நல்லூர்த் திருவிழா வளாகத்தில் இடம்பெறும் இச்சந்திப்புகள் மிகச் சிறியவை. திருவிழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களோடு ஒப்பிடுகையில் இந்த சந்திப்புகளில் கலந்துகொள்பவர்கள் மிகச்சிறிய எண்ணிக்கைதான்.ஆனால் அவர்கள் விவாதிக்கும் விடயங்கள் யாழ்ப்பாணத்தின் உயிர் நிலைகளோடு சம்பந்தப்பட்டவை.அவை ஜனரஞ்சகமானவையோ அல்லது பெருந்திரளைக் கவர்பவையோ அல்ல.ஆனால் முழுச்சமூகத்தினதும் உயர்நிலையான அம்சங்கள் தொடர்பான உரையாடல்கள்.அவை சிறியவை.ஆனால் தொடர்ச்சியானவை. தொடர்ச்சியாக இருப்பதுதான் அவற்றின் பலம்.
மென்மையான நீர் ஒரு பாறையின் மீது தொடர்ச்சியாக ஓடும்போது அந்தப் பாறையில் ஒரு தடத்தை உருவாக்குகின்றது. பாறையோடு ஒப்பிடுகையில் நீர்த் தாரை மென்மையானது.ஆனால் அதன் பலம் தொடர்ச்சியாக ஓடுவதுதான். தொடர்ச்சிதான் அது மிக வலிமையான பாறையில் ஒரு தடத்தை உருவாக்க காரணம்.அப்படித்தான் சிறிய,ஜனரஞ்சகமற்ற,பரபரப்பை,பிரபல்யத்தைத் தேடாத சிறிய முயற்சிகள் ஒரு சமூகத்தின் உயிர் நிலையான அம்சங்களில் தாக்கத்தைச் செலுத்துகின்றன.
இதுபோன்று சிறுசிறு சந்திப்புகள்,ஆனால் தொடர்ச்சியானவை எல்லாச் சமூகங்களிலும் இடம்பெறுகின்றன.பண்பாட்டுச் செழிப்புமிக்க எல்லாச்சமுகங்களிலும் இதுபோன்ற சிறிய ஆனால் சீரியஸான உரையாடல் களங்கள் இருக்கும்.இக்கட்டுரையானது யாழ்ப்பாணத்து அனுபவத்தைத்தான் இங்கு பகிர்கிறது.
யாழ்ப்பாணத்தில் மேற்கண்ட இளம் நீர் வாண்மையாளர்களைப் போல இலக்கியவாதிகள்,துறைசார் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆங்காங்கே சிறிய அளவில் கூடி தமது துறைசார் விடயங்களை உரையாடும் பல்வேறு சந்திப்பிடங்கள் உண்டு.
உதாரணமாக, அண்மையில் நடந்த யாழ்ப்பாணத்தின் இரண்டாவது சர்வதேச புத்தகச் சந்தையின் பின்ணியைக் குறிப்பிடலாம். யாழ் வர்த்தக தொழிற்துறை மன்றத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட இப்புத்தகத் திருவிழாவை முன்னின்று ஒழுங்கமைத்தவர் வசீகரன்.”எங்கட புத்தகங்கள்” என்ற பெயரில் ஒரு இடையூடாட்டக் களத்தை அவர் வைத்திருக்கிறார்.யாழ்ப்பாணம் கந்தர்மடம்,அம்மன் வீதியில் ஒரு சிறிய வீட்டில் எங்கட புத்தகம் இயங்குகிறது.உள்ளூர் வெளியீட்டாளர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பானது புத்தக வெளியீடுகளையும் சிறிய சிறிய இலக்கிய கலந்துரையாடல்களையும் ஒழுங்கமைத்து வருகிறது.யாழ்ப்பாணத் திரைப்படக் கழகம் இப்பொழுது அதன் திரைப்படங்களை இங்கேதான் திரையிட்டு வருகின்றது.
எங்கட புத்தகங்கள் அமைப்பின் சந்திப்புகள் அநேகமாக சிறியவை. ஆனால் தொடர்ச்சியானவை பெரும்பாலும் ஒரே முகங்கள்தான் அங்கே காணப்படுவதுண்டு.
துறைசார்ந்த விடயங்களில் சீரியசாக சிந்திப்பவர்கள் ஆழமாக உரையாடுபவர்கள் எப்பொழுதும் சிறிய அளவினராகத்தான் இருப்பார்கள். சீரியஸானதற்கும் ஜனரஞ்சகமானதுக்கும் இடையிலான இடைவெளி தமிழில் மட்டுமல்ல உலகின் பல சமூகங்களிலும் ஆழமானது.குறிப்பாக காணொளிகளின் காலத்தில் சீரியஸுக்கும் ஜனரஞ்சகத்துக்கும் இடையிலான இடைவெளி என்பது பாரதூரமான விதங்களில் அகன்றுவிட்டது, ஆழமாகிவிட்டது.
ஆனாலும் சீரியஸான விடயங்களை உரையாடுபவர்கள் சிறிய தொகையினர் எல்லா சமூகங்களிலும் எப்பொழுதும் கூடிக் கதைத்துக் கொண்டே இருப்பார்கள்.எங்கட புத்தகங்களைப் போலவே மற்றொரு அமைப்பு யாழ்ப்பாண திரைப்படக் கழகம் ஆகும். இது தொடர்ச்சியாக இயங்கி வரும் ஒரமைப்பு.மூத்த இலக்கியச் செயற்பாட்டாளராகிய யேசுராசா இந்த அமைப்பை இயக்கி வருகிறார்.அண்மையில் சிறிய அளவில் சர்வதேச திரைப்பட விழா ஒன்றையும் அவர் ஒழுங்குபடுத்தியிருந்தார்.வணிக நோக்கிலான திரைப்படங்களுக்கும் அப்பால் சீரியஸான கலைப் பெறுமதி கூடிய திரைப்படங்களை யாழ் திரைப்படக் கழகம் தொடர்ச்சியாக திரையிட்டு வருகிறது.படத்துக்குப் பின் அங்கே கலந்துரையாடல்களும் நடக்கும்.
அதுபோல மற்றொரு அமைப்பு அது யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து சற்று விலகி அமைந்திருப்பது. “தேசிய கலை இலக்கியப் பேரவை”. இதற்கும் நீண்ட தொடர்ச்சி உண்டு. சிறிய எண்ணிக்கையானவர்கள் ஒரு வீட்டில் கூடி, அரசியல் சமூகச் செயற்பாட்டாளர்களை அழைத்துக் கலந்துரையாடுகிறார்கள்.
மற்றொரு அமைப்பு யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பழம் ரோட்டில் அமைந்திருக்கிறது.கலாநிதி சிதம்பரநாதனால் நிர்வாகிக்கப்படும் “பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடம்” இதுவும் ஜனரஞ்சகமான ஒரமைப்பு அல்ல.ஆனால் சிறிய மற்றும் தொடர்ச்சியான சந்திப்புகளை,கலந்துரையாடல்களை ஒழுங்குபடுத்தும் ஓரமைப்பு.
இதுபோன்று யாழ் நகரை அண்டிய கோவில் வீதியில் அமைந்திருக்கும் “சமகால கலை மற்றும் கட்டிடக்கலைவடிவமைப்புக்கான ஆவணக் காப்பகத்தைக் குறிப்பிடலாம். இது துறைசார்ந்த நிபுணர்களையும் தமது துறைகளில் பிரகாசிப்பவர்களையும் அழைத்து உரையாடும் ஒரு களம்.இதை உள்ளூர் ஆளுமைகளும் கலந்து கொள்வார்கள் வெளிநாட்டவர்களும் வருவார்கள். அந்த அடிப்படையில் இந்த அமைப்பு உள்ளூர் பரிமாணத்தையும் அனைத்துலகப் பரிமாணத்தையும் கொண்டது.


யாழ்ப்பாணம் நகரத்துக்கு வெளியே சற்று தொலைவில் சுழிபுரத்தில் ஓர் அமைப்பு உண்டு. “சத்தியமனை”.அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் ஆகிய சுப்பிரமணியத்தின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு நினைவு நூலகம். இங்கேயும் சிறிய ஆனால் தொடர்ச்சியான சந்திப்புகள் அடிக்கடி இடம்பெறும். நகர்ப்புறங்களில் இருந்து விலகி ஒரு கிராமப்புறத்தில் சுழிபுரத்தில் அமைந்திருப்பது அதற்குள்ள மற்றொரு சிறப்பு.
இதுபோலவே அரங்கச் செயற்பாட்டாளர் தேவானந்தாவின் “செயற் திறன் அரங்கு” என்ற அமைப்பும் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது.எங்கட புத்தகம் போல நம்மவர் முற்றம் என்று ஒரு அமைப்பும் செயற்படுகின்றது.அதுவும் கலை இலக்கிய அறிவியல் விவாதங்களை ஏற்பாடு செய்கின்றது.
அண்மை ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் பிரசுரித்து வரும் “எழுநா” என்ற அமைப்பு திருநெல்வேலியில் ராமநாதன் வீதியில் இயங்கி வருகின்றது. ஈழக் கற்கைகள் சார்ந்த ஆய்வு நிறுவனம் இது.
இவை சில உதாரணங்கள்.தமிழ் பகுதிகளில் இயங்கும் எல்லா அமைப்புக்களையும் இக்கட்டுரை குறிப்பிடுகிறது என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.எனக்குத் தெரியாமலே பல்வேறு சந்திப்புகள் இடம்பெற முடியும்.இப்பொழுது மட்டுமல்ல போர்க்காலங்களிலும் போர் கருக்கட்டிய காலங்களிலும் அதற்கு முன்னரும் பல தலைமுறைகளாக இதுபோன்ற சந்திப்புகள் இடம்பெற்று வந்திருக்கின்றன.பண்பாட்டுச் செழிப்புமிக்க ஒரு சமூகத்தில் இதுபோன்ற சந்திப்பிடங்களே சமூக நொதியங்கள்.
போர்க் காலத்தில் மார்க் மாஸ்டரின் வீடு ஒரு தொகுதி ஓவியர்களின் சந்திப்பிடமாக இருந்தது. அச்சிறிய வீட்டின் சிறிய முன் விறாந்தையில் சந்தித்த பலர் பின்னாளில் துறை சார்ந்து மேலுயர்ந்தார்கள்.
மற்றொரு வீடு சிரித்திரன் ஆசிரியர் சுந்தருடையது. “மில்க்வைற்” கனகராசா போன்றவர்கள் அங்கு வருவார்கள்.சுந்தரைப் பார்ப்பதற்குத் தொடர்ச்சியாக பல துறைகளைச் சேர்ந்தவர்களும் வருவார்கள்.
நாடகத்துறையில் குழந்தை.ம.சண்முகலிங்கம்,சிதம்பரநாதன் போன்றவர்களின் வீடுகளும் அவ்வாறான சந்திப்பிடங்களாக இருந்தன. சண்முகலிங்கம் மாஸ்ரரின் கல்வியியல் அரங்குகளில் நடித்த, சண்முகலிங்கத்தின் வீட்டில் அடிக்கடி சந்தித்த பலர் பின்னாளில் துறை சார்ந்து மேலெழுந்தார்கள்.
ஊர்காவல்துறை கரம்பனைச்சேர்ந்தவர் சபாரட்ணம் மாஸ்ரர்.இடப்பெயர்வின் பின் யாழ்ப்பாணத்தில் அவர் வசித்த பொழுது அவரை அடிக்கடி சந்தித்த ஒரு இளைய தலைமுறை இருந்தது.
மற்றது குகமூர்த்தியின் வீடு அல்லது ஏ.ஜே.கனகரட்ணா இருந்த வீடு.குகமூர்த்தி ஜனவசியம் மிக்க ஆள்.இடது பாரம்பரியத்தில் வந்தவர்.அதேசமயம் தமிழ்த் தேசியவாதிகளோடும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் வேலை செய்தவர்.போர்க்காலத்தில் கொழும்பில் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்.ஏஜேயைத் தேடி வெவ்வேறு அரசியல் நம்பிக்கைகளைக் கொண்டவர்கள் வருவார்கள்.இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் வருவார்கள். இயக்கங்களில் இருந்து விலகியவர்களும் வருவார்கள்.விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவர் மாத்தையாகவும் வருவார். பின்னாளில் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பைச் செய்தவர்களில் ஒருவராகிய ராஜன் கூலும் வருவார்.தமிழ்த் தேசிய அரசியலின் பல்வகைமையைப் பிரதிபலித்த ஒரு வீடு அது.
மற்றொரு வீடு நாவலர் வீதியில் அமைந்திருந்த ராஜசிங்கம் மாஸ்டர் வீடு.இயக்கங்கள் வளர்ச்சி அடையத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இயக்கங்களுக்கு எதிரான விமர்சனங்கள் மேலெழுந்த காலகட்டம் வரையிலுமான கலந்துரையாடல் களமாக அந்த வீடு இருந்திருக்கிறது.
மற்றொன்று மு.திருநாவுக்கரசு இருந்த வீடு. சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் அவருடைய வீட்டுக்குப் போவார்கள். இரவு பகலாக இருந்து கதைப்பார்கள்.ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் அரசியல் உரையாடல்கள் அதிகம் நிகழ்ந்த வீடுகளில் அதுவும் ஒன்று.
அப்படித்தான் மற்றொரு பொது இடம்,யாழ்.மறைக்கல்வி நிலையம்.2009க்குப் பின்னரான அதிகளவு அரசியல் சந்திப்புகள்,கலந்துரையாடல்கள் நிகழ்ந்த இடங்களில் அது முக்கியமானது.
மேற்கண்டவை சில உதாரணங்கள்.ஈழத் தமிழ்ச் சமூகத்தைச் செதுக்கிய, தீர்மானித்த பலரைச் செதுக்கிய,உருத் திரட்டிய களங்கள் அவை. ஒருவகையில் பின்னாளில் மேலெழுந்த பல போக்குகள் கருகட்டிய இடங்கள் அவை. எதிர்காலத்தை நொதிக்க வைத்த சமூக நொதிப்பிடங்கள் அவை.
போர்க்காலத்தில் பாதுகாப்பற்ற வீடுகளின்,சிறிய அல்லது பெரிய முன் விறாந்தைகளில்,ஒரு குவளை பால் இல்லாத வெறுந் தேனீரோடு உரையாடப்பட்ட பல விடியங்கள்தான் பின்னாளில் சமூகத்தின் உயிர்நிலையான விடயங்களைத் தீர்மானித்தன.
இந்து சமயத்தில் சத்சங்கம் என்று கூறுவார்கள்.ஒரே ஆன்மீக நம்பிக்கையைக் கொன்றவர்கள் ஓரிடத்தில் கூடி கலெக்ரிவ்வாகப் பிரார்த்திப்பார்கள், தியானம் செய்வார்கள்.அந்தக் கலெக்ரிவிற்றிக்கு-கூடுகி செயற்பாட்டுக்கு ஒரு சக்தி உண்டு.அது தனித்தனிச் சக்திகளை ஒன்றாகக் கூட்டித் திரட்டும். திரட்டப்பட்ட கூட்டுச்சக்தி மகத்தான ஆக்க சக்தியாக மாறும்.
இவ்வாறு சிறு சந்திப்பிடங்கள் அல்லது சமூக நொதிப்பிடங்கள் போன்றன பின்வரப் போகும் சமூக ஓட்டங்களைத் தீர்மானிக்கின்றன. பரபரப்பின்றி, பிரசித்தமின்றி,சிறியதாக, சீரியஸானதாக, ஆனால் தொடர்ச்சியானவைகளாக இருப்பவை.உண்மையும் அர்ப்பணிப்பும் தொடர்ச்சியும்தான் அவற்றுடைய பலம்.
அந்த சிறிய பொறிகள்தான் பிற்காலங்களில் பெரும் சுவாலையாக வளர்கின்றன.நோபல் பரிசை வென்ற மானுடவியலாளராகிய மாக்ரட் மீட் அம்மையார் கூறுவது போல “உலகை மாற்றுவதற்கான அர்ப்பணிப்புள்ள ஒரு சிறிய குழுவின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். உண்மையில், அதுதான் இதுவரை நடந்திருக்கும் ஒரே விடயம்.”