“சென்னையில் திறவுகோல்” என்ற தலைப்பில் மு.திருநாவுக்கரசு,யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் 2006ம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் அவர் இந்தியாவின் வெளியுறவு முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்றால் தமிழகம் பெருமெடுப்பில் கொந்தளிக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். அதாவது டெல்லியைக் கையாள்வதற்கான திறவுகோல் தமிழகத்தில்தான் உண்டு என்ற பொருள்பட கட்டுரையின் சாராம்சம் அமைந்திருந்தது. தமிழக வெகு சனங்கள் ஈழத் தமிழர்களுக்காகக் கொந்தளித்து எழுந்தால் இந்திய மத்திய அரசாங்கத்தின் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று கட்டுரை கூறுகிறது. இது எழுதப்பட்டது 18.11.2006 இல்.அதாவது 2009 மே மாதத்துக்கு முன்.
இறுதிக்கட்டப் போரில் தமிழகம் நொதிக்கத் தொடங்கியது.எனினும் அதனை அப்போது இருந்த திமுக அரசாங்கம் மடை மாற்றியது என்றும், அதனால்தான் இறுதிக்கட்டப் போரில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற முடிந்தது என்றும் ஒரு குற்றச்சாட்டு ஈழத்தமிழர்கள் மத்தியில் உண்டு.இக்குற்றச்சாட்டு காரணமாக கலைஞர் கருணாநிதியை இப்பொழுதும் விமர்சிக்கும் ஈழத் தமிழர்கள் உண்டு.
இவ்வாறான குற்றச்சாட்டுகளின் பின்னணியில்,கடந்த 16 ஆண்டுகளாக தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையிலான உறவு பெருமளவுக்கு பலவீனமடைந்திருக்கிறது.கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்நாடு ஈழத் தமிழர்களுக்காக நொதிக்கவில்லை; கொந்தளிக்கவில்லை.
தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் உருவாக்கப்பட்டமை,ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது இன அழிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை போன்ற இரண்டு குறிப்பிடத்தக்க விடயங்களைத்தவிர கடந்த 16 ஆண்டுகளாக தமிழகம் ஈழத் தமிழர்களுக்காக நொதிக்கவில்லை.
கடந்த 16 ஆண்டு கால ஈழத்தமிழர்களின் ஐநாமைய அரசியலில்,ஐநா கூட்டத்தொடர்களின்போது இந்திய மத்திய அரசாங்கம் 13ஆவது திருத்தத்தைத்தான் ஒரு தீர்வாக தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது. கடந்த ஐநா தீர்மானத்தின் போதும் அதுதான் நிலைமை.கடந்த 16 ஆண்டுகளிலும் இந்தியா ஐநாவில் ஒரு முறை மட்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த பதினாறு ஆண்டுகளிலும் இந்தியாவை அதிக காலம் ஆட்சி செய்து வருகின்ற பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்தின் கீழ்,ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் வெளியுறவு நிலைப்பாடுகளில் திருப்பகரமான மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை.ஐநாவில் இனப்பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் மாறாத நிலைப்பாடு அதைத்தான் உணர்த்துகின்றது.அவ்வாறு இந்திய மத்திய அரசின் நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தத் தக்க விதத்திலோ அல்லது ஈழத் தமிழர்களோடு தனது சகோதரத்துவத்தை நிரூபிக்கும் விதத்திலோ தமிழ்நாடு குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு கொதிக்கவில்லை.கொந்தளிக்கவில்லை.
2009க்குப் பின் திமுகவுக்கு எதிராகவும் ஏனைய திராவிடக் கட்சிகளுக்கு எதிராகவும் “தமிழ் எதிர் திராவிடம்” என்ற துருவநிலை அரசியலை முன்னெடுக்கும் சீமான்,தன்னை ஈழப் போரின் ஆகப் பிந்திய வாரிசாகக் காட்டிக்கொள்கிறார்.ஆனால் அவரால் சில பேரணிகளை ஒழுங்குபடுத்தியதற்குமப்பால்,ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முழுத் தமிழகத்தையும் ஸ்தம்பிக்க வைக்கும் விதத்தில் பேரெழுச்சிகளையோ ஆர்ப்பாட்டங்களையோ ஒருங்கிணைக்க முடியவில்லை.
எனினும் ஈழத் தமிழர்கள் விவகாரம் தமிழகத்தில் தொடர்ந்தும் ஒரு பேசு பொருளாக அல்லது பேசப்பட வேண்டிய ஒரு விவகாரமாக இருந்து வருகிறது என்பதைத்தான் நடிகர் விஜய் அண்மையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தெரிவித்த கருத்துக்கள் காட்டுகின்றன.அதாவது தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச வேண்டிய அரசியல் சூழல் இப்பொழுதும் உண்டு. ஆனால் அது ஒர் உள்ளுறையும் சக்திதான். அதனை மகத்தான ஒரு மக்கள் சக்தியாக,எழுச்சியாக,கொந்தளிப்பாக மாற்ற சீமானால் முடியவில்லை. திராவிட இயக்கக் கட்சிகளும் அதில் ஆர்வம் காட்டவில்லை.
தமிழ்நாட்டில் இறுதிக்கட்டப் போர் வரையிலும் 19க்கும் குறையாத தமிழர்கள் தீக்குளித்திருக்கிறார்கள். உலகில் வேறு எந்த ஒரு தமிழ்ச் சமூகமும் அவ்வாறு ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை.ஒரு நீரிணையால் பிரிக்கப்படுகின்ற தமது சகோதர மக்களுக்காக அவ்வாறு அதிக தொகையினர் தீக்குளித்தமை என்பது தமிழகத்தில் மட்டுமே நடந்திருக்கிறது.நவீன அரசியலில் ஒப்புவமை இல்லாத போற்றுதலுக்குரிய தியாகம் இது.
முதலாவது முள்ளிவாய்க்கால் நினைவாலயம் தமிழகத்தில் தஞ்சாவூர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான சசிகலாவின் கணவருடைய காணியில் கட்டப்பட்டது.தமிழ் இனஅழிப்புக்கு எதிராக உலகின் முதலாவது தீர்மானம் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. எனவே ஈழத் தமிழர்களுக்காக பல விடயங்களை முதலில் செய்தது தமிழகம்தான்;தீக்குளித்தது தமிழகம்தான்.அப்படிப்பட்ட தமிழகம் கடந்த 16 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது.
இப்படிப்பட்டதோர் பிராந்திய அரசியல் சூழலில்தான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையானது கடந்த வாரம் தமிழ்நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக ஒரு விஜயத்தை மேற்கொண்டிருக்கிறது.தமிழ்த் தேசியப் பேரவையில் பங்காளிகளாக இருக்கும் ஏனைய கட்சித் தலைவர்களும் தமிழகம் செல்வதற்குத் தயாராக இருந்ததாகத் தெரிய வருகிறது.ஆனால் ஸ்ரீகாந்தா,சிவாஜிலிங்கம்,தவறாசா ஆகிய மூவரும் மருத்துவக் காரணங்களுக்காகப் பயணம் செய்யமுடியாத ஒரு நிலைமை தோன்றியதால் ஐங்கரநேசன் மட்டும் அந்தத் தூதுக்குழுவில் இணைந்தார்.
இத்தூதுக்குழுவானது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினும் உட்பட ஏனைய கட்சித் தலைவர்களையும் மூத்த ஈழ உணர்வாளர்களும் சந்தித்திருப்பதாகத் தெரிய வருகிறது.2009க்குப் பின்னர் தமிழ்நாட்டை நோக்கிச் சென்ற ஒப்பீட்டளவில் பெரிய தமிழ்த் தேசிய அரசியல் தூதுக்குழு இதுவெனலாம். ஏற்கனவே தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தனித்தனியாக பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தை நோக்கித் தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகத் திரண்ட ஒரு சந்தர்ப்பம் சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் கைதியாகிய சாந்தனின் விடயத்தில் இடம்பெற்றது.சாந்தனை விடுவிக்கக்கோரி அப்போது இருந்த தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தார்கள்.
அதன்பின் இப்பொழுது ஒரு தூதுக்குழு தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கிறது. இத்தூதுக்குழு தமிழ் நாட்டுக்குச் சென்றிருக்கும் அதே காலப்பகுதியில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவரைச் சந்திக்கவிருப்பதாகச் செய்திகள் வெளி வந்திருக்கின்றன.தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் இவ்வாறு ஒரே சமயத்தில் பிராந்திய அரசியலைக் கையாள முற்படுவது வரவேற்கத்தக்கது.
அரசியல் என்பது சாத்யக்கூறுகளின் கலை.பிராந்தியத்திலும் அனைத்துலக அளவிலும் காணப்படும் வாய்ப்புக்களை கெட்டித்தனமாகக் கையாளாமல் ஈழத் தமிழர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது.
கடந்த வாரம்,யாழ்ப்பாணத்தில் நடந்த மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய,தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளர்,யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை அகற்ற வேண்டும்,இங்கு சீனத் தூதரகத்தை கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருக்கும் ஒரு காலச்சூழலில்,கிழக்கைரோப்பாவில்,உக்ரைன் நாடு நேட்டோவில் இணைவதில்லை என்ற முடிவை அறிவித்திருக்கும் ஒரு காலச் சூழலில்,தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.







