அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் மாமியார்,கடந்த புதன்கிழமை,கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் இயற்கை எய்தினார்.ஆனந்த சுதாகரனின் பிரிவினால் நோயாளியாகிய அவருடைய மனைவி 2018ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.அவருடைய தாயார் கமலாதான் பேரப்பிள்ளைகளைப் பராமரித்து வந்தார்.அவரும் இப்பொழுது இறந்து விட்டார். ஆனந்த சுதாகரன் 17 ஆண்டுகளாகச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான திருமதி.லக்மாலி அண்மையில் கொழும்பில் நடந்த ஊடக விவாத நிகழ்ச்சியொன்றில் பின்வருமாறு வாதிட்டதை முகநூல் பதிவொன்றில் காண முடிந்தது.”சிறையில் இருப்பவர்கள் அரசியல் கைதிகள் அல்லர். நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள்.தலதா மாளிகை சம்பவம் உட்பட பாரிய குற்றச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள்.தமிழ் மக்கள் இதனை விளங்கிக் கொண்டுதான் இப்போது எமது அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர். ”
சிறையில் இருப்பவர்கள் தண்டிக்கப்பட்ட கைதிகள் என்று கூறுவதன்மூலம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று லக்மாலி கூறுகிறார். அதாவது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் என்று பொருள்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கப் போவதாக கடந்த ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்பாக அரசாங்கம் அறிவித்தது.ஆனால் இன்றுவரையிலும் அதை அவர்கள் செய்யவில்லை. இப்பொழுது அந்தச் சட்டத்தைத் திருத்தி ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வரப் போவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் எனப்படுவது தமிழ் மக்களின் அரசியல் எதிர்ப்பை பயங்கரவாதமாக சட்ட வியாக்கியானம் செய்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான ஒரு சட்டச்சூழலை எப்பொழுதும் பேணுவது.அதாவது தமிழ்மக்களின் எதிர்ப்பை பயங்கரவாதமாகச் சித்தரிக்கக்கூடிய வாய்ப்புகளை எப்பொழுதும் பேணுவது. இந்தவிடயத்தில் கடந்த காலங்களில் இலங்கைத்தீவை ஆண்டு வந்த மேட்டுக்குடி அரசியல்வாதிகளின் அதே அணுகுமுறையைதான் தேசிய மக்கள் சக்தியும் கொண்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?
அரசியல் கைதிகளின் விடயத்தில் மட்டுமல்ல, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அகற்றுவதில் மட்டுமல்ல,தொல்லியல் விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழுவை நியமித்தபோது மட்டுமல்ல,திடீரென்று முளைக்கும் புத்தர் சிலைகளைக் கையாளும் விடயத்திலும் என்.பி.பி அரசாங்கமானது முன்னைய மேட்டுக்குடி அரசியல்வாதிகளைப் போலவே சிந்திக்கிறது என்பதைத்தான் கடந்த வாரம் திருக்கோணமலையில் நடந்த புத்தர் சிலை விவகாரம் நமக்குக் காட்டுகிறதா ?
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் எனப்படுவது சிலையிலிருந்து தொடங்கவில்லை.அது அந்தச் சிலை வைக்கப்பட்ட காணிக்குள் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த ஒரு ரெஸ்ரோரண்டில் இருந்து தொடங்குகிறது. அந்த ரெஸ்ரோரன்ட் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கிறது என்று அதில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தரப்புகளும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சித்த ஒரு பின்னணியில்,கடந்த வாரத்துக்கு முதல் வாரம் அந்த ரெஸ்ரோரண்டின் மையப் பகுதியை வைத்துக்கொண்டு ஏனைய பகுதிகளை அகற்றுவதற்கு அங்கிருந்த பௌத்த மதகுரு ஒப்புக்கொண்டார்.
ஆனால் அவர் ஒப்புக்கொண்டபடி நடக்காமல் அந்த விடயத்தை உணர்ச்சிகரமான விதத்தில் திசைதிருப்பும் நோக்கத்தோடு புத்தர் சிலையை உள்ளே கொண்டு வந்திருக்கிறார். அதாவது சட்டவிரோதக் கட்டுமானம் ஒன்றை அகற்றுவதைத் தவிர்ப்பதற்கு புத்தர் சிலை ஒரு திசை திருப்பும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.அது சட்டவிரோதமானது என்பதனால்தான் போலீசார் முதலில் அதனை அகற்றினார்கள். ஆனால் அதே போலீசார் அந்த சிலையை மீண்டும் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் போலீசார் சட்டவிரோதமான ஒரு சிலையை சட்டபூர்வமானது ஆக்கியிருக்கிறார்களா?
புத்தர் சிலைக்கு ஒரு சட்டம்; தமிழ் மக்களுக்கு இன்னொரு சட்டம்.ஏற்கனவே திருமலை மறை மாவட்டத்தின் ஆயர் இதுபோன்ற விடையங்களை முன்வைத்துத்தான் இலங்கைத் தீவில் இரண்டு சட்டங்கள் இருக்கின்றனவா என்று கேட்டிருந்தார்.
புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கும் காணிக்குள் காணப்படும் ரெஸ்ரோரண்டை அகற்ற வேண்டும் என்று போராடி வருபவர்களில் இப்பொழுது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ரொஷான் அக்கீமனவும் ஒருவர்.அந்த வளவிலிருந்து குறிப்பிட்ட கட்டுமானத்தை அகற்றக்கோரி போராடியவர்கள் மத்தியில் அவர் முன்பு காணப்பட்டார்.ஆனால் இப்பொழுது எல்லாத் தரப்புக்களையும் சமாளிக்கப் பார்க்கிறார்.அவர் மட்டுமல்ல திருகோணமலையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் உதவி வெளிவிவகார அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரவும் எல்லாத் தரப்புக்களையும் சமாளிக்க முயல்கிறார்.
அவர் பதவி விலக வேண்டும் என்று சுமந்திரன் கேட்கிறார்.ஆனால் சிலையை வைத்து இனவாதத்தைக் கிளப்பும் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டவர் சுமந்திரன்.அதற்குப் பிராயசித்தமாக அவரும் தன் பொறுப்புகளைத் துறக்க வேண்டும்.
2015இல் ஆட்சிக்கு வந்த ரணில் மைத்திரி அரசாங்கத்தில் சஜித் பிரேமதாசவின் பொறுப்பின் கீழ்தான் புத்தசாசன அமைச்சு காணப்பட்டது. அக்காலகட்டத்தில்தான் தையிட்டியில் விகாரையைக் கட்டத் தொடங்கினார்கள். நாடு முழுவதும் ஆயிரம் விகாரைகளைக் கட்டுவதற்கு 500 மில்லியன் ரூபாயை ஒதுக்குவோம் என்று சிங்கள மக்களுக்கு வாக்குறுதி அளித்தவர்களில் சஜித்தும் ஒருவர். எனவே அப்படிப்பட்ட சஜித்தை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்குமாறு கேட்ட சுமந்திரன் இப்பொழுது அருண் ஹேமச்சந்திர ராஜினாமாச் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனக்கு முன்னிருந்த ஆட்சிகளில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டும்போது சுட்டிக்காட்டும் வேறுபாடுகளில் ஒன்று, தாங்கள் இனவாதத்துக்கு தலைமை தாங்கவில்லை என்பது.ஆனால் இக்கட்டுரையில் ஏற்கனவே கூறப்பட்டதுபோல,அரசியல் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டம், தொல்லியல் விவகார ஆலோசனைக் குழு,புத்தர் சிலைகள் போன்ற விடயங்களில் இந்த அரசாங்கத்துக்கும் முன்னைய அரசாங்கங்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் உண்டா?
புத்தர் சிலையை வைத்து எதிர்க்கட்சிகள் இனவாதத்தைக் கிளப்புகின்றன அதன் மூலம் நுகேகொடவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை திரட்டும் உணர்ச்சிகரமான அரசியல் சூழலை உருவாக்க முயற்சிக்கின்றன என்று அரசாங்கம் எதிர்க்கட்சிகளைக் குற்றம் சாட்டியது.
எதிர்க்கட்சிகளை இனவாதக் கட்சிகள் அல்லது இனவாதத்தை வைத்துப் பிழைத்த கட்சிகள் என்று குற்றச்சாட்டும் இந்த அரசாங்கமானது,தான் இனவாதி அல்ல என்பதனை நிரூபிப்பதற்கு கடந்த ஓராண்டுக்கு மேலான காலத்தில் என்ன செய்திருக்கிறது ?
தாங்கள் இனவாதிகள் அல்ல என்று கூறிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. நடைமுறையில் தாங்கள் இனவாதத்திற்கு எதிரானவர்கள் என்பதை நிரூபிக்கத் தேவையான அர்ப்பணிப்பும் துணிச்சலும் அவர்களிடம் உண்டா என்பதுதான் இப்பொழுதுள்ள கேள்வி.
இனவாதிகள் தலையெடுக்கக்கூடாது என்றால் இந்த அரசாங்கத்தை எப்படியாவது பாதுகாக்கவேண்டும்.இந்த அரசாங்கம் தோல்வியுற்றால் இனவாதிகள் மீண்டும் தலையெடுத்து விடுவார்கள் என்று அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள்,குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள சில விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் இது ஒன்றும் புதிய தர்க்கம் அல்ல.இந்த நாட்டை இதுவரையிலும் ஆண்ட இனவாதக் கட்சிகள் மத்தியில் ஒப்பீட்டளவில் லிபரல்களாகத் தோன்றும் பலரும் அப்படித்தான் கூறிவந்தார்கள்.அதாவது இனவாதத்தை தோற்கடிப்பதற்கு குறிப்பிட்ட லிபரல் அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று.ஆனால்,யதார்த்தத்தில் என்ன நடந்தது என்றால்,வெளிப்படையான இனவாதத்துக்கு எதிராக முகமூடி அணிந்த இனவாதம் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு தந்திரமாகவே அது காணப்பட்டது.இதன் மூலம் முகமூடி அணிந்த இனவாதம் தமிழ்,முஸ்லிம் வாக்குகளையும் கைப்பற்றிக் கொண்டது.
“அரகலய” போராட்டம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் அந்தப் போராட்டத்தின் பின்னணியில் நின்ற அமைப்புகளில் ஒன்றாகிய முன்னிலை சோசிலிச கட்சியின் தலைவராகிய குமார் குணரட்ணத்தோடு உரையாடக் கிடைத்தது.சுமார் 5 மணித்தியால உரையாடல்.அந்த உரையாடலின் ஒரு கட்டத்தில் அவர் சொன்னார்,தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள முடியாது;சமஸ்டியை ஒரு வெளிப்படையான தீர்வாக முன்வைக்க முடியாது என்ற பொருள்பட.நாங்கள் இதை வெளிப்படையாக உங்களுக்குச் சொல்கிறோம்.ஆனால் ஜேவிபி அதை வெளியில் சொல்லாமல் அரசியல் செய்கிறது.அவர்கள் அதை வெளிப்படையாகச் சொன்னால் தென்னிலங்கையில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள் என்று.
இந்த விடையத்தில் முன்னைய லிபரல் அரசாங்கங்களைப் போலவே என்பிபியும் இனவாதத்தை எதிர்த்துத் தியாகம் செய்யத் தயாரில்லை என்பதைத்தான் கடந்த ஓராண்டுக்கு மேலான அவர்களுடைய ஆட்சிக் காலம் நிரூபித்திருக்கிறது.அதாவது இனவாதத்தை எதிர்த்து நின்று அழிய அவர்கள் தயாராக இல்லை. மாறாக இனவாதம் அருட்டப்பட்டுவிடும் என்று கூறி தமிழ் எதிர்ப்பைத் தணிக்கப் பார்ப்பார்கள்.இதைத்தான் லிபரல் இனவாதிகளும் செய்கிறார்கள்; சில வெளிநாட்டுத் தூதரகங்களும் செய்கின்றன.
சந்திரிகா “வெண்தாமரை” இயக்கத்தைத் தொடங்கி சமாதானத்துக்கு சிங்கள மக்களைத் தயார்படுத்தப் போவதாகக் கூறினார்.ஆனால் அந்த இயக்கம் நடைமுறையில் படையினருக்கும் படையினரின் குடும்பங்களுக்கும் தொண்டு செய்யும் ஒரியக்கமாகவே மாறியது.
என்பிபியின் அடித்தளமாகக் காணப்படும் ஜேவிபியில் உறுப்பினராக இருந்து, பின்னர் விலகிச் சென்ற ஒருவர் கூறுவார்,”மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையான இனவாதி.ஆனால் ஜேவிபி சமூக நீதியின் பின் பதுங்கும் இனவாதி”என்று. இக்கூற்று பிழையானது என்பதை நிரூபிப்பதற்குக் கிடைத்த கடந்த ஓராண்டுக்கு மேலான காலத்தை ஜேவிபி பயன்படுத்தவில்லை. எனவே இதற்கு முன்பு ஆட்சிசெய்த லிபரல் முகமூடி அணிந்த,ஆனால் இனவாதத்துக்கே தலைமை தாங்கிய ஆட்சியாளர்களைப் போலவே என்பிபியும் அதே குட்டையில் ஊறிய மட்டைதானா ?
எனது நண்பர் ஒருவர் யாழ்ப்பாணத்தின் சில புத்திஜீவிகளைப்பற்றிச் சொல்லும்போது ஒர் உதாரணத்தை எடுத்துக்காட்டுவார்.”நீரில் மிதக்கும் பனிக்கட்டிகள்” என்று.அதாவது அவர்களும் யாழ்ப்பாணிகள்தான்.ஆனால் தங்களை முற்போக்கானவர்களாகக் காட்டிக்கொண்டு கொஞ்சம் மேலே மிதப்பார்கள். நீரில் மிதக்கும் பனிக்கட்டியைப் போல. ஆனால் பனிக்கட்டியும் நீரும் அடிப்படையில் ஒரே பண்பிலிருந்து வந்தவைதான்.இது இப்பொழுது என்பிபிக்கும் பொருந்துமா?





