல்,சிறியவர்களாக இருந்த ஒரு தலைமுறை கூறுகிறது,இரண்டு தரப்புக்கும் நோகாமல் படத்தை முடித்து விட்டார்கள் என்று.
இது ஈழத்தமிழ்ப் பரப்பில் உள்ள இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களின் ரசனைக் குறிப்புகள்.ஆனால் பெருந்தமிழ்ப் பரப்பில்,குறிப்பாக தமிழ்நாட்டில் அதுவும் சோமிதரன் தன் குடும்பத்தோடு வாழும் தமிழ்நாட்டில் இந்தப் படம் எப்படிப் பார்க்கப்படும் ?
இந்தக் கேள்வி மிக முக்கியம்.ஏனென்றால் இது ஒரு கூட்டுத் தயாரிப்பு. இது போன்ற போர்க்களத்தைப் படம் பிடிக்கும் கூட்டுமுயற்சிகள் ஏற்கனவே கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டன.அப்பொழுது விடுதலைப் புலிகளின் கருநிலை அரசு இயங்கிக் கொண்டிருந்தது. கிளிநொச்சி திருநகர் பகுதியில் திரைப்பட வெளியீட்டுப் பிரிவு இருந்தது.சமாதான காலத்தில் இந்தியாவிலிருந்து திரைக் கலைஞர்கள் அங்கே வந்து போனார்கள். வகுப்புகள் எடுத்தார்கள்.இங்குள்ள கலைஞர்களோடு சேர்ந்து படங்கள் தயாரித்தார்கள்.
அவ்வாறான கூட்டுத் தயாரிப்புகளில் ஆகப்பிந்தியது நீளிரா.ஆனால் வித்தியாசம் என்னவென்றால்,திருநகரை மையமாகக் கொண்டு இயங்கிய சிறிய திரைப்படத்துறை உருவாக்கிய படங்களில் முதலீடு ஈழத் தமிழர்கள். கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும்தான் தமிழ்நாட்டில் இருந்து வந்தார்கள். நீளிராவில் முதலீடு தமிழகத்துடையது. கதையும் இயக்கமும் ஒரு பகுதி கலைஞர்களும் ஈழத்தவர்கள்.எனவே இது ஒரு ஈழ-தமிழக கூட்டுத் தயாரிப்பு. ஒரு கூட்டுத் தயாரிப்புக்கு கூட்டுப் பொறுப்பு உண்டு. இதுபோன்ற படங்களில் அது தனிய வணிகப் பொறுப்பாக மட்டும் இருக்க முடியாது. அதைவிட ஆழமாக அரசியல் தார்மீகப் பொறுப்பு ஒன்று உண்டு. ஏனென்றால் இரண்டு நிலப்பரப்புகளும்-தமிழகமும் ஈழமும்- சம்பந்தப்பட்ட ஒரு கதை அது.
தமிழ்நாடு ஈழப் போராட்டத்தை அடைகாத்த பின்தளங்களில் ஒன்று. தீக்குளித்துத் தீக்குளித்துத் தான் அடைகாத்த ஒரு போராட்டம் தனது நாட்டின் படையினரோடு மோதும் ஒரு போரை தமிழகம் கண்டது.அது துரோணர்கள் எதிர் அர்ஜுனர்களின் போர்.அதன்பின் ஈழப் போர் தமிழகத்துக்கும் விரிவடைந்தது. அதன் விளைவாக கடந்த 16 ஆண்டுகளாக தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையிலான பிணைப்புகள் முன்னெப்பொழுதையும் விட அதிகம் சோதனைக்கு உள்ளாகியுள்ளன.
இப்படிப்பட்டதோர் அரசியல் வரலாற்றுப் பின்னணியில்,சுமார்35 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு கதையை சோமிதரன் படம் பிடித்திருக்கிறார்.அதுபோல இதுவரையிலும் சொல்லப்படாத ஏராளம் கதைகள் ஈழத் தமிழர்களிடம் உண்டு. நாலாம் கட்ட ஈழப் போருக்கு முன்னரான யுத்த நிறுத்த காலகட்டத்தில் கொழும்பில் நடந்த மானுடத்தின் ஒன்றுகூடலில் சிங்களத் திரைப்பட இயக்குனர் பிரசன்ன விதானகே அதனை மேடையில் வைத்துச் சொன்னார்.யாரும் இதுவரை கேட்டிராத கதைகள் அவர்களிடம் உண்டு என்ற பொருள்பட.
அதில் ஒரு கதையைத்தான் சோமிதரன் படமாக்கியிருக்கிறார். படத்தின் பெயர் “நீளிரா” அதிகம் கவித்துவமானது.தமிழ் வணிக சினிமாவுக்கு அதிகம் வாலாயப்பட்ட பார்வையாளர்களுக்கு அது நீண்ட இரவு என்பதைக் குறிக்கும் என்று பொருள் விளக்கம் தர வேண்டியுள்ளது.
சோமிதரன் வணிக ரீதியாக அதிகம் சமரசங்களைச் செய்யவில்லை. அந்த நீண்ட இரவு ஒரு போரில் முடியப்போகிறது என்ற பயத்துடன் கூடிய எதிர்பார்ப்பு,பதைபதைப்பு படத்திற்கு ஒருவகை ” திரில்லருக்குரிய எஃபெக்டைக்” கொடுக்கின்றன.
ஆனாலும் மையப் பாத்திரம் உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தாத கல்லாய் இறுகிய முகத்தோடு ஒரு துயரச் சித்திரமாக நிற்கிறது. அது எல்லா போர்க்களங்களுக்கும் பொதுவான தேற்றப்படவியலாத தாயின் துக்கத்தின் குறியீடாகக் காட்சி தருகிறது. படத்தில் வரும் மணப்பெண்ணும் அப்படித்தான். பாத்திரங்களின் ஒப்பனை,காட்சியமைப்பு,எல்லாவற்றிலுமே வணிகத்தனங்கள் குறைவு.குறிப்பாக பாத்திரங்கள் பேசும் ஈழத்து தமிழ் பிழையின்றி ஒலிக்கின்றது.
படத்தின் முடிவில் இந்திய அமைதி காக்கும் படைக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் அதிகம் செயற்கையானவை;பிரச்சாரப் பண்புமிக்கவை;போதனைப் பண்புமிக்கவை. படத்தின் சீரியஸான ஓட்டத்தைப் பாதிக்கக்கூடிய நாடகத்தனமான உரையாடல் அது.எனினும் இறுதிக்காட்சியில் யாரும் யாரையும் சுட்டுக் கொள்ளாமல் விலகிச் செல்லும் அந்த அதிகாலை திரை மொழியில் அழகானது.
நித்திரை இல்லாத கொடுமையான ஒரு நீண்ட இரவு முடிந்து, மோதல் இல்லாத ஓர் அதிகாலை புலர்கிறது. அந்த அதிகாலையின் மங்கிய வெளிச்சத்தில், வீடும் நிலமும் மாந்தர்களும் மனதில் நிரந்தரமான ஒரு பெருமூச்சாகத் தங்கி விடுகிறார்கள்.எந்தப் ஒரு போரிலும் யாரும் இறுதி வெற்றியைப் பெறுவதில்லை என்று கூறிப் படம் முடிகிறது. அந்த நீண்ட இரவும் முடிகிறது.
ஈழத் தமிழரும் தமிழகத்தின் மருமகனும் ஆகிய சோமிதரன் பாக்கு நீரிணையால் பிரிக்கப்படுகின்ற இரண்டு தமிழ்ப் பரப்புக்கும் பொறுப்புக்கூற வேண்டிய ஒரு கதையை நிதானமாகக் கையாண்டிருக்கிறார்.
தனது மக்களின் விடுதலை வேட்கைக்கு விசுவாசமாகவும் இருக்க வேண்டும். அதேசமயம் ஒரு கூட்டுத் தயாரிப்பு என்று அடிப்படையில் கூட்டுப் பொறுப்போடும் கதையைக் கையாள வேண்டும்.நீளிரா கலைப் பெறுமதி மிக்க ஈழப் போர்ப் படம்.
இக்கட்டுரையில் நான் ஏற்கனவே கூறியதுபோல,கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட கூட்டுத் தயாரிப்புகளில் ஒன்று ஆணிவேர்.அந்தப் படத்தை இயக்கியவர் ஜான்.தமிழில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகிய மகேந்திரனின் மகன்.விஜய் நடித்த “சச்சின்” படத்தை இயக்கியவர்.ஒரு தனிப்பட்ட சந்திப்பின்போது ஜான் என்னிடம் சொன்னார் “ஐசென்டெய்ன் கூறியதுபோல நான் போரை (கிளாமரைஸ்) மனோரதியப்படுத்த மாட்டேன் “என்று.
நீளிரா ஒரு திரைப்படமாக போரில் யாரும் வெல்வதில்லை என்று கூறி முடிகிறது.படத்தின் இறுதிக் காட்சியை ஒரு மோதலாக,ஒரு ரத்தக்களரியாக இல்லாமல் பிரச்சாரப் பண்புமிக்க,போதனையாக,ஒரு விவாதமாக மாற்றி இரண்டு தரப்பும் ரத்தம் சிந்தாமல் விலகிச் செல்கின்றன.
இக்கட்டுரையில் நான் முன்பு சொன்ன அந்த இளம் பெண் கேட்டார் “வீட்டுக்குள் வந்திருக்கும் இந்திய ராணுவத்தோடு அவர்கள் வாக்குவாதப்படுகிறார்கள்.கோபமாக நடந்து கொள்கிறார்கள்.சில சமயங்களில் தள்ளுமுள்ளுப்படுகிறார்கள்.அப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடியதாக அந்த காலம் இருந்ததா?” என்று.இறுதிக்கட்டப் போரில் சிறுமியாக இருந்தவர் அவர்.நான் சொன்னேன் “அது ஒரு முழுமையான போர்க்களம் அல்ல.அது ஒரு குடும்பத்தின் வீடு.அதுவும் அடுத்த நாள் திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த ஒரு மணப்பெண்ணின் வீடு. அந்த இரவை ஒரு திரைக் கதையாகப் பார்ப்பது நல்லது.அங்கே சோமிதரன் உண்மையின் பகுதிகளை புனைவின் இழைகொண்டு பின்னியிருக்கிறார்” என்று.
நீளிரா வெளிப்படுத்தும் அரசியல் செய்தியை நோக்கி அந்த திரைக்கதை தயாரிக்கப்பட்டிருக்கிறது.எந்தப் போரும் வெற்றியில் முடிவதில்லை என்பதுதான் அந்தச் செய்தி.உலகில் வெற்றி பெற்ற அனேகமான போர்ப்படங்கள் போருக்கு எதிரானவைதான்.





