வேலைக் கள்ளர்கள்

நண்பரான அரச ஊழியர் ஒருவர் சற்று அளவால் பெருத்த மேற்சட்டையோடு காணப்பட்டார். “எங்கே தைத்தாய் ?” என்று கேட்டேன். “வழமையாகத்  தைக்கும் இடத்தில்தான்.ஆனால் இதை அந்த டெய்லர் வைக்கவில்லை.அவருடைய உதவியாளர் தைத்த்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.கொண்டுபோய் காட்டினேன்.அதைத் திருத்தித் தருவதாகச் சொன்னார்.”என்று நண்பர் சொன்னார்.”அங்கே உதவியாளர்கள் நிரந்தரமாக இல்லையே?அவர்களை வைத்து எப்படித் தைப்பது?அவர்களிடம் தொழில் தேர்ச்சியும் இருக்காதே? இடையிடை வந்துபோறவர்களிடம் இவர் எப்படி சேட்டைத் தைக்கக் கொடுத்தார்?” என்று கேட்டேன்.

டெய்லருக்கு மட்டுமில்லை,மெக்கானிக், வயரிங் வேலை செய்பவர், மேசன், தச்சு வேலை செய்பவர்கள் என்று…அநேகமான தொழில்களுக்கு உதவிக்கு அன்றாடச் சம்பளத்துக்கு ஆளைப் பிடிக்க முடியாமல் இருக்கிறது.

அப்படிப் பிடிப்பதென்றால் ஒன்றில் அவர் அங்கே நிரந்தரமாக அல்லது மாதச் சம்பளத்துக்கு வேலை கிடைக்கும் என்று நம்பவேண்டும். அல்லது முன்கூட்டியே சில வாரங்களுக்கு முன்பு அவரைப் பதிவு செய்ய வேண்டும். இவை முதன்மை நிபந்தனைகள்.இவைதவிர வேலைக்கு வரும்போது கைபேசியோடு வருவார்கள். அடிக்கடி கைபேசி கிணுகிணுக்கும். அவரை மேற்பார்வை செய்ய ஒருவர் இல்லையென்றால் அவர் கைபேசியோடு காலத்தைக் கடத்துவார்.இடையில் தேநீர் இடைவெளி, உணவு இடைவெளி போன்றவற்றையும் எடுத்துக் கொள்வார்.அவர் வேலை நேரத்தில் கைபேசியைப் பயன்படுத்தவில்லை என்பதனைக் கண்காணிப்பதற்கு ஒரு மேற்பார்வையாளர் தேவை.வீட்டில் வயோதிபர்கள் இருந்தால் பிரச்சனை இல்லை.அப்படி யாரும் இல்லையென்றால் என்ன செய்வது?

கூலிக்கு ஆளைப்பிடிப்பதும் கஷ்டம்.பிடிக்கும் ஆளை மேற்பார்வை செய்யவும் ஒருவர் வேண்டும்.கைபேசிகளின் காலத்தில் கூலிக்கு ஆளைப் பிடிப்பது எவ்வளவு கஷ்டமானது?

“நாட் சம்பளத்துக்கு வருவார்கள்.இரண்டு நட்டுக் கழட்டியவுடன் தாங்களும் இனி மெக்கானிக்காக வேலை செய்யலாம் என்று நம்பி தனியாக கடை திறந்து விடுகிறார்கள்”என்று ஒரு மூத்த மெக்கானிக் சொன்னார். இது மெக்கானிக், வயரிங், பிளம்பிங் டெய்லரிங்..போன்ற பல துறைகளிலும் காணப்படும் ஒரு பிரச்சினை.வேலை பழக வேண்டும்,அதற்காக தொடர்ச்சியாக ஓரிடத்தில் வேலை செய்யவேண்டும் என்று சிந்திப்பவர்கள் குறைந்து வருகிறார்கள். இதனால் தொழில் தேர்ச்சியும் நிபுணத்துவமும் குறைந்து வருகிறது. கைபேசியில் பொழுது போக்குகிறார்கள்”என்றும் அவர் சொன்னார்.பொழுது போக்கிகளிடம் ஒரு தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தியானமும் உழைப்பும் இல்லை.

ஆசிரியர் ஒருவர் சொன்னார்,வீட்டில் மர வேலைகள் இருப்பதனால் தனக்குத் தெரிந்த ஒருவரை வேலைக்கு அழைத்திருக்கிறார். இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று சொல்லி அவர் மூன்று மாதங்களாகக் கடத்தி விட்டாராம். முடிவில் அவரை தனக்கு அறிமுகப்படுத்திய நண்பரிடம் கேட்டிருக்கிறார். நண்பர் சொன்னாராம்,அவர் வர மாட்டார்.ஏனென்றால் அவருக்கு உறவினர்கள் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் காசு வருகிறது.அவருடையது சிறிய குடும்பம். எனவே அந்தக் காசு போதும்.உழைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. வெளிநாட்டுக்  காசு போதாது என்றால் அவர் வேலைக்கு வருவார்” என்று.

கைபேசிகள் ஒருபுறம் மனிதர்களை முன்னப்பொழுதையும் விட அதிகரித்த அளவில் பொழுதுபோக்கிகள் ஆகிவிட்டன. உள்ளங்கையில் பொழுதுபோக்கும் கருவி.இன்னொருபுறம் ஈழத் தமிழர்கள் மத்தியில் புலம்பெயர்ந்த உறவினர்கள் அனுப்பும் காசு ஒரு ஒரு தொகுதியினரை சோம்பேறிகள் ஆக்கிவிட்டதா?

புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் “கழிப்பறைகளைக் கழுவுகிறார்கள்;பேரங்காடிகளில் வேலை செய்கிறார்கள்;பனி அள்ளிப் போடுகிறார்கள்..”என்று சொல்லி அவர்கள் செய்யும் வேலைகளை இழிவுபடுத்தும் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் காண முடியும்.தொழில் தொடர்பான தமிழ் சமூகத்தின் மதிப்பீடுகளை அது காட்டுகிறது.ஆனால் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவ்வாறான தொழில்களுக்கு கிடைக்கும் சம்பளம் மிகப்பெரியது.

புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் மட்டுமல்ல, தாயகத்திலும் மேற்சொன்ன வேலைகளுக்கு இப்பொழுது அதிக சம்பளம் கேட்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு கழிப்பறை அடைத்து விட்டது என்றால் அதை துப்புரவாக்குவதற்கு 3000 அல்லது 5000ரூபாய்க்குக் குறையாத சம்பளம் கொடுக்க வேண்டும். ஒரு கூலித்  தொழிலாளிக்கு 2500-3500ரூபாய் வரையிலும் கேட்கப்படுகிறது. அதுவும் முன்கூட்டியே பதிவுசெய்ய வேண்டும்.சாதாரணமாக வீட்டைக் கூட்டுவது, வளவைத் துப்புரவாக்குவது போன்ற வேலைகளை ஒவ்வொரு நாளும் காலையில் வந்து ஆகக்கூடியது ஒரு மணித்தியாளம் செய்வதற்கு ஆகக்குறைந்தது 300 ரூபாய் கொடுக்க வேண்டும்.தேங்காய் பிடுங்குவதற்கு ஒரு மரத்துக்கு 400 ரூபாய் கொடுக்க வேண்டும்.

மேசன் வேலை,தச்சு வேலை போன்றவற்றுக்கு துணைக்கு வரும் உதவியாளருக்கு 3000க்கு குறையாமல் கொடுக்க வேண்டும். ஒரு டெய்லருக்கு உதவிக்கு நிற்பவருக்கு 3000 ரூபாய் கொடுக்க வேண்டும்.

இவை யாவும் நாட் சம்பளங்கள்.மாதச் சம்பளங்களை இப்பொழுது பார்ப்போம். முதியோரைப் பராமரிப்பதற்கு,உடல் வழங்காதவர்களைப் பராமரிப்பதற்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனங்கள் ஆகக்குறைந்தது 2500 ரூபாயும் ஆகக் கூடியது 5000 ரூபாயும் ஒரு நாளைக்குக் கேட்கின்றன. இதுவே மாதச் சம்பளம் என்று பார்த்தால்,ஆகக்குறைந்தது 60,000.ஆகக்கூடியது அவரவர் வல்லமைக்குத் தகுந்தபடி.

பிள்ளை பெற்ற பெண்ணை பராமரிப்பதற்கு 60,000த்துக்கும் அதிகமாகக் கொடுக்க வேண்டும்.அதிலும் வேலைப் பிரிவுகள் உண்டு.குழந்தையைக் குளிப்பாட்டுவது,தாயைக் குளிப்பாட்டுவது போன்றவற்றுக்கு அடிப்படைச் சம்பளம்.அதற்குமப்பால் உடுப்புகளைத் தோய்ப்பது,தாய்க்குச் சமைப்பது போன்ற வேலைகளையும் சேர்த்தால் 60,000-80000 வரை கொடுக்க வேண்டும். 31 வது நாள் சடங்கு முடியும் போது பராமரிப்பாளருக்கு புதிய சேலை வாங்கிக் கொடுக்க வேண்டும்.பிள்ளை பெற்ற பெண்ணுக்குக் கொடுக்க வேண்டிய உணவுக்குத் தேவையான சரக்குச் சாமான்களை ஏற்கனவே பவுடர் ஆக்கிக் கொடுக்க வேண்டும்.வேலைக்கு வருபவர் அவற்றையெல்லாம் அரைக்க மாட்டார்.

சமையலுக்கு வருபவர்கள் மூன்று வேளையும் சமைப்பது என்றால் குறைந்தது 60,000 கொடுக்க வேண்டும்.மூன்று வேளை சாப்பாடு கொடுக்க வேண்டும். இரண்டு வேளை சமைப்பது என்றால் குறைந்தது 40,000 கொடுக்க வேண்டும். சாப்பாடும் கொடுக்க வேண்டும்.மதிய உணவை சமைத்து விட்டு அவர் கிளம்பி விடுவார்.சமையலுக்கு வருபவர்கள் சிலசமயம் வீட்டை,வீட்டு வளவைத் துப்பரவாக்க மாட்டார்கள். அதற்குத் தனிச் சம்பளம்.

முன்பெல்லாம் தச்சு வேலை, மேசன் வேலை என்று வந்தால் வேலை முடிந்ததும் வேளைத் தளத்தைத் துப்புரவாக வேண்டியது அவர்களுடைய பொறுப்பு. ஆனால் இப்பொழுது பெரும்பாலானவர்கள் வேலை முடிந்த பின் வேலைத் தளத்தை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.அந்த இடத்தைத் துப்புரவாக, தனியாக கூலிக்கு ஆளைப் பிடிக்க வேண்டும்.அதாவது வேலைச் சுத்தம் இல்லை. அதைச் சுட்டிக்காட்டினால் அடுத்த முறை வேலைக்கு வரமாட்டார்கள்.

அவ்வளவு டிமாண்ட். ஒருபுறம் சாதாரண சிறிய வேலைகளுக்கு ஆட்கள் இல்லை.இன்னொருபுறம் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் அரச வேலை கேட்டு தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் கூலி வேலைக்கு வரவேண்டும் என்று இக்கட்டுரை கேட்கவில்லை.ஓர் ஆர்ப்பாட்டத்தின் போது அவர்களில் சிலர் கூலி வேலையை இகழும் விதத்தில் விளக்குமாறு,தும்புத்தடி, பொதி சுமக்கும் தள்ளுவண்டி போன்றவற்றோடு போராடினார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

மூத்த ஆசிரியை ஒருவர் சொன்னார் “எங்களுக்கு கிடைக்கும் நாட் சம்பளத்தை விட அதிகமாக இன்சூரன்ஸ் கொம்பனி முகாமையாளர்கள் பெறுகிறார்கள்.அதைவிட அதிகமாக சமையல் வேலை செய்பவர்கள், குழந்தைகளை,முதியோரைப் பராமரிப்பவர்கள்,குறிப்பாக பிரசவம் பார்ப்பவர்கள் பெறுகிறார்கள்.எங்களுடைய பட்டத்துக்கும் தொழில் தேர்ச்சிக்கும் பெறுமதி இல்லை” என்று.

இதில் தேவை,தெரிவு,என்பவற்றின் அடிப்படையில் தொழில் நாடுவோரையும் தொழில் கொடுப்பவரையும் இணைக்கும் விதத்தில் இலத்திரனியல் தீர்வு ஒன்றுக்கு போகலாம்தானே? முச்சக்கர வண்டி ஓட்டுநர்களையும் சேவை நாடுனர்களையும் இணைக்கும் செயலிகளைப் போல இந்த விடயத்திலும் ஒரு செயலியைப் பரிசோதித்தால் என்ன?

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *