யாழ்ப்பாணத்துக்கு வந்த அனுர குமார காலால் நடந்தார்; கைகளால் உணவை எடுத்தார்; வாயால் சாப்பிட்டார்;கண்களால் பார்த்தார்;வாயால் சிரித்தார்…என்று சமூக வலைத்தளங்களில் அரசியல் விமர்சனப் பதிவுகள் உலாவுகின்றன.ஏன் இந்தப் பதிவுகள் என்றால்,ஜனாதிபதியின் ஒவ்வொரு அசைவையும் அசாதாரணமானதாக,அபூர்வமானதாக,எளிமையானதாகச் சித்திரித்து, அவருடைய ஊடகப்பிரிவு குறிப்பாக டிஜிட்டல் புரோமோஷன் அணி கவர்ச்சியான காணொளிகளாக கவர்ச்சியான காணொளிகளாக வெளியிட்டு வருகிறது.ரிக்ரொக் தலைமுறையின் ஒருபகுதி அதனை ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் பார்க்கின்றது.அனுர பலாலியில் நடந்ததால் அவருக்குப் பிறஷர் குறைந்ததோ இல்லையோ,தமிழ் அரசியற் பரப்பில் ஓர் பகுதியினருக்குப் பிறஷர் ஏறுகிறது.
அனுரவை கதாநாயகராக கட்டமைக்கும் காணொளிகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட பிரச்சார விளம்பரங்கள்தான்.எல்லாரும் செய்வதைத்தான் அனுரவும் செய்கிறார்.ஆனால் அவருடைய ஊடகப் பிரச்சார அணி அதனை ஒரு செயற்கரிய செயலாக சித்திரிக்கின்றது. அதைத்தான் மேற்கண்டவாறு தமிழ் தேசிய ஆர்வலர்கள் விமர்சிக்கிறார்கள்.தமிழ்த் தேசிய தரப்புகள் குறிப்பாக மேற்கண்ட பதிவுகளைப் போடுபவர்களும் உட்பட பெரும்பாலானவர்கள், ஒருவர் மற்றவரை அல்லது ஒரு கட்சி மற்றக் கட்சியை வில்லன் ஆக்கி, துரோகி ஆக்கி ஒருவர் மற்றவர் மீது மலத்தை அள்ளி வீசும்போது. இரண்டு தரப்பிலும் மலம் படுகிறது. இரண்டு தரப்புமே நாறுகின்றன.இதனால் தமிழ்த் தேசியப் பரப்பில் யாருமே கதாநாயகராக எழ முடியவில்லை.இந்த வெற்றிடத்திற்குள் அனுர ஒரு கதாநாயகராக இறக்கப்படுகிறார்.தமிழ்த் திரை நாயகர்களின் எழுச்சியான பாடல்களின் பின்னணியில் அவர் நாயக நடை போடுகிறார்.இது தமிழ்த் தேசியக் கட்சிகள் விட்ட வெற்றிடத்தை அரசாங்கம் திட்டமிட்டு நிரப்பும் ஒரு பிரச்சார உத்தி.
ஆனால் இது தனிய ஒரு பிரச்சார உத்தி மட்டுமல்ல,அதைவிட ஆழமான ஆபத்தான ஓர் அரசியல் வியூகம் அங்கே உண்டு. அனுர கடந்த வாரம்,யாழ்ப்பாணத்தில் வைத்து பின்வருமாறு கூறினார்”முன்னர் வடமாகாணத்துக்கு தனி ஆட்சி தேவை என்று வடமகாண மக்கள் கூறினார்கள்.. ஆனால் முதன் முதலாக யாழ் மக்கள் இன்று எங்களுடைய ஆட்சியை தங்களுடைய ஆட்சி என்று நம்புகிறார்கள்..அவர் பயன்படுத்திய சொற்களுக்கு அரசியல் பரிமாணம் உண்டு என்று எடுத்துக் கொண்டால்,அவர் தமிழ் மக்களின் போராட்டத்தை வடக்குக்குள் மட்டும் சுருக்குகிறார்.அது வடக்கின் பிரச்சினை என்று காட்டப் பார்க்கிறார். கிழக்கில் அந்தப் பிரச்சினை இல்லை என்றும் அங்கே பொருள் கொள்ளலாம்.
அவர் மட்டுமல்ல கோத்தபாய ராஜபக்சவும் இனப்பிரச்சினையை வடக்குக்கு மட்டுமான பிரச்சினையாக,ஒரு பொருளாதாரப் பிரச்சினையாகச் சுருக்கப் பார்த்தார்.இது ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரல்.கிழக்கில் பிரச்சினை இல்லை என்று காட்டுவது.அல்லது வடக்கை மட்டும் ஃபோக்கஸ் பண்ணுவதன்மூலம் வடக்கையும் கிழக்கையும் தெளிவாகப் பிரிப்பது.
இங்கு மேலும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் உண்டு. ஒரு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் குறுகிய காலகட்டத்துள் வடக்கிற்கு அதிகம் வருகை தந்தவர் அனுரதான்.அதுமட்டுமல்ல,அவருடைய வருகைகளின்போது அவரை நோக்கித் திட்டமிட்டு மக்கள் குவிக்கப்படுகிறார்கள்.அது தானாகத் திரண்ட கூட்டம் என்று அவருடைய ஊடகப்பிரிவு சொல்லலாம்.ஆனால் அரச பேருந்துகள் அதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பது பொங்கல் விழாவின்போது அவதானிக்கப்பட்டது.ஆனால் இதேயளவு கவனக்குவிப்பு கிழக்கை நோக்கி இல்லை.வடக்கோடு ஒப்பிடுகையில் கிழக்கில் “செல்பி அரசியல்” பெரிய அளவில் இல்லை.
கடந்த வாரம் பொங்கல் விழாவில் அனுர பின்வருமாறும் பேசினார்…”பார்க்காத பழகாத எங்களை நம்பினீர்கள்.உங்களை நாங்கள் கைவிட மாட்டோம்” இது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றியை அவர்களே எதிர்பார்க்கவில்லை என்பதைக் காட்டுகிறது.அது எதிர்பாராமல் கிடைத்த வெற்றி.ஆனால் உள்ளூராட்சி சபைகளில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.தமிழரசுக் கட்சி குறிப்பாக சுமந்திரன் கடுமையாக உழைத்து தேசிய மக்கள் சக்தியின் வெற்றியின் பருமனைக் குறைத்தார்.ஆனால் மாகாண சபையில் மீண்டும் தன் மேலாண்மையை நிலைநாட்ட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி கருதுகின்றது.அதை நோக்கி அவர்கள் ஏற்கனவே உழைக்கத் தொடங்கி விட்டார்கள்.
ஜனாதிபதியும் அமைச்சர்களும் வடக்கை நோக்கி அதிகமாக வருவது அந்த நோக்கத்தோடுதான்.ஜனாதிபதியை தமிழ்மக்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாகக் கட்டியெழுப்புவதும் அந்த நோக்கத்தோடுதான்.தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையே காணப்படும் பிடுங்குப்பாடு அரசாங்கத்துக்கு அனுகூலமானது.தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளையும் குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் குழு மோதல்களையும் சுட்டிக்காட்டி அமைச்சர் சந்திரசேகரன் அண்மைக் காலங்களில் பேசி வருகிறார்.அதற்கு சிவஞானம் பதில் சொல்லுகிறார். சிவஞானத்தின் பதில் ஒலிவாங்கிகளுக்கு முன்னுக்கு கூறப்படுவதாக இருக்கக் கூடாது. அது செயலில் காட்டப்பட வேண்டும்.
அடுத்த மாகாண சபைத் தேர்தலை ஆகக்கூடிய விரைவில் வைப்பதை இந்தியா விடும்புகிறது என்பது எல்லாருக்கும் தெரிகிறது.எனவே மாகாண சபைத் தேர்தலில் தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் கடுமையாக உழைக்கின்றது.ஏற்கனவே கிராம மட்டங்களில் அவர்கள் உருவாக்கி வரும் “பிரஜா சக்தி” என்ற கட்டமைப்புக்கு அவர்கள் வறுமை ஒழிப்பு என்ற கவர்ச்சியான நிறத்தைப் பூசலாம். ஆனால் நடைமுறையில் அது பிரதேச சபைகளுக்குச் சமாந்தரமானது.பிரதேச அதிகாரங்களைக் கவரும் நோக்கிலானது.அதைவிட முக்கியமாக அரச கட்டமைப்பு ஒன்றுக்கூடாக, அரச வளங்களைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியின் அடிமட்ட வலையமைப்பைப் பலப்படுத்தும் கட்சி அரசியல் உள்நோக்கம் அங்கே உண்டு என்று சந்தேகிக்கப்படுகிறது.அதுதொடர்பாக அண்மையில் நல்லூர்,திவ்வியஜீவன சங்க மண்டபத்தில் நடந்த கருத்தரங்கில் ஐங்கரநேசசன் பேசினார்,பிரஜா சக்திக்கு எதிராகத் தான் நீதிமன்றம் செல்லப்போவதாக சுமந்திரன் கூறியிருக்கிறார்.
அதாவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடுத்த மாகாண சபையை இலக்கு வைத்து இயங்குகின்றது.ஆனால் வடக்கை அவர்கள் குறிவைப்பது அதற்காக மட்டும் அல்ல.அது அதைவிட ஆழமானது.வடக்கை வென்றெடுத்தால், கிழக்கு தானாக விழுந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.வடக்குத்தான் பிரச்சனை. எனவே அங்கே அடிக்க வேண்டும். அங்கே வெல்ல வேண்டும். என்று அவர்கள் திட்டமிடுகிறார்கள்.
இது ஒருவிதத்தில் முதலாம் கட்ட ஈழப்போரின் போது ஜெயவர்த்தன வகுத்த வியூகத்தின் மறுவளமான வடிவம் ஆகும்.ஜெயவர்த்தனாவின் தளபதியாக இருந்த சிறில் ரணதூங்க ஒரு நேர்காணலில் கூறியதுபோல, வடக்குக் கிழக்கு இணைப்பைத் துண்டித்து விட்டால்,அதாவது வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பிரதேசத்தை குடியேற்றங்களின் மூலம் துண்டித்து விட்டால், தாயகக் கோட்பாடு புவியியல் ரீதியாக சிதைக்கப்படும். அடுத்ததாக கிழக்கை படை நடவடிக்கைகள்,திட்டமிட்ட அரச குடியேற்றங்கள் மூலமும் தமிழ் -முஸ்லீம் முரண்பாடுகளை,வடக்குக்-கிழக்கு முரண்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலமும் தோற்கடித்து விட்டால்,தாயகம் நடைமுறையில் பலவீனமடைந்துவிடும்.கிழக்கை வென்றெடுத்தால், வடக்கு மட்டும் தாயகமாக நின்று பிடிக்காது என்று ஜெயவர்த்தன கணக்குப் போட்டார்.
இப்பொழுது தேசிய மக்கள் சக்தியானது அந்த வியூகத்தின் அடுத்த கட்டத்தைப் பரிசோதிக்கின்றதா? வடக்கை வீழ்த்தினால், கிழக்கு தானாக விழுந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.ஏற்கனவே ஒரு வழக்கின்மூலம் வடக்கையும் கிழக்கையும் சட்டரீதியாகப் பிரித்தது ஜேவிபி என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எனவே வடக்கு-கிழக்கு அதாவது தாயகத்தைத் துண்டாடும் வியூகம் இதில் உண்டு.இந்த வியூகத்தை எதிர்கொள்ள வேண்டும்.பிரஜா சக்திக்கு எதிராக வழக்குப் போடுவதால் மட்டும் இந்த வியூகத்தைத் தோற்கடித்துவிட முடியாது.பலமான தமிழ்த் தேசியப் பதில் வியூகம் ஒன்று வேண்டும்.





