யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்ட ஓர் அரசியல் நாடகம்

கடந்த ஒன்பதாம்,பத்தாம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருமறைக் கலா மன்றதின் கலை தூது கலையகத்தில் ஒரு நாடகம் மேடை ஏற்றப்பட்டது. கொழும்பை மையமாகக் கொண்டியங்கும், “ஸ்டேஜஸ் தியற்றர்  குரூப்” என்று அழைக்கப்படும் அரங்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஓர் அரசியல் நாடகம் அது.” Dear Children, Sincerely… இலங்கையின் ஏழு தசாப்தங்கள்” என்ற அந்த நாடகம்.2014,2015களிலிருந்து முன்னெடுக்கப்படுகின்ற அரங்க ஆய்வுச் செயற்திட்டமும் நாடகத் தொடருமாகும்.மூன்று மொழிகளும் பயன்படுத்தப்பட்டன.அரங்கின் ஒரு பக்கம் ஒரு திரை வைக்கப்பட்டு மொழிபெயர்ப்பும் தரப்பட்டது.

“1930களில் பிறந்த தலைமுறையினரின் நினைவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்நாடகம்,”சுதந்திரம்”,”சிங்களம் மட்டும்” சட்டம், “ஆங்கிலம் பேசும் உயர்வர்க்கத்தின் வீழ்ச்சி”,”இரு இளைஞர் கிளர்ச்சிகள்”, “கருப்பு ஜூலை”, மற்றும் “30 ஆண்டுகால உள்நாட்டுப் போர்” போன்ற நமது நாட்டின் அரசியல் வரலாற்றின் முக்கிய திருப்புமுனைகளை மேடையேற்றுகிறது” என்று அந்த நாடகம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுகக் குறிப்பில் காணப்படுகிறது.

இரண்டு நாட்களும் மண்டபம் பெருமளவுக்கு நிரம்பியிருந்தது.அது “டிக்கெட் ஷோ” என்றாலும் வயது வேறுபாடு இன்றி பலதரப்பட்டவர்களும் அங்கே காணப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தின் ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் உட்பட துறைசார் ஆர்வலர்கள்,கலைஞர்கள், மாணவர்கள் என்று பலவகைப்பட்டவர்களும் அங்கே காணப்பட்டார்கள்.

நாடகம் இலங்கைத் தீவில் இன முரண்பாட்டின் வரலாற்றை ஏழு தசாப்தங்களின் ஊடாக எடுத்துக் கூறுகிறது.ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட நாடகம்.நாடகத்தின் பிரதான பலம் அதனுடைய அழகியல் பெறுமதிதான்.அரங்க வெளியை ஒளியும் இசையும் உடலசைவுகளும் வெற்றிகரமாகக் கையாண்ட அனுபவம் கிடைத்தது.அந்த ஏழு தசாப்தங்களையும் குறிக்கும் ஏழு பகுதிகளில் சில பகுதிகள் கலைப் பெறுமதி மிக்கவை.ஜேவிபியின் ஆயுதப் போராட்டம் பற்றிய பகுதி,83 ஜூலை தொடர்பான பகுதி போன்றவை குறிப்பிட்டுச் செல்லக்கூடியவை.எனினும்,அது ஓர் அரசியல் நாடகம்.எனவே அதனுடைய முழுமையான கலைப் பெறுமதியை அதன் அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

அரசியலை,குறிப்பாக அரசியல் வரலாற்றைக் கூறும்போது எந்த நோக்குக் கோணத்தில் இருந்து வரலாறு பரிமாறப்படுகிறது என்பது முக்கியமானது.அந்த நாடகம் இன முரண்பாட்டை அதற்குரிய அரசியல் அடர்த்தியோடு அணுகவில்லை.மாறாக அதை ஒரு மனிதாபிமான பிரச்சினையாகத்தான் பார்க்கிறது.தொடக்கத்தில் இருந்து முடிவு வரையிலும் இனப்பிரச்சினை ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகத்தான் பார்க்கப்படுகிறது ;சித்திரிக்கப்படுகிறது.

ஆனால் இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையானது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை அல்ல. அது ஒரு தேசிய இனப்பிரச்சினை. ஈழத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொண்டு இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை; பல மத;பல மொழிப் பண்பை ஏற்றுக்கொண்டு;அந்தப் பல்வகைக்குள் ஓர் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப முடியாததின் விளைவே இனப் பிரச்சினையாகும். குறிப்பாக தமிழ் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால், தமிழ் மக்களின் தேசிய இன இருப்பை அழிக்கும் நோக்கத்தோடு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவுதான் இனப்பெருச்சினை.அது பின்னர் அடுத்தடுத்த கட்டங்களில் ஆயுதப் போராட்டமாகவும் பெரும் போராகவும் பரிணமித்தது.

நாடகம் இனப்பிரச்சினையை அதற்குரிய அரசியல் அடர்த்தியோடு அணுகவில்லை.அந்த அடிப்படையில் நாடக எழுத்துரு பலவீனமானது.மேலும் ஏழு அரசியல் தசாப்தங்களை ஏழு பகுதிகளாக பிரித்தது நாடக எழுத்துருவின் பலவீனமா? அல்லது இன முரண்பாட்டை அதன் அரசியல் அடர்த்திக்கூடாக விளங்கிக்கொள்ளத் தவறியதன் விளைவா ? அல்லது அதுவே ஒரு புதிய வடிவமா?

எதுவானாலும் இனப் பிரச்சினையை அதன் அரசியல் அடர்த்திக்கூடாக விளங்கிக் கொண்டால் அந்த எழு தசாப்தங்களும் ஒன்றிலிருந்து மற்றது பிரிக்க பட முடியாதபடி தொடர்ச்சியான அரசியல் தசாப்தங்கள்தான்.நாடகத்தை தயாரித்த “ஸ்டேஜஸ் தியற்றர்  குரூப்” என்ற அமைப்பு அதை தெரிந்து செய்ததா? தெரியாமல் செய்ததா?

“ஸ்டேஜஸ் தியற்றர்  குரூப்” என்ற, கொழும்பை மையமாகக் கொண்ட  அமைப்பு, ரூவந்தி டி சிக்கேரா என்ற அரங்கச் செயற்பாட்டாளரால் 1998இல் உருவாக்கப்பட்டது. நாடகர்கள்,இசைஞர்கள்,எழுத்தாளர்கள்,தயாரிப்பாளர்கள் நெறியாளர்கள், பயிலுனர்கள் என்று பல்வேறு கலை ஆளுமைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு ஆகும்.

ரூவந்தி டி சிக்கேரா அங்லிக்கன் திருச்சபையின் கொழும்பு மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் டுலிப் டி சிக்கேராவின் மகள் ஆவார்.டுலிப் டி சிக்கேரா போர்க்காலங்களில் பாதிக்கப்படும் மக்களின் குரலைப் பிரதிபலித்த ஆயர்களில் ஒருவர்.குறிப்பாக அங்லிக்கன் திருச்சபை ஆயர்களுள் துணிந்து மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் அரசியல் அதிகாரத்துக்கு எதிராகவும் கருத்துக்களைக் கூறிய ஓர் ஆயர்.

அவருடைய மகளான ரூவந்தி தென்னிலங்கையில் உள்ள மதிக்கத்தக்க பெண் அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒருவர். 2021 இல் நிகழ்ந்த “அரகலய” தன்னெழுச்சிப் போராட்டங்களின் மையமாக காணப்பட்ட நபர்களுக்குள் அவரும் இருந்தார். ஒரு துவிச்சக்கர வண்டியில் அவர் காலிமுகத் திடலுக்கு வந்து போராட்டங்களில் பங்கெடுப்பார் என்று அவருடைய சக செயற்பாட்டாளர் ஒருவர் சொன்னார்.அரகலயவின் தொடக்க நாட்களில் ஐநாவுக்கு மனு கொடுக்கப் போன குறைந்த எண்ணிக்கையானவர்கள் மத்தியில் ரூவந்தி காணப்பட்டார்.

காலிமுகத் திடலில் சிருஷ்டிக்கப்பட்ட “கோட்டா கோகம” கிராமம் சிங்கள மக்களின் அரசுக்கு எதிரான அதிருப்தியை மட்டும் பிரதிபலிக்கவில்லை. அதோடு சேர்ந்து ஒரு போராட்டத்தை எப்படி கலையாக முன்னெடுக்கலாம் என்பதையும் அது நிரூபித்தது.கோட்டா கோகம கிராமத்தின் கலைப் பெறுமதியை;அழகியல் பெறுமதியை;அரசியலின் அழகியல் பெறுமதியை; போராட்டத்தின் அழகியல் பரிமாணத்தை உயர்த்தியதில் ரூவந்திக்கும் பங்கு உண்டு.

அதேசமயம் இப்பொழுது புலம்பெயர்ந்து வாழும் முன்னாள் ஜேவிபி முக்கியஸ்தர் ஒருவர் கூறுவதுபோல, அரகலய போராட்டம் சிங்கள மக்களின் அரசியல் உணர்வை,அரசியல் அறிவை உயர்த்திய அளவுக்கு வரலாற்று உணர்வை அல்லது வரலாற்று அறிவை உயர்த்தவில்லை என்பது ரூவந்திக்கும் பொருந்துமா?

அவர் இன ஒடுக்கு முறையை எதிர்த்த,இனவாதத்தை எதிர்த்த சிங்கள படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர்.சிங்கள மக்கள் மத்தியில் உள்ள படைப்பாளிகள்,செயற்பாட்டாளர்கள் போன்றவர்கள் தமிழ்த் தேசிய நோக்கு நிலையைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. அவர்கள் முதலாவதாக இனவாதிகளாக இல்லாமல் இருந்தாலே போதும். அவர்கள் தமிழர்களுக்கு நெருக்கமாக வந்துவிடுவார்கள்.இனவாதத்தை எதிர்த்தால் மேலும் நெருக்கமாக வந்து விடுவார்கள்.

திரைக் கலைஞராகிய பிரசன்ன விதானகே தொடர்பான விவாதம் ஒன்றின் போதும் பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இதைச் சுட்டிக்காட்டினேன். பிரசன்ன விதானகே போன்றவர்கள் போருக்கு எதிராகவும் இன ஒடுக்கு முறைக்கு எதிராகவும் படங்களைத் தயாரிக்கும்போது அவர்கள் இனவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டோடு இருந்தாலே அது உத்தமம்தான்.அவர்கள் தமிழ்த் தேசிய நோக்குநிலையில் இருந்து அந்தப் படைப்புகளைத் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது சற்று அதிகமானது.அப்படி இருந்தால் அது மகத்தானது. ஆனால் அவர்களை அவர்களுடைய அரசியல்,கலை,இலக்கிய யதார்த்தத்துக்குள் வைத்து விளங்கிக்கொள்ள வேண்டும்.

ரூவந்திக்கும் இது பொருந்தும்.அவர் இனவாதத்துக்கு எதிர் என்ற கலை நிலைப்பாட்டை எடுக்கிறார்.இனவாதத்திற்கு எதிரான தமிழ் நிலைப்பாட்டை அவர் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை.ஓர் அரங்கச் செயற்பாட்டாளராக அவர் இனவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை;விமர்சிக்கிறார்.அது அவரைத் தமிழ் மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருகிறது.யாழ்ப்பாணத்தில் அவருடைய நாடகம் முதன்முதலாக மேடையேற்றப்பட்டபோது கிடைத்த வரவேற்பை அப்படி விளங்கிக் கொள்ளலாம்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *