இந்திய பிஸ்கட் கொம்பனி ஆகிய “பிரிட்டானிகா” ஒரு வித்தியாசமான காரியத்தை செய்திருக்கிறது.அதனுடைய பால் பிஸ்கட்களில் திருக்குறளை பொறித்துள்ளது.அதனை அவர்கள் “திருக்குறள் சவால்” என்று அழைக்கிறார்கள்.ஒரு திருக்குறளின் சொற்களை வெவ்வேறு பிஸ்கட் பகுதிகளில் தனித்தனியாக பொறித்திருப்பார்கள். பிள்ளைகள் வெவ்வேறு பொதிகளில் உள்ள சொற்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒழுங்குபடுத்தி குறிப்பிட்ட திருக்குறளை முழுமையாக்க வேண்டும். பின்னர் அதனை அதற்கென்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் இணையதளத்தில் ஸ்கான் செய்து பதிவிடுவதன் மூலம் பரிசுகளை வெல்லலாம்.
ஒரு திருக்குறளை கண்டுபிடிக்க ஒன்றுக்கு மேற்பட்ட பிஸ்கட் பொதிகளை வாங்க வேண்டியிருக்கும். எனவே முதலாவது அர்த்தத்தில் அது ஒரு வணிக உத்தியாகத் தோன்றலாம். ஆனாலும் பிரிட்டானிகா கொம்பனி கூறுவது போல திருக்குறளை அது சிறுவர் மயப்படுத்தும், மக்கள் மயப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.ஒரு பழந்தமிழ் அறநெறி நூலை இவ்வாறு பிஸ்கட்டோடு சேர்த்து மக்கள் மயப்படுத்துவது என்பது நல்ல விடயம். அதில் இருக்கக்கூடிய வணிக உத்திகளுக்கும் அப்பால் சாப்பிடுவதற்கு ஒரு திருக்குறள் என்ற உத்தியானது தமிழ் சிறுவர்களை அவர்களுடைய பண்பாட்டு வேர்களுக்கு போகத் தூண்டும் விடுப்பு உணர்வும் சுவையும் கலந்த ஒரு வணிக உத்தி என்பதில் சந்தேகம் இல்லை.
பிரிட்டானிகா போன்ற ஒரு பெரு வணிக நிறுவனம் அதன் வணிக உத்திக்குள் பண்பாட்டு அம்சங்களை பரவலாக்குவது என்ற விடயத்தை இணைத்திருப்பதை வரவேற்க வேண்டும்.ஏனென்றால் ஒரு பிஸ்கட் கொம்பெனியின் வணிக உத்தி என்ற அடிப்படையில் அது பரவலாக சென்றடையும்.இது போன்ற வேர்களை நோக்கி செல்லும் விழிப்புணர்வை பெருவணிக நிறுவனங்கள் குறைந்தபட்சம் வியாபார உத்தியாக ஆவது எடுத்துக் கொள்வது வரவேற்கத்தக்கது. ஏனென்றால் நல்லவைகள் மக்கள் மயப்படும் போது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.பாடவிதானத்துக்குள் இருக்கும் திருக்குறள் பரீட்சைக்காக கட்டாயமாக பாடமாக்கப்பட வேண்டிய ஒன்று.ஆனால் பால் பிஸ்கட்டில் பொறிக்கப்பட்ட திருக்குறள் விடுப்புணர்வை தூண்டுவது;போட்டியுணர்வை தூண்டுவது.அன்றாட வாழ்வின் சிற்றுணவுகளில் ஒன்று.
பெரு வணிக நிறுவனங்களின் வணிக உத்திகள் அனேகமாக புத்தி பூர்வமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.அவற்றுக்குப் பின் மனித உளவியலைத் தீர்மானிக்கும் ஆராய்ச்சி முடிவுகள் உண்டு.உதாரணமாக 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தின் “காட்பரி கொம்பெனி” தன்னுடைய சொக்லேட்களின் வடிவத்தை மாற்றியது.சதுர வடிவில் இருந்த சொக்லேட்களை 2013இல் வளைவான வடிவத்துக்கு மாற்றப்பட்டன.சதுரத்தில் இருந்து வளைவுகளுக்கு ஏன் போக வேண்டும் என்ற கேள்விக்கு அந்த நிறுவனம் விஞ்ஞானபூர்வமான ஒரு விளக்கத்தை கொடுத்தது.அதில் கணிதம் இருந்தது;உளவியல் இருந்தது.”காஸ்ரோபிசிக்ஸ்”(Gastrophysics)இருந்தது.வாய் வட்டமானது. சதுரமானது அல்ல அதனால் வளைந்த வடிவத்தைக் கொண்ட சொக்லேட் இலகுவாக வாய்க்குள் கரையும் என்று அந்த கொம்பெனி கூறியது.
ஆனால் அந்த சொக்லேட் வளைவுகள் பெண்ணின் உடல் வளைவுகளை மனதிலிருத்தி உருவாக்கப்பட்டவையா என்ற கேள்வி எழுந்தது.சொக்லேட்களை அவ்வாறு சதுர வடிவத்தில் இருந்து வட்ட வடிவங்களுக்கு மாற்றியதால் உற்பத்தி செலவு குறைந்தது என்றும் நுகர்வு அதிகரித்தது என்றும் கூறப்படுகிறது.ஏனெனில் வளைந்த ஓரங்களைக் கொண்ட சொக்லேட்கள் அதிகம் சுவையாக இருந்தன என்று நுகர்வோர் சொன்னார்கள்.அதனால் வளைந்த வடிவ சொக்லெற்றுகளில் அதிகம் இனிப்புச் சேர்க்கப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்தது.
காட்பரி கொம்பெனி தனது சொக்லேட்களின் வடிவத்தை மாற்றியதற்கு பின்னால் அறிவு பூர்வமான சாப்பாட்டு உளவியல் விளக்கம் ஒன்றை கூறுகிறது.அந்த விளக்கத்தோடு ஒப்பிடுகையில் பிரிட்டானிகா கொம்பனியின் திருக்குறள் பால் பிஸ்கட்டுக்கு பண்பாட்டு ரீதியாக முக்கியத்துவம் அதிகம்.
திருக்குறளை மக்கள் மயப்படுத்துவதற்கான மேற்கண்ட வணிக உத்தி ஈழத் தமிழர்களுக்கு புதியது அல்ல. ஏற்கனவே பல தசாப்தங்களுக்கு முன்பு ஈழத் தமிழர்கள் மத்தியில் தோன்றிய மதிப்புக்குரிய தொழில் முனைவோர் ஒருவர் அதை பிரீட்சித்து இருக்கிறார்.அவர்தான் “மில்க் வைட்” கனகராசா. திருக்குறளை அவர் எப்படி பரவலாக்க முயற்சித்தார் தெரியுமா? மில்க்வைட் நீல சோப்பின் காகித உறையில் திருக்குறள் எழுதப்பட்டிருக்கும்.அல்லது “பனை வளர்ப்போம் பயன் பெறுவோம்” போன்ற வசனங்கள் இருக்கும். அந்த சோப் உறைகளைச் சேகரித்து மில்க்வைட் அலுவலகத்தில் கொடுத்தால் அதற்குப் பரிசு கிடைக்கும்.திருக்குறளை சோப் கவருக்குள் கொண்டு வந்தார் கனகராசா.அவர் எதிர்பார்த்த வெற்றியை அது கொடுத்தது.
அப்பொழுது துணி துவைக்கப் பயன்படுத்தும் ரசாயனங்கள் ஒப்பிட்டுளவில் குறைவாக இருந்தன.பாடசாலைப் பிள்ளைகள் தங்களுடைய சீருடைகளை தோய்த்து கழுவும் போது கடைசி கழுவலில் நீரில் நீலச் சாயத்தை கரைப்பார்கள்.அந்த நீலம் வெண்ணிற உடுப்பை பிரகாசமாக்கும். மில்க் வைட் கனகராசா சோப்பிலேயே நீலத்தைக் கலந்தார்.அந்த நீலக்கட்டி சோப்பை வாங்கும் குடும்பங்கள் அந்த சோப்பின் உறையை சேகரிக்கும் போது திருக்குறளும் சேகரிக்கப்படும். அதற்குப் பரிசும் கிடைக்கும்.
எனது நண்பர் ஒருவர் கூறுவார்,மில்க் வைட் கனகராசாவோடு க.சி குலரத்தினம் என்ற ஓர் அறிஞரும் இணைந்திருந்தார்.அந்த இணைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு என்று.ஒரு முதலாளியும் அறிஞரும் இணைந்து இருப்பது.முதலாளியின் வணிக நோக்கங்களுக்குள் அறிஞர் ஆகிய குலரத்தினம் பண்பாட்டு இலக்குகளை இணைத்துச் செழுமைப்படுத்துவார்.குலரத்தினம் “மில்க்வைற் செய்தி” இதழின் ஆசிரியராக இருந்தார்.
பாடசாலையின் வகுப்பறைகளுக்குள் பாடத்திட்டத்திற்குள் சுருக்கப்பட்டிருக்கும் ஒரு விடயத்தை அன்றாட வாழ்வில் சகஜமான, சுவையான ஒரு பயில்வாக மாற்றுவது ஒரு வணிக இலக்கு மட்டுமல்ல பண்பாட்டு இழக்கும்தான்.நல்லவைகள் தரமானவைகள்,மகிமைக்குரியவைகள்,உயர்ந்த ரசனைக்குரியவைகள் மக்கள்மயப் படுவது நல்லதே.
முச்சக்கர வண்டிகளின் கூரை முதுகில் எழுதப்படும் இலட்சிய வாசகங்களுக்கும் அப்படி ஒரு பெறுமதி உண்டு.சிலர் அந்த முதுகில் பெயர்களை எழுதுவார்கள்.சிலர் அந்த முதுகை நடமாடும் விளம்பரப் பலவையாக மாற்றி அதில் ஏதாவது நிறுவனத்தின் பெயரை எழுதுவார்கள். பெரும்பாலான முச்சக்கர வண்டிச் சாரதிகள் அந்த முதுகில் இலட்சிய வாசகங்களை எழுதுவார்கள்.அதன் மூலம் அவர்கள் தமது முச்சக்கர வண்டிக்கு ஒரு சமூக அந்தஸ்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.ஓட்டோக்களின் முதுகில் காணப்படும் அந்த இலட்சிய வாசகத்தை அனேகமானவர்கள் வாசிப்பார்கள்.அதில் காதல் இருக்கும்; சோகம் இருக்கும்; தத்துவம் இருக்கும்; இலட்சியமும் இருக்கும்.எதுவானாலும் அது ஒரு நடமாடும் சிறிய விளம்பர பலகை.
நல்லவைகளை எப்படி மக்கள் மயப்படுத்துவது என்பதுதான் இங்குள்ள சவால்.மக்களுடைய பலவீனங்களையும் உணர்வுகளையும் கனவுகளையும் சுரண்டும் கெட்டவை இலகுவாக வைரல் ஆகின்றன.இப்படிப்பட்டதோர் நடைமுறை உலகில்,பல தசாப்தங்களுக்கு முன்னரே அழுக்கை அகற்ற ஒரு திருக்குறள் கிடைத்தது. இப்பொழுது தின்ன ஒரு திருக்குறள்.







