புதிய வட்டுவாகல் பாலம்:நினைவுகளை அழிப்பதா? பேணுவதா?

கடந்த இரண்டாம் திகதி,அனுர முல்லைத்தீவில் புதிய வட்டுவாகல் பாலத்துக்கான நிர்மாணப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.வட்டுவாகல் பாலத்தைப் புதிதாகவும்  நவீனமாகவும் கட்ட வேண்டும்.போரால் அதிகம் பாதிக்கப்பட்ட அந்த மாவட்டத்தை பொருளாதார ரீதியாக மேம்படுத்த வேண்டும். அதேசமயம்,போரால் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம் என்ற அதே காரணத்துக்காக பாதிக்கப்பட்ட மக்களின் நோக்கு நிலையில் இருந்து இந்த இடத்தில் மற்றொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும்.போரால் பாதிக்கப்பட்ட மக்கள் பழைய பாலத்தை ஒரு நினைவுச் சின்னமாகப் பேண வேண்டும் என்று கேட்கின்றார்கள்.புதிய பாலத்தைக் கட்டும்போது அதன் பார்வைப் புலத்துக்குள் வரக்கூடியவாறு இப்போதுள்ள பாலத்தை ஒரு நினைவுச் சின்னமாகப் பாதுகாக்க வேண்டும் என்றும் புதிய பாலத்தின் முகப்பில் பழைய பாலத்தின் வரலாற்று முக்கியத்துவம் குறிப்பிடப்படவேண்டும் என்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை விரிவுரையாளர் ஒருவர் கூறினார்.

வட்டுவாகல் என்ற பெயர் வெட்டு வாய்க்கால் என்பதிலிருந்து வந்தது. வெள்ளப்பெருக்கான காலங்களில் நீரை வெட்டிக் கடத்திவிடும் வழி என்ற அர்த்தத்தில் வெட்டு வாய்க்கால் என்று அழைக்கப்பட்ட பகுதி பின்னாளில் மருவி வட்டுவாகல் என்று அழைக்கப்படுகிறது. இப்போதுள்ள பாலத்தைக் கட்டியவர் “அடங்காத் தமிழன்” என்று அழைக்கப்பட்ட சி.சுந்தரலிங்கம்.அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் 1950ல் பாலம் கட்டப்பட்டது.அதே காலப்பகுதியில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியும் நிறுவப்பட்டது.

ஈழத் தமிழர்களின் நவீன வரலாற்றில் இரண்டு முக்கிய பேரழிவுகளின்போது வட்டுவாகல் பாலம் பிணங்களுக்குச் சாட்சியாக இருந்தது.கூட்டுத் தண்டனைக்கும் கூட்டுத் தோல்விக்கும் சாட்சியாக இருந்தது.

முதலாவது பேரழிவு,ஆழிப்பேரலை.இரண்டாவது பேரழிவு, இறுதிக்கட்டப் போர்.ஆழிப்பேரலையின் போது சுருண்டு கறுத்த பிணங்கள் அந்தப் பாலத்தின் இரு மருங்கிலும் ஒதுங்கின.இறுதிக்கட்டப் போரின் போதும் அப்படித்தான் அது பிணங்கள் ஒதுங்கும் ஒரு பாலமாக இருந்தது. மழைக்காலங்களில் குறிப்பாக வற்றுப் பெருக்கு காலங்களில் இறால் விளையும் கடல்.அங்கே இயற்கை அனர்த்தம் ஒன்றின் போதும் இறுதிக்கட்டப் போரிலும் தமிழ் மக்களின் பிணங்கள் விளைந்தன.

இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த பின் காணாமல் போகச் செய்யப்பட்ட பலருக்கும் அந்தப் பாலந்தான் கடைசியாக நடந்த வழி. கூட்டுத் தோல்வியோடும்.அவமானத்தோடும் ஒரு சிற்றரசை இழந்து நடந்த வழி.சரணடைந்த வழி.அந்த வழியால் போன பலர் பின்னர் உயிருடன் வரவில்லை. எனவே அந்தக் கூட்டு நினைவுகளின் தடமாக,ஒரு நினைவுச் சின்னமாக அதைப் பேண வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக உருவாக்கப்படும் அபிவிருத்தித் திட்டம் ஒன்றில் அந்த மக்களுடைய கூட்டு உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.இதுவிடயத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக எழுந்த வாதப்பிரதிவாதங்களை இங்கே சுட்டிக்காட்டலாம்.

சேது சமுத்திரத்தை ஆழமாக்குவதற்காக ராமர் பாலம் என்று கருதப்பட்ட திட்டுக்களை அகற்றுவதா? இல்லையா? என்ற விவாதம் நடந்தபொழுது மத நம்பிக்கையோடு அந்த விவகாரத்தை அணுகிய பலரும் ராமர் பாலத்தின் மிஞ்சியுள்ள பகுதிகளைப் பேணவேண்டும் என்று கேட்டார்கள்.இதுவிடயத்தில் இந்திய வராற்றியலாளரான ரோமிலா தார்பர் ஒர் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் கூறிய கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டியவை.ரோமிலா தார்பர் ஒரு மதவாதி அல்ல.எனினும் அவர் சொன்னார்,ராமர் பாலம் ஓர் ஐதீக நம்பிக்கையாக இருக்கலாம்,அதற்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் இல்லாமலிருக்கலாம்,ஆனால் அது ஒருதொகுதி மக்களின் கூட்டு நம்பிக்கைகளோடு தொடர்புடைய ஒன்றாகக் காணப்படுகிறது.எனவே இந்த இடத்தில் அந்த மக்களுடைய கூட்டு உணர்வை மதிக்க வேண்டும். அதனால் ராமர் பாலத்தின் மிஞ்சியிருக்கும் பகுதிகளைப் பேணலாம் என்று ரோமிலா கருத்து தெரிவித்தார்.

அதாவது ஒரு மரபுரிமைச் மரபுரிமைச் சொத்தை அல்லது இறந்த காலத்தின் நினைவுச் சின்னம் ஒன்றைப் பேணும் விடயத்தில் அந்த நினைவுச் சின்னத்தை தமது இறந்த காலத்தோடு தொடர்புறுத்தி உணர்வுபூர்வமாக சிந்திக்கின்ற மக்களின் கூட்டு உணர்வை,கூட்டு விருப்பத்தை மதிக்க வேண்டியது அவசியம் என்பதே ரோமிலா தர்பார் போன்றவர்களின் முடிவாக இருக்கிறது.

ஆனால் யாழ்ப்பாணம் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் யுத்த அழிவுச் சின்னங்கள்,தடயங்கள் அவ்வாறு பாதுகாக்கப்படவில்லை.மிலன் குண்டெரா கூறுவதுபோல அவை துடைத்தழிக்கப்பட்டு, அவற்றுக்கு வெள்ளை அடிக்கப்பட்டது.

எரிக்கப்பட்ட யாழ்.நூலகத்தின் ஒரு பகுதியை,யாழ்.நகரத்தை மீளக்  கட்டியெழுப்பும் நடவடிக்கைகளின்போது நினைவுச் சின்னமாகப் பேணவேண்டும் என்று முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வநாதன் உட்பட  யாழ் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையைச் சேர்ந்த விரிவுரையாளர்களான சனாதனன், அகிலன் போன்றவர்கள் வெவ்வேறு காலப் பகுதிகளில் வற்புறுத்தியிருக்கிறார்கள்.அதுபோலவே இறுதிக்கட்டப் போரின்பின் கிளிநொச்சி அபிவிருத்தி செய்யப்பட்டபோது,அங்கே கண்டி வீதியில், யுத்த காலத்தில் தகர்க்கப்பட்ட தண்ணீர்த் தாங்கி,கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் ரவைகளால் காயப்பட்ட சுவரின் ஒரு பகுதி என்பவற்றை நினைவுச் சின்னங்களாகப் பேணவேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.எனினும்,அபிவிருத்தி என்ற போர்வையில் அனைத்துக் காயங்களின் மீதும் வெள்ளை அடிக்கப்பட்டு விட்டது.

பழைய பூங்கா

குறிப்பாக படைத்தளபதியாக இருந்த சந்திரசிறி வடக்கின் ஆளுநராக இருந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணம் பழைய பூங்கா சிதைக்கப்பட்டது. பழைய பூங்கா என்பது காலனித்துவ காலத்தின் நினைவுச் சின்னங்களில் ஒன்று.அது யாழ்ப்பாணத்தின் அரச அதிபரான  அக்லாண்ட் டைக்கின் தனிப்பட்ட சொத்தாக இருந்தது. அதை அவர் ஒரு பூங்காவாக,மகிழ்ச்சி மையமாக உருவாக்கினார்.காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்தபின்,அது கைவிடப்பட்ட ஒரு நகர்ப்புறக் காடாக மாறியது.அதன் முதுமரங்களில் வாழ்ந்த லட்சக்கணக்கான  வௌவால்கள் பின்மாலை வேலைகளில் யாழ்ப்பாணத்து வானில் பறந்துசெல்லக் காணலாம். .

உலகம் முழுவதும் நவீன நகரங்களை உருவாக்கும் பொழுது அவற்றின் சுவாசப் பையாக சிறிய நகர்ப்புறக் காடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. ஆனால் யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே இருந்த ஒரு நகர்ப்புறக் காட்டை அதைவிட முக்கியமாக ஒரு மரபுரிமைச் சொத்தை சந்திரசிறீ மக்களின் அனுமதியின்றியே சிதைத்து விட்டார்.இப்பொழுது பழைய பூங்காவின் ஒரு மூலையில் ஒரு புதியபூங்கா ஹைபிரிட் மரங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு யாழ் அரச அதிபர் பழைய பூங்காவைப் பாதுகாப்பது தொடர்பான சந்திப்பொன்றில் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளிவந்தன.ஆனால் அங்கிருந்த முதுமரங்கள் பல ஏற்கனவே அழிக்கப்பட்டு விட்டன.அபிவிருத்தி என்ற பெயரில் ஒரு மரபுரிமைச் சொத்தைச் சிதைத்து அதற்குப் பதிலாக அதன் மூலையில் ஒரு சிறிய  பூங்கா ஹைபிரிட் மரங்களோடு அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும்.இறந்த காலத்தின் காயங்களைத் தொடர்ந்து பேண வேண்டுமா?கூட்டுத் துக்கத்தை தொடர்ந்து காவ வேண்டுமா?என்று.ஆனால் இந்தக் கேள்வியை முதலில் கேட்க வேண்டியது அரசுக் கட்டமைப்பிடந்தான்.ஏனென்றால் கண்டி வீதி நீட்டுக்கும்,வன்னியிலும்,யுத்த வெற்றியின் நினைவுச் சின்னங்களைப் பேணும் ஒரு சிறிய நாட்டில்,தமிழ் மக்களும் தங்களுடைய நினைவுச் சின்னங்களைப் பேண முற்படுவதில் தவறு என்ன?

மிலன் குண்டெரா கூறுகிறார்..“மக்களைத் தீர்த்து கட்டுவதற்கான முதல் அடி அந்த மக்களுடைய நினைவை அழிப்பது.அந்த மக்களுடைய புத்தகங்களை, பண்பாட்டை,வரலாற்றை அழிப்பது.அதன்பின்  யாராவது புதிய  புத்தகங்களை எழுதுவார்கள்;புதிய வரலாற்றைக் கண்டுபிடிப்பார்கள்.விரைவில் தேசம் அது என்னவாக இருக்கிறது; என்னவாக இருந்தது என்பதையெல்லாம் மறக்கத் தொடங்கிவிடும்.” என்று.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காத ஒரு பின்னணிக்குள்,நீதிக்காகப் போராடும் ஒரு மக்கள் கூட்டம் ஞாபகங்களைப் பேண வேண்டும் என்று கேட்பது ஓர் அரசியல்.அதைப்போலவே அந்த ஞாபகங்களை அபிவிருத்தியின் பெயரால் அழிப்பதும் ஓர் அரசியல்.அது இனஅழிப்பின் ஒரு பகுதிதான்.“மீளக் கட்டுமானம் என்பதே ஒரு வன்முறையாக அமைய முடியும்” என்று குரிய்யா பாடெஸ்க்கு  கூறுகிறார்.

குரேசியா,வுகோவார், தண்ணீர்த் தாங்கி

1991இல் குரேசியாவில் வுகோவார் நகரத்தில் சேதமாக்கப்பட்ட தண்ணீர்த் தாங்கி போருக்குப் பின் புனரமைக்கப்படடபோது அதை ஒரு நினைவுச் சின்னமாகப் பேணுவது  என்று முடிவெடுக்கப்பட்டது. இப்பொழுது அது குரோஷியாவின் வீரத்துக்கும் இறந்தகாலக் காயங்களுக்கும் குறியீடாக நிற்கிறது.

ஆனால், தமிழ்ப் பகுதிகளில் ஆயுத மோதல்களுக்குப் பின்னரான கடந்த 16 ஆண்டுகளிலும் அபிவிருத்தியின் பெயரால் நினைவுச் சின்னங்களாகப் பேணப்பட வேண்டிய பல விடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.இப்பொழுது வட்டு வாகல் பாலம்?

சுனாமி,இறுதிக்கட்டப் போர் என்பவற்றின் ஞாபகச் சின்னமாக இப்போதுள்ள வட்டுவாகல் பாலத்தைப் பேணும் அதேசமயம்,புதிய பாலத்தை நவீனமாகக் கட்டி எழுப்பலாம் என்று பாதிக்கப்பட்ட மக்களும் மரபுரிமைச் சொத்துக்களைப் பாதுகாப்பவர்களும் கேட்கின்றார்கள்.

பழைய பாலம் பதிவாக கடல் மட்டத்துக்குக் கிட்டவாகக் காணப்படுவதால் இயற்கை அழிவுக்கு உள்ளாகக்கூடிய ஆபத்துக்களை அதிகமாகக் கொண்டிருக்கிறது. அதனால் அப்பாலத்தை ஒரு நினைவுச் சின்னமாகப் பேணுவது என்பது மனிதர்களிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும்  அதைப் பாதுகாப்பதுதான்.இந்த விடயத்தில் தொழில் நுட்பச் சவால்கள்,ஒரு மரபுரிமைச் சொத்தைப் பாதுகாப்பதற்குரிய தொழில்சார் ஏற்பாடுகள் போன்ற எல்லாத் துறைசார் விடையங்களையும் கவனத்திலெடுத்து முடிவெடுக்கலாம்.

பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய ஜனாதிபதியும் அமைச்சரும் தமிழ் மக்களின் கூட்டுணர்வை இந்த அரசாங்கம் மதிக்கின்றது என்ற பொருள்படப் பேசினார்கள்.அப்படியென்றால் தமிழ் மக்களின் நினைவுகளை அழித்த முன்னைய அரசாங்கங்களைப் போலன்றி இந்த அரசாங்கம் வட்டுவாகல் பாலத்தின் விடயத்தில் ஒரு மாற்றத்தை காட்டுமா? “மீளக் கட்டுமானம் என்பதே ஒரு வன்முறையாக” அமையாது என்று தேசிய மக்கள் சக்தி நிரூபிக்குமா ?

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *